privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசெம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி !

செம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி !

-

செம்மஞ்சேரி வீடுகள்
அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத செம்மஞ்சேரியின் கான்கிரீட் காடுகள்

ல்லரசு கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் என்றால் உங்கள் மனதில் என்ன தோன்றும்?

பிரமாண்டமான ஷாப்பிங் மால்கள், மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகள், ஓங்கி உயர்ந்து நிற்கும் பளபளப்பான மென்பொருள் நிறுவனங்கள், புதிய புதிய பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், அவற்றின் ஆயிரக்கணக்கான ஏ.டி.எம் நிலையங்கள், சர்வதேச ரக ஆடை நிறுவனங்களின் ஷோ ரூம்கள், பீட்சா கடைகள், கே.எஃப்.சி, காபி டே, மெக்டொனால்ட்ஸ், ஐந்து நட்சத்திர விடுதிகள், மற்றும் வகைவகையான வெளிநாட்டு கார்கள், குளிரூட்டப்பட்ட வால்வோ பேருந்துகள், மெட்ரோ ரயில் கட்டுமானங்கள், புதிது புதிதாக எழும் பல்லடுக்கு குடியுருப்புகள். இந்த ஜடப் பொருட்களோடு சேர்ந்து, ‘சாவதற்குள் சொந்த வீட்டில் படுத்து உறங்க வேண்டும்’ என்பதை லட்சியமாகக் கொண்ட மனிதர்கள்.

மாநகரங்கள் என்றால் பலருக்கும் தோன்றும் சித்திரம் இதுதான். உலகமயம் உருவாக்கிய இந்த நகரங்கள் தோன்றுவதற்காக மறைந்து போனவற்றை யாரும் காண்பதில்லை. சென்னையை அலங்கரிக்கும் இந்த கட்டிடங்கள் எல்லாம் இப்போது எழுந்தவை தான். இதற்கு முன்பும் அங்கே மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் அகற்றப்பட்டதால் தான் இவை தோன்றியுள்ளன. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கை நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை கொன்றிருக்கிறது, நூற்றுக்கணக்கான கைத்தொழில்களை ஒழித்திருக்கிறது. கோடிக்கணக்கானவர்களை பிச்சைக்காரர்களாக்கியிருக்கிறது. நகரங்களில் வாழ்ந்தவர்களை எல்லாம் கூட்டம் கூட்டமாக குப்பைக் கூளங்களை போல நகரத்திற்கு வெளியே விரட்டி, ஓரிடத்தில் குவித்துப் போட்டிருக்கிறது.

மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படும் இந்த மக்களாட்சி முதலாளிகளுக்காக முதலாளிகளின் விருப்பப்படி சென்னைக்குள் வாழ்ந்த ஏழை மக்களை சிறிது சிறிதாக நகரத்தை விட்டு நைச்சியமாக ஆசைகாட்டி ஏமாற்றியும், கட்டாயப்படுத்தி மிரட்டியும் வெளியேற்றி வருகிறது. உலகமயமாக்கலுக்கு ஏற்ப சென்னையின் தரத்தை உயர்த்துவதற்காக வேண்டாத கழிவுகளைப் போல வெளியேற்றப்படும் இவர்களை புறநகர்ப் பகுதிகளான செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், ஒக்கியம், கண்ணகி நகர், நொச்சிக்குப்பம், பெரும்பாக்கம், எண்ணூர் ஆகிய இடங்களில் மொத்தமாகக் கொட்டி குவித்து வருகிறது.

கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ராஜீவ் காந்தி சாலை என்று பெயர் சூட்டப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையின் இருபுறமும் பல நூறு கோடி ரூபாய் செலவில் எழுந்து நிற்கும் ஐடி நிறுவனக் கட்டிடங்கள், அவர்களுக்கு தீனி போடுவதற்கான உணவகங்கள், கேளிக்கை மையங்கள், குடியிருப்புகள் இவற்றைப் பார்த்த வண்ணம் பயணித்தால், சோழிங்கநல்லூரைத் தாண்டி வலது திசையில் திரும்பி மூன்று கி.மீ உள்ளே சென்றால் வருகிறது, செம்மஞ்சேரி. சைக்கிள்கள் சென்றாலே புழுதி பறக்கக்கூடிய சாலைகள். அட்டைப் பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்றிருக்கும் குடியிருப்புகள் அகதி முகாமைப் போல தோற்றமளிக்கின்றன. அந்தப் பகுதி முழுவதும் பரபரப்போ, இரைச்சலோ இல்லை. எங்கும் அமைதி. அந்த அமைதியோடு, அவ்வப்போது காற்று கிளப்பி விடுகின்ற புழுதியும், ஆங்காங்கே உள்ள தகரக் கொட்டகை கடைகளும் அமெரிக்க இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கின் பாலைவனப் பகுதிகளை நினைவூட்டுகின்றன.

இது தான் செம்மஞ்சேரி. மறுகாலனியாக்கத்தின் நவீன காலனி. உலகமயமாக்கலின் கீழ் மாநகரங்கள் தான் அக்கிரகாரங்கள். அதிலிருந்து வெளியே தள்ளப்படும் இவையெல்லாம் புதிய சேரிகள். சென்னையை ’தூய்மைப்படுத்தும்’ திட்டத்திற்கு சுனாமியைப் பயன்படுத்திக் கொண்ட அரசு, மக்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் அடையாறு, சாந்தோம், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடிசை வாழ் மக்களை இந்த சுனாமி குடியிருப்புக்குள் கொண்டு வந்து கொட்டி விட்டது. சுனாமி குடியிருப்பு என்கிற பெயரிலுள்ள இந்த குடியிருப்புகள் செம்மஞ்சேரியில் மட்டுமின்றி, வேறு சில இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதி மக்களைக் கொண்டு வந்த அடுத்த சில ஆண்டுகளில், தி.நகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அடையாறு பகுதிகளில் ’திடீர் தீ விபத்துகளால்’ பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதி மக்களும் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இக்குடியிருப்பில் இவர்களிடம் மட்டும் மாத வாடகையாக முன்னூறு ரூபாயும், பராமரிப்புக் கட்டணமாக ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மென்பொருள் நிறுவனங்களிலும், பிற தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிபவர்கள் எப்போதும் வீடு கட்டுவதைப் பற்றியும், அவ்வாறு கட்டப்படும் தனது வீட்டின் கிச்சன், லிவிங் ரூம், டைனிங் ரூம், பெட் ரூம், பாத் ரூம் ஆகியவை எப்படி இருக்க வேண்டும், எங்கு இருக்க வேண்டும் என்கிற கனவிலும் தான் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கின்றனர். அந்தக் கனவை நனவாக்க வங்கிகளில் கடனைப் பெற்று சில பத்து லட்சங்களிலோ, ஒரு கோடியிலோ ஒரு வீட்டையும் வாங்கி விடுகின்றனர். ஆனால் இங்கிருக்கும் மக்களோ தமது வாழ்விடங்களிலிருந்து ஒரே நாளில் திடீரென்று இந்த கான்கிரீட் காடுகளுக்குள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.

செம்மஞ்சேரி பெண்கள்
நகரத்திலிருந்து வெகு தூரத்திற்கு தூக்கி அடிக்கப்பட்டதால் வேலை வேலை வாய்ப்புகளை இழந்த பெண்கள்

செம்மஞ்சேரி குடியிருப்பில் மொத்தம் 6,800 வீடுகள் உள்ளன. போலீசுக்கும், இராணுவத்துக்கும் தரமாகப் பார்த்து பார்த்து வீடுகளை கட்டித்தரும் அரசாங்கம் ஏழைகளுக்கு ஏனோ தானோவென்று, குழந்தைகள் விளையாடக்கூடிய மணல் வீடுகளைப் போல கட்டிக்கொடுத்திருக்கிறது. சொந்த வீடு லட்சியக்காரர்கள் வீட்டை வாங்கிய பிறகு அதை நிறைக்க பொருட்கள் பொருட்கள், மேலும் மேலும் பொருட்கள் என்று குடியிருக்கும் வீட்டை கடையாக்குவார்கள். வாரா வாரம் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற நுகர்வுப்பசி நோய் அவர்களைப் பிடித்தாட்டும். கையில் காசு இல்லா விட்டாலும், வைத்திருக்கும் பழைய பொருட்களை தூக்கிப் போட்டுவிட்டு, கடன் அட்டைகளைத் தேய்த்தாவது புதிய புதிய கைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினிகள், ஏ.சி, ஏர் கூலர்கள் போன்ற மின்சாதனப் பொருட்களும், ஆடைகளும், வெளிநாட்டு உணவுப் பொருட்களும், வீட்டின் மூலையிலும் பரண்களிலும் மூட்டை மூட்டையாகக் குழந்தைக்கு வாங்கிப் போட்ட விளையாட்டுப் பொருட்களுமாக இவர்கள் பொருட்களோடு தான் வாழ்கிறார்கள், பொருட்களைத் தான் நேசிக்கிறார்கள்.

செம்மஞ்சேரியிலுள்ள எந்த வீட்டிற்குள்ளும் ஒரே ஒரு கட்டிலையோ ஒரே ஒரு பீரோவையோ கூட போட முடியாது. போட்டால் இரண்டு பேர் கூட படுக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு வீடும் 10 க்கு 15 என்கிற அளவில் தான் கட்டப்பட்டிருக்கிறது. எனவே பெரும்பாலான வீடுகளில் இந்தப் பொருட்கள் இருக்காது. மிகச்சிறிய வீடுகள் என்பதால் நான்கு ஐந்து பேர் கொண்ட குடும்பங்கள் ஒரே வீட்டிற்குள் படுக்க முடியாது. எனவே அருகிலேயே இன்னொரு வீட்டை ’வாய்ப்புள்ளவர்கள்’ வாடகைக்கு எடுத்துக்கொள்கின்றனர். இல்லாதவர்கள் மொத்தமாக புளிமூட்டைகளைப் போல ஒருவர் மேல் ஒருவர் கிடக்க வேண்டியது தான்.

குடியிருப்புகளைப் பார்த்தவாறே நடந்து கொண்டிருந்த போது தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்த மூதாட்டி ஒருவரைப் பார்த்து, எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

”என் பேரு லட்சுமிப்பா. பட்டிணப்பாக்கம் சீனிவாசபுரம் தான் பொறந்தது வளர்ந்தது எல்லாம். இப்ப அறுபத்தி ஒரு வயசாயிருச்சு. வீட்டுக்காரர் இறந்துட்டாரு. ரெண்டு பிள்ளைங்க.. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி தனியா இருக்குங்க” என்றார். ”சீனிவாசபுரத்துல இருந்ததுக்கும் இங்கைக்கும் எப்படி இருக்கு? வசதியா இருக்கா ?” என்றதற்கு, ”ரொம்ப கஷ்டம்பா. எந்த வசதியும் இல்ல. அவசரத்துக்கு ஊருக்குள்ள போகணும்னா கூட ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுது. டிக்கெட்டுக்கும் செலவு. முன்ன அப்படியில்ல.” என்றார்.

”அப்புறம் ஏன் அரசாங்கம் உங்களை இங்க கொண்டு வந்து விட்டுச்சு? அங்கயே இப்படி ஒரு வீட்டை கட்டிக் கொடுத்திருக்கலாம்ல ?” என்று கேட்டோம். ”சுனாமி வந்தப்ப ஒதுங்கவே இடமில்லாம நின்னோம். சுனாமி எல்லாத்தையும் அடிச்சுக்கிட்டு போயிருச்சு. எல்லோரும் எங்க போறதுன்னே தெரியாம நனைஞ்சுக்கிட்டு நின்னப்ப முதலமைச்சர் அம்மா தான் இரக்கப்பட்டு இங்க கூட்டிட்டு வந்து, தங்க வச்சாங்க. அந்த நேரத்துல அங்க போறேன், இங்க போறேன்னு கேக்க முடியுமா?!” என்று அம்மாவின் சதித்தனம் பற்றித் தெரியாமல் அப்பாவியாக பேசினார்.

