மார்ச் 2024-இல், மியூசிக் அகாடமி சார்பில் டி.எம்.கிருஷ்ணாவிற்கு அந்த ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதும் பல திசைகளிலிருந்தும் அதற்கு எதிராக கோப குரல்களும் கண்டன அறிவிப்புகளும் குவிந்தன. இன்னும் ஏன்? உயர்நீதிமன்றத்தில் அவருக்கு விருது வழங்கக் கூடாது என்று வழக்கும் தொடுக்கப்பட்டது. சில கர்நாடக இசைக் கலைஞர்களுக்கோ மியூசிக் அகாடமி மேடையிலேயே “கர்நாடக சங்கீதத்தின் பக்தி மற்றும் சனாதன தர்மத்தின் வேர்களை உறுதியாக பற்றி நிற்பேன்” என்று உறுதி ஏற்கும் அளவுக்கு கோபம் கரை புரண்டது.
ஆண்டுதோறும் கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த சங்கீத கலாநிதி விருது 1942-ஆம் ஆண்டு முதலாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு 2005-ஆம் ஆண்டில் “தி இந்து” குடும்பத்தினரால் நிறுவப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பண முடிப்புடன் கூடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருது என்கிற விருது அதனுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டது. தனது பாட்டியான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரால் வழங்கப்படும் பண முடிப்புடன் கூடிய விருது டி.எம்.கிருஷ்ணாவிற்கு வழங்கப்படுவதை எதிர்த்துதான் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரனான வி.சீனிவாசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
“தனது பாட்டியான எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி டி.எம்.கிருஷ்ணா பல தருணங்களில் அவதூறாக விமர்சனம் செய்திருக்கிறார், எனவே அவருக்கு விருது வழங்குவது தவறு. எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது பெயரில் எந்தவிதமான நினைவு மண்டபமோ அறக்கட்டளையோ தொடங்கக் கூடாது என்று உயில் எழுதி வைத்திருக்கிறார். ஆகையினால் டி.எம்.கிருஷ்ணாவிற்கு அந்த விருதை வழங்கக் கூடாது எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, இந்த உயிலை அடிப்படையாகக் கொண்டு அன்னாரது இறுதி விருப்பங்களை மதிக்கின்ற வகையில், இந்து குழுமம் கிருஷ்ணாவிற்கு இந்த விருது வழங்குவது தவறு என்று இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கினார். ஆயினும் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்ற அமர்வு டிசம்பர் 13 அன்று விதித்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் விருதை டி.எம்.கிருஷ்ணா பெற்றுக் கொண்டார்.
பிரபலமாக அறியப்படும் நாட்டுப்புற மற்றும் செவ்வியல், பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆசிரியருமான காளி வீரபத்திரன் இந்த பிரச்சனை குறித்து பேசுகையில், “புனிதம் என்கிற பெயரில் சாதிய மனப்பான்மையுடன் எங்கள் மீனவ சமூகத்திற்கு பாரம்பரியமாக மறுக்கப்பட்டு வந்த செவ்வியல் இசையை எங்களின் மீனவ கிராமமான கோவளத்திற்கு கொண்டு வந்தவர் டி.எம்.கிருஷ்ணா. அவர் போன்ற மனிதருக்கு இப்படி எல்லாம் நடக்கிறதே என்கிற அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளவே முடியவில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், “தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. எனினும் மென்மேலும் கடுமையாக உழைத்து பலவிதமான அழுத்தங்களையும் தடைகளையும் தாண்டித்தான் இன்று இந்த நிலையை நான் அடைந்திருக்கிறேன். என்னுடைய இந்த வளர்ச்சிக்கும் எனது கல்விக்கும் கிருஷ்ணா மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். அந்தத் தருணங்களில் நான் அதை அறிந்திருக்கவில்லை. என்னுடைய முதுநிலை பட்டப்படிப்புக்கான கட்டணம் முழுவதையும் அவர்தான் செலுத்தினார். வெறுமனே பண உதவி என்பது மட்டுமல்ல என்னுடைய மூத்த சகோதரனாகவும் வழிகாட்டியாகவும் இருந்து கலைகளைப் பற்றி பல்வேறு விஷயங்களை எனக்குக் கற்பித்திருக்கிறார்” என்று கிருஷ்ணா குறித்து பெருமிதப்படுகிறார் காளி.
