உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | என் நினைவுக் குறிப்பு – 3 | கருணாகரன்

எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.

து ஒரு அறுவடை காலம்!

எங்கள் ஊரைப் பொறுத்தவரை பெரிய அளவில் நெல் விளைவது கடினம். ஏனெனில், அதற்கான பாசன வசதி என்பது எங்களுக்கு கிடையாது. தமிழ்நாட்டின் வற்றாத நதியான தாமிரபரணியின் நீர் கூட எங்களுக்கு நெல் விளைவிக்க கிடைக்காது. தூத்துக்குடிக்கு தண்ணீர் ஊற்றும் தாமிரபரணி, எங்கள் ஊருக்கு எதுவும் செய்ய வில்லை என்பது கவலைப்பட வேண்டிய ஒன்று.

எங்கள் ஊரில் ஐந்து ஏக்கருக்கு மேலே நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கிணறு வைத்திருப்பார்கள். அவர்களால் எளிதில்  நெல்லை பயிரிட்டு விளைவிக்க முடியும். ஆனால்,  மற்றவர்கள் அப்படியல்ல. பெரும்பாலான மக்களுக்கு  கிணறு வசதி இல்லாததால் அவர்கள் எல்லோரும் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை விளைவிப்பார்கள்.  அவர்களின் வழக்கமும் அதுதான். செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாத இறுதியில் பயிர் செய்யும் காலம் முடிவடையும். செப்டம்பரில் தொடங்கும் காலம் என்பது பயிர் விதைப்பு காலம் நவம்பர் இறுதியில் முடியும் காலம் என்பது அறுவடை காலம் என எடுத்துக் கொள்ளலாம்.

எங்கள் வீட்டில் அப்போதும் சரி, எப்போதும் சரி மக்காச்சோளம், கேழ்வரகு, எள், பாசிப்பயறு முதலியவற்றைத்தான் விதைப்பார்கள். அது எங்களின் வழக்கமாகும், ஏனெனில் எங்களுக்கு மற்றவர்களைப் போல பெரிதளவில் நிலவசதி கிடையாது. நான் சொல்லும் எனக்கு என்பது என்னை சார்ந்த மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் சேர்த்துதான்.

பயிரிடப்பட வேண்டிய விதைகளை பெரும்பாலும் இப்போது டிராக்டர்கள் மூலம்தான் எடுத்து செல்கிறார்கள் என்றாலும், அப்போது சைக்கிளில்தான் எடுத்து செல்வார்கள்.  விதைகளை கொண்டு வருவதற்கும் சரி, உரத்தை கொண்டு போவதற்கும் சரி எங்களுக்கு மிக மிக அவசியமாக தேவைப்பட்டது சைக்கிள்தான்.

அன்று, அப்படித்தான் எனது அம்மாவும் அப்பாவும் எங்களது வயலுக்குச் செல்ல முனைப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது என் அப்பா வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த எங்கள் சைக்கிளை துடைக்க ஆரம்பித்தார். அதில் ஒரு மண்வெட்டி அதனுடன் சேர்ந்து சில பொருட்கள் சேர்த்து கயிறையும் கட்டி எடுத்து வைக்க சொல்ல அவருக்கு அப்போது தான் தெரிந்தது சைக்கிளில்  காற்று இல்லை என்று.

அவர் உடனே எங்கள் வீட்டில் இருந்த பம்ப்-யை எடுத்து சைக்கிளின் முன்பக்க டயரில் காற்று அடித்தார். ஆனால், சைக்கிளில் காற்று ஏறாமல் அசைவற்று இருந்தது. நான் அந்த டயரை சிறிது அமுக்கி பார்க்க அதில் காற்று ஏறவில்லை என்பது எனக்கு புரிந்தது.

அப்போது எனது அப்பா என்னிடம் “ஏலே! நீ போய் சைக்கிளை “ரிப்பேர்” பாத்துட்டு வா, நம்ம திருமுருகன் கடைக்கு போய் பாத்துக்கோ, வேற எங்கேயும் போகக்கூடாது சரியா” அப்படின்னு சொல்லிவிட்டு அவர் வேறு வேலையை பார்க்க ஆரம்பித்தார்.


படிக்க: கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்


நானும் என் சைக்கிளை எடுத்துக் கொண்டு, வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் ஒரு சைக்கிள் பஞ்சர் கடையை நோக்கிச் சென்றேன். அதில், சிறு டயர்கள் சில இரும்பு கம்பிகள் கிடந்தன. நான் அவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டே அந்த கடைக்கு செல்ல அந்த கடை பூட்டப்பட்டு இருந்தது.

