உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவன் நகரில் ஒரு அரசுப் பள்ளியில் அக்சய பாத்ரா என்.ஜி.ஓ-வின் மதிய உணவு திட்டத்தை கடந்த 11.02.2019 அன்று தொடங்கி வைத்தார் மோடி.
அங்கு தாம் உணவு வழங்கிய காட்சிகளையும், மாணவர்களிடம் தாம் ‘அளவளாவிய’ காணொளியையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பக்தாள்களின் லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்றுக் கொண்டார்.
அதில் ஒரு காணொளியில், அங்கிருக்கும் ஒரு மாணவனிடம், “பிரதம மந்திரி வருவதற்காக 12 மணிக்கு சாப்பிட வேண்டிய நீங்கள் அனைவரும் வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டதா?” என்று கேட்கிறார். அதற்கு அருகில் இருக்கும் மாணவி, “இல்லை, நாங்கள் காலையிலேயே வீட்டில் சாப்பிட்டு விட்டோம்” என்கிறார். அங்கிருக்கும் அனைத்து மாணவர்களும் சிரிக்கிறார்கள். இப்படியாக அந்த காணொளி முடிகிறது. அந்தக் காணொளியின் பின்னூட்டத்தில் பக்தாள்கள் ‘கிரேட்’ என்றும் ‘கியூட்’ என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.
பலரும் இந்த காணொளியில் நடக்கும் நிகழ்வுகள் செட்டப் செய்யப்பட்டவை என்று கூறுகின்றனர். உண்மையோ, செட்டப்போ… ஆனால், இந்தியா முழுவதிலும் குழந்தைகள் அரசுப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் காலை உணவு உட்கொண்டுதான் வருகிறார்களா? புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
பஞ்சாப் போன்ற வளம் மிக்க மாநிலத்திலும் கூட 40% குழந்தைகள் காலை உணவை உட்கொள்ளாமல் வெறும் வயிற்றோடு பள்ளி வருகின்றனர். இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது உத்தரப் பிரதேசம். இங்கு பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைவளர்ச்சி கொண்டவையாக இருக்கின்றன.
படிக்க:
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?
♦ மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?
இக்குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க உணவில் முட்டை சேர்ப்பது அவசியமானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அப்படியெனில் உத்தரப் பிரதேசத்தின் அந்தக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய மோடிஜி ஏன் முட்டை பரிமாறவில்லை?
ஏனெனில் இங்குதான் நாடு முழுவதும் வியாபித்துள்ள உணவு அரசியல் இருக்கிறது. நாடு முழுவதும் பாஜக ஆளும் 15 மாநிலங்களில் பள்ளிகளில் மதிய உணவில் குழந்தைகளுக்கு முட்டை மறுக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசமும் அடக்கம். ஊட்டச்சத்துக் குறைபாடு தலைவிரித்தாடும் மத்தியப் பிரதேசத்திலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னரே முட்டை மதிய உணவிலிருந்து நீக்கபட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த மாதத்திலிருந்து வாரம் 3 முட்டைகள் வழங்கப்படுவது 2-ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்தார் அம்மாநில பாஜக முதல்வர்.
காவிகள் ஆட்சியை விட்டுப் போனாலும், இந்நிலையைத் தொடரச் செய்ய, அட்சய பாத்ரா என்ற ஒரு என்.ஜி.ஓ-வை உருவாக்கி உள்ளது காவிக் கும்பல். பல மாநிலங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்கு அரசோடு ஒப்பந்தம் போட்டுள்ளது அட்சய பாத்ரா. இந்துத்துவக் கும்பலான ‘இஸ்கான்’-ன் கீழ் செயல்படும் இந்த என்.ஜி.ஓ, சாத்விக உணவுகளையே மதிய உணவில் வழங்குவதைத் தமது ‘கொள்கையாக’ வைத்திருக்கிறது.
குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் வெங்காயம், பூண்டையே தவிர்க்கும் இந்தக் கும்பல், முட்டையை மட்டும் அனுமதிக்குமா என்ன? இதன் காரணமாகவே சமீபத்தில் கர்நாடக அரசு, குழந்தைகளுக்கான மதிய உணவில் வெங்காயத்தையும் முட்டையையும் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தியும் முடியாது என திமிராக அறிக்கைவிட்டது இந்த என்.ஜி.ஓ.
நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்றத் தேர்தலுக்குப் பின்னர், சட்டீஸ்கரில் புதியதாக ஆட்சியமைத்த காங்கிரசு, பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் வாரத்திற்கு இரண்டு முட்டைகளைச் சேர்த்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் மத்தியப் பிரதேசத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள காங்கிரசு அரசு மதிய உணவில் முட்டை வழங்குவதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்துத்துவாவைப் பொறுத்தவரையில் மத்திய பிரதேசத்தில் பாஜக-வுக்கு சற்றும் இளைத்தது அல்ல காங்கிரசு.
