சூரியன் தன் முழு உருவத்தையும் முழுமையாக மறைத்துக்கொண்டிருந்த நேரம், நிலவு தன் பூமியின் மேல் அலாதி அன்பினை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நேரம், யார் என்று தெரியவில்லை திடீரென்று எனது அப்பாவிற்கு போன் செய்து ஏதோ சொல்ல, அதுவரை அமைதியாக இருந்த அவர் அதனைக் கேட்டவுடன், உடலுக்குள் பாம்பு நுழைந்தது போல திக்குமுக்காடியபடி வெளியில் படுவேகமாக கிளம்பினார்.

அதனைப் பார்த்த எனக்கும் சரி, என் தங்கைக்கும் சரி, ஒரே அதிர்ச்சி. இவருக்கு ஏன் இவ்வளவு கோவம், இந்த அளவு வெறுப்பை முகத்தில் சுமந்து கொண்டு பேண்ட், சட்டை கூட அணியாமல் எங்கே செல்கிறர்? என்று எங்களுக்குள் ஒரு கேள்வி.

இந்த கேள்வியை என் அம்மாவிடம் கேட்க “யாரோ சிலர் பக்கத்து ஊர்ல இருக்கிற நம் வீட்டில தீய வச்சிட்டு போயிட்டாங்க” என்று அவர் சொல்ல அந்த செய்தி எங்களை திகில் அடைய வைத்தது.

“யார் செஞ்சா? எதுக்கு செஞ்சாங்க? ” நாங்கள் மறுபடியும் அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் “எனக்கு மட்டும் என்ன தெரியும்? இந்த நாய்களுக்கு இதுதான் பொழப்பு, பல வீட்டை கொளுத்தணும், நிலத்தை அழிக்கணும், இப்படி தான் இவனுங்க திரிவாங்க” என்று வருத்தப்பட்டுக் கொண்டே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


படிக்க: கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்


நேரம் கடந்து கொண்டே சென்றது. இரவு எட்டு மணிக்கு வீட்டை விட்டு சென்ற எனது தந்தை இரவு 10 மணிக்குத் தான் வீடு திரும்பினார். அவரது வருகையை நோக்கி எதிர்பார்த்துக் காத்திருந்த எனது அம்மாவிற்கு அவரது முகமும் அவரது செயல்களும் கவலையைப் பரிசாக அளித்தன.

பின்பு கட்டிலில் இவரும் உட்கார்ந்து கொண்டு, ”இன்னைக்கு என்ன ஆச்சு?” என்று அவர் கேட்க, அதற்கு அவர் சின்ன புன்னகையுடன் ”நமக்கு வேண்டியவங்க தான் கயாத்தால வட்டார வளர்ச்சி துறை அலுவலராக இருக்கிறார்கள். பள்ளர் சாதியை சேர்ந்தவங்க தான், அவங்க குடும்பத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருதா, அதுவும் அவங்க ஊர்ல இருக்கிறவங்க கிட்ட இருந்து அதிகமாகவே வருகிறது” என்று அவர் சொல்ல, அந்த பேச்சை கவனித்துக் கொண்டிருந்த எங்களுக்கு பயம் தொற்றிக் கொண்டது.

மறுநாள் மாலை டியூஷன் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் யார் என்று தெரியாத சிலர் உள்ளே வந்து உங்கள் அப்பா எங்கே என கேட்க நான் அவர் வருவார். இங்கே அமருங்கள் என கூறி அவரை அமர வைத்தேன். அதன் பிறகு இன்னும் சிலர் வீட்டுக்கு வந்தனர். அவர்களையும் எங்களது வீட்டிற்குள் உட்கார வைத்துவிட்டு, நாங்கள் நடத்திக் கொண்டிருந்த டியூசனையும் அன்று சீக்கிரமாக கலைத்து விட்டோம்.

