“செபாஸ்டியன் அண்டு சன்ஸ்:
மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு”

நூலாசிரியர்: டி.எம்.கிருஷ்ணா.                                                        

வெஸ்ட் லாண்ட் பதிப்பக வெளியீடு.

(30.1.20 தி இந்து ஆங்கில நாளிதழ் இந்நூலின் சில பகுதிகளை நூல் அறிமுகமாக வெளியிட்டிருந்தது. அந்த நூல் அறிமுகத்தின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 2.2.20 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கலாக்ஷேத்ராவில் நடைபெறுவதாகவும் ராஜ்மோகன் காந்தி, திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இந்து நாளிதழில் இக்கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருக்கிறது கலாக்ஷேத்ரா நிறுவனம்.)

♦ ♦ ♦

“அரசியல், கலாச்சார, சமூக நல்லிணக்கமின்மையைத் தூண்டுகின்ற ஒரு நிகழ்ச்சியை அரசு சார்ந்த அமைப்பான கலாக்ஷேத்ரா அனுமதிக்கவியலாது. இன்றைய நாளிதழில் வெளியான நூல் திறனாய்வுக் கட்டுரையில், இந்த நூல் தொட்டுச் செல்கின்ற சர்ச்சைக்குரிய, பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய விசயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நூலின் உள்ளடக்கத்தை சுற்றி நிலவுகின்ற சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்து முன்னமே எங்களுக்கு தெரியாதாகையால், எங்கள் அரங்கத்தை 2.2.20 அன்று நூல் வெளியீட்டு விழாவுக்கு தருவதாக ஒப்புக்கொண்டு விட்டோம். தற்போது இந்த அனுமதியை திரும்பப் பெறுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறது கலாக்ஷேத்ரா.

அனுமதி மறுத்த கலாக்ஷேத்ரா.

இதனை மோடி அரசின் மறைமுக அச்சுறுத்தல், கருத்துரிமை பறிப்பு என்று கண்டிக்கலாம். அதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் இந்த நூல் அதற்கு அப்பாற்பட்ட உண்மைகளைப் பேசுகிறது. கேள்விகளை எழுப்புகிறது. கர்நாடக சங்கீத வித்வான்களும் ரசிகர்களும்தான்  இதற்கு பதில் சொல்லவேண்டியவர்கள்.

தமிழிசைக் களவையும்  அபிரகாம் பண்டிதர் போன்ற அறிஞர்களை பார்ப்பனியம் இருட்டடிப்பு செய்திருப்பதையும் ம.க.இ.க வின் தமிழ் மக்கள் இசைவிழா தொடர்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

தண்டபாணி தேசிகர் அமர்ந்த மேடைக்கு தீட்டுக் கழித்ததெல்லாம் அந்தக்காலம் என்று சொல்பவர்கள் உண்டு. தமிழ் குடமுழுக்குக்காக போராட்டம் நடந்து கொண்டிருப்பது இந்தக் காலத்தில்தான். கலாக்ஷேத்ராவின் கதவுகள் மூடப்படுவதும் இந்தக் காலத்தில்தான்.

லிபரல் பார்ப்பனர்களுடைய உண்மை சொரூபத்தை தரிசிக்க விரும்புகிறவர்கள், இந்தக் கட்டுரையை துண்டறிக்கையாக அச்சிட்டு சபாக்களின் வாசலில் நின்று விநியோகியுங்கள்.

♦ ♦ ♦

கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில்….டி.எம்.கிருஷ்ணா!

மிருதங்கம் என்ற இசைக்கருவியை உருவாக்குபவர்களைப் பற்றி யாரும் இதுவரை பேசியதில்லை என்கிறார் கர்நாடக இசைப் பாடகரும் எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா. தானும் அவர்களைப் பற்றி எழுதியதில்லை என்பதை அவர் சொல்லத் தவறவில்லை. அவரது முதல் நூல், கர்நாடக இசையுலகில் சாதியின் பாத்திரம் பற்றி ஆராய்ந்தது. இருப்பினும் அதில் இசைக்கருவிகளை உருவாக்குவோரின் உலகம் பற்றியோ, அவர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் இடையிலான உறவு பற்றியோ அவர் ஆராயவில்லை.

இந்து நாளிதழில் வெளியான நூல் மதிப்புரை.

