சென்னை தீவுத்திடல் காயிதே மில்லத் பாலம் அருகே ஆற்றங்கரையோரம் வாழும் மக்களை “கூவத்தை தூய்மைப்படுத்துதல்” என்ற பெயரில் அங்கிருந்து விரட்டியடித்து வருகிறது எடப்பாடி அரசு. அதை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

தலைமுறை தலைமுறையாக இப்பகுதியில் வாழும் பூர்வகுடி மக்களான இவர்கள் அன்றாடங் காய்ச்சிகளாவர். பெண்கள் அருகிலுள்ள தலைமைச்செயலகம், அரசு அலுவலகங்கள், அடுக்குமாடி வீடுகளில்  வேலை செய்வதையும் ஆண்கள் அன்றாடம் கிடைக்கும் உதிரித் தொழிலைச் செய்வதையும் நம்பியே அவர்களின் குடும்பம் உயிர் பிழைக்கிறது. இவர்களின் குழந்தைகளும் அருகிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலேயே படிக்கின்றனர்.

இம்மக்களின் மொத்த வாழ்வாதாரமுமே இங்கிருக்கும் சூழலில் 45 கி.மீ தொலைவில் உள்ள பெரும்பாக்கத்திற்கு துரத்தியடிக்கிறது எடப்பாடி அரசு. “தினமும் 200, 300 சம்பாதிக்கும் நாங்கள் பெரும்பாக்கம் சென்றுவிட்டால் இங்கே வேலைக்கு வந்து செல்வதற்கே தினமும் 100 ரூபாய்க்கு மேல் பேருந்து கட்டணம் ஆகும். அங்கேயும் எங்களுக்கு  எந்த வேலைவாய்ப்பும் இல்லை. குழந்தைகள் படிக்க அருகாமையில் பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லை. பாதுகாப்பும் இல்லை.” என்கிறார்கள்.

படிக்க :
♦ செம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி !
♦ சேரி – டிரேசி சாப்மன் பாடல்

மேலும் “பெரும்பாக்கத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 மாடி குடியிருப்பு வீடுகள் முற்றிலும் தரமற்றவை. ஏற்கனவே அங்கு சென்றவர்கள் மழை பெய்தால் வீடு ஒழுகுவதாகவும், மேற்கூரைகள் இடிந்துவிழுவதாகவும் கூறியுள்ளனர்.” என்று அங்கே செல்வதற்கே அஞ்சுகிறார்கள் மக்கள்.

“கூவத்தை தூய்மைப்படுத்துவதற்காக அரசு எங்களை அப்புறப்படுத்துவதாக கூறுகிறது. ஆனால் பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளோ சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டவை. மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் தேங்குபவை. தரமற்ற அந்த மண்ணில் 8 அடுக்கு மாடி கட்டியுள்ளனர். அதிகாரிகளின், அரசியல்வாதிகள் ஊழலால் அதன் மேற்கூரைகள் இடிந்துவிழுகின்றன. இப்படிப்பட்ட வீடுகளில் எப்படி எங்கள் குழந்தைகளை விட்டு விட்டு நாங்கள் வேலைக்குச் சென்று வர முடியும்.” என்று கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

“கரையோர மக்களை அப்புறப்படுத்தும் போது 8 கி.மீ தொலைவில்தான் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்” என்கிறது உயர்நீதிமன்ற உத்தரவு. ஆனால், எல்லா நீதிமன்ற உத்திரவுகளையும் போல இதுவும் காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது. ஏற்கனவே, சென்னைக்குள் பல்வேறு பகுதியிலிருந்து அப்புறப்படுத்திய அடித்தட்டு மக்களை 35 கி.மீ தொலைவிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கே துரத்தியடித்தது அரசு. அங்கு சென்றவர்கள் தங்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து சமூக சீரழிவுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இவற்றையெல்லாம் நீதிமன்றங்கள் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.

நீதிமன்ற உத்தரவு இருந்தும், ஆண்டாண்டு காலமாக சேரிப்பகுதி மக்களை சென்னை மாநகரில் இருந்து வெளியே கொண்டுபோய் தான் குடிவைத்து வருகின்றன. இது எந்த ஆட்சி இருந்தாலும் நடக்கும் நடைமுறைதான். கிராமப்புறங்களில் ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் காலனிகளைப் போல இங்கு சேரிப் பகுதிகள் என்றுமே ஊருக்கு வெளியே எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இடங்களுக்குத் தான் மாற்றப்படுகின்றன.

கடந்த ஆண்டே இப்பகுதி மக்களின் வீடுகளை இடிக்கப் போவதாக நோட்டீசை வழங்கி உடனடியாக காலி செய்யுமாறு வற்புறுத்தியது அரசு. ஆனால், அம்மக்களின் போராட்டம், அதைத் தொடர்ந்த கொரோனா ஊரடங்கினால் இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  கடந்த ஆண்டே இப்பகுதி மக்கள் “காந்தி நகர் குடியிருப்போர் நலச் சங்கம்” என்ற சங்கத்தை உருவாக்கி இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