”இந்த வீட்ல எத்தனை பேர் இருக்கீங்க?” எனக் கேட்டதற்கு ”நான் மட்டும் தாம்பா. புள்ளைங்க ரெண்டும் தனித்தனியா இருக்குங்க” என்று கூறி அமைதியானார். ”இன்னிக்கு என்ன சமைச்சீங்க?” ”சும்மா புளி சோறு” என்றார். ”ஞாயிற்றுக்கிழமை கறி மீன் எல்லாம் இல்லையா ?” என்று கேட்டோம். ”கறியெல்லாம் அதிகம் சாப்பிடறது இல்லப்பா. இப்ப அதிகம் எடுக்கறது இல்லை” என்று சிரித்தார். அது துயரத்தை வெளிப்படுத்தும் சிரிப்பு.

”எங்கையாச்சும் வேலைக்குப் போறீங்களா?” எனக் கேட்டோம். ”சோழிங்கநல்லூர்ல ஒரு வீட்டுக்கு வேலைக்கு போறேம்பா. காலையில ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிருவேன். போனதும் முதல்ல பழைய பாத்திரங்களை கழுகிப் போட்டுட்டு, துணியை ஊற வைப்பேன். அப்புறமா அஞ்சு ரூமுக்கு மாப் போட்டுத் தொடைக்கணும். அது முடிச்சதும், ஊற வச்ச துணிகளை எல்லாம் மிஷின்ல போட்டு தொவைக்கணும். தொவைச்ச பிறகு, முதல் நாள் துவைச்ச துணிகளை மடிச்சு வச்சுட்டு கிளம்பணும். அவங்க புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் 7.30, 8 மணிக்கெல்லாம் கிளம்பிருவாங்க. அதுக்குள்ள நானும் என்னோட வேலைகளை முடிச்சுட்டு வெளிய வந்துறணும். தெனமும் இது தான் வேலை.”

”எவ்வளவு தர்றாங்க?”. ”1500 ரூபா தாம்பா தர்றாங்க. அதுல பஸ்சுக்கே ஐநூறு ரூவா போயிரும். மிச்சமிருக்க ஆயிரத்துல ஐம்பது ரூவா வீட்டு மெயிண்டன்ஸ்க்கு போனா மாச செலவுக்குன்னு கையில தொள்ளாயிரத்து ஐம்பது ரூபா தான் இருக்கும்.” அறுபத்தியோரு வயதிலும் இவ்வளவு கடுமையாக உழைக்கக் கூடியவர் நல்ல சாப்பாட்டை விரும்பாமலா இருப்பார்? எனினும் ஒரு நாளைக்கு முப்பது ரூபாய்க்கு மேல் செலவு செய்ய முடியாது என்கிற போது இறைச்சியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும் ?

செம்மஞ்சேரி குடியிருப்புகளை விட மட்டமான வீடுகளை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பல வீடுகள் ஒழுகுகின்றன. மழைக்கால இரவுகளில் பெரும் காற்றிலோ, மழையிலோ அவை இடிந்து விழுந்தால் இந்த அரசின் நோக்கம் ஒரே நாளில் நிறைவேறி விடும்.

அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் சுவரை ஒட்டியே கட்டப்பட்டுள்ளன. வீடே பத்துக்கு பதினைந்து என்றால் கழிவறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். மேல் வீட்டின் கழிவறையிலிருந்து சொட்டும் நீர் கீழ் வீட்டின் வாசலையும் நனைத்துக் கொண்டே இருக்கிறது. ”இங்க பாருப்பா! மேலே இருந்து கக்கூசு தண்ணி கொட்டி கொட்டி சொவரே சொறி புடிச்சா மாதிரி ஆயிடுச்சு!” என்று சுவரைக் காட்டினார் மஞ்சுளா.

