கேள்வி : //இந்த நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டம் தோல்வியுற்றதாகக் கொண்டாலும், நாடு தழுவிய ஒரு கட்சி அல்லது அமைப்பு இல்லாமல் மாநில அளவில் எப்படி நாடு முழுவதும் மக்களை ஒன்று திரட்டுவது?//

– பெ. கண்ணன்

ன்புள்ள கண்ணன்,

நாடு தழுவிய புரட்சிகரக் கட்சி இல்லாமல் மாநில அளவில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி நாடு முழுவதும் மக்களை ஒன்று திரட்டுவது கடினம்தான். ஆனால் பிரச்சினைகள் என்ற அளவில் அவ்வப்போது நாடு முழுவதும் உள்ள அரசியல் முன்னணியாளர்கள் உரையாடுகிறார்கள்.

தமிழகத்தில் ஐ.ஐ.டி சென்னை வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டபோது, சூரஜ் எனும் மாணவர் தாக்கப்பட்ட போது, “கோ பேக் மோடி” எனும் ஹேஷ்டாக் வைரலான போது இப்படி சில தருணங்களில் குறைந்த பட்சம் இணையத்திலாவது அந்த சங்கமம் நடந்திருக்கிறது. தென்னிந்தியாவைச் சேர்ந்த டிவிட்டர் வாசிகள் பலர் திராவிடஸ்தான் தேவை எழுந்திருப்பதாக கூட அப்போது பேசினர். மோடி – பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் தமிழகத்தை வாழ்த்தியும் பிற மாநிலத்தவர் பேசியிருக்கின்றனர்.

kovan-arrestedஅதே போன்று பாடகர் கோவன் கைது செய்யப்பட்ட போதும் இந்திய அளவில் எதிர்ப்பு உருவானது, பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததும் உண்மை. இப்படி நாடு தழுவிய அளவில் இந்துத்துவ எதிர்ப்பிற்கு ஒரு ஐக்கியம் உள்ளது. அந்த ஐக்கியத்தின்படி ஒத்த பார்வை கொண்ட மாற்று அமைப்புகள் ஒரு முன்னணியாக சேர்ந்து பாஜகவை எதிர்த்து ஒரு மாற்றை இந்திய அளவில் செயல்படுத்துவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. பாசிச சூழல் நெருங்கி வரும் இந்நேரம் இத்தகைய இணைவு காலத்தின் கட்டாயம்.

இதன் போக்கில் ஒரு புரட்சிகரக் கட்சி தோன்றுவதற்கும் அது இந்திய அளவில் செயல்படுவதற்கும் உகந்த சூழல் வரலாம். அல்லது இந்திய அளவில் இல்லாமல் சில மாநிலங்களிலாவது செயல்படும் சூழல் வரலாம். காத்திருப்போம். மற்றபடி சித்தாந்த ரீதியாக ஐக்கியம், புரட்சியை எவ்வழியில் அடைய முடியும் என்ற தெளிவு ஆகியவற்றில் இந்தியா முழுவதும் உள்ள புரட்சிகர அரசியல் பேசுவோரிடம் ஒரு ஒற்றுமை உருவாவதும் முக்கியம்.

♦ ♦ ♦

கேள்வி : //நரேந்திர மோடி அவர்களே தமிழ் சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி என்று கூறுகிறார். தற்போது சமஸ்கிருத மேம்பாட்டிற்கு18 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்திய அரசு மேலும் ஒரு தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடங்க நிதித்துறையும் நிதி ஆயோக்கும் ஒப்புதல் தருகிறது.

ஆனால், சமஸ்கிருதத்தை மூத்த மொழியாகவும், உலக அளவில்10 கோடி மக்கள் பேசும் மொழிக்கு ஒரு பல்கலைக் கழகம் கூட மத்திய அரசு ஏற்படுத்த அக்கறை காட்டவில்லை. இதை ஏன் தமிழகத் தலைவர்கள் கண்டிக்கவில்லை?//

– ஆ.ரா.அமைதி ஆனந்தம்

ன்புள்ள நண்பருக்கு,

இந்தி பேசும் மாநிலங்களான பீகார், சட்டீஸ்கர், ஹரியாணா, ஹிமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம், தில்லி யூனியன் பிரதேசம் ஆகியவையோடு குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்துத்துவ பிற்போக்குத்தனம் வலுவாக இருக்கிறது. இவற்றை பசுப்படுகை மாநிலங்கள் என்றும் அழைக்கலாம். இம்மாநிலங்களில் பெரும்பாலானவற்றில் பாஜக-வே ஆள்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையிடமான நாக்பூர், மராட்டியத்தில்தான் இருக்கிறது.