“செபாஸ்டியன் அண்டு சன்ஸ், மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு” என்பது அவரது புதிய நூல். கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் முதன்மையான பயன்படுத்தப்படும் தாளக்கருவி மிருதங்கம்தான் என்று அந்த நூலில் குறிப்பிடுகிறார் கிருஷ்ணா. இரு முகம் கொண்ட தாளக்கருவியான மிருதங்கத்தின் உடல் கூடு போன்றது. அதிர்வை உள்வாங்கி ஒலியாக  வெளியிடும் அந்தக் கூடு, பலா மரத்தினால் செய்யப்பட்டது. இரு புறமும் சரிந்து இறங்கும் அதன் முனைகளான வலமும் இடமும், பசுத்தோல், எருமைத்தோல், ஆட்டுத்தோல் ஆகியவற்றால் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குள் சாதிய ஒதுக்கலும் இழிவுபடுத்தலும் கொண்ட இருண்ட கதையொன்று ஒளிந்திருக்கிறது.

♦♦♦

ந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்பது உலகம் முழுவதும் மட்டுமின்றி, இந்தியாவிலும் கூட நிலவி வரும் ஒரு நம்பிக்கை. ஆனால் வேதகாலத்திலும் அதற்குப் பின்னரும் பார்ப்பனர்கள் உள்ளிட்டோர் மத்தியில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பெருமளவில் நிலவியிருக்கிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது. இந்துக்களில் தலித் சமூகத்தினர் மட்டுமன்றி மற்ற பலரும் இன்றைக்கும் மாட்டிறைச்சி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, உலகில் மிகப்பெரும் அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யக்கூடிய முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

பசு என்பது கொல்லப்படக்கூடாத புனிதமான மிருகம் என்பது நவீன கால பார்ப்பனியக் கருத்தாக்கம். இதனைப் பெரும்பகுதி மக்கள் அங்கீகரிப்பதில்லை. ஆனால் கொள்கை மற்றும் பண்பாட்டு நெறிகளை கட்டமைப்பதில் தங்களுடைய எண்ணிக்கைக்கு மீறி, மிகையான செல்வாக்கு செலுத்துகின்ற பார்ப்பன சாதியினர், இப்படியொரு பொய்யை உலகமே ஒப்புக்கொண்டுவிட்ட புனிதக்கருத்து போல நிறுவி விட்டார்கள். இப்படியாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் இந்தக் கருத்து இடம் பிடித்து விட்டது.

வழிகாட்டும் கோட்பாடுகளில்தான் இது இடம்பெற்றிருக்கிறது என்றாலும், இதனை நீதிமன்றத்தின் வாயிலாக இக்கருத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்றாலும், அரசமைப்பு சட்டம் பசுவுக்கு ஒரு தனியிடத்தை வழங்கத்தான் செய்கிறது. கடந்த பல ஆண்டுகளில் வெவ்வேறு மாநில அரசுகள் பசுவதையைத் தடை செய்தோ அல்லது அதன் மீது கட்டுப்பாடுகள் விதித்தோ சட்டமியற்றியிருக்கின்றன.

சங்கடமான கேள்விகள்

மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அய்யர், சம்பிரதாயமான பாலக்காடு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஒரு முரண்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் வெகு காலம் தவித்து வந்தார்: ஒரு இசைக்கருவி. அந்த இசைக்கருவிதான் மணி அய்யரின் உயிர் மூச்சாக இருந்தது.  ஆனால் அந்தக் கருவி மூன்று விலங்குகளின் உயிர்களைப் பறித்தெடுப்பதை – அவற்றில் பசு மிக முக்கியமானது – தவிர்க்கவொண்ணாத அவசியமாக கொண்டிருந்தது.

மிருதங்கம் சூசைநாதன்.

மிருதங்கம் என்பது வேதமே போற்றுகின்ற ஒரு இசைக்கருவி என்பது ஐயரின் நம்பிக்கை. இருப்பினும் அதனை உருவாக்குவதற்காக ஒரு பசுவைக் கொலை செய்யலாமா என்ற கேள்வி அவரைப் பெரிதும் துன்புறுத்தி வந்தது. தன்னை வாட்டிய அந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு, காஞ்சி சங்கராச்சாரியாரை அணுகுவது என்று அவர் முடிவு செய்தார். இருந்தாலும் பெரியவாளிடம் இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சங்கடத்தில் ஆழ்த்தலாமா என்று ஐயருக்குள் ஒரு தயக்கம்.