மஞ்சுளா பெசண்ட் நகரில் வாழ்ந்தவர். கடற்கரைப் பகுதியில் இருந்த போது மீன்களை வாங்கி விற்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். இப்போது தன் வீட்டு குழம்பிலேயே அரிதாகத் தான் மீன்களைப் பார்க்க முடிகிறது என்கிறார். ”சுனாமி அப்ப எங்களை இங்க கொண்டு வந்து விட்டாங்க. நாலு வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்காரர் இறந்துட்டாரு. ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு மட்டும் படிக்குது.” என்றார் மஞ்சுளா.

”பீச்ல இருக்கும்போது மீன் வித்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப என்ன பண்றீங்க?” என்று கேட்டோம். ”இங்க இருந்துக்கிட்டு என்ன செய்றது ? ஒன்னும் செய்ய முடியாது. இங்கிருந்து போக வரவே நாலு மணி நேரம் ஆயிடுது. மீன வாங்குனா ஒரே இடத்துல உக்காந்து விக்க முடியாது. தெருத்தெருவா கூவிக்கூவி தான் விக்கணும். அதனால முன்ன மாதிரி வியாபாரத்துக்கெல்லாம் போறதில்லை. அதனால வருமானமும் இல்ல, வாழ்க்கையே கஷ்டமா தான் இருக்குது.”

”வருமானத்துக்கு என்ன பண்றீங்க? பையன் வேலைக்குப் போறாரா” எனக் கேட்டதற்கு

”அது எங்க போவுது?! எப்ப பாத்தாலும் குடி குடின்னு தான் கெடக்குது. இதோ இப்ப கூட உள்ள எட்டிப் பாரு. குடிச்சிட்டு தான் படுத்துக் கெடக்கு. பொண்ணோட வருமானத்துல தான் ஏதோ வாழறோம்.” என்றார். ”பொண்ணு என்ன செய்றாங்க?” எனக் கேட்டதற்கு, ”காய் வெட்டுற வேலைக்கு போவுதுப்பா!” என்றார். ”எங்கே ?” ”ஓட்டல்ல. காலேஜ முடிச்சிட்டு அப்படியே நேரா ஹோட்டலுக்கு போயிரும். நைட்டு வர்றதுக்கு எட்டு, ஒம்பதுன்னு ஆயிரும்.”

”நீங்க இங்க விரும்பியா வந்தீங்க?” எனக் கேட்டதற்கு, ”யாருப்பா விரும்பி வருவாங்க?! ஏமாத்திட்டாங்க. எல்லோருக்கும் சொந்த வீடு தர்றோம்னு சொன்னதும் ஆசப்பட்டு வந்துட்டோம். ஆனா இங்க வந்தப்புறம் தான் இது காடுன்னு தெரியுது. பெசண்ட் நகர்ல இருந்தப்பவாவது ஏதோ நாலு காசு சம்பாரிச்சோம், நல்லா இருந்தோம். இங்க கொண்டு வந்து போட்ட பிறகு என்ன பண்றது, ஏது பண்றதுன்னே தெரியல!” என்றார்.

”இங்கே எல்லா வசதியும் செய்து தரப்பட்டிருக்கா?” என்றதும், அருகில் நின்று கொண்டிருந்த தயாளன் ”எல்லா வசதியும் செய்து தந்துட்டதா வெளிய சொல்லிக்கிறாங்க. ஆனா எந்த வசதியும் இல்ல. மெட்ராசுக்கு போறதுக்கு தான் பல கி.மீட்டர்னா, கரண்ட் பில்லு கட்டுறதுக்கும் பல கி.மீ போக வேண்டியிருக்கு. அதுவும் பஸ்ல தான் போகனும். போக வர மட்டும் இருபத்து நாலு ரூபா ஆகுது. ஏழாயிரம் பேருக்கு இருக்கிறது வெறும் நாலு ரேசன் கடை. அதுலயும் திருடுறானுங்க. கிருஷ்ணாயில் வாங்க ஒம்பது மணிக்கு நின்னா பதினோரு மணிக்கு தான் கவுண்டர் பக்கத்திலேயே போக முடியும். பக்கத்தில போனதும் முடிஞ்சு போச்சுங்கிறாங்க. குடி தண்னில சாக்கடை கலக்குது. வீட்டை சுத்தியுமே சாக்கடை. இங்க எதுவுமே சரியில்லைங்க!” என்றார்.

