க்டோபர் 2021 முதல் பிப்ரவரி 2022 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நான்கு மாதங்களில் 6 வடஇந்திய மாநிலங்களில் வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் என மொத்தம் 89 நிகழ்வுகள் பதிவாகியுள்ளதாக தி வயர் இணையதளம் கணக்கிட்டுள்ளது. இந்த சம்பவங்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரக்காண்ட், பீகார் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளன.
அக்டோபர் 2021-ல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான மட்டும் 29 வெறுப்பு குற்றங்கள் நடந்துள்ளன. இந்த மாதம் முழுவதும் அரியானா மாநிலத்தில் பொது இடத்தில் தொழுகை நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, தொழுகைக்கு பயன்படுத்தப்பட்ட நிலத்தில் கோவர்தன் பூஜை நடத்தப்பட்டது.
நவராத்திரி அன்று முஸ்லீம்களின் கடைகளை மூடக்கோரி காவி குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். குருகிராம், ஃபரிதாபாத், சிந்த்வாரா, புலந்த்ஷாஹர், பல்வால், சஹாரன்பூர் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய இடங்களில் முஸ்லீம் இறைச்சிக் கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. இந்த வெறுப்பு சம்பவங்களை சம்யுக்தா ஹிந்து சங்கர்ஷ் சமிதி, இந்து கவுரஷா தளம், பஜ்ரங் தள் மற்றும் இந்து வாஹினி போன்ற இந்துத்துவ அமைப்புகள் செய்துள்ளது.
படிக்க :
சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள் !
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில், 56 பந்தல்களில் கர்பா நிகழ்வுகளில் ‘இந்துக்கள் அல்லாதவர்கள்’ நுழைவதை தடுக்கும் வகையில் விஎச்பி சுவரொட்டிகளை ஒட்டியது. இவை தவிர, வலதுசாரிக் குழுக்கள், ஆர்.எஸ்.எஸ்-ஐச் சார்ந்த குழுக்களும் ரூர்க்கியில் ஒரு தேவாலயத்தை சேதப்படுத்தினர். நீமுச்சில் ஒரு முஸ்லீம் கோவிலை சேதப்படுத்தினர். இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தூரில் ஒரு முஸ்லீம் குடும்பத்தை தாக்கினர்.
நவம்பர் 2021-ல் பதினொரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஒரு முஸ்லீம் நபரை பிரியாணி கடையை மூடும்படி துன்புறுத்தினார். ஆக்ராவில், ஒரு முஸ்லீம் நபரின் துணிக் கடை பா.ஜ.க.வின் யுவ மோர்ச்சாவினாலும், புது தில்லியில் உள்ள துவாரகாவில் ஒரு தேவாலயம் பஜ்ரங் தளத்தினாலும் சேதப்படுத்தப்பட்டது.
டிசம்பர் 2021-ல் 20 வெறுப்புக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிசம்பர் நடுப்பகுதியில் ஹரித்வாரில் ’தர்ம சன்சத்’ என்ற நிகழ்ச்சி நடந்தது, அங்கு இந்துமதவெறியர்கள் மூன்று நாட்கள் ஒன்றுகூடி  முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு  அழைப்புகளை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில், தீவிர இந்துத்துவா தலைவர் நரசிங்கானந்த், “இந்து மதத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது பற்றி நினைத்தாலும் வாழ அனுமதிக்க முடியாது” என்றார்.
இந்த ஹரித்வார் இனப்படுகொலை உச்சிமாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை ‘கர் வாப்சி’ செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.
பீகாரின் அரியானா மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் நபர் (முகமது சித்திக்) 100 பேர் கொண்ட உள்ளூர் கும்பலால் மாடு திருடியதாக சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டார்; மேலும் அரியானாவில் ஒரு முஸ்லீம் நபர் (ராகுல் கான்) மூன்று இந்துமதவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஜனவரி 2022-ல் யோகி ஆதித்யநாத்தின் தேர்தலுக்கு முன்னதாக வெறுப்பு பேச்சுக்கள் 34 பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பண்டி உபாத்யாய் என்பவரால் மூன்று வெறுக்கத்தக்க குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முதலில் சௌகத் அலியை பீர் பாட்டிலால் தாக்கினார். அதன்பின் சௌகத் வீட்டின் உறவினர் பெண்ணை தாக்கினார். கடைசியில் சலீம் பிச்சைக்கு சொந்தமான ஆட்டோ ரிக்சாவை தீ வைத்து கொளுத்தினார். சௌகத் அலி என்பவரது வீட்டையும் தீ வைத்து எரித்தார். “இந்து சமூகம், இங்கு முஸ்லீம்களை விரும்பவில்லை” என்று கூறினார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் ஜனவரியில் இரண்டு வெறுப்பு குற்றங்களை செய்துள்ளது. ஒன்று வாரணாசி மலைத்தொடர்களுக்கு முஸ்லீம்கள் செல்வதைத் தடைசெய்து சுவரொட்டிகளை ஒட்டியது; இரண்டு உஜ்ஜயினில் லவ் ஜிஹாத் செய்ததாகக் கூறி ஒரு முஸ்லீம் நபரை ரயிலில் இருந்து இழுத்துச் சென்றது ஆகியவையாகும்.
பிப்ரவரி 2022-ல் பெரும்பாலான 12 சம்பவங்கள் தேர்தல் உரையில் நிகழ்ந்தவை.
பா.ஜ.க, எம்.எல்.ஏ மயங்கேஷ்வர் சிங், “இந்துக்கள் விழித்துக் கொண்டால் உங்கள் தாடியை இழுத்து காட்டன் (பருத்தி) செய்வோம்” என்றார். பா.ஜ.க, எம்.எல்.ஏ ராகவேந்திர பிரதாப் சிங், தனக்கு வாக்களிக்காத எந்த இந்துவின் நரம்புகளிலும் ‘மியான்’ ரத்தம் இருப்பதாக கூறினார். முஸ்லீம்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க, எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
படிக்க :
திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்
அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !
89 சம்பவங்களில், 14 பஜ்ரங் தளம், 5 விஷ்வ ஹிந்து பரிஷத், 4 இந்து கௌவ் ரக்ஷா தளம், 3 சம்யுக்தா ஹிந்து சங்கர்ஷ் சமிதி மற்றும் 2 இந்து ரக்ஷா தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தெரியாத’ கும்பல் அல்லது குழுவால் 5 சம்பவங்கள் நடந்தன. பாஜக தலைவர்கள் 18 சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். (இது 20%க்கும் அதிகமானவை). தேர்தல் களத்தில் வெளியிடப்பட்ட பல வெறுப்புப் பேச்சுக்கள் இன்னும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
வடமாநிலங்களில் நடக்கும் இத்தகைய, சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை நாடுமுழுவதும் கட்டவிழ்த்து விடுவதற்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங்கப்பரிவார கும்பல் எத்தனித்து வருகிறது. இந்த வெறுப்பு அரசியலின் மூலம் கலவரத்தை தூண்டி காவி – கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்தத் துடிக்கும் இந்துமதவெறியர்களுக்கு எதிராக உழைக்கும் மக்களாய் களமிறங்க வேண்டிய தருணமிது.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க