அதனைப் பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்க, அங்கே எனது மச்சான் வந்தான். அவன் என்னிடம் “இன்னொரு கடை இருக்குல மாப்பிள்ளை, வா அங்க போகலாம்” என்று  என்னை அழைக்க அவனை பின் தொடர்ந்து சென்றேன்.

அவனும் எனது தெருவை தாண்டி வேறொரு தெருவிற்கு என்னை அழைத்துச் சென்றான். அந்த தெரு, எங்கள் தெரு போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது.

எங்கள் தெருவில் இருந்த கால் உயரம் மணல் வீடுகள் அங்கே இல்லை. எங்கள் தெருவில் கிடந்த குப்பை கூடங்களோ, ஓலை வீடுகளோ! அங்கே இல்லை. அதனால் எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


படிக்க: கல்வி ஒரு மாயை.. | என் நினைவுக் குறிப்பு | களம் -2 | கருணாகரன்


அதனை எல்லாம் கவனித்துக் கொண்டே உள்ளே செல்ல, அங்கே சற்று தொலைவில் சைக்கிள் சரி பார்ப்பவரின் வீடு இருந்தது, என் மச்சான் என்னை அவரிடத்தில் அழைத்துச் சென்றான் . அங்கே சில சைக்கிள்கள் வீட்டின் வெளியேவும் சில சைக்கிளில் வீட்டின் உள்ளேயும் நிறுத்தப்பட்டிருந்தன.

என் சைக்கிளையும் அவர்களின் சைக்கிள்களில் ஒன்றாக நிறுத்திவிட்டு, பழுதுபார்ப்பவரைத் தேடி உள்ளேச் சென்றேன், அப்போது என் அண்ணன் அங்கே நின்று கொண்டிருந்தான்.

அவன் கையில் சில கேபிள் டிவி வயர்கள் இருந்தன. அதனைப் பார்த்தவுடன் நான் புரிந்து கொண்டேன், அவன் கேபிள் டிவி வயர்களை இணைத்து இங்கே தொலைக்காட்சியில் சேனல்களை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்று. அவன் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்க முயற்சி செய்தான். நான் அவனை கவனித்துக் கொண்டிருந்த சில வினாடிகளில், அவனது கால்கள் வழுக்கி விட பிரித்து வைத்திருந்த ஓட்டின் வழியாக அந்த வீட்டிற்குள் டமால் என்று விழுந்தான். அவன் கால் அருகில் இருந்த நாற்காலியினுள்ளே விட்ட நிலையில் இருந்தது. அதனை பார்த்து எனக்கும் சரி என் மச்சானுக்கும் சரி கதி கலங்கி போனது.

நாங்கள் அவனுக்கு என்ன ஆயிற்று என்ற பதற்றத்துடன் வீட்டின் வாசலை தாண்ட முயற்சிக்க, அங்கே ஒரு குரல், “ஐயோ, என் வீடு இப்படி தீட்டுப்பட்டு போயிருச்சு. சண்டாள உள்ள வந்து கெடுத்துட்டானே, இந்த பள்ளப்பய வந்து இப்படி ஆயிடுச்சுன்னு” கோபத்துடன் கத்த, அதனை கேட்ட என் அண்ணன் கையில் இருந்து கேபிள் டிவி வயர்களை பற்றி கொண்டு சொல்ல முடியாத வலியுடன் அதுவும் நொண்டி நொண்டி வெளியில் வந்தான். வாயிற் படி வழியாக..

அதைப் பார்த்து அந்த அம்மாவிற்கு இன்னும் கோபம் தலைக்கேறி போய் “பள்ள நாயே உன் சித்தப்பா இந்த ஊரு தலைவராக இருக்கப் போய்தான் உன்னை எல்லாம்  இந்த வீட்டுக்குள்ள விட்டு இருக்கேன். ஆனா இங்க பாரு எங்க வீடு வாசப்படியிலிருந்து எங்க வீட்டு தரை வரைக்கும் எல்லாமே தீட்டுப்படுத்திட்ட, நான் உன்னை என்ன செஞ்சேன். என் வீட்டை இப்படி நாசப்படுத்திட்டியே. பரதேசி நாயே, உன்னை நான் என்ன சொன்னேன் மரத்துல ஏறி ஓட்ட பிரிச்சி உள்ள வீசுன்னு தானே சொன்னேன் நீ இப்ப என்ன பண்ணி இருக்க…

உன்னால வீட்டு ஓடும் உடைஞ்சிடுச்சு. உன்னால என் நாற்காலியும் தீட்டுப்பட்டு நாசமாயிருச்சு. என் பரம்பரை நாற்காலிய, இப்படி நீ தீட்டாக்கிட்ட பரதேசி நாயே” என்று சொல்லிக்கொண்டு அப்படியே அந்தம்மா திரும்பி எங்களை பார்த்தார். நாங்கள் இருவரும் வாயில் படியின் அருகில் நின்று கொண்டிருந்தோம் .எங்களுக்கு என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல. என் மச்சான் மட்டும் சற்று கோபத்துடன் ஏதோ தெரியாம தான விழுந்தான். அதை விட்டுட்டு நீங்க மனசாட்சி இல்லாம இப்படி பேசுறீங்கன்னு சொல்ல..

