டெல்லியில், முஸ்லீம் ஒருவரின் பிரியாணிக் கடைக்குள் புகுந்து, “இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்று அசைவ கடைகளை திறக்கக் கூடாது” என்று கூறி காவி குண்டர்கள் கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த நவம்பர் 4 தீபாவளி அன்று டெல்லியில், சாந்த் நகரில் உள்ள மஹ்பூப் ஆலம் என்ற முஸ்லீம் நபருக்குச் சொந்தமான அசைவ உணவகத்திற்குள் நரேஷ் குமார் சூர்யவன்ஷி தலைமையிலான இந்து மதவெறி அமைப்பைச் சேர்ந்த காவிக்குண்டர்கள் உள்நுழைந்தனர். ஆலம் ஒரு முஸ்லீம் என்பதால், இந்துக்களின் உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் இறைச்சி உணவுகளை விற்பனை செய்வதாக இந்து மதவெறியர்கள் கூச்சலிட்டனர்.
இது தொடர்பான வைரல் வீடியோவில், இந்து மதவெறியர்கள் “இந்து பண்டிகைகளில் வியாபாரம் செய்தால் கடையை எரித்து விடுவேன்” என்று முஸ்லீம் கடை ஊழியர்களை மிரட்டுகிறார்கள்.
படிக்க :
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !
ராஜஸ்தான் : முஸ்லீம் இளைஞரை எரித்துக் கொன்று வீடியோவில் பேசிய இந்துமதவெறியன் !
“இது ஜுமா மஸ்ஜிதா? தீபாவளிக்கு கடை திறக்க சொன்னது யார்? இது இந்துக்களின் பகுதி. முஸ்லீம்கள் இங்கே கடையை நடத்துகிறீர்கள். இன்று எங்களுடைய நம்பிக்கையை மாசுபடுத்த இங்கே இருக்கிறீர்களா? ஈத் பண்டிகை அன்று உங்கள் மசூதிக்கு வெளியே நான் பன்றிகளை வெட்டவா? உங்களுக்கு எவ்வளவு தைரியம், கடையை தீயிட்டு கொளுத்திவிடுவேன்” என்று அந்தக் கடைக்காரரை மிரட்டுகிறான் வந்திருந்த காவிக் கும்பலில் ஒருவன்.
மேலும், “ராகுல், அமன் போன்ற பெயர்களைப் பயன்படுத்தி இந்துப் பெண்களையும், எங்கள் மகள்களையும், சகோதரிகளையும் வலையில் சிக்க வைக்கிறார்கள். ‘லவ் ஜிகாத்’ செய்கிறார்கள்” என்று கூச்சலிடுகிறது அந்தக் கும்பல். இவை அனைத்தும் அந்தக் காணொலியில் இடம்பெற்றிருந்தன.
சந்த் கபீர் நகரில் உள்ள ஆலன் முரடாபாடி பிரியாணி கடையின் உரிமையாளரான ஆலன் “இரவு 7.30 மணியளவில் இந்த நபர் எங்கள் கடைக்கு வந்தார். அவர் முஸ்லீம்களுக்கு எதிராக அவதூறு செய்து வன்முறை செய்வேன் என்று எங்களை அச்சுறுத்தினார். இருப்பினும் இரண்டு பெண் வாடிக்கையாளர்களும், உள்ளூர் மக்களும், பண்டிதர்களும் எங்களுக்கு ஆதரவாகப் பேசினர்.” என்று கூறினார்.

000
சமீப காலங்களாக இந்து பண்டிகைகளின் போது, முஸ்லீம் கடைகளை மூடும்படி மிரட்டுவது, பலவந்தமாக மூடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபரில் சம்யுக்த ஹிந்து சங்கர்ஷ் சமிதி என்ற இந்துத்துவக் கும்பலின் கீழ் உள்ள பல அமைப்புகள், குருகிராமில் உள்ள 150 இறைச்சிக் கடைகளை நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு மூட வேண்டும் என்று துணை ஆணையருக்கு கடிதம் எழுதின.
நவம்பர் 5-ம் தேதியன்று குருகிராமில் நடந்த கோவர்தன் பூஜையின் போதும், இதே சம்யுக்த ஹிந்து சங்கர்ஷ் சமிதி கும்பல்தான், அப்பகுதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
அக்டோபர் 8-ம் தேதியன்று பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஃபரிதாபாத்தில் இறைச்சிக் கடைகளை வலுக்கட்டாயமாக மூடுவது வைரலான வீடியோவில் காணப்பட்டது. நவராத்திரியை காரணம் காட்டி உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷாஹர் மற்றும் பிற நகரங்களில் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன.
இதை தொடர்ந்து நவராத்திரி காலத்தில் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு இந்து மதவெறி அமைப்புகளின் காவிக்குண்டர்கள் செல்வதையும், முஸ்லீம்களை மிரட்டுவதையும் பல வடஇந்திய நகரங்களில் இருந்து சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பல வெளிவந்துள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மதுராவில் நடைபெற்ற கிருஷ்ணோத்ஸ்வா 2021 நிகழ்ச்சியில், மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு முழுதடை விதித்தார். 2017-ம் ஆண்டில் புனித யாத்திரை தலங்களாக அறியப்பட்ட விருந்தாவன் மற்றும் பர்சானா பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு ஆதித்யநாத் தடை விதித்தார்.
இதுபோன்று, முஸ்லீம்களை இந்துப் பண்டிகைகளுக்கு எதிராகக் காட்டுவதை நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக-வின் காவி அமைப்புகள் தீவிரமாக செய்து வருகின்றன. இந்துராஷ்டிரத்தை பிரகடனம் செய்வதற்கு ஏற்ற வகையில் மக்களை காவி வெறியினடிப்படையில் முனைவாக்கம் செய்வதற்காக இது போன்ற வேலைகளைச் செய்து வருகிறது பாசிச மோடி – ஆர்.எஸ்.எஸ். கும்பல் ! இதனை முறியடிக்க மக்களை வர்க்கமாய் அணிதிரட்டுவதுதான் நம் முன் உள்ள கடமை !

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க