மேலும், “இதே மியூசிக் அகாடமியில் நான் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்திய போது, தான் பெருமகிழ்ச்சி அடைந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் கிருஷ்ணா. என்னைப் போன்றவர்களை இந்த செவ்வியல் கலைகளில் வளர்த்து விடும் அவருடைய செயல்பாடுகள்தான் அவர் இப்போது சந்திக்கும் எதிர்ப்புகளுக்கு பின்னால் உள்ள முக்கியமான காரணமாகும்” என்று காளி வீரபத்திரன் கூறுகிறார்.
சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசுவதும் எழுதுவதும் தனது கோபத்தை வெளிப்படுத்துவதும் பின்னர் அவற்றுக்காக பல்வேறு வழிகளில் வந்துசேரும் எதிர்ப்புகளை எதிர்கொள்வதும் டி.எம்.கிருஷ்ணாவை பொறுத்தவரை அதுவே அவரது வாழ்க்கைமுறையாக மாறிப்போனது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கர்நாடக இசைத்துறையில் பிராமணர்களின் ஆதிக்கம் இருந்து வருவதைப் பொது வெளியில் எதிர்த்து வருகிறார் டி.எம்.கிருஷ்ணா.
தான் ஒரு பிராமணக் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் தனக்கு தனிவகை சலுகைகள் வழங்கப்படுகின்றன என ஏற்றுக் கொள்ளுகின்ற அதே சமயம் அதை எப்போதும் ஒரு பொருட்டாக கருதாமல் ஒதுக்கித் தள்ளி வந்திருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணா.
டி.எம்.கிருஷ்ணா தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கிட முற்படும்போது, நமது பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் என்பனவற்றைப் பற்றி அக்கறைப்படுகிறார். அவை பற்றி விமர்சனப்பூர்வமாக பொதுவெளியில் பேசுகிறார், எழுதுகிறார். கர்நாடக சங்கீதம் என்பது பிராமணர்களால் மேலாதிக்கம் செய்யப்படும் ஒரு தனி உலகமாகவும் அத்துடன் பிற எந்த சாதி மதங்களை சேர்ந்தவர்களையும் நெருங்க விடாமலும் ஆணாதிக்கத்தின் கீழும் இறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என்று சாடுகிறார்.
அவரது புத்தகங்களிலும், வெளியீட்டு விழாக்களிலும், இன்னும் அவருக்கு 2016ல் வழங்கப்பட்ட மாகசேசே விருதுவிழாவின் ஏற்புரையின் போதும் கர்நாடக சங்கீதம் போல் அல்லாமல் மற்ற பிற கலைகளை எல்லாம் கீழாக நடத்துவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருது பிரச்சினை
பல கர்நாடக இசைக் கலைஞர்கள், பெரும்பாலும் பிராமணர்கள் தங்களை ஒரு கோஷ்டியாக அமைத்துக் கொண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருதை கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பை கிளப்பினர். அவர்கள் முன்வைத்த புகார்களில் ஒன்று கிருஷ்ணா பல்வேறு தருணங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து இழிவுபடுத்தி விமர்சித்து பேசி இருக்கிறார் என்பது. எனவே எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான அந்த விருதை கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்றனர்.
அதற்கு ஆதாரமாக 2015-இல் கேரவன் ஆங்கில இதழ் வெளியிட்ட கிருஷ்ணா எழுதிய எம்.எஸ்-ஐ புரிந்துகொள்வோம் (M.S. Understood) என்கிற கட்டுரையை எடுத்துக்காட்டினர். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூறாவது ஆண்டில் அவரது வாழ்க்கையைப் பற்றி “தி வயர்” இணையதளத்தில் டி.எம்.கிருஷ்ணா விளக்கிப் பேசியதைக் கொண்டுவந்து கொட்டினர். அடுத்து டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று நூலின் தெலுங்கு பதிப்பு ஐதராபாத்தில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் கிருஷ்ணா பேசியதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
இவை அனைத்திலுமே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் திறமைகளை புகழ்ந்து பேசிய கிருஷ்ணா, எம்.எஸ்-இன் வாழ்க்கையில் அவரது பிறந்த சாதி ஏற்படுத்திய தாக்கத்தையும் ஆதங்கத்துடன் எடுத்துக் கூறினார். அதுதான் இசை உலகிலும் அதற்கு வெளியிலும் இருக்கும் பிராமணர்களை கிருஷ்ணாவிற்கு எதிராக வினையாற்ற தூண்டியுள்ளது. குறிப்பாக எம்.எஸ். தனது தேவதாசி சாதியின் வேர்களில் இருந்து துண்டித்துக் கொண்டு, தன்னை பிராமணமயப்படுத்திக் கொண்டார். இல்லையென்றால் அவருக்கு இப்போது கிடைத்திருக்கும் புகழ் கிடைத்திருக்குமா என்பதை கேள்வியெழுப்பினார்.
