டந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கலவர வழக்குகள் ஒட்டுமொத்தமாக 2.76 இலட்சத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளன.
கடந்த காலங்களில் நாடுமுழுவதும் நடந்த கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா என்று சசி தரூர் மற்றும் சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வியெழுப்பினர். குறிப்பாக ராஜஸ்தானில் மதக் கலவரங்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இக்கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகும் கலவர வழக்குகளை இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி பதிவு செய்து வருகிறது. இருப்பினும் கும்பல் படுகொலைகளுக்கான தனி தரவு எதுவும் என்.சி.ஆர்.பி.யால் பராமரிக்கப்படவில்லை” என்று கூறினார்.
படிக்க :
வடஇந்தியாவில் 4 மாதத்தில் 89 வெறுப்புக் குற்றங்கள் !
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
மதக் கலவரம் என வகைப்படுத்தக் கூடிய வழக்குகளின் விவரங்களைப் பொறுத்தவரை, 2016 முதல் 2020 வரை ஆண்டு வாரியான விவரங்களை அமைச்சர் எழுத்துப் பூர்வமாக சமர்பித்தார்.
இந்தியா முழுவதும் கலவர வழக்குகள் மற்றும் மதக் கலவர வழக்குகள் முறையே, 2016-ம் ஆண்டில் 61,964 மற்றும் 869; 2017-ல் 58,880 மற்றும் 723; 2018-ல் 57,828 மற்றும் 512; 2019-ல் 45,985 மற்றும் 438. 2020-ல் 51,606 மற்றும் 875 பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 2,76,273 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளது. அவற்றில் 3,399 மதக் கலவரங்கள் என்று அறிக்கை கூறுகிறது.
இந்த கலவர வழக்குகளை வைத்து பார்க்கும்போது இந்தியா காவி பாசிச நடைமுறையில் ஏற்கனவே சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காவிக் குண்டர்கள் வளர்வதற்கு பெரும் உதவிபுரிகிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்துமதவெறி அமைப்புகள் தமது செயல்பாடுகளை கடந்த காலங்களில் இல்லாத வகையில் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன.
வட இந்தியாவில் பல்வேறு இடங்களிலும், தென் இந்தியாவில் கர்நாடகத்திலும் காவி பாசிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் இந்துராஷ்டிரசத்தை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் ஓர் சோதனைச் சாலையாகவே இருக்கிறது. தற்போது கர்நாடகா அந்த வரிசையில் பீடுநடைபோட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும்கூட பாஜக தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் மதக் கலவரங்களைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிவோம்.
ஹரித்துவார் மாநாட்டில் காவி பயங்கரவாதிகள் ஒன்றுக்கூடி முஸ்லீம்களைக் கொல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார்கள். கர்நாடகாவில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கிறது காவி அரசு. ஹிஜாப் அணியும் பெண்களை சிவாஜியின் வாளால் வெட்ட வேண்டும் என்று ஒரு இளம்காவி பயங்கரவாதி வெளிப்படையாக பேசுகிறார். இப்படி காவி பாசிஸ்டுகளின் வன்முறை வெறியாட்டங்கள் சட்டப் பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த மதக் கலவரங்களைவிட அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவில் மதக் கலவரங்கள், சாதி வன்முறைகள், முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள், தலித் மக்கள் மீதான வன்முறைகள் இன்னும் அதிகரிக்கும் என்பது மேற்கண்ட புள்ளிவிவரங்கள் மூலம் கண்கூடாகத் தெரிகிறது.
எனவே, நாடுமுழுவதும் பரவி வரும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை, உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டிய தருணமிது!


சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire, Hindusthantimes

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க