பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!

பீகார் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1955, பசுக்கள் மற்றும் கன்றுகளை கெல்வதைத் தடை செய்கிறது. இது போன்ற பசுவதை தடைச் சட்டங்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்கின்றன.

0

டந்த ஜூன் 28 அன்று பீகாரின் சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றதாக் கூறி முஸ்லீம் ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சரண் மாவட்டத்தின் மஜ்வாலியா கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜஹிருதீன் அம்மாவட்டத்தில் உள்ள நாகரா (Nagara) எலும்பு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். பத்ராஹா பஜார் அருகே சென்று கொண்டிருந்த போது அவரது கன்டெய்னர் லாரி பழுதானது. ஜஹிருதீன், அவரது உதவியாளர் மற்றும் சில தொழிலாளர்கள் வாகனத்தை சரிசெய்ய முயன்றனர்.

அப்போது அங்கு வந்த சுமார் 40 பேரைக் கொண்ட கும்பல் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியது. பின்னர் வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கன்டெய்னரைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தியது. விலங்குகளின் எலும்புகள் லாரியில் இருப்பதாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக அதை நகராவில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதாகவும் லாரியில் இருந்தவர்கள் பதிலளித்தனர். இதனையடுத்து அந்த கும்பல் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டது.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


அச்சமடைந்த உதவியாளரும் மற்ற தொழிலாளர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஜஹாருதீனின் காலில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டிருந்ததால் அவரால் ஓட முடியவில்லை. அந்த கும்பல் அவரை கொடூரமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஜலால்பூரின் உள்ளூர் போலீசு இதில் தலையிடவில்லை.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜாஹிருதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக பீகார் போலீசு கூறியது. கன்டெய்னரில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் மாதிரிகள் தடயவியல் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறந்தவர் மாட்டிறைச்சியை கொண்டு சென்றாரா என்பதை உறுதிப்படுத்த விசாரணை நடந்து வருவதாகவும் போலீசு தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 8 பேர் மீதும் அடையாளம் தெரியாத 30 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கூறினார். 20 சந்தேகநபர்கள் (suspects) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


பீகார் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1955, பசுக்கள் மற்றும் கன்றுகளை கெல்வதைத் தடை செய்கிறது. ஆனால் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அல்லது ஊனமுற்ற மாடுகளை வெட்ட அனுமதிக்கிறது. இது போன்ற பசுவதை தடைச் சட்டங்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்கின்றன.

மார்ச் 2023-இல், இதே சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் ‘பசு பாதுகாப்பு’ கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதேபோல் 2019 ஆம்-ஆண்டில், சரணில் கால்நடை திருட்டு சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இது போன்ற பாசிச தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பாசிசத்தை வீழ்த்தாமல் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களைத் தடுக்க முடியாது.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க