“எம்.எஸ். அவரது முந்தைய கால, அதாவது தொடக்க கால இசை பதிவுகளில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அவர் தன்னை சமகால இளம் இசைக் கலைஞராக, தாராளவாதச் (Liberal) சிந்தனை கொண்டவராக, ஒரு பெண்ணியவாதியாக (Feminist) காட்டிக்கொண்டார். அனைவரும் அறிந்திருக்கின்றவாறு தேவதாசி இசைப் பின்புலத்தை வரித்துக் கொண்டவர்களிடம் இந்த வகையான நடத்தையைக் (Attitude) காண முடியும்” என்று “கேரவன்” இதழில் கிருஷ்ணா எழுதினார். பின்னர் 1940-இல் திரைப்படத் தயாரிப்பாளரானா டி.சதாசிவம் என்கிற பிராமணரை மணந்து கொண்ட பின் எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் எல்லாமும் மாறத் தொடங்கின. அதன் பிறகு நடந்தவைகள்தான் உண்மையான மாற்றங்கள், அல்லது மனோ ரீதியில் அவர் மறு ஒழுங்கமைப்பு செய்யப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் ஒரு வளர்ப்பு பிராணியை போல் அவர்களுக்கு ஏற்ற வகையில் பழக்கப்படுத்தப்பட்டார் (Tamed)”
“சுதந்திர மனப்பாங்கு கொண்ட ஒரு இளம் பெண்ணாய் இருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, படித்த உயர் வகுப்பினரிடையே தூய்மை மற்றும் பக்தியின் உருவகமாக பார்க்கப்படும் அளவிற்கு ஒரு சிறந்த பிராமணக் குடும்ப தலைவியாக மாற வேண்டி இருந்தது” என்று எழுதியிருந்தார் கிருஷ்ணா. பின்னர் ஒரு ஆண்டுக்குப் பிறகு எம்.எஸ்-இன் நூற்றாண்டு வந்தபோது “தி வயர்” இணையதளத்தில் “எம்.எஸ். சுப்புலட்சுமியை தவறாக நினைவுகூறும் அக்கண்ணோட்டத்திற்கு நாம் பலியாகி விடக்கூடாது” என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதி இருந்தார்.
“மிகச்சிறந்த பிராமண குடும்ப தலைவியாக எம்.எஸ்-இன் உருமாற்றம் கூறுவதென்ன? அவரின் இந்த உருமாற்றத்தை நான் விமர்சிக்கிறேன்? ஆனால் அவருக்கு அதை விட்டால் வேறு வழி இருந்ததா? அவர் தனக்கு சுயமரியாதையையும், கௌரவத்தையும் விரும்பினார், அவை அவருக்குக் கிடைத்தன. ஆனால் அவற்றுக்காக அவர் தனது கடந்த கால வாழ்க்கை நினைவுகளை அவரது சிந்தனையிலிருந்து அழித்துவிட வேண்டி இருந்தது” என்று எழுதினார் கிருஷ்ணா.
2017-ஆம் ஆண்டு ஜார்ஜ் எழுதிய எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வரையறுக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு (M. S. Subbulakshmi: A Definitive Biography) என்கிற நூலின் தெலுங்கு மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டின் போது கிருஷ்ணா பேசிய பேச்சு புயலை கிளப்பியது. “எம்.எஸ்-இன் இந்த அழகிய குரல் வேறொரு உயர்சாதி அல்லாத, கருப்பு நிறத்திலான பெண்ணிடமிருந்து வந்திருந்தால் அதை இப்போது போல நாம் கொண்டாடி இருப்போமா? எனது இந்தக் கேள்விக்கு யாரும் விடை அளிக்க வேண்டியதில்லை. நாம் எல்லோரும் சற்று அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்றார்.
இந்த மூன்று தருணங்களும் (தி கேரவான், தி வயர், ஹைதராபாத் பேச்சு) கிருஷ்ணாவிற்கு விருது வழங்கியதற்கு எதிரான வழக்கில் எம்.எஸ்-இன் பேரன் வி.சீனிவாசன் குறிப்பிட்டிருப்பவை ஆகும்.
டி.எம்.கிருஷ்ணாவின் பரிணாம வளர்ச்சி :
டி.எம். கிருஷ்ணா பிறந்து வளர்ந்த குடும்பம் மிகவும் முன்னேறிய நிலையில் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. டி.டி.கே. என்று பரவலாக அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரும் தொழிலதிபருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரியைக் கொண்டிருந்த குடும்பம். டி.டி.கிருஷ்ணமாச்சாரி டி.எம்.கிருஷ்ணாவின் அம்மாவினுடைய மாமா, அதாவது கிருஷ்ணாவுக்கு தாய் வழி தாத்தா ஆவார். மேலும் டி.டி. கிருஷ்ணமாச்சாரி மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2007-ஆம் ஆண்டில் கிருஷ்ணாவின் தாயாரும் தாயாரின் சகோதரரும் சேர்ந்து உரிமைகளின்றி ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு என்று ஒரு பள்ளியை தொடங்கி நடத்தினார்கள். சென்னையில் ஜே.கே. அறக்கட்டளை நடத்தும் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் பயின்ற மாணவர்தான் டி.எம்.கிருஷ்ணா. அவர் விரும்பி இருந்தால் தன்னுடைய செல்வாக்கும் கௌரவமும் கொண்ட வாழ்க்கையை அப்படியே அதேவழியில் தொடர்ந்திருக்க முடியும். தம் கண்ணெதிரில் நடக்கும் ஒரு பகுதி மக்களின் மீது அமைப்பு ரீதியாக நடத்தப்படுகின்ற ஒடுக்குமுறைகளின்பால் பாராமுகம் காட்டியிருக்க முடியும்.
ஆனால், தனக்கு அதனால் ஏற்படக்கூடிய மோசமான பின் விளைவுகளை பற்றி எல்லாம் தெரிந்திருந்த போதிலும் அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்த மக்களுக்காக பேசத் துணிந்தார் டி.எம்.கிருஷ்ணா. அவை பற்றிய தன்னுடைய அக்கறையையும் ஆதங்கத்தையும் 2013-இல் அவர் வெளியிட்ட ஒரு தெற்கத்திய இசை – கர்நாடக கதை (A Southern Music – Carnatic Story) என்கிற தன்னுடைய நூலில் வெளிப்படுத்தினார்.
மேலும் அவர் தனது இசை ஆராய்ச்சியில் இன்னும் ஆழமாக இறங்கியபோது, அதாவது இசை என்றால் என்ன என்கிற கேள்வியை எழுப்பி ஆராயும் வேளையில், அதேபோன்ற கேள்விகளை சாதி, மதம், பாலினம் என்பவை குறித்தும் எழுப்பி விடை காண முயன்றார்.
2015-இல் நாட்டின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்ச்சி என்று அறியப்படுகின்ற மெட்ராஸ் சங்கீத சீசனில் இனிமேல் எந்த சபாக்களிலும் அதாவது செவ்வியல் இசை மற்றும் நடன கலைகளை வளர்க்கும் நிறுவனங்களில் பாடப் போவதில்லை என்று அறிவிப்பு செய்தார். இந்த முடிவு திடீரென்று ஏற்பட்டதோ அல்லது குறிப்பிட்ட எந்த நடவடிக்கையாலும் தூண்டப்பட்டதோ அல்ல என்று செய்தித்தாள்களில் நடுப்பக்க கட்டுரைகளில் எழுதினார். ஒரு இசைக் கலைஞனாக தன்னை வளர்த்ததும் இதே இசை விழாக்கள்தான் என்றாலும் இன்றைய நிலையில் இந்த சங்கீத சீசன் என்பது அதில் இசையே மறைந்துவிட்ட ஒரு புதிய கட்டத்தை எட்டிவிட்டது என்று கூறினார்.
