பிச்சை எடுத்தாவது கல்வி கற்கவேண்டும் என்ற மரபுக் கொண்ட இந்த தமிழ் மண்ணில், கல்வி பெறுவதற்கான சாதி சான்றிதழ் இல்லாததால் பல ஆண்டுகளாக ஆதியன் பழங்குடியின மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி கச்சனம் பஞ்சாயித்துக்கு உட்பட்ட ஆப்பரக்குடி என்ற கிராமத்தில் 485 க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நாடோடியாக அலைந்து திரிந்த ஆதியன் பழங்குடியின மக்களில் சிலர் கடந்த 40 ஆண்டுகளாக ஆப்பரக்குடியில் தங்களுக்கு என்று குடிப்பிருப்புகளை அமைந்துக் கொண்டு பிளாஸ்டிக் விற்பனை, பாசிமணி, திருஷ்டி பொருட்கள் விற்பது என பல்வேறு வேலைக்கு சென்று வருகின்றனர். இச்சமூக மக்களின் பிரதான வேலையாக இசை கருவி செய்து தருவதும், இசை கருவி வாசிப்பதென தமிழ்நாட்டியின் பல்வேறு பகுதிகளில் இசை கருவி வாசிக்கவும் சென்று வருகின்றனர். இருவர்களுக்கு என்று சொந்தமாக பட்டா நிலம் கூட கிடையாது கோவில் நிலத்தில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் 12 வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதிலும் ”சாதி சான்றிதழ்” இல்லாததால் கல்லூரி சேர முடியாத அவலநிலையில் உள்ளனர். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்த போதும் இதுவரை அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.
படிக்க : பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!
வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் இச்சமூக மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகதான் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முயன்று வருகின்றனர். குடும்ப வறுமையை தாண்டி மாணவர்கள் பள்ளிக்கு சென்றிருந்தாலும் சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களால் 8 வகுப்பை தாண்டி படிக்க முடியாத சூழல் உள்ளது. எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் ஆதியன் பழங்குடி என்று இருப்பதை எட்டாம் வகுப்பு முடியும் போது MBC என்று பள்ளி நிர்வாகம் சுழித்து மாற்றிவிடுவதாகவும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கூறுகின்றனர். மன்னார்குடி வருவார் கோட்டாச்சியர் அலுவலகம் சென்றாலும் பிற்படுத்தப்பட்டோர் அடிப்படையில் தான் சாதி சான்றிதழ் வழங்கமுடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றர்.
ஆதியன் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் இவர்களுக்கு திருவாரூர் மாவட்ட நிர்வாகமோ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த ஜோகி சமூகம் என்று சாதி சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஆனால் எதன் அடிப்படையில் இவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சேர்ந்தவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்டது என்று ஆதராம் இல்லை. ஜோகி சமூகம் என்பது வட மாநிலத்தில் வசிக்கும் ஒரு சமூக பிரிவு மக்கள் ஆகும். மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையை நேரில் சென்று அரசு அதிகாரிகள் பார்வை இடமால் யாரோ சொல்லியதை வைத்து இந்த சான்றிதழில் வழங்கி இருப்பதாக ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.இதனால் அரசு தரக்கூடிய இடஒதுக்கீடு மற்றும் அரசு சலுகைகளை கூட இச்சமூக மக்கள் பெறமுடியாத நிலையில் உள்ளனர்.
ஆனால் திருவாரூர் மாவட்டத்திற்குள் திருவாஞ்சியம் பகுதியில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடி அடிப்படையில் சான்றிதழ் வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம் அதே மாவட்டத்தில் ஆப்பரக்குடியில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு மட்டும் பழங்குடி அடிப்படையில் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் திருவாஞ்சியத்தில் வசிப்பதால் பழங்குடி அடிப்படையில் சான்றிதழும் தம்பி ஆப்பரக்குடியில் வசிப்பதால் MBC அடிப்படையில் சான்றிதழ் என வெவ்வேறு பெயர்களில் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஒரே சமூகத்தை சேர்ந்த மக்கள் அதே மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியில் வசிப்பதால் வெவ்வேறு சாதி சான்றிதழ் வழங்கி இருக்கும் முறை என்பது அரசின் அலட்சிய போக்கை தெளிவாக காட்டுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் திருவாஞ்சியத்தில் வசிப்பதால பழங்குடி சான்றிதழும் தம்பி ஆப்பரக்குடியில் வசிப்பதால் MBC அடிப்படையில் சான்றிதழ் என வெவ்வேறு பெயர்களில் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியுள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பரக்குடி, மன்னார்குடி, திருத்துறைபூண்டி, விளத்தூர் போன்ற பகுதியில் வசித்து வரும் ஆதியன் சமூக மக்களுக்கு மட்டும் பழங்குடி அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்திவருகிறது மாவட்ட நிர்வாகம். இது தொடர்பாக பல முறை மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அலைந்தும் இவர்களும் தீர்வு கிடைக்கவில்லை.
