18.12.2024
இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்காவிடில்
நாமும் இழிவானவர்களாக நடத்தப்படுவோம்!
கண்டன அறிக்கை
சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற இசைஞானி இளையராஜா அவர்கள் அர்த்தமண்டபத்திற்குள் செல்லும்போது அங்குள்ள ஜீயர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியில் வைத்து சாமி கும்பிடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்.
இளையராஜா கொடுத்த நிதியை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜியர்கள். அதற்கான புகைப்படங்களும் வந்து கொண்டிருக்கிறது.
இளையராஜா அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளாலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு விளக்கம் தருவதாக அறநிலையத்துறை விட்ட அறிக்கையில், “இந்தக் கோவிலின் மரபுப்படி அர்த்தமண்டபம் வரை அர்ச்சகர்கள் ஜீயர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை” எனக் கூறினார்கள். இந்த அறிக்கையையும் பலரும் கண்டித்து வருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் ஏன் இது போல் சாதி தீண்டாமை நடப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதைத் தடுத்துநிறுத்த வேண்டியது அரசின் கடமை அல்லவா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சரிதான். அறநிலையத்துறை என்பது சங்கிகளைப் போல அறிக்கை கொடுப்பதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் இளையராஜா அவர்கள் என் தன்மானத்திற்கெல்லாம் எந்த பாதிப்பும் இல்லை என்ற அளவில் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவதூறு செய்தி பரப்பாதீர்கள் என பேசுகிறார். ஆனால் இதை அப்படியே விட்டு விட்டு கடந்துசெல்ல இது அவருக்கான பிரச்சினை மட்டுமா? ஒட்டுமொத்தமாக நம் தமிழ் மக்களில் யார் சென்றாலும் இதுதான் நிலைமை. இதை நாம் அனுமதிக்க முடியாது. இளையராஜாவைப் போல் நம்மை இழிவு படுத்துபவர்களுடன் சமாதான சகவாழ்வு நம்மால் நடத்த முடியாது.
இதுகுறித்து பேசும் ஆன்மீகப் பேச்சாளர் கலையரசி நடராஜன், “கடவுள் யாரையும் உள்ளே வரக்கூடாது என எங்கே எழுதி வைத்துள்ளார். ஆகமம், விதிகள் என்று ஒவ்வொரு கோவிலுக்கும் ஏற்றார் போல் எழுதி வைத்துள்ளார்கள். இதையெல்லாம் ஏற்க முடியாது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த மத்திய அரசு அதிகார பீடத்தில் தொடர்ந்து நீடிக்குமானால் யாரும் கோவிலுக்குள் வர முடியாத அளவிற்கு கூட இந்த வைணவர்கள் செய்வார்கள். அதனால்தான் அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை மீட்க வேண்டும் என கூறி வருகிறார்கள். கோவில்கள் அவர்கள் கைகளுக்கு போனால் இது போல் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாகும்” என்றார். இது ஒரு அநீதி என்பதை பதிவு செய்த அவர், இளையராஜாவிடம் பணம் வாங்கியதையும் அம்பலப்படுத்துகிறார். ஆகமம், விதி இதெல்லாம் இந்த சாதியிடம் பணம் வாங்கக்கூடாது என சொல்லவில்லையா என கேள்வி எழுப்புகிறார்.
தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உழைக்கும் மக்கள் கருவறைக்குள் நுழைய முடியாததை குறிப்பிட்ட பெரியார் “தனது நெஞ்சில் குத்தி இருக்கும் முள் இது” என்று பேசினார். இந்த பார்ப்பன கும்பலின் ஆதிக்கத்தை முறியடிக்கும் விதமாக எமது அமைப்புகளின் சார்பாக ஸ்ரீரங்கம் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது என்பதையெல்லாம் தமிழகம் அறியும். அதேபோல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் இன்னமும் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக முடியாது என்ற நிலைமையே நீடித்து வருகிறது. இதனையும் முறியடிக்க நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
இதுபோன்ற போராட்டங்களை அனைத்து பிரிவு மக்களும் முன்னின்று நடத்த வேண்டும். ஆதிக்கச் சாதி பெருமை பேசிக்கொண்டு இழிந்த அடிமை வாழ்க்கை வாழ நினைக்கும் அற்பவாதிகளை புறந்தள்ளிவிட்டு தங்களது ஜனநாயக உரிமையை மறுக்கும் ஆகமம், விதி என அனைத்திற்கு எதிராகவும் களத்தில் இறங்க வேண்டும். மனித சமத்துவத்திற்கு துளியும் பொருந்தாத இந்த ஆகம குப்பைகள் கொளுத்தப்பட வேண்டும். அனைத்து பிரிவு மக்களின் மீதும் ஏவப்பட்டிருக்கும் இந்த கருவறை தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் கருவறையினுள் நுழைய வேண்டும்; அதனை வழக்கமாக்க வேண்டும்.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு – 9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram