privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்சமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா ?

சமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா ?

-

பாராமுகங்கள்
~~~~~~~~~~~~~

மாட்டிறைச்சி விவாகரத்தில் நாட்டமை செய்து கொண்டிருந்த காட்சி ஊடகங்களில் ஒரு தொலைக்காட்சியேனும் தங்கள் செய்திகளின் முடிவில் மற்ற இறைச்சிகளின் விலைப்பட்டியலை அறிவித்தது போல மாட்டிறைச்சியைப் பற்றி அறிவித்திருக்கிறார்களா?

அச்சு பத்திரிக்கைகளின் இணைப்பிதழில் வரும் சமையற் குறிப்புகளில் எத்தனை நாளிதழ்கள் மாட்டிறைச்சி சமைப்பது பற்றிய செய்முறைகளை விளக்கி இருக்கிறார்கள்?

வார இதழ்களில்….?

ஒரே ஒரு முறை மந்தைவெளியைப் பகுதியை மையமாக வைத்து வெளியான ‘என் விகடனில்’ வெங்கட்பிரபு அவர் பகுதியிலுள்ள ஒரு beef கடையைப் பற்றி சொல்லியிருப்பார்.

தொலைக்காட்சியில் இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கரண்டி சுழற்றிய கிச்சன் கில்லாடிகளால் ஒரு அத்தியாயத்திலாவது மாட்டிறைச்சி சமைக்கப்பட்டிருக்கிறதா?

YouTube Channel ஆரம்பித்த ‘வெகுஜன ஊடகங்கள்’ சென்னையில் சுவையாக பிரியாணி கிடைக்கும் கடைகளில் Beef Biriyani கடையை எப்போதேனும் அடையாளங்காட்டி இருக்கிறதா?

காலங்காலமாக குடும்பங்களில் ஆட்சி செலுத்தும் தொலைக்காட்சித் தொடர்களில் ஏதேனும் ஒரு வசனம்?

சாரல் பிறந்து மருத்துவமனையில் இருந்தபோது அவளைப் பார்ப்பதற்காகக என் நண்பன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வந்தான்.

அவர்கள் கிளம்பும்போது அருகிலிருந்த என் அம்மாவைப் பார்த்து “மா ஒருநாள் ரெண்டு பேரும் வீட்டுக்கு வரோம்மோ” என்று அவன் மனைவி சொன்னார்.

“அயோ வாங்கம்மா”

“நீங்க beef சூப்பரா செய்வீங்களாமே நாங்க வரோம் எங்களுக்கு செஞ்சு குடுங்கம்மா.. சாப்ட்டு ரொம்ப நாளாச்சு, எங்க வீட்ல அதெல்லாம் செய்ய முடியாது” என்றார்.

“டேய், எப்பவோனா ரெண்டுபேரும் வாங்கடா” எனச் சொல்லி வழி அனுப்பி வைத்தேன்.

கடந்த வாரம் மதியம் அவன் அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டான்.

“ன்னா மச்சி இந்த ஞாயித்திக்கெழம வரீங்களா” என்றேன்.

“இல்ல மச்சி.. நானே வீடு பாக்குறதுக்குதாங் உனுக்கு phone அச்செங்”

“ஏங் ன்னாடா ஆச்சி”

“wife எ beef செய்ய சொல்லி கதவ சாத்திட்டு சாப்டுன்னு இருந்தோங். சாய்ங்காலம் போல வீட்டு ஓனரம்மாக்கு தெரிஞ்சி அந்த பொம்பள ஒருமாரி மூஞ்சாலச்சமாரி பேசிச்சி. ஆர்குமென்ட் வந்து ஒரு வேகத்துல செரி நாங்க வீட காலி பண்றோன்னு சொல்ட்டேன்டா” என்றான்.

அவன் சொந்த ஊர் வியாசர்பாடி. குடும்பச் சிக்கல் மற்றும் பணி நிமித்தமாக நீண்ட அலைச்சலுக்கு பின் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே உள்ள பெருங்குடி பகுதியில் மனைவி பிள்ளைகளுடன் தனிக்குடித்தனமாக வாடகைக்குத் தங்கியிருந்தான். திரும்பவும் வியாசர்பாடிக்கே சென்றுவிடலாமா என இரண்டுமாத அவகாசத்தில் வீடு தேடிக் கொண்டிருக்கிறான்.

மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருப்பது அவரவர் விருப்பம். ஆனால் சாப்பிடுபவர்களை கீழானவர்களா அணுகும் போக்கை நியாயப்படுத்தும் விதமாக ஊடகங்களும் கள்ள மௌனம் சாதிக்கின்றன.

அதை சாப்பிடுவதை பொதுவெளியில் பகிரமுடியாத அளவுக்கு தீயசெயல்/அவமானம் என்று சாப்பிடுபவரையே நம்ப வைப்பதற்கு இப்படி ஊடகங்கள் செய்யும் ஓரவஞ்சனையும் முக்கிய காரணம்.

ஒரு பொதுத்தளத்தில் மாட்டிறைச்சியைப் பற்றிய செய்திகளும், காணொளிகளும் வந்தால்தானே மற்ற மாமிசங்களைப் போல அதுவும் சாப்பிடக்கூடியது என்கிற எண்ணம் பெருகும். ஊடகங்கள் ஏன் இந்த பொறுப்பிலிருந்து நழுவுகின்றன? உங்களால் எப்படி ஒட்டுமொத்தமாக ஒரு இனக்குழுவின் உணவுப் பழக்கத்தையே நிராகரிக்க முடிகிறது? அல்லது தமிழ்நாட்டில் மாட்டிறைச்சியை யாருமே உண்பதில்லையா?

அந்த உரையாடலில் சலித்துப் போன குரலில் என் நண்பன் சொன்னான் “மச்சி இத்தினிக்கும் அந்த வீட்டு ஓனரம்மா பையனும் எங்கூட ஒக்காந்து ஒரு கிண்ணத்துல வெச்சு சாப்ட்டுனுதான்டா இருந்தான். த்தா அவ்ளோ பெரிய ஆர்குமென்ட் நடக்குது கம்முனு இருந்தாம்பார்” என்றான்.

அப்படித்தான் so called நடுநிலை ஊடகங்கள் உட்பட நிறைய பேர் ‘கம்முனு’ இருக்கிறார்கள். இருப்பார்கள் என்று தோன்றுகிறது

நன்றி : பேஸ்புக்கில் தமிழ்ப் பிரபா