பார்ப்பனிய எதிர்ப்பு புரட்சி நடக்காமல் போனதற்கான காரணம் || அம்பேத்கர்

படிப்படியான சமத்துவமின்மை முறை, அநியாயத்தை எதிர்த்த பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது.

பார்ப்பனியத்தை எதிர்த்து ஏன் புரட்சி நடக்கவில்லை என்பது குறித்து அம்பேத்கர் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். குறிப்பாக, பார்ப்பனியத்தால் நிலைநிறுத்தப்பட்டுள்ள படிப்படியான சமத்துவமற்ற சாதிய – வர்ணாசிரம முறையானது பார்ப்பனர் அல்லாதோர் பார்ப்பனியத்தை எதிர்த்து ஒன்று சேரவிடாமல் எவ்வாறு தடுத்து வருகிறது என்பதை விளக்கியுள்ளார்.

இக்கட்டுரை ”பார்ப்பனியத்தின் வெற்றி” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

பார்ப்பனியம் குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்குத் துணைபுரியும் என்பதால் வாசகர்களுக்கு இக்கட்டுரையை வழங்குகிறோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் இந்நூலைப் பெறலாம். இந்நூல் அலைகள் வெளியீட்டகம் மற்றும் நிமிர் பதிப்பகம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.

***

மத்துவம், சமத்துவமின்மை என்ற மொழியில் கூறினால், இதன் பொருள் பார்ப்பனன் எல்லோரிலும் உயர்ந்தவனாகிறான்; ஏனென்றால் அவன் யாருக்கும் அடிமையாக முடியாது என்பதோடு எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களையும் அவன் அடிமையாக வைத்துக் கொள்ளமுடியும். சூத்திரன் எல்லோரிலும் தாழ்ந்தவன் ஆகிறான்; ஏனென்றால் யார் வேண்டுமானாலும் அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம்; ஆனால் அவன் சூத்திரனைத் தவிர வேறு யாரையும் அடிமையாக வைத்துக் கொள்ள முடியாது. க்ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இடம், படிப்படியான சமத்துவமின்மையைப் புகுத்துகிறது. பார்ப்பனனை விடத் தாழ்ந்தவனான க்ஷத்திரியன், பார்ப்பனனுக்கு அடிமை ஆகலாம். அதே சமயம் அவன் வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் உயர்ந்தவனாக இருக்கிறான்; ஏனென்றால் அவன் அவர்களை அடிமைகளாக வைத்துக்கொள்ள முடியும். வைசியர்களும் சூத்திரர்களும் க்ஷத்திரியனைத் தங்கள் அடிமையாக வைத்துக்கொள்ள உரிமை இல்லை.

இதேபோல வைசியன், பார்ப்பனர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் தாழ்ந்தவனாக, அவர்களைத் தனது அடிமையாக வைத்துக்கொள்ள முடியாதவனாக இருந்தாலும், அவன் குறைந்த பட்சம் சூத்திரனுக்காவது தான் மேலானவனாக இருப்பதாகப் பெருமைப்படுகிறான். ஏனென்றால் அவன் சூத்திரனைத் தனது அடிமையாக்கிக் கொள்ள முடியும்; ஆனால் சூத்திரன், வைசியனைத் தனது அடிமையாக்கிக் கொள்ளமுடியாது.

இதுதான் பார்ப்பனியம்; மக்களின் ஊனுக்குள்ளும் எலும்புக்குள்ளும் ஊடுருவி நிற்குமாறு புகுத்தி வைத்த படிப்படியான சமத்துவமற்ற முறை அநியாயத்தைத் தூக்கியெறிய முடியாமல் சமூகத்தை முடக்கி வைப்பதற்கு இதைவிட மோசமாக வேறு எதையும் செய்திருக்க முடியாது. இதன் விளைவுகள் தெளிவாக அறியப்படவில்லை என்றாலும், இதன் காரணமாக இந்துக்கள் செயலிழந்து போய்விட்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சமூக அமைப்பு ஆய்வாளர்கள் சமத்துவத்துக்கும் சமத்துவமின்மைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் கவனிப்பதோடு நின்று விட்டார்கள். இந்த இரண்டும் தவிரப் படிப்படியான சமத்துவமின்மை என்ற ஒன்று இருப்பதை ஒருவரும் உணரவில்லை.

ஆயினும், சமத்துவமின்மையின் அபாயம் படிப்படியான சமத்துவமின்மையின் அபாயத்தில் பாதியளவு கூட இல்லை. சமத்துவமின்மைக்குள்ளேயே அதன் அழிவை ஏற்படுத்தும் வித்துக்களும் உள்ளன. சமத்துவமின்மை நீண்ட காலம் நீடிக்காது. முற்றிலும் சமத்துவமின்மை மட்டும் உள்ள நிலைமையில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. அது பொதுவாக எல்லோரிடையிலும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இது புரட்சிக்கு வித்தாகிறது.

