நீங்கள் இன்னும்
எங்கள் கட்டை விரலைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் தலையை வெட்டிக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் குடிதண்ணீரில் மலம் கலந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் மீது மூத்திரம் பெய்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்களை வன்புணர்ந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் சேரிகளை எரித்தபடியே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்கள் பிணங்களை பொதுப் பாதையில் கொண்டு செல்ல விடாமல்
தடுத்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
எங்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தபடியே தான் இருக்கிறீர்கள்…
நீங்கள் இன்னும்
உங்கள் குப்பைகளையும் கழிவுகளையும் அள்ள
எங்களை மட்டுமே கை காட்டுகிறீர்கள் …
நீங்கள் இன்னும் இன்னும்
இதுபோன்ற வன்முறைகளைச்
சளைக்காமலும் சலிக்காமலும் மகிழ்வோடோ அல்லது மறைமுகத்தோடோ
தொடரும் போது…
எங்களுக்கிழைத்த அநீதிகளை
அன்றாடம்
நாங்கள் பேசும்போது
மட்டும்
உங்களுக்கு ஏன் அத்தனை சலிப்பு..!
இன்னும் இன்னும் உரக்கப் பேசுவோம்
உலகின் மூலைமுடுக்கெல்லாம்
கேட்கும்படி உரக்கப் பேசுவோம்
உங்கள் மனசாட்சியை உலுக்கும்படி
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
உரக்கப் பேசுவோம்…
ஏகலைவன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram