திமாறன் தோசை குறித்து பேசியதாக ஒரு காணொளியை எனது கல்லூரி நண்பர்கள் வாட்ஸ் அப் குருப்பில் பகிர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். மதிமாறன் உணவில் சாதி குறித்து பேசும் போது உதாரணமாக தோசை குறித்து பேசியிருக்கிறார் என நினைக்கிறேன். இணையத்திலும் இது குறித்து விவாதிப்பதால் அந்த குரூப்பில் பகிர்ந்த எனது தோசை அனுபவத்தை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.

தோசை பிரச்சனையெல்லாம் பெரிய பிரச்சனையா என்று சிலர் நினைக்கக்கூடும். பெரிய பிரச்சனையில்லை தான். ஆனாலும் தோசையில் கல் தோசை என்றும் நைஸ் என்று இரு வகை இருப்பதை நான் தெரிந்து கொள்வதற்கு எனக்கு பிறந்து 18 ஆண்டுகள் தேவைப்பட்டன.

முதல் முறையாக நைஸ் தோசையை பார்த்த போது அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. திருநெல்வேலி நகரத்திற்கே கூட போகாத நான், அப்பாவுடன் அண்ணா பல்கலைகழக கவுன்சிலிங் வந்த போது தான் நைஸ் தோசையை முதல் முறை பார்த்தேன். முதல் முறையாக பெரிய ஹோட்டல் ஒன்றில் தினத்தந்தி பேப்பரை உருட்டி வைத்தது போல தோசையை கொண்டு வந்து என் முன்னால் வைத்த போது கொஞ்சம் வியந்துதான் போனேன். நான் ஆர்டர் செய்தது ஸ்பெசல் தோசை அல்ல என்று சொன்னதும் அந்த வெயிட்டர் “இல்லப்பா இது சாதா தோசை தான். நைஸ் என்றார்”. வியப்புக்கு காரணம் வீட்டில் அம்மா கொஞ்சம் தடிமனாக சுடும் தோசையைத்தான் தோசை என்று அறிந்திருந்தேன்.

திருநெல்வேலிக்கோ இல்லை நாகர்கோவிலுக்கோ போய் சைவ ஹோட்டல்களில் சாப்பிட்டதே இல்லை. சிறுவயதில் காசு சேர்த்து ஹோட்டலில் சாப்பிட்டாலும் பரோட்டாதான் எங்களது தேர்வாக இருக்கும். கஷ்டப்பட்டு பணம் சேர்த்து எவனாவது சைவ ஹோட்டலுக்கு போவானா? மனோ ஹோட்டல் பரோட்டா தான் ஆகச்சிறந்த ஹோட்டல் உணவு எங்களுக்கு. இன்று நகரங்களில் குடும்பத்தோடு சினிமாவிற்கு போய் விட்டு இரவு டின்னரை ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். அது போன்ற ஒரு பழக்கமும் இல்லை. எனக்கு தெரிந்து நாங்கள் குடும்பமாக ஹோட்டல்களில் சாப்பிட்டதே இல்லை. பெண்கள் உள்ளிட்டு குடும்ப சகிதமாக ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் பண்பாடற்றவர்கள் என்பது இன்னும் அம்மாவின் கருத்து.

அதற்கு பிறகு வீட்டில் மெல்லிதாக தோசை சுடச் சொல்லி டார்ச்சர் செய்து கொண்டே இருந்தேன். எவ்வளவு டார்ச்சர் செய்தாலும் கேட்டாலும் தடிமனின் அளவு கொஞ்சம் குறையுமே ஒழிய அந்த மெல்லிய தோசை வந்ததேயில்லை. மெல்லிய தோசைக்கு சண்டையிட்டால் ” உங்களுக்கு என்னலே. தெனமும் பலகாரம் பன்றேல்ல என்ன தான் சொல்லனும். எங்களுக்கு தீபாவளி பொங்கல்னு நல்ல நாளுக்கு தான் இதெல்லாம் செஞ்சி தருவாங்க. குடும்பம் மொத்தத்துக்கும் செய்யும் போது மெல்லுசாவா செய்வாங்க. வேகமா செய்யனுமினாக்கி தண்டியாத்தான் ஊத்துவாங்க” இது தான் அவரது ஸ்டண்டர்டு பதில். அவர் இன்று வரை இட்லியையும் தோசையையும் பலகார லிஸ்டில்தான் வைத்திருக்கிறார். அவர்களை பொருத்தவரை அந்த தக்கையான தோசை என்பது ஸ்பெசல் உணவு.