இம்மாநிலங்களில் சங்க பரிவாரம் வைத்திருக்கும் அத்தனை திட்டங்களுக்கும் பெரு வரவேற்பு இருக்கிறது. பசுப்புனிதம், மாட்டுக்கறிக்கு தடை, மதமாற்றத் தடை, லவ் ஜிகாத், முசுலீம் எதிர்ப்பு, தலித் ஒடுக்குமுறை, கிறித்தவ எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு, ராமன் மீதான வழிபாடு என்று நிறைய ஆர்.எஸ்.எஸ் அஜண்டாக்கள் இங்கே பெரும் வரவேற்புடன் இருக்கின்றன. இம்மாநிலங்களுடன் இப்போது மேற்கு வங்கம், ஒரிசாவும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வருகின்றன. அங்கேயும் சங்க பரிவாரத்தின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.

இம்மாநிலங்களில் இருக்கும் பாஜக-வின் வாக்கு வங்கியோடு தமிழகத்தை ஒப்பிட்டால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுதான்.

Tamil - Sanskritஎனவே இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, பார்ப்பனயமாக்கம், பள்ளிகளில் யோக வழிபாடு, கல்வி – வரலாற்றில் இந்துத்துவ திணிப்பு அனைத்தும் இம்மாநிலங்களில் வரவேற்பு பெற்று பாஜக-வின் அரசியல் செல்வாக்கை உயர்த்தும். சமீப காலமாக பொருளாதார நெருக்கடி இந்தியாவில் பரவி வரும் போது மத்திய அரசாங்கத்தின் பார்வை இத்தகைய பண்பாட்டு பிற்போக்குத்தனங்களின் பால் செல்வது அவர்களுக்கு திசை திருப்பவும் வசதியாக இருக்கிறது. சில மாநிலங்களில் காங்கிரசு ஆட்சியில் இருந்தாலும் அவர்களும் மிதவாத இந்துத்துவாவையே தமது அரசியல் செல்நெறியாக கொண்டிருக்கின்றனர். தற்போது ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனுசிங்வி, சசிதரூர் ஆகிய காங்கிரசு தலைவர்கள் மோடியிடம் சரணாகதியே அடைந்திருக்கின்றனர்.

ஆக வட மாநிலங்களில் தமது வாங்கு வங்கியை தக்க வைக்க பாஜக இப்படி நடந்து கொள்வது இயல்பான ஒன்று. அதாவது தமிழகத்தையும், தமிழையும் புறக்கணிப்பதற்கு இப்படி ஒரு அடிப்படை இருக்கிறது. மற்றபடி சமஸகிருதத்தை விட தமிழ் மூத்த மொழி என்று மோடி பேசவில்லை. பொதுவில் தமிழ் மூத்த மொழி என்றுதான் பேசியிருக்கிறார். தமிழகத்தில் அ.தி.மு.க தவிர்த்து மற்ற வாக்கரசியல் கட்சிகள் இந்துத்துவ கொள்கைகளை அவ்வப்போது விமரிசிக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் இக்கட்சிகள் பாஜக-வை திட்டம் சார்ந்து எதிர்க்கின்றனவே அன்றி பாஜக – ஆர்.எஸ்.எஸ் -ஐ ஒட்டு மொத்தமாக கொள்கை சார்ந்து போதுமான அளவு விமரிசிப்பதில்லை. வாக்கரசியலுக்கு வெளியே உள்ள அமைப்புகள், ஜனநாயக சக்திகள்தான் கொள்கை சார்ந்து எதிர்க்கின்றனர். அந்த அழுத்தம் அதிகமாகும் போது பெரிய கட்சிகளும் எதிர்க்கும்.

தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் ஈராயிரம் ஆண்டிற்கு மேலாக பகை உள்ளது. இந்தப் போரில் சமஸ்கிருதம் மக்கள் மொழியாக உருவெடுக்கவில்லை. தமிழ் இன்றும் மக்களிடையே நிலைத்து இருக்கிறது. இது இந்துத்துவவாதிகளின் கண்ணை உறுத்துவது இயல்பான ஒன்றுதான். நாம் போரைத் தொடர்வோம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க