இதைபற்றி ஆப்பரக்குடி பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் பேசிய போது ”நீங்கள் எங்களை பற்றி செய்தி சேகரிக்க வந்துள்ளீர்கள் எங்களுக்கும் சாதி சான்றிதழ் கிடைத்திருந்தால் உங்களை போல் எங்கள் பிள்ளைகளும் நன்றாக படித்துவிட்டு நல்ல நிலைமைக்கு வந்து உங்களை போல் செய்தியாளராக ஆகி இருப்பார்கள் என்று கூறினார். 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் அரசிடம் கொடுத்தப் போதும் இதுவரை எங்களுக்கான நீதி கிடைக்கவில்லை, நாங்கள் எங்கள் நாடோடி வாழ்க்கையை விட்டுவிட்டு எங்கள் பிள்ளைகளை படிக்கவைக்க விருப்புகிறோம் ஆனால் இந்த அரசு எங்களுக்கு பழங்குடி அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்காமல் வேறு பெயரில் சாதி சான்றிதழ் வழங்கி எங்களின் பிள்ளைகளின் படிப்பை பறித்து வருகிறது 30 ஆண்டுகாளக போராடியும் பயன் ஏதுமில்லை” என்று கூறினார்.
ஆப்பரக்குடியை சேர்ந்த மாணவர்கள் கபடி மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டுகளை விளையாடும் திறன் கொண்ட மாணவர்களாக இருந்த போதிலும் சாதி சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி சேர முடியாத நிலையுள்ளது. தற்போது ஆப்பரக்குடியில் இருந்து 80 மாணவர்கள் பள்ளியில் கல்வி படித்துவரும் நிலையில் சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் கேள்விகுறியாக்கி உள்ளது. சாதி சான்றிதழ் வழங்க வேண்டிய மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகமும் மாவட்ட நிர்வாகமும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் மாணவர்களின் கனவுகளை சீரழித்துவருகிறது.
கடந்த வாரம் திருவண்ணாமலை – திருக்கோவிலூர் எடப்பாளையம் கிராமம், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி 12 வகுப்பு பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்றிருந்த போதும் பன்னியாண்டி அடிப்படையில் பழங்குடி சாதி சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி சேர முடியாத மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இடஒதுக்கீடு பெறுவதற்கு அடிப்படையாக உள்ள சாதி சான்றிதழ் அரசு முறையாக வழங்காமல் அந்த சமூக மக்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக படுகுழியில் தள்ளிவருகிறது.
படிக்க : இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!
அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு முடியபோகும் நிலையில் இதுவரை ஆப்பரக்குடி மாணவர்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்லூரி சேர விண்ணபிக்க முடியாமலும், கல்லூரி கலந்தாய்வில் சாதி சான்றிதழ் ஒப்படைக்க முடியாமலூம் மாணவர்கள் தவித்துவருகின்றனர்.
பல கோடி செலவு செய்து கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கும் திராவிட மாடல் அரசு சொந்த மாவட்டத்தில் கல்விக்காக ஏங்கி கொண்டிருக்கும் மாணவர்களை கண்கொண்டு பார்க்க மறுக்கிறது.
சமூக நீதி அரசு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்றெல்லாம் மேடைகளில் பேசும் திமுக அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு சாதி சான்றிதழ்காக போராடும் மாணவர்களுக்கு பழங்குடியினர் அடிப்படையில் சாதி சான்றிதழ் கிடைப்பதை உறுதிச் செய்யவேண்டும்.
வினவு களச்செய்தியாளர்