திடீரென கடந்த 09.12.2020 அன்று அப்பகுதிக்குள் கார்ப்பரேசன் அதிகாரிகளுடன் நூற்றுக்கணக்கான போலீசாரோடு நுழைந்தனர். தங்களின் வீடுகள் பறிபோகப் போவதை உணர்ந்த மக்கள் கூவத்தில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். 20 க்கும் மேற்பட்ட அண்களும் பெண்களும் கூவத்தில் கழுத்தளவு சாக்கடை நீரில் இறங்கி 8 மணிநேரத்திற்கும் மேலாக நின்று போராடினர். ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மக்கள் நீரில் இறங்கி நிற்க, இந்தப் பக்கத்தில் வீடுகளை இடிக்கத் துவங்கியது அதிகாரவர்க்கம்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும் காவலர்களும் “என்ன சீன் போடுறீங்களா?, நீங்கள் செத்தா சாகுங்க” என்று கரையில் நின்றவாறே போராடிய மக்களைப் பார்த்துப் பேசியுள்ளனர். பின்பு மக்களின் பொருட்கள் வீடுகளில் இருப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் வீடுகளை இடிக்கத் தொடங்கினர் அதிகாரிகள். இதை எதிர்த்துப். போராடிய பெண்களை காவல்துறையினர் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதோடு அங்கிருந்து விரட்டியடித்தனர். இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட சூழலில் மக்களின் தொடர் போராட்டத்தால் அப்போதைக்கு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதிகாரவர்க்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கும் மிரட்டல்களுக்கும்  விழுந்திடாத மக்கள் :

இதற்கிடையிலேயே போராட்டத்தில் முன்னணியாக உள்ள நபர்களை அருகில் வீடுகள் தருவதாக ஆசை வார்த்தை காட்டி மக்களைப் பிளவுபடுத்த முயன்றது அரசு. கூவத்தில் இறங்கியதால் கால் கிழிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் ஒருவரிடம் “இனி போராட மாட்டேன் என்று கையெழுத்துப் போடு. அப்போதுதான் சிகிச்சையளிப்பேன்” என மிரட்டியுள்ளது போலிசு. ஆனால் இவை எதற்கும் அஞ்சாமல் துவளாமல் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அதே முதியவர் “எனக்காக மட்டுமல்ல என் மக்களுக்காகவும் தான் நான் போராடுகிறேன். என் உயிர் அங்கே இருக்குது சார். நான் வெறும் பிணம்.. கையெழுத்துப் போடமாட்டேன்.” என்று கூறி அவர்களது முகத்தில் கரியைப் பூசினார்.

கூவத்தில் இறங்கியவர்களில் ஒருவரின் மனைவியை தனியாக காவல்துறை சூழ்ந்துகொண்டு “ஒரு அதிகாரியையே எதிர்த்து பேசுகிறாயா? மரியாதையா மேடம் காலில் விழு. இல்லையென்றால் உன் கணவனை 15 நாட்கள் ரிமாண்ட் செய்துவிடுவேன்” என்று மிரட்டி பொதுப் பணித்துறை அதிகாரியான கவிதாவின் காலில் விழவைக்க முயன்றுள்ளனர். இதை அறிந்த சக பெண்கள் “நாம் உயிரோடு எரிந்தாலும் எரிய வேண்டுமே தவிர, காலில் விழக்கூடாது” என்று தன்மானத்தோடு பேசினர்.

படிக்க :
♦ கல்விக் கொள்ளை ஜேப்பியாரின் புதிய ஆக்கிரமிப்புக்கு உதவும் பொதுப்பணித்துறை !
♦ கோத்தகிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் கோபால்ஜி !

அடுத்தநாள் போராட்டத்தில் முன்னணியாக உள்ள நபர்களையும் பெண்களையும் மொத்தமாகக் கைது செய்துவிட்டு வீடுகளை இடித்து வருகிறது அரசு. தன் வீடுகளே இடிக்கப்பட்டாலும் கொட்டகை போட்டு இங்கேயே தங்குவோமே தவிர எங்கும் செல்லமாட்டோம் என்று துணிச்சலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

பெரும்பாக்கத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்குச் செல்வதற்கான டோக்கணை வாங்க மறுக்கின்றனர். கொட்டும் பணியிலும் இடிக்கப்பட்ட வீடுகளின் அருகில் வெட்ட வெளியிலேயே சோறு தண்ணீர் இன்றி உறங்குகின்றனர். சில முன்னணியான நபர்களை போலீசு குறிவைத்துத் தேடி வருவதால் தங்கள் சொந்த வீடுகளுக்கருகில் கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

“இருக்கும் இடத்திலேயே வீடுகளை ஒதுக்கிக் கொடு! அல்லது அருகாமையில் வீடுகளைக் கட்டிக் கொடு!” என்பதுதான் அவர்களது கோரிக்கை. பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், முதலமைச்சர் அலுவலகம் என பல இடங்களில் முறையிட்டும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதை சொந்த முறையில் உணர்ந்துள்ளனர்.

மக்களின் போராட்டமும் போலீசு குவிப்பும் !

இந்த நகரத்தையே தங்கள் சொந்தக் கரங்களால் உருவாக்கி அழகாக்கிய மக்கள் இன்று அதற்கே ‘அழுக்காக’ கண்ணை உறுத்துகிறார்கள். இன்னொருபுறம் ‘ஆக்கிரமிப்புகள்’ எனும் பெயரில் அடித்தட்டு ஏழை மக்களின் குடியிருப்புகளை காலிசெய்து “விலைமதிப்புள்ள” அந்த இடங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ரியல் எஸ்டேட் கொள்ளையர்களுக்கும் பங்கிட்டுத் தரும் சேவையையே “ஸ்மார்ட் சிட்டி” என்ற பெயரில் செய்யத் துடிக்கிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதியே கூவம், அடையாறு ஆற்றங்கரையோர மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை.

அந்த மக்களுக்காக குரல் கொடுப்போம் ! தவறினால், நாமும் ஒருநாள் வாழும் உரிமை பறிக்கப்பட்டு வீதியில் வீசியெறியப்படும்போது குரல் கொடுக்க மட்டுமல்ல, ஆறுதல் சொல்லவும் யாரும் இருக்க மாட்டார்கள் !!

தீரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க