மக்கள் அதிகாரம் தோழர்களின்
கருத்துரிமையை மறுக்கும்
பா.ஜ.க, இந்து முன்னணி காவி குண்டர்கள்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!
மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, “வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்!”, “கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்” என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரங்கள், அரங்கக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் வாசல் கடைவீதிகளில் 15-09-23 மதியம் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக பிரசுரம் கொடுக்கப்பட்டு பொது மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதனை கண்ட சங்கி ஒருவன் மறைந்திருந்து தோழர்கள் அனைவரையும் புகைப்படம் எடுத்துச் சென்றான். அவ்வேளையில் சொல்லிவைத்தாற் போல் போலீஸ் வாகனம் வந்தது. பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நம் தோழர்களை அழைத்த காவல் ஆய்வாளர் யார் நீங்கள்? நீங்கள் இங்கு என்ன பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? பிரச்சாரம் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது என்று விசாரித்தார். இங்கு இது போன்ற எந்த பிரச்சாரமும் செய்யக்கூடாது என்று பேசிக் கொண்டிருந்த வேளையில், தோழர்களை சுற்றி வளைத்த 15-க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள் போலீசின் முன்னிலையிலேயே தோழர்களின் பையை பிடித்திழுத்தது, தோழர்களின் கையிலிருந்த பிரசுரங்களை பிடுங்கி கிழித்து போட்டதோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டி தோழரை தாக்கி ரௌடித்தனத்தில் ஈடுபட்டனர்.
படிக்க: சுரேஷ் சவாங்கே வெறுப்பு பேச்சு – காவி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்!
இவர்களிடமிருந்து தோழர்களை மீட்டு நெல்லை டவுன் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வந்த 30-க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிந்தால்தான் நாங்கள் செல்வோம். இல்லையென்றால் இங்கேயே தங்கி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போலீசை மிரட்டினர்.
அப்போது அங்கு வந்த பாஜகவின் முன்னாள் எஸ்சி/ எஸ்டி பிரிவு மாவட்ட செயலாளர் என்று அறியப்பட்ட முருகதாஸ் என்கிற சங்கியின் தலைமையில் ஒன்றுதிரண்டு, உங்களுடைய உயர் அதிகாரியை உடனே வர சொல்லுங்கள். இல்லையென்றால் கமலாலயத்திற்கும், அண்ணாமலைக்கும் போன் செய்ய வேண்டி வரும் என்று ஆய்வாளரையே மிரட்டினார்கள். எங்களது புகாருக்கு சி.எஸ்.ஆர் போட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஸ்டேசனை முற்றுகையிடுவோம் என்று கூறி பிரச்சனையில் ஈடுபட்டார்கள். இந்த சங்கி கும்பலின் மிரட்டலுக்கும், கட்டளைக்கும் போலீஸ் பணிந்தது. கருத்துரிமை அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் தோழர்களை தடுக்கும் போலீசு, அராஜகம் செய்யும் காவி குண்டர்களை கைது செய்யாமல் அவர்கள் சொல்படி பணிந்து போகிறது.
மேலும் அங்கிருந்த போலீஸ் ஒருவர், வேண்டாம் பிஜேபி என்று ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள், உங்கள் தரப்பை மட்டும் சொல்ல வேண்டியதுதானே என்று ‘ஜனநாயகம்’ பேசினார். இந்த போலியான ஜனநாயக அமைப்பை பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த ஆர்எஸ்எஸ் – பிஜேபி பாசிச கும்பலுக்கு, துளியளவும் ஜனநாயகம் இல்லாத, ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் போலீஸ்துறையை தனக்கு கீழே அடிமையாக கொண்டு வருவது ஒன்றும் அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.
இதற்கு ஒருபடி மேலே போய், மதுரையில் சுப்பிரமணியபுரம் போலீசு, தோழர்கள் எழுதிய சுவரெழுத்தில் வேண்டாம் பிஜேபி என்பதை மட்டும் அழித்து தனது சங்கி விசுவாசத்தை காட்டியது.
காவி பாசிஸ்டுகளால் மக்கள் அடித்தளத்தை பெறமுடியாத தமிழ் மண்ணிலேயே கருத்துரிமையின் அடிப்படையில் பிரசுரம் கொடுப்பதை தடுப்பது, அடிப்பது, போலீசை மிரட்டுவது என்று அராஜகம் செய்யும் இந்த இந்துத்துவ பொறுக்கிகள் மணிப்பூர் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கலவரத்தை எவ்வாறு திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தாங்கள் ஆளுகின்ற மாநிலங்களில் நேரடியாக பாசிசத்தை பிரயோகிக்கும் சங்கிக் கூட்டம், எதிர்க் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் அராஜகத்தின் வழியாக இணையாட்சி நடத்துகிறது. அந்த வழியில் தமிழ்நாட்டை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது பாசிசப் படை. அதற்கு உதாரணம் தோழர்கள் மீதான இந்த தாக்குதல்கள்.
நடந்த சம்பவத்தை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த சங்கிக் கூட்டத்தையே வேரடி மண்ணோடு களைய வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் ஆகியவர்களின் கடமை!
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.