ஒட்டுமொத்த இசுலாமியர்களையும் படுகொலை செய்துவிட்டு, நாட்டை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறைகூவியது காவி பயங்கரவாதிகளின் உத்தரகாண்ட் தர்ம சன்சத் மாநாடு.
அப்போதே ஜனவரி மாத புதிய ஜனநாயகம் இதழில், “இவற்றையெல்லாம் ‘வெற்று மதவெறிப் பேச்சுக்கள்’ அல்லது ‘உளறல்கள்’, ‘வழக்கமாகப் பேசுவதுதான்’ என நாம் இருமாந்திருக்க முடியாது. பாசிஸ்டுகள் ஒவ்வொன்றையும் முன்னறிவித்து செய்பவர்கள் என்ற கடந்தகால உண்மைகள் நம்மை எச்சரிக்கை செய்கின்றன” என்று எழுதியிருந்தோம். இன்று ஆய்வாளர்களே அறுதியிட்டு கூறுகிறார்கள் நாடு பாசிச இனப்படுகொலைக்கு பக்குவப்பட்டுவிட்டது என்று.
“இனப்படுகொலைக்கான பாதையின் விளிம்பில் உள்ள இந்தியா” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான இணையவழி உச்சி மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை சரக்கு இரயில்களில் ஏற்றிச் சென்று, வதைமுகாம்களில் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்றான் பாசிசக் கொடூரன் ஹிட்லர். இசுலாமிய மக்களைக் குறிவைத்து, அத்தகையதொரு பாசிசப் படுகொலை நம் நாட்டிலும் ஆயுதமேந்திய அரசுப்படைகளாலோ அல்லது தனியார் படைகளாலோ நடத்தப்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச வல்லுநர்கள்.
படிக்க :
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
♦ நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !
கம்போடியாவில் உள்ள இனப்படுகொலைக்கான ஆவண மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மவுங் ஜர்னி, இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப்போக்கு இந்தியாவில் தொடங்கிவிட்டதாகத் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களின் மதத்திற்கு அச்சுறுத்தலானவர்களாக சித்தரிப்பது குறித்து குறிப்பிடும் அவர், இன்னும் வெளிப்படையானதொரு இனப்படுகொலை நடக்காவிட்டாலும் மனிதநேயத்தை இழக்கத்தொடங்கிவிட்டதே (Dehumanisation) இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப் போக்குதான் என்கிறார்.
வெறுப்புப் பேச்சுகளிலும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதிலும் மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான குணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் மனித உரிமை வழக்கறிஞர் மிதாலி ஜெயின்.
ஐ.நா சபையின் இனப்படுகொலைத் தடுப்பு சிறப்பு ஆலோசகரான அடாமா டியாங், நீண்ட மற்றும் போற்றத்தக்க சமாதான சகவாழ்வு வரலாறு கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால் சகிப்புத்தன்மையின்மையும் பாகுபாடும் அதிகரித்திருக்கிறது என்று தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்றவர்கள், நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் இசுலாமிய வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள். மேலும் இனப்படுகொலைக் குற்றவாளியாகவும் குற்றவாளிகளின் பாதுகாவலனாகவும் இருக்கிற இந்திய அரசால் இனப்படுகொலை அரங்கேறுவதை தடுக்க முடியாது என்கின்றனர்.
மோடி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தம் பாசிச ஜெர்மனியின் நுரெம்பர்க் சட்டத்திற்கு நிகரானது என்று அவர்கள் வரையறுக்கின்றனர்.
வெறுப்பு பேச்சுகள், பொய்ப் பிரச்சாரங்கள், சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தலாக காட்டுவது, மனிதநேயத்தை இழந்துவரும் போக்கு ஆகியவைதான் இனப்படுகொலைக்கான அறிகுறிகள் என மேற்கூறிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
முசுலீம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியவர்கள், அந்நியர்கள், தேசவிரோதிகள் – தீவிரவாதிகள், சட்டவிரோத குடியேறிகள் என்று முசுலீம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரத்தை கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாக பரப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல். எந்தவொரு இனப்படுகொலையும் திடீரென நடந்துவிடுவதில்லை. இத்தகைய நிகழ்ச்சிப் போக்கின் வளர்ச்சியில்தான் நடந்தேறுகிறது.