இதவிட கொடுமை என்னவென்றால் எங்கள் வீட்டில் செய்யப்படும் தோசை நல்லா இருக்கு என்று எனது நண்பன் அவன் அம்மாவிடம் சண்டையிடுவான். “ அவளுக்கென்னல வீட்ல சும்மா ஒக்காந்திருக்கா. நான் வெள்ளனயே கள பறிக்க போவாண்டாமா. வேணும்னா அவ வீட்டுலேயே போய் சாப்பிடு. போ”. இது அவனது அம்மாவின் பதில். தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லும்போது அதில் ஒரு வர்க்கமும் ஒளிந்திருக்கிறது. அவர்கள் தினமும் அதிகாலையில் வேலைக்கு சென்றால் வீடு திரும்ப இருட்டி விடும். கிடைக்கும் சொற்ப நேரத்தில் எதையாவது செய்து பசியாறிக் கொள்ள வேண்டும். அதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் உணவில் வயிறுக்குதான் முதலிடமே தவிர நாக்குக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது.

கொஞ்சம் பணம் சேர்த்த பிறகும்கூட அது அப்படித்தான் இருக்கிறது. மாறவில்லை. பணம் வந்த பிறகும் என்ன தெரியுமோ அதைத்தானே செய்து சாப்பிட முடியும்.
தோழர் எதையும் நல்லா இல்லைனு சொல்ல மாட்டார். அவருக்கு டேஸ்ட் பிரச்சனையில்லை என்று சில தோழர்களும், அவன் என்ன கொடுத்தாலும் சாப்பிடுவாண்டா என நண்பர்களும் பல முறை வேடிக்கையாக சொல்வார்கள். யோசித்து பார்த்தால் சாப்பாடு என்பது வயிறுக்கு என்ற நினைப்பு ஒரு பழக்கமாகவே (practice) மாறிவிட்டது என்று தான் நினைக்கிறேன்.

தோசை கதை இப்படி என்றால் பள்ளியில் தீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர்கள் கொண்டு வரும் பண்டங்களை கொண்டு அவர்களின் சாதி/வர்க்கத்தை நிர்ணயித்து விடலாம். அம்மா செய்யும் அதிரசம் இன்று வரை மென்மையாக வந்ததே கிடையாது. வீசினால் மண்டை உடைவது போல தான் வரும். என் அம்மா என்றில்லை. பொதுவில் உறவினர்களுக்கும் அப்படித்தான். “அவங்க கைபக்குவம் எனக்கு வராது. என் கைபக்குவம் அவங்களுக்கு வராது” என்பார். “சுத்து முறுக்கெல்லாம் செய்ய கைபக்குவம் வேணும்பா. நம்ம கடையிலேயே வாங்குவோம் என்பார்.”

களை பறிக்கவும், சாலை போடுவதற்காக கொதிக்கும் தாரோடு சேர்ந்து கொதித்து வேலை செய்து வரும் பாட்டியிடம் கைசுத்து முறுக்கு கைப்பக்குவத்தை கேட்கவா முடியும். கடைசிவரை தீபாவளி என்றால் முந்திரி கொத்து தான். இந்த கைபக்குவம் என்பதில் சாதிக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதை தான் மதிமாறன் சொல்ல வருகிறார்.

பள்ளி நண்பர்களை காட்டி விரும்பி கேட்டால் தன் குழந்தைகள் ஏங்கிவிட கூடாது என்பதற்காக காக்க முட்டையில் ஆயா சுடும் பீசா போல பண்டங்கள் கிடைக்கும். ஆதிக்க சாதியினரின் சமயலறைக்குள் சென்று அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை பார்த்து செய்ய முடியாது. அங்கு சாதி உங்களை தடுக்கும். ரேசன் கடைகளில், மீன் சந்தைகளில் அல்லது வேறு இடங்களில் அவசர அவசரமாக இது செய்ய தெரிந்த நபர்களிடம் கேட்டு அதன் படி செய்ய முயற்சி செய்து காக்கமுட்டை பீசா போல கிடைக்கும் பண்டங்கள் தான் என்னைப் பொருத்தவரை சுவையானவை.

அவை தவிர என் அம்மாவின் காலத்தில் ராணி, தேவி போன்ற பத்திரிகைகளில் வரும் சமையல் குறிப்புகளையும் தெரிந்து கொண்டு ‘பீசா’ செய்ய முயற்சி செய்தார். இந்த பத்திரிகை இல்லாத காலத்தில் எனது பாட்டி அவருக்கு முந்தையவர்களோ என்ன செய்திருப்பார்கள். வேலைக்கு செல்வதற்கு நடுவில் வயிறுக்கு கொடுக்கப்படும் ஏதோ ஒன்றிற்கு பெயர் தான் சமையல். அவர்களுக்கு அக்கார அடிசலோ, சொதியோ நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன் இன்னமும் தெரியாது.