ஒரு சிலர் மட்டுமே உயர்ந்த புகழை அடைவதும் (இவரும் அதில் ஒருவரே) எத்தனையோ கலைஞர்கள் அடையாளம் தெரியாமல் காணாமல் போவதும், புறந்தள்ளப்படுவதும் கண்டு மிகுந்த வருத்தம் அடைந்தார். இந்த சங்கீத சீசன் என்.ஆர்.ஐ-களால் இயக்கப்படுவதாகவும் அழகியலின் பன்முகத்தன்மையை இழந்த ஒன்றாகவும் மாறிப் போய்விட்டது என்றார். பணம் கொடுத்து செய்தித்தாள்களில் மதிப்புரைகள் எழுதப்படும் நிலைக்கு தாழ்ந்து போய்விட்டது எனினும் எடுத்துக்காட்டுவதற்கு ஆதாரம் எதுவும் என்னிடத்தில் இல்லை என்கிறார்.
கர்நாடக இசையை பெரும்பான்மை சமூகம் அணுகும்படி கொண்டு செல்லப்படும்போது அது தடைப் படுத்தப்படுகிறது என்று தனது நெடுநாளைய கருத்தை மீண்டும் எழுதினார். மேலும் போதிய ஊதியம் வழங்கப்படாத துணை கலைஞர்களின் நிலைமை குறித்து பேசியும் எழுதியும் பொதுவெளிக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு அவருக்கு கச்சேரிகள் குறையத் தொடங்கின. ஒப்பந்தமானவையும் தடைபட்டு நின்று போயின. ஊடகங்களின் தூண்டுதலால் ஏற்பாட்டாளர்களிடம் தவறான கருத்துக்களை பரப்பியதால் 2018-ஆம் ஆண்டில் இரண்டு முறை இவ்வாறு ஒப்பந்தமான கச்சேரிகள் நடைபெறாமல் நின்று போயின.
முதல் முறை அமெரிக்காவில் மெர்ரி லேண்டில் ஒரு கோயில் திருவிழாவில் அவரது கச்சேரி ரத்து செய்யப்பட்டது. அடுத்தது இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (Airport Authority of India) மற்றும் ஸ்பிக் மாக்கே (SPIC MACAY) நிறுவனத்துடன் சேர்ந்து டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு முறையிலும் கிருஷ்ணா மேற்கொண்ட மாற்று முயற்சிகளால் வேறு வகையில் நிறைவேறியது. அமெரிக்காவின் இசை ஆர்வலர்கள் வாஷிங்டனில் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்து கொடுத்தனர். டெல்லியில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தந்தார்.
அப்போது, “ஏற்கெனவே கிறிஸ்தவ பிரச்சார இசை பாடல்களை பாடுகிறார்கள் என்று இந்துத்துவ சக்திகளால் விமர்சிக்கப்பட்டு வந்த நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஓ.எஸ்.அருண் ஆகியோரை நான் ஆதரித்து நின்றதின் காரணமாகத்தான் 2018-இல் அமெரிக்காவின் மெரிலாண்ட் கச்சேரி நிறுத்தப்பட்டது. ஆகப்பெரும்பான்மையான கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் இந்து கடவுளரைப் புகழ்ந்து பாடுபவையாகவே அமைந்திருக்கின்றன. எனவே அவர்களுடைய விமர்சனங்களுக்கு எதிராக நான் மாதந்தோறும் இயேசு கிறிஸ்துவை பற்றியும் அல்லாஹ்வைப் பற்றியும் ஒரு பாடல் பாடி வெளியிடப் போகிறேன்” என்று அறிவித்தார் கிருஷ்ணா.