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு தனது வாக்குறுதியில் பள்ளியில் மதிய உணவில் முட்டை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அதே அரசுதான் பள்ளிகளில் மதிய உணவு வழங்க அட்சய பாத்ரா நிறுவனத்தை நியமிப்பது குறித்து திட்டமிட்டு வருகிறது. எனில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையை எங்கிருந்து கொடுக்கப் போகிறது ஆம் ஆத்மி அரசு ?
முட்டையை அசைவமாகக் கருதும் தவறான போக்கு இந்தியாவில் நிலவும் சமஸ்கிருதமயப்பட்ட பார்ப்பனிய பண்பாட்டோடு பிணைந்துள்ளது. சாதி எதிர்ப்பு முற்போக்கு சமூக இயக்கங்கள் செயல்பட்ட தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள்தான் நாட்டிலேயே ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் குறைவாக உள்ள மாநிலங்களாக இருக்கின்றன.
ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப் ஆகிய மேற்கு மாநிலங்கள், பலவகைப்பட்ட உணவு பழக்கங்களைக் கொண்டிருந்தாலும், இவை இந்த கணக்கீட்டில் இருந்து விலகி நிற்கின்றன. இதற்கு பாரம்பரியமாக அங்கு நிலவும் சைவ உணவு வழக்கம் ஒரு முக்கியக் காரணமாகும். கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் முட்டை மற்றும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்கள். இதைத் தாண்டி, அரியானாவும், இராஜஸ்தானும் பால் மற்றும் பஞ்சாப் கீர் போன்றவற்றை பள்ளி மாணவர்களுக்கு மாற்று உணவாக அளிக்கின்றன.
ஆனால் மோடியின் குஜராத் மாநிலம், வெண்மைப் புரட்சியில் சாதனை புரிந்திருந்தாலும், பள்ளி மாணவர்களுக்குப் பால் வழங்குவதில்லை. அம்மாநிலம் குழந்தைகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகம் உள்ள மாநிலமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க:
♦ என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !
♦ வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !
மத்திய அரசு, பள்ளி மாணவர்களுக்கு பால் மற்றும் தேன் வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் எதுவும் காணப்படவில்லை. பாவம் அம்பானிக்கும் அதானிக்கும் ஒதுக்குவதற்கே பணம் பத்தவில்லை. இதில் எங்கு போய் ஏழை மாணவர்களுக்கும் பாலும் தேனும் வாங்குவது?
சில ஆய்வாளர்கள், சைவ உணவு உட்கொள்வோர் அதிகம் உள்ள மாநிலங்களில்தான் முட்டை வழங்குதல் குறைவாக உள்ளது என்று கூறுகின்றனர். இது உண்மையாக இருந்தாலும், தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 2015–16-ன் படி, இந்திய மக்களின் மிகப்பெரும்பான்மையினர், முட்டை மற்றும் பால் உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள்தான்.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை அதிகம் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் முட்டை உணவு உட்கொள்பவர்கள்தான். ஆனாலும் அங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுவதில்லை. பணக்கார மாநிலமான மராட்டியமோ, பழங்குடியின மக்கள் அதிகம் இருக்கும் 16 மாவட்டங்களில் மட்டும் அப்துல்கலாம் அம்ருத் யோஜனா என்ற பெயரில் முட்டைகளை வழங்குகிறது. மாநிலத்தின் பிற பகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதில்லை.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. இங்கு பெரும்பான்மை மக்களின் உணவு அசைவமாக இருப்பினும், வெகு தொலைவுப் பகுதிகளுக்கு முட்டையை அனுப்புவது அதிக செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது என அருணாச்சலப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. கூடுதலான மத்திய அரசு உதவியும், கோழிப் பண்ணைகளை மாநிலத்தில் அதிகரித்தலுமே இதற்கான தீர்வைத் தரும்.
தமிழகத்தில் ரெய்டு இழிபுகழ் கிறிஸ்டி நிறுவனத்தின் துணை நிறுவனத்திலிருந்து முட்டை வாங்கிய ஜார்க்கண்ட் அரசின் உதாரணத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் முட்டை வாங்குதலையும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். மிகவும் மோசமான தரத்தில் முட்டைகள் வந்ததால், ஜார்க்கண்டில் இருக்கும் சிறு சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே தற்போது முட்டைகளை வாங்குவதற்கு அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மொத்தத்தில் மோடி தலைமையிலான ஆட்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நமது உணவு முதல் அந்தரங்கம் வரை அனைத்திலும் இந்துத்துவக் கும்பல் தலையிட்டு வருகிறது. வெறுமனே தலையீடு என்பதைத்தாண்டி, இது வருங்காலத் தலைமுறையினரின் உடல்நலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இதனை எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வாகப் பார்த்துவிட்டு கடந்து போனால், நாளைய சமூகம் நோஞ்சான்களின் சமூகமாகவே மாறிப் போகும் !
– நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர்
In India the children who goes to private school skipping morning breakfast due to school starts early in the morning.