என்னதான் அன்று மாலை பகுதிநேர வகுப்பு சீக்கிரமாக முடிந்து விட்டாலும், பலரும் ஆங்காங்கு நின்று கொண்டு என்ன நடக்கப் போகிறது என கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் செல்லச் செல்ல வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர்களையும் எங்கள் வீட்டின் உட்புறத்தில் கூப்பிட்டு உட்கார வைத்துவிட்டு அவர்களுக்கெல்லாம் கடுங்காப்பி போட்டு விட்டு அங்கே இருந்த ஒரு இடத்தில் எனது அம்மாவும் உட்கார்ந்து கொள்ள, எனது தந்தை அந்த சம்பவம் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

அவர் வருவதைப் பார்த்தவுடன் பலருக்கும் பயம் சேர்த்து வந்தது, அதனால் மாணவர்களில் பலரும் ஓட, சிலர் மட்டும் எங்களது மச்சி வீட்டிற்குள் நுழைந்து ஒளிந்து கொண்டனர்.


படிக்க: கல்வி ஒரு மாயை.. | என் நினைவுக் குறிப்பு | களம் -2 | கருணாகரன்


அவர் வந்தவுடன் கையில் இருந்த ஏதோ துண்டறிக்கையை வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“நேற்றைக்கு இரவு தேசியக் கொடிய தொட்டதால அவங்கள தொடக்கூடாதுன்னு சொல்லி அடிச்சு குடும்பத்தை கொளுத்தி விடுவோம், உங்களை வெட்டிடுவோம் என்று சொல்லி மிரட்டி அவங்கள வன்புணர்வு செஞ்சிருக்காங்க”அதற்கு நாம் என்ன செய்யப் போறோம்னு பேச தான் இந்த கூட்டம், என்று அந்தக் கூட்டம் நடக்க வேண்டிய காரணத்தை என் தகப்பன் அனைவரிடமும் சொல்லும்போதுதான் எனக்கு தெரிந்தது தேசிய கொடியை நாங்கள் தொடுவது பலருக்கும் பிடிக்கவில்லை என்று.

அவர் பேசி முடித்த பிறகு பலரும் பேசத் தொடங்கினர். முதலில் பக்கத்து ஊரை சேர்ந்த சில நபர்கள் பேச ஆரம்பிக்க அதன் பிறகு சுற்றுவட்டார பகுதியில் இருந்த பலரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கள் ஊரில் நடக்கும் சாதி ஆணவப் பிரச்சினைகளை தோலுரித்துக் காட்டத் தொடங்கினர்.

அவர்கள் என்னதான் எங்களை அவர்கள் இப்படி நடத்துகிறார்கள், இவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள் மறுபடியும் குலத்தொழிலான பண்ணை அடிமைத்தனத்தையும், சவக்குழீ தோண்டும் விஷயத்தையும் செய்யச் சொல்கிறார்கள் என பல காரணங்களை கூறினாலும் அவர்கள் சொன்ன முக்கியமான விஷயம் தேசியக் கொடியை தொட்டதற்காக அடிக்கிறார்கள் என்பதுதான்.

அவர்களின் அந்த பேச்சு எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை அமைதியாக இருந்த எனது தங்கை என்னிடம் ‘தேசியக் கொடியை நாம தொட்டா இவங்களுக்கு என்ன ஆகுது? பள்ளிக்கூடத்துல நாமெல்லாம் தொட்டு தான் அதை ஏத்துறோம். நம்மல்ல இருக்கக்கூடிய பள்ளரோ, பறையரோ அருந்ததியரோ தொட்டு தானே இந்த தேசியக் கொடிய ஸ்கூல்ல ஏத்துறாங்க, அப்படி இருக்க, இவங்களுக்கு இங்க மட்டும் என்ன பிரச்சனை என்று கேட்டாள்?”

அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் என் அண்ணனோ அப்படி இல்லாமல் உடனே அவங்களுக்கு பள்ளனும், பறையனும் தேசிய கொடிய தொட்டா உங்களுக்கு பிடிக்காது. நாம கொடியேற்றி அவங்க வணங்குணுமான்னு பார்ப்பாங்க. இது அவங்க குடும்பத்துல அவங்க சாதியில கத்துக் குடுக்க கூடிய விஷயம்.நம்ம வீட்ல இருக்குற மாதிரி அவங்களுக்கு இருக்காது. அப்படின்னு சொல்லி அவர் அவர்களின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்.

என் தங்கை மேலும் ” நம்ம ஸ்கூல்ல நாம தான் தேசிய கொடியை தொடவும் இல்ல. அங்கெல்லாம் யாரும் நம்மளை எதுவுமே சொல்லலையே.” அப்படின்னு சொல்ல.

அதற்கு அவர் “அது ஆதிதிராவிடர் பள்ளிக்கூடம். பங்கு படிக்கிறவங்களை 80% பேரு தாழ்த்தப்பட்ட மக்கள் தான். வேலை செய்றவங்களும் நம்ம மக்களாக தான் இருப்பாங்க. அதனால அங்க நமக்கு எந்த பிரச்சனையும் தெரியலன்னு பதில் சொன்னார்.

அவரின் பதில் என்னையும் சரி என் உடன் இருந்தவர்களையும் சரி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எனது சகோதரரின் அந்த பேச்சு எனது மூளையின் ஒரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்க, அங்கே அமர்ந்திருக்கும் நபர்களின் பேச்சு என் மூளையின் இன்னொரு பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தது. நாங்கள் ஒருபுறம் அதனை நினைத்து பேசிக் கொண்டிருந்தாலும் அவர்களின் பேச்சை மட்டும் கவனிக்க தவறவில்லை.

அவர்களின் ஒவ்வொரு பேச்சும் ஒவ்வொரு சொல்லும் மழை போல், புயல் போல் கடினமாக எங்களை தாக்கியது. அது எந்த அளவு என்றால், நாங்கள் படிக்கும் பள்ளிக்கூடம் போல் தான் இந்த உலகம் இருக்கும் என்பதை நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். நன்றாக விளையாடி ஒன்றாக தூங்கி சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திற்கு சென்ற அந்த காலம் போல் இதைத் தொடக்கூடாது அதை தொடக்கூடாது என எந்த விதமான விதிமுறைகளும் இல்லாத அந்த இடம் போல் இந்த தேசம் இருக்காது என அவர்களின் பேச்சு எங்களுக்கு புரிய வைத்தது.

இறுதியில் அவர்களுடைய பேச்சு முடிந்தவுடன் எனது அப்பா மறுபடியும் பேச தொடங்கினார். தன் கைகளில் அவர் வைத்திருந்த அந்த காகித பொட்டலங்களை அவர்களிடம் கொடுத்து “இதில் ஆளுக்கு 200 ஆக பிரித்து வைத்திருக்கிறோம். உங்களது ஊரில் இவற்றை கொண்டு போய் சேருங்கள். இனி நாம் பொறுமையாக இருக்க முடியாது. கடந்த பல வருடங்களாக தேசிய கொடியை தொடுவதற்காக ஆங்காங்கே போராட்டங்களை நடத்தினாலும் கலெக்டரிடம் சென்று மனுக்களை கொடுத்தாலும் பல விஷயங்களை நாம் அதற்காக செய்தாலும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவே இல்லை.

அதனால் நாம் போராட்டங்களை துரிதப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். இன்றைக்கு நமக்கு மறுக்கப்படும் இந்த தேசிய கொடியை நாளைய சமூகத்தினராவது தொட்டுப் பார்க்க முடியும். நாம் இப்போது போராட்டத்தை அதிகப்படுத்தினால் தான், இது சாத்தியமாகும். அதற்காகத் தான் ஒரு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்புகள், இம்மானுவேல் சேகரன் பேரவை சார்பாக நான் உங்களை அழைக்கிறேன் என அந்த கூட்டத்திற்கு முடிவுரையாற்றினானார்.