அதனால், ராஜாஜியை சந்தித்து இந்தக் கேள்விக்கு விடை காண்போம் என்று ஒருவழியாக முடிவுக்கு வந்து, நண்பர்கள் மூலம் ராஜாஜியை சந்தித்தார். தனது கேள்வியை அவரிடம் முன்வைத்தார். ராஜாஜி எப்பேர்ப்பட்டவர்? “என்னுடைய மனச்சாட்சியின் காவலன்” என்று மகாத்மா காந்தியாலேயே சான்றளிக்கப்பட்டவரல்லவா ராஜாஜி!

அய்யரின் ஐயத்தை ராஜாஜி தெளியவைத்து விட்டார். ஒரு பழமொழியை மேற்கோள் காட்டி அய்யரின் வாழ்க்கைக்கு இடையூறு செய்யாத, நடைமுறை சாத்தியமான ஒரு பதிலை வழங்கி விட்டார். “ரிஷிமூலமும் நதி மூலமும் பார்க்கப் ப்டாது” என்பதே அந்தப் பழமொழி. அதாவது, “அசவுகரியமான கேள்விகளுக்கெல்லாம் விடை தேடியலையாதீர்” என்று மணி அய்யருக்கு புத்தி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் ராஜாஜி.

ஜேசுதாஸ்.

எவ்வளவு சவுகரியம்! இப்படி ஒரு பழமொழியைச் சொல்லிக் கொண்டு, மிருதங்க வித்வான் தப்பித்துக்கொள்வதற்கு வசதியாக, இசைக்கருவியின் பிறப்பிடமான இறைச்சிக் கூடத்தை மறைத்துக் கொண்டு, இடையில் நிற்கிறான் அந்தக் கருவியைப் உருவாக்கும் படைப்பாளி.

மிருதங்கத்திற்கு தோலை வழங்கும் பசு, வித்வானின் கண்ணில் படுவதேயில்லை. பசுவைக் கொல்வதும் அதன் தோலை உரிப்பதும் மிருதங்க வித்வானின் உலகத்துக்கு வெளியே எங்கேயோ வெகுதூரத்தில் நடக்கிறது. எனவேதான், இப்படி ஒரு காரியமே நடக்கவில்லை என்பது போல மிருதங்க வித்வானால் நடந்து கொள்ள முடிகிறது.

கொல்லப்படும் பசுவுக்கும், மிருதங்க வித்வானான பிராமணனுக்கும் இடையில் நின்று கொண்டு, தனது புனிதத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பிராமணனுக்கு உதவுகிறான் அந்த இசைக்கருவியைப் படைப்பவன்.  மிருதங்கத்தை உருவாக்கும் படைப்பாளி இல்லாமல், அந்தக் கருவியை வித்துவான் ஒருபோதும் வாசிக்க முடியாது. இருப்பினும் அந்தப் படைப்புத் தொழிலே அவனைத் தீட்டானவன் ஆக்குகிறது, கீழானவன் ஆக்குகிறது.

இரத்தத்தை வழித்தெடுத்து, தோலை சுத்தம் செய்து வெட்டி ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து, உலர வைத்து, இறுதியாக மிருதங்க வித்வானின் கைக்கு வந்து சேரும்போது, அந்த உயிரற்ற பொருளான தோல், அதனை உருவாக்குபவர்களின் உழைப்பால் புதியதொரு ஆற்றலாக உருப்பெறுகிறது. மிருதங்கத்தை உருவாக்கும் படைப்பாளியான ரவிக்குமாரின் கருத்துப்படி, இறந்த விலங்கின் தோல் என்பதனால் அது இழிவானதல்ல; அந்தத் தோலுக்கு உயிர் இருக்கிறது. தனது உயிர்ப்பை சுருதியின் மூலம் அது நமக்கு உணர்த்துகிறது.