குடியிருப்புகள் அனைத்தும் குட்டி குட்டி பிளாக்காக கட்டப்பட்டுள்ளன. ஒரு பிளாக்கில் நாலு வீடுகள். அதே போல எதிரிலும் நாலு வீடுகள். இப்படியே இரு பக்கங்களிலும் வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. இரு பக்க வீடுகளின் பின்பக்க சுவர்களுக்கு இடையிலுள்ள இடைவெளி இருபதடி. இவ்வாறுள்ள ஒவ்வொரு இடைவெளியிலும் ஒரு சாக்கடை உள்ளது. இப்படி மொத்தக் குடியிருப்பு முழுவதும் நூற்றுக்கணக்கான குட்டி குட்டி சாக்கடைகளைக் காண முடிகிறது. அதில் அனைத்து வகைக் கழிவு நீர்களும் தேங்கி நின்று, கொசுக்களை உற்பத்தி செய்கின்றன. குடிநீர்க் குழாய்கள் அமைந்துள்ள இடங்களில் அழுக்கு நீர் குட்டை போல தேங்கிக் கிடக்கிறது.

குடும்பத் தலைவர்களான ஆண்கள் பெரும்பாலும் குடிகாரர்களாக இருக்கிறார்கள். எனவே பலரும் நோய்வாய்ப்பட்டு நடுத்தர வயதிலேயே இறப்பதும், குடும்பச்சுமை பெண்கள் தலையில் விழுவதும் இங்கே பொதுவான அம்சமாக இருக்கிறது. வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் சென்னைக்கு தான் செல்ல வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்குக் கிளம்பினால் தான் ஏழு மணிக்கு சென்னையின் மத்திய பகுதியை அடைய முடியும். தினம் தினம் போய் வர முடியாதவர்கள் வேலையிடத்திலே தங்கிக்கொண்டு, வாரம் ஒரு முறை வந்து போகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் அச்சகத்தில் தங்கிக்கொண்டு பணிபுரிந்து வந்த தனது கணவர், கடந்த வாரம் பணியிடத்திலேயே இறந்து போனதைப் பற்றி பாத்திமா என்பவர் வருத்தத்துடன் கூறினார்.

இங்குள்ள ஏழாயிரம் குடும்பங்களுக்கு அடிப்படை மருத்துவ வசதியைக் கூட அரசு செய்து தரவில்லை. ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் ஆரம்ப சுகாதார மையத்தைத் தவிர வேறு ஒரு மருத்துவமனையும் இங்கு இல்லை. அதே போல பள்ளிக் கூடமும் இக்குடியிருப்பில் இல்லை.

செம்மஞ்சேரி இளைஞர்கள்
பிழைப்பிற்காக அதிகாலை எழுந்து நகரம் சென்று நள்ளிரவு திரும்பும் இளைஞர்கள்!

சொந்த வீடு தருகிறோம் என்று ஆசையூட்டியும், வேண்டாம் என்று மறுத்து நின்றவர்களை கட்டாயப்படுத்தியும் தான் இவர்களை இங்கு கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள். சொந்த வீடு கிடைக்கிறதே என்கிற ஆசையில் வந்தவர்களும் இந்த அட்டைப் பெட்டிகளைப் பார்த்த பிறகு அதிர்ச்சியுற்று ஆத்திரமடைந்தனர்.