அந்த கூட்டத்தை ஆரம்பித்த விதத்தை விட முடித்த விதம் மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் அதுவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது.


படிக்க: உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | என் நினைவுக் குறிப்பு – 3 | கருணாகரன்


அதன் பிறகு எங்கள் வீட்டில் இருந்து செல்லப்பட்ட துண்டு அறிக்கையிலும் சுவரொட்டிகளும் பல இடங்களில் பலரின் சுவற்றை ஆக்கிரமித்துக் கொண்டன.

இதுவரை கோவில் திருவிழா, காதணி விழா, திருமண விழா போன்ற தனிமனிதர்களின் நிகழ்ச்சிக்காக சந்தோசங்களுக்காக மட்டும் போஸ்டர் ஒட்டிய இந்த மக்கள் முதல் முறையாக தங்களின் உரிமைக்காகவும் போஸ்டர் ஒட்ட தொடங்கினர்.

அன்று இரவு என் தந்தையின் தம்பி மூலம் கடம்பூரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் காலையிலிருந்து பல கொலை மிரட்டல்கள், உன் குடும்பத்தை அழித்திடுவோம் ஜாக்கிரதையா இரு, வீணா அடிவாங்கி சாகாதே என போன் மூலமாகவும் சில நேரங்களில் தெரியாத ஆட்கள் மூலமாகவும் அந்த மிரட்டல்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

எனது தந்தைக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றாலும் எனது அம்மாவிற்கு அப்படி இல்லை அவரைப் பொறுத்தவரை “எனது தந்தைக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்ற ஒரு பயம்” மனதில் இருந்து கொண்டே இருந்தது.

அதனை அவர் என் தந்தையிடம் வெளிப்படுத்த வில்லை என்றாலும் எனது பெரியம்மாவிடம் எனது சில உறவினர்களிடம் அவர் அதனை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அதுவும் ஒருமுறை இரவு ஒரு மணி அளவில் அவருக்கு இருந்த அசம்பாவிதத்தை பற்றி அவர்களிடம் சொல்ல அவர்கள் ” எல்லோரும் ரௌடி பயல்களை எதிர்க்கிறது. ஈசி இந்த சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளை எதிர்த்து நிற்பது கஷ்டம். இந்த நாய்கள் என்ன வேணாலும் பண்ணுவாங்க அதனால ஜாக்கிரதையாக இருந்து போ. தனியா போகாத, இரண்டு மூன்று பேர் கூட சேர்ந்து போ, அவங்க வரலைன்னா எங்கேயும் போக வேண்டாம். அதுதான் நமக்கு நல்லது” என்று ஒரே அட்வைஸ்

அந்த அட்வைஸை அவர் எப்படி எடுத்துக் கொண்டார் என்றால்”பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் தான்”அதை ஏன் அவர் அவ்வளவு மெத்தனமாக எடுத்துக் கொண்டார் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது ஆதிக்க ஜாதி வெறியர்கள் தங்கள் சாதி வெறிக்காக என்ன வேணாலும் செய்வார்கள் என்று.

அதன் பிறகு சொன்ன மாதிரியே அந்த கூட்டமும் பாண்டவர் மங்கலத்தில் நடைபெற தொடங்கியது. அந்த நாள் நான் பலரை சந்தித்தாலும் முதல் முதலில் எனக்கு அறிமுகம் ஆகியது வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள் தான்.

அவர் கையில் அம்பேத்கர் அவர்கள் புகைப்படம் போட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு எதையோ படித்து கொண்டிருக்க அவரிடம் சென்று எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

அந்த அறிமுகம் முடிந்த உடனே அந்த கூட்டமும் நடைபெற தொடங்கியது அதன் ஆரம்பத்தில் பலர் உரையாற்ற எழுந்தாலும் எனது தந்தை அவர்களை உட்கார வைத்துக்கொண்டு ஒரு பாடலைப் பாட என் தங்கையை அழைத்தார்.

எனக்கு பொது இடத்தில் பேசுவது என்பது கடினமான ஒரு விஷயம். ஏனெனில் எனக்கு அது மிகுந்த பயத்தை ஏற்படுத்தும். ஆனால் என் தங்கையோ அப்படி இல்லை அவள் எந்த இடமாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி தைரியமாக பேசுவாள் அன்றும் அப்படித்தான்.

தியாகி இமானுவேல் சேகரன் பேரவையில் பாடப்பட்ட ஒரு பாட்டினை
“சாதி ஒழிப்போம் சமத்துவம் படைப்போம்
வாரீர் வாரீர் தோழர்களே! வாரீர் வாரீர் உறவுகளே..” என பாட ஆரம்பிக்க அந்தப் பாடலை நாங்கள் மெய்மறந்து கேட்க ஆரம்பித்தோம். அதிலும் குறிப்பாக
“தாழ்த்தப்பட்டோருக்கு மண்டபம் கொடுத்தால் மண்டபம் என்ன இடிந்து போய்விடுமா!
இத இப்படியே விட்டுவிட்டால் பொண்ணு கூட கேப்பாங்கன்னு கொதிக்குறீயே ரொம்ப கோபமா,
இது தான் அறிவியல் முன்னேற்றமா?”
என்ற அந்த வரி எங்களது இதயத்தை கூர்மையான கத்தி போல் வெகுண்டு எழ செய்தது.

அந்தப் பாடலை அவள் பாடி முடித்தவுடன் எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்தனர். அது அவளை பெருமைப் படுத்தினாலும் அவளுடன் இருந்த எங்களை அது பெரிதளவில் பெருமைப்படுத்தியது.

அவளது பாடல் முடிந்தவுடன் கைலாசபுரம் மற்றும் முடுக்கலாம் குளம் பஞ்சாயத்து தலைவர்கள் பேசத் தொடங்கினர்.

அவர்களுடைய ஒவ்வொரு பேச்சும் ஒவ்வொரு வழியை தாங்கி நின்றது. அதற்கு அவர்கள் கண்களில் தெரிந்த கோபமே சாட்சியாகவும் மாறியது.

அவர்களில் சிலர்”இவர்கள் தேசியக் கொடியை தொடவிட மாட்டாங்க, பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள செல்ல விட மாட்டார்கள். எங்களுக்கு சேர வேண்டிய ரேசன் பொருட்களை கூட உருப்படியா தர மாட்டார்கள். ஏன்னு கேட்டா அடிக்கிறாங்க கொன்றுவேன்னு மிரட்டுறாங்க”என்றும்

சிலர் மறுபடியும் சாக்கடை அல்ல சொல்றாங்க, பிணத்தை தூக்கி எரிக்கிற வேலையை பாருங்களேன் நாய்களானு சொல்லி விரட்டுறாங்க. அதெல்லாம் பண்ண முடியாதுன்னு நாங்க எதிர்த்து நின்னு பேசினாலும் எங்களுடைய வீடுகளையோ இல்ல நிலங்களையோ கொளுத்தி எங்களுடைய வாழ்வாதாரத்தையும் நாசம் பண்றாங்க”எனச் சொல்லி ஆதங்கப்பட்டு கொண்டனர்.

அந்த கூட்டத்தின் இறுதியில் வழக்கறிஞர் பெயர் ரத்தினம் அவர்கள் பேச ஆரம்பித்தார். பிறகு பேச்சில் அம்பேத்கரும் பெரியாரும் கலந்து கலந்து வந்தனர். போராட்ட குணத்தையும் போராட வேண்டிய சூழ்நிலையும் நன்றாக எங்களுக்கு எடுத்துரைக்க இறுதியில் நன்றி உரையாக எனது தகப்பனார் மறுபடியும் பேசினார்.

