கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்

அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.

நான் சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தில் நான் ஈ புகழ் நானியும் நஸ்ரியாவும் சேர்ந்து நடித்திருப்பர். அந்த படத்தின் ஒரு சீனில் ஒரு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

அந்த சீனில் ஒரு சின்ன பெண் செருப்பு துடைக்கும் சிறுவனை  “என்னுடன் விளையாட வா”என அழைப்பாள். அதற்கு அவன் “அய்யோ சின்னமா நீங்க என்ன, என் கூட விளையாட கூப்பிடுறீங்க, நீங்க எங்க நான் எங்க” அப்படின்னு சொல்லி அவன் தயங்குவான்.

உடனே அந்தப் பெண் அவள் அப்பாவிடம் போய்,” அப்பா பாலுவை என்னுடன் விளையாட சொல்லுங்கள், அவன் ஏன் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கிறான்”? எனக் கேட்க..

அதற்கு அவனுடைய அப்பா சொல்வார், அவன் படிக்கவில்லை அல்லவா அதனால் தான் இப்படி இருக்கிறான்.

அதற்கு அவள் ‘நீங்களும் தான் படிக்கல நீங்க நல்லா நிம்மதியா உட்கார்ந்து கொண்டு நகம் வெட்டிட்டு இருக்கீங்களே”என கேட்க அதற்கு அவர் சற்று கடுப்பாகி அவளை முறைப்பார்.

உடனே அவளும் எனக்கு தெரியும்பா! அவன் ஒரு கீழ் ஜாதியை சேர்ந்தவன் என்று, அதனால் தான் நீங்க அவனை எப்போதும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கீங்க, அப்புறம் ஜோஸ்வா டீச்சர் அவங்க சாதி தானே அவங்க படிச்சிருக்காங்களே என்று அவள் கேட்க..

அதற்கு அவளுடைய அப்பா சொல்வார் நானும் அதைத்தான் சொல்றேன், அவங்க படிச்சிருக்காங்க அதனால தான் நீங்க எல்லாரும் அவங்க பேச்சை கேக்குறீங்க இல்லன்னா எப்படி கேட்பீங்கன்னு..


படிக்க: பழங்குடியின அடிப்படையில் சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கும் அரசு – பறிபோகும் பழங்குடி மாணவர்களின் உயர்கல்வி.


அத கேட்டு அந்த பெண் சரிதான் படிச்ச எல்லாரும் சமம் ஆயிருவோமில்ல சூப்பரான ஐடியா இது அப்படின்னு சொல்லி வேக வேகமாக பாலுவை நோக்கி ஓடுவாள். அங்க அவன்  ஷூக்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருப்பான். அவனிடம் சென்று “வா படிக்கலாம் பள்ளிக்கூடம் நோக்கி போகலாம்” எனக் கூற அவன் “சின்னமா என்ன என்னைய வந்து கூப்பிடுறீங்கன்னு மறுபடியும் தயங்குவான். உடனே அவள் படிச்சா எல்லாரும் எல்லாருக்கும் சமமாகிருவாங்களாமான்டா எங்க அப்பா  சொன்னாரு, நீயும் படிச்சிட்டேன்னா நானும் உன் கூட வந்து நல்லா விளையாடலாம்ல படிக்கலாம் அப்படின்னு சொல்லி அவனைக் கையை பிடித்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி அந்த நிகழ்வு முடியும்.

இது அந்த படத்தின் இருக்கக்கூடிய ஒரு வலிமையான ஒரு நிகழ்வாகும், அதே நேரம் அது ஒரு நேர்த்தியான ஒரு படைப்பும் கூட..

இதில் இருக்கும் செய்தி படித்தால் எல்லாரும் எல்லாருக்கும் சமமாய் ஆகி விடுவார்கள் என்பது தான். இந்த படம் சொன்ன செய்தியை நான் என் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். அதுவும் நான் 3-வது படிக்கும் போது.

எங்களுடைய ஊர் சுமார் ஒரு 600-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரு நடுத்தர கிராமம் ஆகும். அதே நேரம் பெரிதளவு மருத்துவ வசதியோ இல்லை கல்வி குறித்த அக்கறையோ இல்லாத காலம் அது. அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் டியூசன் எடுக்க ஆரம்பித்து விடுவார் எனது அம்மா. அது அவர்களுடைய சேவையாக நினைத்து அவர் இதை எப்போதும் பண்ணுவார்..

ஒருமுறை அவ்வாறு டியூசன் எடுத்துக் கொண்டிருக்க என் வீட்டில் அருகில் நின்று கொண்டிருந்த சிலர், எனது அம்மாவிடம் “எப்படியாவது எங்க பயங்களையும் சரி பிள்ளைகளையும் சரி ஓரளவுக்கு படிக்க வைத்துவிடுனு”, புன்னகையுடன் சொல்லிவிட்டு வேறு விஷயங்களை நோக்கி பேச ஆரம்பித்தனர்.

அப்போது அந்த தெருவின் உள்ளே  ஒரு நபர் வந்தார். அவர் ஒரு ரெட்டியார். அவர்களை போல மனிதர்கள் எங்கள் தெருவிற்கு வருகிறார்கள் என்றால், அதற்கு அப்பொழுது ஒரு காரணம் தான் இருக்கும். எப்படி நோகாமல் வேலைக்கு ஆட்களை தேடுவது என்பது தான் அந்த காரணம்.

அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.