உடனே அவர் “இங்க பாரு, இவன் உன் சொந்தமா? இந்த ரெண்டு பயலுகளும் உன் சொந்தக்கார நாய்களா என்ன கொழுப்பு பாரு இவங்களுக்கு..

உன்னை என்னய்யா சொல்லி இருக்கேன். இவங்களையெல்லாம் வந்த இங்கே விடாதேன்னுதானே சொல்லி இருக்கேன். இப்படி நீ வந்து சைக்கிள் கடை நடத்துற பேர்ல இந்த நாய்களை வாசப்படியில நிக்க வைச்சுத்தொலைஞ்சதாலதான் என் வீடு இப்படி தீட்டுப்பட்டு போயிருச்சு பரதேசி ” என்று அந்த அம்மா அந்த சைக்கிள் கடைக்காரனைத் திட்ட..

அவர் “பையனோட சித்தப்பன்தான் ஊர் தலைவன், அதனாலதான் விட்டேன். இல்லன்னா இந்த நாய்களை நான் ஏன் விட போறேன்” என்று கூறினார்.

உடனே அந்த அம்மா “ஊர் தலைவனா இருந்தா என்ன யாரா இருந்தா என்ன?, இப்ப பாரு உள்ள இருக்கக்கூடிய வீடும் இவங்க கால் பட்டு தீட்டா ஆயிருச்சு. உன் முற்றமும் கால் பட்டு தீட்டாயிருச்சு. இப்ப என்ன பண்ண போற” அப்படின்னு சொல்லி அந்த அம்மா அவரை திட்டியது.

அவர்களிடம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த உரையாடல் எனது நெஞ்சை உலுக்க ஆரம்பித்தது. எனது கவனத்தை அவைகள் சிதைக்க ஆரம்பித்தன. எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.

நான் அவற்றைப் பார்த்துவிட்டு சற்று தலையை தூக்கி மேலே பார்க்க அவர் கோபத்துடன் என்னை பார்த்து முறைத்து ஏதோ சொல்ல முயற்சிக்க..

என் அண்ணன் “இது அப்படியே கிடக்கட்டும், வாங்க வெளியே போகலாம்” என்று எங்களை அங்கிருந்து வெளியில் அழைத்து சென்று, “உங்களுக்கு எதுவும் தேவை என்றால் நீங்க நம்ம வீடுகளுக்குள்ளேயே கேட்டு கொள்ளணும். அதை விட்டுபுட்டு இவன் வீட்டுக்கு போறேன், அங்கபோய் கேட்கிறேன், பக்கத்து தெருவுக்கு போறேன் சொன்னா இந்த நாய்ங்க அப்படித்தான் பண்ணுவாங்க. இவங்க புத்தி மலட்டு புத்தி, மலட்டு புத்தி உள்ளவங்க இப்படித்தான் இருப்பாங்க. நீ என் வீட்டிக்குபோய் சைக்கிள் எடுத்துட்டு போய்க்கோ. இத அங்க கொண்டு போய் நிப்பாட்டி வை”என சொல்லிட்டு அவரும் வேறொரு வேலைக்காக வெளியில் கிளம்பி செல்ல ஆரம்பித்தார்.

நாங்களும் அந்த தெருவின் பகுதிகளில் இருந்து வெளியில் வர அங்கிருந்து சில பாட்டிகள், சில மனிதர்கள் எங்களை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

நாங்கள் அவர்களை எல்லாம் கடந்து எங்கள் வீட்டிற்கு எப்படியோ வந்து சேர்ந்தாலும் அந்த அனுபவம் அந்தப் பயணம் பதைபதைக்க வைத்தது. ஆறாத வடுவாய் அழிக்க முடியாத உருவமாய் அது என் மனதில் நின்று போய்விட்டது.

இன்று நாட்டில் இருக்கும் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்ல வேண்டும் பலர் நினைத்தாலும், எங்களால் பக்கத்து தெருவிற்குக் கூட செல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை.

கருணாகரன்



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க