மிருதங்கத்தை உருவாக்கும் படைப்பாளியான ரவிக்குமாரும் அவரைப்போன்றவர்களும்தான் மரித்துப்போன அந்தத் தோலுக்கு மறுபிறப்பை வழங்குபவர்கள். இது மறுக்க முடியாத உண்மை. இப்படி சொல்லிக் கொள்வதற்கு ரவிக்குமார் மறுக்கிறார் அல்லது இவ்வாறு சொல்லிக்கொள்வது  சரியல்ல என்று தயங்குகிறார். பளிச்சென்று தெரியும் இந்த உண்மையை நான் குறுக்கிட்டு அவருக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

குடலைப் புரட்டும் துர்நாற்றம்

இருப்பினும் வித்வான்களுடைய பார்வைக்குத் தென்படாத இந்த முரண்பாடு, மிருதங்கத்தை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு உறுத்தலாகத்தான் இருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி.

மிருதங்கம் உருவாக்கும் ஒரு படைப்பாளி சொன்னார். “நாம் ஆட்டையும் பசுமாட்டையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மிருதங்க வித்வான்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு இந்த வாடை பிடிக்காது. இந்த தோலையெல்லாம் எப்படி நாங்கள் பதப்படுத்துகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களது பூஜையறையில் இந்த மிருதங்கம் இருக்கும். மிருதங்கத்துக்கு வழங்கப்படும் அந்த மரியாதை, மிருதங்கத்தை உருவாக்கும் எங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.”

இன்னொருவர் சொன்னார். “மிருதங்கத்தை தயார் செய்யும்போது அதனை என் கால்களுக்கு இடையில் இடுக்கி வைத்துத்தான் வேலை செய்கிறேன். என் கால் பட்ட அதே மிருதங்கத்தை உங்கள் பூஜையறையில் வைத்து வழிபடுகிறீர்கள். (பார்ப்பனியக் கண்ணோட்டத்தின் படி கால்களும், பாதங்களும் தீட்டானவை ஆயிற்றே)

பசுவையும் பிராமணனையும் பிரித்து வைத்தல்

இவையெல்லாம் நம் கண் முன் தெரிகின்ற உண்மைகள். இருந்த போதிலும், தங்களது கறைபடியாத புனித பிம்பத்தை பராமரித்துக் கொள்ள வேண்டுமானால், இந்த உண்மைகளிலிருந்து தாங்கள் விலகியிருப்பது மட்டுமின்றி, தங்களது ரசிகர்களையும் முடிந்த அளவு எட்டத்தில் வைத்திருப்பது வித்வான்களுக்கு ஒரு தவிர்க்கவியலாத அவசியம். மாட்டிறைச்சிக் கூடத்தின் கவிச்சி வாடை சபாக்களின் பழமைவாத ரசிகர்களுடைய நாசித்துவாரங்களுக்குள் காற்று வாக்கில் கூட நுழைந்து விடக்கூடாதே!

மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அய்யர் எதிர்கொண்ட இருத்தலியல் நெருக்கடிக்கு நிச்சயமாக ஏதேனும் ஒரு சம்பவம் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும். அது என்ன?

பார்லந்து ஐயர்.

மிருதங்கம் செய்யும் தொழிலின் சக்ரவர்த்தியாக இருந்தவர் பார்லந்து. அவரது நெருங்கிய உறவுக்காரனான ஆல்காட்டான், தோலைத் தெரிவு செய்வதிலும் வார் பிடிப்பதிலும் கைதேர்ந்தவர். பார்லந்துவுக்கு ஆல்காட்டான் எந்த வகையில் உறவு என்று குறிப்பாக என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நமக்கு உதவுவதற்கென்றே “கசின்” என்ற ஆங்கில வார்த்தை இருப்பதால்,  அவர்களுக்கிடையிலான உறவைக் குறிக்க அந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

ஆல்காட்டானிடம் அய்யர் ஒரு ஆர்டர் கொடுத்தார். ஆர்டர் செய்யப்பட்ட பொருள் – பசுவின் தோல். “தோல் உயர்தரமாக இருக்கவேண்டும். என்ன விலையாக இருந்தாலும் பரவாயில்லை” என்று ஆல்காட்டானிடம் சொன்னார் ஐயர். “நூறு ரூபாய் ஆகும்” என்றார் ஆல்காட்டான். பணம் முழுவதையும் அட்வான்சாகவே கொடுத்துவிட்டு, மாலை 4 மணி வாக்கில் ஓட்டலுக்கு சாப்பிடக் கிளம்பினார் ஐயர். திரும்பி வீட்டுக்கு வந்தால், வாசலில் ஆல்காட்டான் நின்று கொண்டிருக்கிறார், கையில் ஒரு பசு மாடு. ஐயருக்கு தூக்கி வாரிப் போட்டது.