அவர் நமது மக்களை நமது ஊர்களில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கொடிகளை தொட விட மாட்டாங்க. அதனால் இந்த கூட்டத்தில் நடந்த அந்த சம்பவத்தை எதிர்த்து நாம் போராட்டம் நடத்தலாம் சொல்லி நாங்க ஒருமனதாக முடிவு எடுத்திருக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த கூட்டத்தின் சாராம்சத்தை எல்லாரிடமும் அறிமுகப்படுத்தினார்.

அவர் அப்படி சொல்லிய உடன் எல்லோரும் அதனை முன்மொழிந்து கொண்டு எழுந்து நின்று நாம பலமுறை எதற்காக பேசியிருக்கோம் இனி விடக்கூடாது தேசியக்கொடி அவர்களுக்கு மட்டும் சொந்தமில்லைங்கிறத நம்ம புரிய வைக்கணும்னு சொல்லிட்டு சனாதனத்தை ஒழிப்போம்எனக்கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அந்த கூட்டத்தொடரை முடித்தவுடன் பல இடங்களில் போராட்டம் நடந்தாலும் கலெக்டர் ஆபீஸ் முன் நடைபெற்ற போராட்டத்தின் மூலம் எங்களது கோரிக்கைகள் வட்டி தட்டி எங்கும் பரவ ஆரம்பித்தது. அதனால் எங்கள் ஊரில் இருக்கும் சாதி வெறியர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மற்ற இடங்களில் இருக்கும் காட்டுமிராண்டிகள் இடமும் மிரட்டல்கள் குவிந்த வண்ணம் இருந்தது.

அவர்கள் எங்கள் குடும்பத்தை மட்டுமல்லாமல் எங்களுடன் இருந்த ஏகப்பட்ட நண்பர்களின் குடும்பத்தையும் அளிப்போம் என சவால் விட்டனர் அதை சில இடங்களில் செய்யவும் துணிந்தனர்.

இதனால் எனது அப்பா தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடமும் காவல் நிலை அதிகாரியிடனும் கம்ப்ளைன்ட் கொடுக்க அது இறுதியாக கோர்ட்டுக்கு வந்தது. தலித் பெண் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த அந்த செயலை கோர்ட் வன்மையாக கண்டித்தது. அதனால் தீர்ப்பும் எங்களுக்கு பக்கம் சாதகமாக அமைந்ததால் அதனால் அந்த வருட சுதந்திர தினத்தன்று அந்த பெண்ணை எப்படியாவது தேசியக் கொடியை ஏற்ற வைத்து விட வேண்டும் என்ற முனைப்புடன் எங்களது தோழர்கள் செயல்பட ஆரம்பித்தனர்.

அந்த தினமும் வெகுவிரைவில் வந்ததால் எனது அப்பாவும் அவர் சார்ந்த சில அட்வகேட்ஸும் ஒரு வேன் மூலமாக கயத்தாறு அலுவலகத்திற்கு கொடியேற்றத்தை காண சென்றார்கள். ஆனால் அவர்களை சில மறவர் சாதி வெறியர்கள் தடுத்து கற்களை எறிவதும் அறிவாள்களை வைத்து வீசியும் வன்முறையாயாக தாக்க ஆரம்பித்தனர். அவர்கள் இப்படி செய்வது என்பது வழக்கம் தான் என்றாலும் அந்த வன்முறையை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனது சகோதரரின் மூலம் அவர்களின் வெறியாட்டம் போலீசாருக்கு தகவலாய் பரப்ப வந்த போலீசார்களும் அவர்களை விசாரிக்காமல் அவர்களை ஒடுக்காமல் எங்களுடன் இருந்த சில நண்பர்களை மட்டும் கைது செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து விடுவித்தனர்.

இதனால் அவர்களது பயணம் சற்று தடைப்பட்டு போனது பின்னர் சிறிது நேரம் கழித்து எப்படியோ அவர்கள் அங்கே சென்றனர்.