நாங்கள் பணம் சம்பாதித்த பிறகும் கூட பக்கத்து வீட்டிற்கு ஒரு குடும்பம் வாடகைக்கு வந்த பிறகு தான் தோசையில் அடை தோசை என்ற ஒன்று இருக்கிறது என்று தெரியும். சிறுசேரி வளாகத்தின் சங்கீதா உணவகத்தில் அடை அவியல் ஒன்று கொடுப்பார்கள். அடை தோசை, அவியல், அதனுடன் கொஞ்சம் வெல்லமும் இருக்கும். ஏதேச்சையாக எங்க ஊரு அவியல் கிடைக்கும் என்பதற்காக அதை ஆர்டர் செய்யப் போய் என்னாடா இது தோசைகூட மண்ட வெல்லத்தை வைக்குறாங்க என்று அலுவலக நண்பரிடம் கேட்டேன்.

அவர் வீட்டில் வைக்கப்படும் அடை அவியல், அதற்கான காம்பினேசன் குறித்து சுமார் 1 மணி நேரம் வகுப்பு எடுத்தார். அவர் பேச பேச நாக்கில் எச்சி ஊறியது. அடை தோசையில் இப்படியெல்லாமா வெரைட்டி இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. பதிலுக்கு கப்பை கிழங்கை காரல் மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் காம்பினேசனை சுத்த சைவமான அவரிடம் தெரிவித்தேன். நிச்சயமாக உணவில் சாதி இருக்கிறது; அல்லது சாதி சமூகத்தில் தோசை மட்டுமல்ல பிற உணவு பழக்கவழக்கங்களில் பாரிய வேறுபாடும் இடைவெளியும் இருக்கிறது.

திருநெல்வேலி சைவப்பிள்ளை நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்லும் போது நண்பர்கள் நாங்கள் வந்திருப்பதால் ஸ்பெசல் உணவு என்று ஒன்று கொடுத்தார்கள். அப்போது தான் சொதி என்கிற ஒரு உணவு நான் பிறந்த மாவட்டத்தில் பலரால் விரும்பி உண்ணப்படும் உணவு என்பதே எனக்கு தெரியும். நெடுநாட்களுக்கு பிறகு எனது டீம் லீடர் ஒருவர் தனது மாமியார் சொதி செய்யும்போது மட்டும் தேங்காயை மிக்சியில் அரைக்க கூடாது என்கிறாரென என்னிடம் புலம்பிக்கொண்டிருந்தார். சொதி செய்வதை கழுவி கழுவி ஊற்றினார் அவர்.

உணவில் சாதி என்று சொல்லும்போது எனக்கு இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் அப்பா அம்மாவின் கல்யாண புகைப்படங்களில் சொந்தகாரர்கள் இலையில் சாப்பிடும் புகைப்படமும், அப்பாவின் நண்பர்கள் (அன்வர் அண்ணனின் அப்பா தவிர) பேப்பர் தட்டில் சாப்பிடும் புகைப்படத்தையும் பார்த்தேன். “இவங்க நம்மவீடல் சாப்பிடமாட்டாங்க. அதனால டீ, பிஸ்கட், பழம், கலர்-னு வெளியில இருந்து வாங்குனத வெச்சி சாய்ந்திரம் பங்சன் வைப்பாங்க. அது தான் இவங்க இலையில சாப்பிடல” என்று அம்மா என் சிறுவயதில் சொல்லியது இன்னும் நினைவில் இருக்கிறது. உணவில் சாதி மட்டும் இல்லை வர்க்கமும் இருக்கிறது. “நம்ம வீட்ல ரேசன் அரிசிலால அதுனால அவங்க சாயந்திரம் தான் வருவாங்க” என்று குறிப்பான சில உறவினர்கள் வருகை குறித்து அம்மா சொல்லுவார்.

இப்போது தெருக்காரர்களும், உறவினர்களும் எங்கள் வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்களின் உணவுகளும், அம்மாவுக்கு அவர்களின் கைப்பக்குவமும் இன்னமும் வரவில்லை. இதில் வருத்தப்பட எதுவுமில்லை. இது யதார்த்தம். உழைக்கும் மக்களின் கைப்பக்குவத்தை வளர்ந்து நிற்கும் மாடமாளிகைகளும், சாலைகளும், இன்னபிற வளர்ச்சிகளும் என்றைக்கும் சொல்லிக் கொண்டு தான் இருக்கும்.

படிக்க:
சமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா ?
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்

வேலை வெட்டி இல்லாமல் மன்னரின் மானியங்களையும் இதர சலுகைகளையும் பெற்ற சோம்பேறி வர்க்கம் புது புது பதார்த்தங்களை கண்டுபிடித்து உண்டிருப்பார்கள். அதை தம் மக்களுக்கு தலைமுறை தலைமுறையாக கைமாற்றியும் இருப்பார்கள். அதில் பிரச்சனையில்லை. அது இன்னும் அப்படியே இருக்கிறது என்பது தான் வேதனை.