இந்தப் பசுவின் தோல் அற்புதமாக இருக்கிறது. ஆனால் மாட்டு சொந்தக்காரன் 120 ரூபாய் விலை சொல்கிறான். வாங்கிடலாமா சாமி? என்று ஆல்காட்டான் கேட்க, அய்யர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

டி.எம்.கிருஷ்ணா.

வாழ்க்கையிலேயே முதல் முறையாக இதுநாள் வரை கண் மறைவாக நடந்து கொண்டிருந்த ஒரு காரியம் இப்போது கண் முன் வந்து நிற்கிறது. இதற்கு அய்யர் பொறுப்பேற்றாக வேண்டும். அநேகமாக, வாழ்க்கையிலேயே முதல் முறையாக, ஒரு பசுவை கொலை செய்வது பற்றி அய்யர் இப்போது முடிவெடுத்தாக வேண்டும்.

“போ, போ.  அந்த மாட்டையும் இழுத்துண்டு போ..” என்று ஆல்காட்டானை அங்கிருந்து அவசரம் அவசரமாக விரட்டியிருக்கிறார் அய்யர். இது பாலக்காடு மணி அய்யருடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவம் மட்டுமல்ல, நாம் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் ஒரு உண்மை. அன்று அய்யருக்கு ஏற்பட்ட அந்த நிலைமை தனக்கும் ஏற்படுவதை இன்று எந்த மிருதங்க வித்வானும் விரும்ப மாட்டார் என நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களைப் பொருத்தவரை, மிருதங்கத்துக்கான தோல், சொர்க்கத்திலிருந்து கீழே விழுகிறது. அப்படித்தான் அவர்கள் நம்ப விரும்புகிறார்கள்.

படிக்க:
நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்
பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது!

மணி அய்யரும் சரி, வித்வான் பழனி சுப்ரமணிய பிள்ளையும் சரி மிருதங்கம் தயாரிப்பவர்கள் தோலை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு பெரிதும் முயற்சி எடுக்கத்தான் செய்தார்கள். ஆனால் அவர்கள் சோதித்துப் பார்த்தது, மிருதங்கம் செய்பவர்களால் பதப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட தோல். காலப்போக்கில் பதப்படுத்தப்பட்ட தரமான தோலை பெரிய அளவில் வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ளவும் தொடங்கி விட்டார்கள் மிருதங்க வித்வான்கள்.

அவர்களுக்குத் தரமான தோல் வேண்டும். அது தோற்றுவிக்கின்ற தனிச்சிறப்பான நாதம் வேண்டும். அது மிருதங்கம் என்ற இசைக்கருவியின் மீது அவர்கள் கொண்டிருக்கும் காதலேயன்றி, வேறொன்றுமில்லை.

♦♦♦

குறிப்பு:
கலாக்ஷேத்ராவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி, ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் அரங்கில் நடைபெறும் என்று டி.எம்.கிருஷ்ணா அறிவித்திருக்கிறார்.டி.எம். கிருஷ்ணாவின் இணையதளம் 


மூலக்கட்டுரை: தி இந்து
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு.

2 மறுமொழிகள்

  1. //இந்த தோலையெல்லாம் எப்படி நாங்கள் பதப்படுத்துகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.//
    Not only MAATU THOL all productions நாங்கள் thaan seikirom,basically Rice onward.

    • எந்தக் காலத்தில் பார்ப்பன பாசிச கும்பல் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறார்கள்? உட்கார்ந்து கொண்டே நெய்யும் …..ய்யுமாக தின்று கொழுத்த கும்பல் தானே! ரிக்கு வேதத்தில் எழுதியுள்ளபடி மாடு, குதிரை. அதன் கன்றுகளையும் குட்டிகளையும் தின்று கொழுத்த கும்பல். அதனாலேயே மக்கள் இந்த பார்ப்பன கும்பலையும் அவர்களின் பார்ப்பன மதத்தையும் புறக்கணித்து புத்த மதத்தைத் தழுவினர் என்பது வரலாறு. விவசாயம் செய்ய மாடுகள் மிக அவசியம் என்பது உழைக்கும் மக்களுக்குத் தெர்யும். உழைக்காத கும்பலுக்கு எப்படித் தெரியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க