அவர்கள் என்னதான் தாமதமாகவே சென்றாலும் இறுதியில் கோர்ட்டு உத்தரவின் மூலமாகவும் கலெக்டரின் பாதுகாப்பின் மூலமாகவும் இந்த சாதி வெறியர்களை எதிர்த்து தேசிய கொடியை அந்த கவுன்சிலர் ஏற்றினார். அங்கே ஏற்றும் போது கூட அவர்களது சமுதாயத்தை சேர்ந்த சிலர் நின்று கொண்டிருந்தவர்களைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை. என்னதான் அது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் வருத்தத்தை கொடுத்தாலும் ஒரு தலித் பெண் தேசிய கொடியை தொட்டு ஒரு அரசு விழாவில் அதனை ஏற்றி விட்டாள் என்பது எங்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறியது.

அதன் பிறகு ஊர் முழுக்க அந்த செய்தி தான் “ஒரு பள்ளச்சி வந்து தேசிய கொடிய தொட்டு ஏத்திட்டாளேநு”அந்த செய்தி சிலருக்கு மிகுந்த சந்தோஷத்தையும் பலருக்கு மிகுந்த வெறுப்பையும் ஏற்படுத்தியது.

அந்த சந்தோஷத்தில் திழைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு இன்னும் சவால்கள் முடிந்தவாறு இல்லை அரசாங்க அலுவலகத்தில் தேசியக் கொடியை நாம் ஏற்றி விட்டோம் இனி நம்ம ஊர்ல நம்ம மக்கள் பஞ்சாயத்து போர்ட்ல அந்த அலுவலகத்தில் இந்த பெரிய விஷயத்தை நாம பண்ணனும் அப்பதான் நாம தலை நிமிர முடியும். இந்த நாய்களுடைய சாதி வெறிய நாம் உடைக்கவும் முடியும் என் அப்பாவிடம் சொல்ல அவர் இது அவ்வளவு எளிதல்ல நாம தெருவுக்குள் போறது பெரிய கஷ்டம், அப்படி போனாலும் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள்ள போறது, அதைவிட கஷ்டம் அது எல்லாம் தாண்டி தான் நம்ம தேசிய கொடியவே தொட முடியும். தேசிய கொடிய தொடணும்னா நாம தலைவர்கள் ஆனா மட்டும்தான் அது முடியும் என்று அவர் சொன்னார்.

அதற்கு முன் எங்களிடம் இருந்து வந்த தலைவர்கள் பல ஆண்டுகளுக்கு எடுபுடி வேலை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆனால் 2010-ஆம் ஆண்டு அந்த சம்பவத்திற்கு பின் வந்த எனது பெரியம்மா அப்படி இல்லை..

என் தந்தையும் எனது பெரியம்மாவும் கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவிக்கு போட்டி இருந்தன அதில் எனது தந்தை தோல்வியை சந்தித்தார். அவரது அந்த தோல்வியிலும் கூட ஜாதி வெறி தலைக்கேறி போயிருந்தது. கயத்தாரை பொருத்தவரை எஸ்சி/எஸ் டி பிரிவினர் மட்டும்தான் நின்று ஜெயிக்க முடியும். என் கூட ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் யாரை நிறுத்துகிறார்களோ, அதுவும் குறிப்பிட்ட சில சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாரை நிறுத்துகிறார்களோ அவர்கள் தான் ஜெயிக்க முடியும். அதனால் என் தந்தை சாதி வெறி எல்லாம் தோற்கடிக்கப்பட்டார். அது அவருக்கும் சரி எங்களுக்கும் சரி பெரிய துன்பத்தை கொடுத்தாலும் எனது பெரியம்மாவின் வெற்றி எங்களுக்கு கொஞ்சம் இன்பத்தையும் கொடுத்தது அவர்கள் மூலமாக தேசிய கொடியை நாங்கள் தொடுவதற்கான எங்களது வலுவான போராட்டத்தை ஆரம்பித்தோம், இந்த காட்டுமிராண்டிகளை எதிர்த்து.

அதனை களம் 5-இல் காண்போம்.

கருணாகரன்விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க