இரண்டாவதாக, சமத்துவமின்மையினால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு பொது எதிரியை எதிர்த்து, ஒரு பொதுவான தீமையை ஒழிக்கும் குறிக்கோளுடன் ஒன்றுசேருகிறார்கள். ஆனால், படிப்படியான சமத்துவமின்மையின் தன்மையும் அதனால் ஏற்படும் நிலைமைகளும் இந்த இரண்டில் எதுவும் நடக்க இடமில்லாமல் செய்கின்றன. படிப்படியான சமத்துவமின்மை முறை, அநியாயத்தை எதிர்த்த பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது. எனவே அது புரட்சிக்கு மையமாக உருவாக முடியாது.

இரண்டாவதாக, இதனால் பாதிக்கப்படுபவர்களிடையேயும் சமத்துவமின்மை இருக்கிறது. இந்த முறையின் நன்மைகளையும் தீமைகளையும் பெறுவதில் அவர்களிடையே சமமான நிலை இல்லை. எனவே இந்த முறையின் அநியாயத்தை எதிர்த்து எல்லா வகுப்பினரும் பொதுவாக ஒன்று சேரும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. எடுத்துக்காட்டாக, திருமணம் பற்றிய பார்ப்பனியச் சட்டம் அநியாயம் நிறைந்ததாக உள்ளது. பார்ப்பனன் தனக்குக் கீழே உள்ள மூன்று வகுப்புகளிலிருந்தும் பெண் கொள்ள உரிமை அளித்து, அதே சமயம் அந்த வகுப்புகளுக்குப் பார்ப்பனப் பெண்ணைக் கொடுப்பதைத் தடை செய்யும் சட்டம் நியாயமற்றது.

ஆனால் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகிய மூன்று வகுப்பினரும் இதை ஒழிப்பதற்கு ஒன்று சேர மாட்டார்கள். க்ஷத்திரியன், பார்ப்பனனுக்கு இந்த உரிமை இருப்பது பற்றிக் குமுறுவான். ஆனால் அவன் வைசியனுடனும் சூத்திரனுடனும் சேரமாட்டான். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, பார்ப்பனன் மூன்று வகுப்புகளின் பெண்களை மணக்க உரிமை இருந்தால், தனக்கு இரண்டு வகுப்புகளின் பெண்களை மணக்க உரிமை இருப்பதற்கு அவன் திருப்தியடைகிறான். அவனுக்கு உள்ள பாதிப்பு மற்ற இரண்டு வகுப்புகளின் பாதிப்பு அளவுக்கு இல்லை. இரண்டாவதாக, திருமணம் பற்றிய இந்த அநியாய ஏற்பாட்டை எதிர்க்கும் பொதுவான புரட்சியில் அவன் சேர்ந்தால், ஒரு விதத்தில் அவன் பார்ப்பனனுக்குச் சமமான நிலைக்கு உயருவான்; ஆனால் மற்றொரு விதத்தில் எல்லா வகுப்புகளும் சமம் ஆகிவிடுவதால், வைசியனும் சூத்திரனும் க்ஷத்திரியனின் நிலைக்கு உயர்ந்துவிடுவார்கள்; அதாவது அவர்கள் க்ஷத்திரியயப் பெண்களை மணந்து கொள்வார்கள். இதன் பொருள் அவன் அந்த இரண்டு வகுப்புகளின் நிலைக்குக் கீழிறங்கி விடுவான் என்பதாகும்.

இதேபோல வேறு எந்த அநியாயத்தையும் எடுத்துக் கொண்டு, அதை எதிர்த்துப் பொதுவான புரட்சி நடப்பதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். இதே மாதிரியான சமூக மனப் போக்குக் காரணமாக அதை எதிர்த்துப் பொதுவான புரட்சி நடப்பது முடியாமல் போகிறது.

பார்ப்பனியத்துக்கும் அதன் அநியாயங்களுக்கும் எதிராகப் புரட்சி எதுவும் நடக்காமல் போனதற்கான காரணங்களில் படிப்படியான சமத்துவமின்மை முறை ஒன்றாகும். இந்தக் கொள்ளை முறையை மற்றவர்கள் ஆதரிக்கச் செய்வதற்காக அவர்களுக்குக் கொள்கையின் லாபத்தில் பங்கு கொடுக்கும் ஏற்பாடு இது. அநியாயத்தை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்கு மனிதன் கண்டுபிடித்திருக்கக் கூடிய மிகக் கேவலமான சூழ்ச்சிகள் நிறைந்த முறை இது. இது, அநியாயத்தை எல்லோரும் ஆதரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அந்த அநியாயத்தின் ஆதாயத்தில் பங்கு பெற அழைப்பு விடுப்பதேயன்றிவேறல்ல.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க