ஆன்சைட் வேலைக்காக அமெரிக்காவில் இருந்த போது பல்வேறு தேசிய இனங்களை சேர்ந்தவர்களை பார்க்கிறேன். ஒரு வெள்ளை பெண்மணியும், கருப்பின ஆணும் திருமணம் செய்துகொண்டு வாழ்வது வெகு இயல்பானதாக இருக்கிறது. தேசிய இனங்களும் பல்வேறு பண்பாடுகளும் சங்கமிக்கும் போது அவர்களின் உணவுபழக்கம் முதல் பல்வேறு கலாச்சாரங்கள் சங்கமித்து புதிய ஒன்று, இன்னும் சிறப்பான ஒன்று பிறக்கிறது. ஆனால் இன்னும் இரண்டு தெரு தாண்டி இருக்கும் நண்பர் வீட்டு சமையல், பதார்த்தங்கள் இன்னும் நம் வீட்டிற்கு வரவில்லை. தோசையை எப்படி சுட்டா என்ன எல்லாம் வயித்துக்குதான் போகுது என்று நம் அம்மாக்கள் சமாதானம் சொல்லிக் கொண்டே தன் பிள்ளைகள் ஆசைப்பட்டதை செய்து கொடுக்க மெனக்கெடுகிறார்கள். பெருமாள் கோயில் சக்கரை பொங்கலும், புளியோதரையும் ஏனோ நம் வீட்டு சக்கரை பொங்கல், புளியோதரையை விட சிறப்பானதாகவே இருக்கிறது.

இங்கு எந்த கலாச்சாரமும் எதனுடனும் இணையவில்லை. தனித்தனியாக இருக்கிறது. ஒரு பார்ப்பனர் வீட்டு சமயலறைக்கு சென்று அவர் சமையல் செய்வதை வேடிக்கை கூட பார்க்க முடியாது. தலித் ஒருவர் எந்த தொழில் செய்தாலும் தலித் என்று அறிவித்துக் கொண்டு ஹோட்டல் வைத்து பிழைக்க முடியாது.

இந்த அழுக்குகளை எல்லாம் வைத்துக் கொண்டு அது குறித்து பேசினால் அதில் சில பகுதிகளை உருவி எடுத்துக்கொண்டு பேசியவரை கிண்டல் செய்வது. இதில் தமிழ்த்தேசியவாதிகள் என்பவர்களும் இந்து மதவெறியர்களும் வழக்கம் போல் கைகோர்த்துக் கொண்டு தங்கள் சாதி வெறியை தீர்த்துக் கொள்கிறார்கள்.

இது குறித்து பேசும் போது என்னுடைய தோழி யூடியூபில் பல உணவு செய்முறைகளை பார்த்து வைத்திருப்பதாக கூறினார். நானும் வேறு வழியில்லாமல் சமையல் செய்ய யூடியூப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யோசித்து பார்த்தால் சாதி முறையை அப்படியே வைத்துக்கொண்டு ஆதிக்க சாதியினரின் சமயலறைக்குள் நுழைந்திருக்கிறோம் நாங்கள். பிளாஸ்டிக் கப்பை கொண்டு இரட்டை குவளை முறையை மறைமுகமாக பாதுகாப்பதை போல. இந்த கேடு கெட்ட சமூகத்திற்கு தோசையில் சாதி என்று பேசினால் பொத்துக் கொண்டு வருகிறது. ஆனாலும் மதிமாறன் பேசிய காணொளி முழுவதுமாக பார்க்கவில்லை. அந்த தோசை போர்சன் என் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது.

– ராமச்சந்திரன்

3 மறுமொழிகள்

  1. சொதின்னு பாத்துட்டு ஏதோ ஊரு சமையல் கட்டுரைன்னு நினைச்சேன், இன்ட்ரஸ்ட்டிங்…..தோசையை வெச்சு நீங்க சொன்ன சாதிபேதத்தை நானும் நிறைய பாத்துருக்கேன். நல்லா எழுதியிருக்கீங்க, மதிமாறன் உரையை விட நீங்க தொகுத்து தந்திருப்பது சிறப்பு.

    • “நல்லா எழுதியிருக்கீங்க, மதிமாறன் உரையை விட நீங்க தொகுத்து தந்திருப்பது சிறப்பு.”

      My opinion too.

  2. பொதுவாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் சொல் அல்லது சாப்பிடும் உணவு பழைய சோறு உயர்ந்த ஜாதியினரிடம் இருக்காது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க