கிருஷ்ணாவுக்கு எதிரான நடவடிக்கைகளானது, கச்சேரிகள் நிறுத்தப்பட்டதுடன் முடிந்து விடவில்லை. 2020-ஆம் ஆண்டில் கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்: செபாஸ்டியன் குடும்பக் கலை” (Sebastian and Sons: A Brief History of Mrdangam Makers) புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்னை கலாட்ஷேத்ரா அறக்கட்டளை அளித்திருந்த அரங்கு அனுமதியை திடீரென்று ரத்து செய்துவிட்டது. இந்து பத்திரிகையில் இந்த புத்தகம் பற்றிய நூல் அறிமுக கட்டுரை வெளிவந்தது. அதில், “பிராமணர்கள் பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள். ஆனால் அவர்கள் ரசிக்கும் கர்நாடக சங்கீதத்துக்கு அடி நாதமாய் விளங்கும் தாள வாத்தியமான மிருதங்கம் பசுவின் தோலினால்தான் செய்யப்படுகிறது” என்று எழுதி இருந்ததை பார்த்த பின்னர்தான் கலாட்ஷேத்ரா அந்த நூல் வெளியீட்டு விழாவுக்கான அரங்கு அனுமதியை ரத்து செய்தது.
மிருதங்கத்தை உருவாக்குபவர்களான, ஆனால் பொதுவெளியில் பெரிதும் அறியப்படாத தஞ்சையைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள் பற்றி அந்நூல் ஆய்வு செய்கிறது. அந்த தாள வாத்திய கருவி பசுவின் தோலினால்தான் செய்யப்படுகிறது என்பதை அந்தக் கருவியை வாசிக்கும் சலுகை பெற்ற உயர்ந்த பிராமண சாதி கலைஞர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அந்த கலாட்சேத்ராவில் நடன ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்தபோது அந்நிறுவனம் அப்பிரச்சினையை எவ்வாறு கையாண்டது என்பதை கண்டித்து (அந்த ஆசிரியரை பாதுகாத்து நின்றது) அதன் நிர்வாகத் தலைவருக்கு கிருஷ்ணா ஒரு கடிதம் அனுப்பினார். அதில் “பாலியல் புகார் தெரிவிப்பவர்கள் இளம் மாணவர்களின்பால் அக்கறையும் கரிசனமும் காட்டாத வரையில் எந்த வகையான விசாரணையும் ஒரு பலனையும் தரப்போவதில்லை” என்று எழுதி இருந்தார்.
இதற்கு முன்னரும் 2018-இல் “மீ டூ” (Me Too) இயக்கத்தின் போது பாலியல் புகார்களில் பல பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களின் பெயர்கள் வெளிவந்த போது அவர்களைத் தாங்கி நின்ற சபாக்களுக்கு எதிராக தனது கண்டனங்களை வெளியிட்டார். பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கமே நின்றார். பல பாடகர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்தி திரையுலகப் பாடகி சின்மயி ஸ்ரீ பதாவின் பதிவை கிருஷ்ணா மற்றவர்களுக்கும் பகிர்ந்தார். (சினமயி பதிவிட்ட பட்டியல், பி.எம்.சுந்தரம், பாப்பு வேணுகோபால் ராவ், சுனில் கோத்தாரி, லோகநாத் சர்மா, சசிகிரண், ரவி கிரண் என்று நீள்கிறது. என்னுடைய இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது என்று கமெண்ட் செய்திருந்தார் சின்மயி.)
அப்போது “கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டிய உலகில் பல ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்களை புகார்களை நாங்கள் கேள்வியுற்று வருகிறோம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இளம் பெண் தனது பயங்கரமான அனுபவங்களை முகநூலில் விவரித்து இருந்தார். எனக்கு தெளிவாக நினைவு இருக்கிறது. நாம் அப்பெண்ணை புறக்கணித்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன். ஆணாதிக்க கட்டமைப்புகள் மற்றும் நமது சொந்தப் பழமைவாதம் ஆகியவை அந்தப் பெண்ணின் புகாரை அற்பத்தனமானது என்றாக்கிவிட்டது. நாம் அனைவரும் நமது மௌனத்தின் மூலம் குற்றம் விளைத்தவனுக்கு உடந்தையாக இருந்திருக்கிறோம்” என்று எழுதி தன் கோபத்தை வெளியிட்டார் கிருஷ்ணா.