அரசாங்கம் திட்டமிட்டு நம்மை வெளியேற்றி விட்டது, நாம் பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து நம்மை பிடுங்கி எறிந்து விட்டார்கள் என்கிற கோபமும் ,ஆத்திரமும் ஆரம்பத்தில் மக்களிடம் தீவிரமாக இருந்துள்ளது. தமது கோபத்தை இளைஞர்கள் தெரு விளக்குகள் மீதும் காவல் நிலையத்தின் மீதும் காட்டினார்கள். கற்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான தெரு விளக்குகளை உடைத்திருக்கின்றனர், காவல் நிலையத்தையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த எதிர்ப்பும் வற்றி வடிந்து விட்டது. இப்போது எட்டு ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இப்போதும் கூட, அரசு தங்களை ஏமாற்றி துரோகம் செய்து விட்டதாகவும், ஏழைகள் என்பதால் தான் இப்படி நகரங்களை விட்டு வெளியேற்றி விட்டார்கள் என்றும் கூறுகிறார் யுவராஜ் என்கிற இளைஞர். மக்களில் பலரும் இவ்வாறு தான் கருதுகின்றனர்.

சென்னை நகருக்குள் இன்னும் கூட பல ஆயிரக்கணக்கான குடிசைகள் இருக்கின்றன. அவற்றையும் விரைவில் காலி செய்து வெளியேற்றுகின்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கத்திலும், கண்ணகி நகரிலும் பல்லாயிரக்கணக்கான எட்டடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் அறுபத்து எட்டாயிரம் வீடுகள் கொண்ட எட்டடுக்கு குடியிருப்புகளின் கட்டுமானம் கிட்டத்தட்ட தொன்னூறு சதவீதம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

குடியிருப்புகளைக் கடந்து அதன் மேற்கு எல்லைக்குப் பக்கமாக வந்த போது வேறு ஒரு காட்சியைக் கண்டோம். சுனாமி குடியிருப்பு முடிவடையும் அதன் மேற்கு எல்லை ஓரமாக டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனம் மிகப் பிரமாண்டமான இரு பிரிவு பல்லடுக்கு கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடித்திருக்கிறது. அந்த இரு பிரிவுகளும் மொத்தம் மூவாயிரத்து இருநூறு வீடுகளைத் தாங்கியுள்ளன. அவற்றில் தற்போதே ஆயிரக்கணக்கான வீடுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

அதற்கு அருகிலேயே இன்னொரு உயர் அடுக்கு கட்டிடமும் வெகு வேகமாகக் கட்டப்பட்டு வருகிறது. அதில் குறைந்தது ஆயிரம் வீடுகளாவது இருக்கலாம். அந்த கட்டிடத்திற்கு இடது புறமாக இந்திய இராணுவம் இரண்டாயிரத்து ஐநூறு வீடுகள் கொண்ட ஒரு இராணுவக் குடியிருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறது. வலது புறமோ புகழ்பெற்ற பார்ப்பன பத்மா சேஷாத்ரியின் புதிய பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு படிக்கின்ற மாணவர்கள் அனைவரும் வேன்களிலும், கார்களிலும் தான் வருகின்றனர். சுனாமி குடியிருப்பிலுள்ள குழந்தைகள் இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியாது. இவற்றைத் தவிர சுற்றிலும் பல்வேறு புதிய கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன

கடந்த எட்டாண்டுகளில் புறநகர்ப் பகுதியான செம்மஞ்சேரி மிகப்பெரிய அளவுக்கு ’வளர்ச்சி’ அடைந்திருக்கிறது. சுற்றிலும் புதிது புதிதாக பல பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களும், உள்நாட்டு வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் முளைத்துள்ளன. சென்னையிலிருந்து துரத்தப்பட்டவர்களை மறுகாலனியாக்கத்தின் ’வளர்ச்சி’ இப்போது செம்மஞ்சேரியிலும் சுற்றி வளைத்திருக்கிறது. இவர்களை இங்கிருந்து இன்னும் பல பத்து கி.மீட்டர்களுக்கு அப்பால் தூக்கி எறியப் போகின்ற வளர்ச்சியை சுற்றிலும் எதிர்நோக்க முடிகின்றது ! நாடு முன்னேற முன்னேற, ஏழைகள் முடிவில்லாமல் பின்வாங்கிச் செல்ல வேண்டும் போலிருக்கிறது.
__________________________________
புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
__________________________________