Sunday, January 16, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் கல்விக் கொள்ளை ஜேப்பியாரின் புதிய ஆக்கிரமிப்புக்கு உதவும் பொதுப்பணித்துறை !

கல்விக் கொள்ளை ஜேப்பியாரின் புதிய ஆக்கிரமிப்புக்கு உதவும் பொதுப்பணித்துறை !

-

சென்னை செம்மஞ்சேரியில் மக்களுக்கு சொந்தமான ஏரியை ஆக்கிரமித்து ஜேப்பியார் கட்டிய கல்லூரியை அறிவீர்கள். அந்தக் கல்லூரிக்கு புதிதாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள். இதற்கெதிராக அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராடியதால் வேலையை பாதியில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர் அதிகாரிகள்.

ஜேப்பியார் குழுமத்தின் உரிமையாளராக ஜேப்பியார் இருந்தார். இவர், கடந்த ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். ஜேப்பியார் உயிரோடு இருக்கும் வரை அனைத்து கல்லூரிகளும் இவரது கட்டுப்பாட்டில் தான் இயங்கி வந்தது. அதோடு மட்டுமல்லாமல் அரசின் அத்தனை துறைக்கும் இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை எனலாம். அந்தளவிற்கு கல்வித்துறையில் தனி சாம்ராஜ்யமே நடத்தியவர்.

அதுமட்டுமில்லாமல் பெற்றோர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமென்ட், ஜேப்பியார் ஸ்டீல் என்று பல துறைகளிலும் தனது சாம்ராஜ்யத்தை பரப்பியவர். சாராய ரவுடியான ஜேப்பியார், பாசிசக் கோமாளி எம்ஜிஆ ரின் ஆசியோடு அதிமுக -வின் மாவட்ட செயலாளராகவும், கவுன்சிலாரகவும் இருந்து, கடைசியில் “கல்வி தந்தை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி திரையுலகில் கமல் வரை இவருடையை மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்குமளவு பிரபலமானவர்.

தனது கல்லூரியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கம் கட்டியதற்காகவும், வினவு தளத்திற்கு தொழிலாளர்கள் பேட்டி கொடுத்ததற்காகவும் அவர்களை பணிநீக்கம் செய்தவர்.

செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில், ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமாக ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பல்கலைக்கழகம், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மற்றும் சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது.

ராஜீவ்காந்தி சாலையில் இருந்து சத்யபாமா பல்கலைக்கழகத்துக்கு செல்ல தனி நுழைவாயிலும், சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல தனி நுழைவாயிலும் உள்ளது. ஆனால், ஜேப்பியார் பொறியியல் கல்லூரிக்கும், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரிக்கும் செல்ல ஒரே நுழைவாயில்தான் உள்ளது.

ஜேப்பியர் மறைவுக்கு பின், கல்லூரி நிர்வாகம் அவரது 2 மகள்கள் கையில் சென்றது. இதையடுத்து, அவர்கள் தனித்தனியே சொத்தை பிரித்து கொண்டனர். இதனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கல்லூரிக்கு தனித்தனியே வழியை அமைக்க முடிவை செய்தனர்.

அதன்படி, கல்லூரி நிர்வாகத்தினர் கல்லூரியை ஒட்டியுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் சாலை அமைக்க முடிவு செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். இதற்கு முதலில் சம்மதிக்காத அதிகாரிகள், கட்டுக்கட்டாக நோட்டை பார்த்தவுடன் ஒத்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகம்

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கடந்த 2017 ஆகஸ்ட் ,  5 -ம் தேதி, கல்லூரியை ஓட்டியுள்ள ஏரி பகுதியில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மரங்கள், முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியைத் தான் தூர்வாருகின்றனர் என நினைத்து, கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

ஆனால், 7 -ம் தேதி காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கல்லூரி சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள மரங்கள் மற்றும் செடிகளை அகற்றி, அங்கு மண்ணை கொட்டி சமன் செய்ததை பார்த்த அப்பகுதி மக்கள், அங்கு பணியாற்றி கொண்டிருந்த ஊழியர்களிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘ஜேப்பியார் கல்லூரிக்கு புதிதாக சாலை அமைக்கும் பணி நடக்கிறது’’ என கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அங்கு நின்றிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, ‘‘ஒரு கல்லூரிக்காக நீர்நிலைகளை அழித்து சாலை போட துணை போகிறீர்கள். நீங்கள் யார் அனுமதி பெற்று, இங்கு வந்து இந்த பணியில் ஈடுபடுகிறீர்கள்’’ என்று சரமாரியாக கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், ‘‘நாங்கள் புதிதாக சாலை போடவில்லை. ஏரியைத் தூர்வாரி சீரமைக்கத் தான் இங்கு வந்துள்ளோம்’’ என்று பொதுமக்களிடம் கூறினர். அதிகாரிகளின் பதிலை ஏற்காத பொதுமக்கள் ஏரியை தூர்வாருவதற்கான அனுமதி கடிதத்தை கேட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள், பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், பணியை பாதியில் விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழுக்கு மக்கள் அளித்த பேட்டியில், ‘சென்னை அடுத்த ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள பகுதிகள் ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி ரூ.1 முதல் ரூ.1.5 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, சிலர் தங்களை அரசியல் பிரமுகர்கள் என கூறி கொண்டு அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். இந்த வேலையை தற்போது அரசு அதிகாரிகளே செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, நாங்கள் இன்று வந்த பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் பதில் சொல்லமுடியாமல் திணறினர். எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்த சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்றும் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2015 -ல் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் என்ன நடந்தது என்பதை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதன் விளைவு செம்மஞ்சேரியில் தண்ணீர் புகுந்து சுமார் இரண்டாயிரம் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு அகதிகளாக பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இவ்வளவு நடந்த பின்பும் ஏரியை பராமரிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுயநிதிக் கல்லூரிக் கொள்ளையர் ஜேப்பியார் கல்லூரிக்கு சாலை அமைப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழகம் முழுவதும் ஆற்று மணலை கொள்ளையடிக்க அனுமதித்து நீர் வளங்களை அழித்தனர். ஏரி, குளம், கண்மாய்கள் என அனைத்தும் பராமரிக்காமல் கிடப்பில் போட்டு பாசன வசதி திட்டத்தை அழித்தார்கள். இதன் மூலம் முப்போகம் விளைந்த விசாயத்தை அழித்து விவசாயிகளையும் தற்கொலைக்கு தள்ளினார்கள்.

மக்களை பாதுகாக்க வக்கற்ற இந்த பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் அனைத்தையும் பிடுங்கி மக்களிடம் ஒப்படைப்பதன் மூலம் தான் மக்கள் சொத்தான ஆறு,ஏரிகளை பாதுகாக்க முடியும்.

செய்தி ஆதாரம் :

_____________

நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே!
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு  நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. “சாராய ரவுடி ஜேப்பியார்”, “பாசிசக் கோமாளி எம்ஜிஆர்” ,சூப்பர் நல்ல பொருத்தமான பட்டம்தான் குடுத்திருக்கிறீங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க