டி. எம்.கிருஷ்ணாவைப் பற்றி சின்மையி ஸ்ரீபதா கூறுகையில், “சபாக்களில் பேசும்போது எப்பொழுதுமே கிருஷ்ணா பெண்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞர்களின் ஒரு குழுவினாலும் மற்ற பலராலும் அவர் எப்போதும் தூற்றப்பட்டார். ஆனாலும் மியூசிக் அகாடமி இப்பிரச்சனையில் முன்வந்து செயலாற்றியது. மீ-டூ இயக்கத்தில் புகார் கூறப்பட்டிருந்த எந்த இசைக் கலைஞரையும் அந்த ஆண்டு சபாவில் பாட அழைக்கவில்லை. ஆனால் வேறு எந்த சபாக்களும் அது போன்ற நிலையை மேற்கொள்ளாததனால் அடுத்த ஆண்டிலிருந்து எங்கும் எல்லாம் பழையது போல் வழக்கமாக நடக்க தொடங்கிவிட்டன”
“கர்நாடக இசை வழியில் நிலவும் பாசாங்குத்தனத்தை நான் சில காலமாகவே அம்பலப்படுத்தி வருகிறேன். இதுபோன்ற பாலியல் புகார் உள்ளவர்களையும் குடித்துவிட்டு மேடைக்கு பாட வருபவர்களையும் சபாக்கள் ஏற்றுக் கொள்ளுகின்றன. ஆனால் டி எம் கிருஷ்ணா அப்படிப்பட்டவர் அல்ல” என்று பதிவிட்டார்.
அப்போது அந்தப் புகார்களில் வெளிவந்த பெயர்களில் ஒன்றுதான் பிரபல கர்நாடக சங்கீத கலைஞரும் வீணை கலைஞருமான ரவி கிரண். அவரிடம் இசை பயிற்சி பெற்ற முன்னாள் மாணவிகள் பலர் அவர் தங்களை பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் அளித்ததுடன் அதன் பிறகு பாடல் பயிற்சியில் இருந்தும் விலகிக் கொண்டனர். ஆனால் ரவி கிரண் இந்த புகார்களை மறுத்து “அது ஒரு ‘தந்தையின் வாஞ்சையுடன் கூடியது’ ஆனால் அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டார்கள்” என்று கூறினார்.
2024-இல் மியூசிக் அகாடமி டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவித்த உடனேயே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2017-இல் தனக்கு வழங்கப்பட்ட அந்த விருதை உடனே திருப்பித் தந்துவிட்டார் மேற்சொன்ன ரவி கிரண்.
மீனவ பகுதிகளுக்குள் கர்நாடக இசை
“கிருஷ்ணா அப்படியே இருக்க, அவர்களால் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் கர்நாடக இசையை அது வரையிலும் அதை நெருங்க முடியாது இருந்த மக்களிடம் கொண்டு சென்ற ஒரு வழி தவறிப்போன மனிதர் அவர். எல்லா மக்களும் அப்படி சபாக்களுக்குச் சென்று இசைக்கச்சேரிகளை கண்டு ரசிக்க முடியாது”. கிருஷ்ணாவைப் பற்றி இப்படி கூறுகிறார் நடன கலைஞர் காளி வீரபத்திரன்.
டி.எம்.கிருஷ்ணா சபாக்களில் பாடுவதை புறக்கணித்ததிலிருந்து அவரது நண்பரும் சூழலியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான நித்தியானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து சென்னையில் உள்ள உரூர் ஓல்காட் குப்பம் என்னும் மீனவ கிராமங்களிலேயே இசைத்திருவிழாக்களை நடத்துகிறார். கர்நாடக இசையிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம். அவ்விருவரும் என்னுடன் எண்ணூர் சிற்றோடை (Ennore creek) பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் மீது மக்களின், அரசின் கவனத்தை கவர்வதற்காக கிருஷ்ணா பாடிய பொறம்போக்கு என்ற பாடல் இணையத்தில் வைரலானது.