இத்தனைக்கும் என் சித்தி அந்த நபரை விட வயதில் பெரிய ஆள், ஆனாலும் அவர் பயன்படுத்திய சொற்கள் என்னையும் சரி என்னுடன் இருந்தவர்களையும் சரி இடிபோல் தாக்கியது. அவரின் பேச்சுக்கு  என் சித்தி என்ன பதில் சொல்வாள் என நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அவள் எப்போதும் இந்த மாதிரி தரக்குறைவாக தன்னை உடன் இருந்தவர்களை யாராவது பேசினால் உடனே கோபத்தில் தாக்கி விடுவாள் இதுதான் அவருடைய நடைமுறை.


படிக்க: கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?


இதுதான் அன்றும் நடக்கும் என நான் அப்போது நம்பினேன்  ஆனால் நடந்தது என்னவோ வேறு.அவர் தன்னை அப்படி அழைத்ததும் அதனைப் கேட்ட என் சித்தி “சொல்லுங்க எஜமா என கையை குப்பிக்கொண்டு உடலையும் சற்று வளைத்துக் கொண்டு அவருக்கு பதில் சொல்ல அந்த உடல் நலிவும் பேச்சும் எங்களை திக்கு முக்காட செய்தது.

அந்த நபர் “உன் புருஷன் எங்க இருக்கான், அவனை எல்லாம் தேடி இந்த தெரு பக்கம் எல்லாம் நான் வர வேண்டி இருக்கு, ஆவன உடனே கூட்டிட்டு வா! வீட்டுல இருக்கானா வேற எங்கேயும் போய்ட்டானா என சொல்ல”…

அதற்கு அவன் சாமி வீட்லதான் இருக்காரு,  நான் உடனே வர சொல்றேன் நீங்க வீட்டுக்கு போங்க, எனக் கூற நான் அப்போது என் அம்மாவை பார்த்தேன். அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் சற்று முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டே “பிள்ளைகளா படிங்க இதையெல்லாம் கண்டுக்க கூடாது. இப்படி தான் பேசுவாங்க அதனை எல்லாம் இப்ப நம்ம பாத்துட்டு இருந்தா நம்மளால படிக்க முடியாது, படிக்கிற வேலையை மட்டும் தான் இப்ப பாக்கணும் சரியா அப்படின்னு சொல்லி எங்களுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

அப்போது அந்த நபர் சுற்றி முற்றி மற்றவர்களையும் சற்று ஏளனமாக பேச இவர்களும் ஐயா, அப்படியெல்லாம் இல்ல இல்லையா, எஜமான்னு கைய கட்டிட்டு எனத்தெனத்தியோ பேச ஒருவாறு அந்த பேச்சு எப்படியோ முடிந்தது..

அவரும் சற்று வேகமாக அந்த தெருவை விட்டு கிளம்ப ஆரம்பிக்க, அப்போது என் அம்மாவை பார்த்து என்ன டீச்சரமா பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கிறீர்களா? நன்றாக நடத்துறீங்க! போல என்று சொல்ல.. எங்க அம்மாவும் அதற்கு ஆமாம் தம்பி, எப்படியோ பசங்க ஓரளவுக்கு படிச்சிட்டு இருக்காங்க நமக்கு அது தான் முக்கியம் அப்படின்னு சொல்லி அவங்க சொன்னாங்க.

எனக்கு அவர் மற்றவரிடம் பேசிய பேச்சுக்கும் எனது அம்மாவிடம் அவர் பேசிய பேச்சுக்கும் மிகுந்த இடைவெளி இருந்ததை நான் கவனித்தேன். எங்கள் எங்கள் தெரு பெரிய நபர்களை துளியும் மதிக்காத அந்த நபர் எனது அம்மாவை மட்டும் டீச்சர் அம்மா என சொன்னது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவர் அங்கிருந்து கிளம்பியதற்குப் பிறகு எனது அம்மா எங்களிடம் சொன்னார் நான் படித்தவள்,அதுவும் டிகிரி முடித்திருக்கிறேன். அதனால்தான் அவர் என்னை மரியாதையாக அப்படி பேசி விட்டு செல்கிறார், நம்முடன் இருந்தவங்கள அந்த மாதிரி அவரால பேச முடியல அப்ப படிப்பு அப்படிங்கறது எல்லாத்தையும் மாத்திரம். நமக்கு செயற்கையா அது ஒரு ஒரு மரியாதை அது வந்து கொடுக்கும். அதனால தயவு செஞ்சு எல்லாரும் நல்லா படிச்சிருங்க அப்படி படிச்சா மட்டும் தான் நம்மள ஓரளவு  எல்லாரும் மதிப்பாங்க இல்லன்னா அது கூட கஷ்டம் என்றார்..
என்று அவர் சொன்ன அந்த வார்த்தை என்னை மட்டுமல்ல என் உடன் இருந்தவர்களை ஆழமாக யோசிக்க வைத்தது.

கல்வி ஒரு முழுமையான சமத்துவத்தை போதிக்காது என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க ஆரம்பிக்கும் போது கல்வி தன்னை முழுமைப்படுத்தி கொள்கிறது. அது சாதிக்கு எதிரான பாலின பேதத்திற்கு எதிரான ஒரு போரை இந்த சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி மிக ஆழமாக அது நடத்த துணிகிறது. …

அப்படி நான் இந்த  சமூகத்தில் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கிற ஒரு நீண்ட போரின் சில களங்களை இனி நாம் பார்ப்போம் .

கருணாகரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க