“எங்கள் உரூர் குப்பம் கிராமத்திற்கு வந்தபோது நான் அவ்விருவரையும் சந்தித்தேன். எங்களுடன் சேர்ந்து மக்களை சந்தித்த அவர்கள் இங்கு இசை திருவிழா நடத்துவதை பற்றி பேசினர். அப்படிப்பட்ட இசை திருவிழாக்கள் இங்கு நடத்துவது உண்மையிலேயே எங்கள் கிராமத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் ஏற்கெனவே எங்கள் மக்களை பொத்தாம் பொதுவாக ரவுடிகள் என்று கூறும் அவப்பெயரை மாற்ற அது உதவும் என்பதுடன், எங்கள் மக்களுக்கு புதிய இசையையும் நடனத்தையும் அறிமுகப்படுத்தும்” என்கிறார் அக்கிராமத்தின் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மீனவரான சரவணன். இக்கிராமத்தின் பெரும்பாலான கிராமத்து மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களே ஆவர்.
இந்த நான்கு ஆண்டுகளில் இந்த இசை திருவிழா எங்கள் கிராமத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார் சரவணன். கர்நாடக இசையும் நாட்டியமும் இனியும் எங்கள் மக்களுக்கு அணுக முடியாத ஒன்றல்ல. இப்போது செவ்வியல் இசைக் கலைஞர்களும் எங்களது பாரம்பரிய மீனவ நாட்டுபுற இசைக் கலைஞர்களுடன் ஒருசேர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஒரு உண்மையான கலைஞன் தனது கலை வடிவத்தை மதிப்பதைப் போன்றே பிற கலை வடிவங்களுக்கும் மதிப்பளிப்பான். அப்படிப்பட்ட ஒரு உண்மையான கலைஞர் டி.எம்.கிருஷ்ணா என்று கூறுகிறார் சரவணன்.
பாரம்பரிய நிகழ்த்துக்கலையான கட்டைக்கூத்து பெண் கலைஞரான திலகவதி பழனி இப்போது கிருஷ்ணாவின் தொடர்புக்கு வந்ததிலிருந்து அவரது உதவியால் அரசின் உதவித்தொகை ஒன்றையும் பெற்றிருக்கிறார். கிருஷ்ணாவிடம் ஏராளமான விஷயங்களைப் பற்றி விவாதித்தார். “கர்நாடக இசைக் கலையை எங்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்ததற்காக நான் கிருஷ்ணாவுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எம் மக்கள் எல்லோரும் சபா கச்சேரிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடையாது. அவரே இங்கு வந்து நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார். அவர் கர்நாடக செவ்வியல் இசையை உள்ளூர் மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரை ஒரு உயர்சாதி வகுப்பை சேர்ந்தவராக நான் உணரவில்லை. என் அருகில் இருக்கும் எனது ஒன்றுவிட்ட சகோதரரை போன்ற உணர்வே மேலிடுகிறது” என்கிறார் திலகவதி பழனி.
கிருஷ்ணாவின் செபஸ்டியனும் அவரது வாரிசுகளும் என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கும் மிருதங்கம் தயாரிப்பவர்களில் ஒருவரான குப்புசாமி ஆசாரி, கிருஷ்ணா தன்னை தனிச்சிறப்பானவர் (Specialist) என்று அழைப்பதாக பெருமைப்படுகிறார். இவர் பல ஆண்டுகளாக மிருதங்கம் மற்றும் பல தோல் வாத்தியங்களுக்கான ஷெல்களை (கூடு) தயாரித்து வருகிறார். அவருடைய தந்தை வடிவேலுதான் அவருக்கு இந்த தொழிலை பழக்கிக் கொடுத்தார். இப்போது மிருதங்கம், தவில், செண்டை, பம்பை போன்ற பல தாள வாத்தியங்களுக்கான மரத்தாலான ஷெல்களை தயாரித்து வருகிறார்.
“அவர் எங்களது குடும்பத்தையும் எங்கள் தொழிலையும் குறித்து புத்தகத்தில் எழுதி இருக்கிறார். எங்கள் உற்பத்திச் சாலையை நேரில் வந்து பார்த்தார். அவர் மிகச்சிறந்த பாடகர். அவருடன் சேர்ந்து பல இடங்களுக்குப் பயணம் செய்தேன்” என்று பெருமையுடன் கூறுகிறார் குப்புசாமி ஆசாரி.
நன்றி: நியூஸ்லாண்டரி
தமிழாக்கம்: ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram