பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. 5-ஆம் வகுப்பு தகுதி உடைய கடைநிலை ஊழியர் பணிக்கு, பட்டப்படிப்பு பி.எச்.டி. படித்தவர்கள் அலைமோதுகிறார்கள். 100 காலி பணியிடங்களுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பிக்கும் கொடுமை நடக்கிறது. பா.ஜ.க. மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகள், அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் அழிந்த சிறு தொழில்கள், வேலை இழந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய விளைவுகள் கொடூரமானது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறது பா.ஜ.க. மோடி அரசு. தனது தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், எதிர்ப்பவர்களை அச்சத்தில் உறையவைக்கவும் எட்டு மாநிலங்களில் நடத்தப்பட்டவைதான் அறிவுத்துறையினர் மீதான இந்த ரெய்டு, கைது நடவடிக்கை.

தலித் மக்கள், பழங்குடியின ஆதிவாசி மக்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடும் இடதுசாரி செயல்பாட்டாளர்களின் மீது அடக்குமுறையை ஏவும் விதமாக அவர்களது வீடுகளை சோதனை செய்வது மற்றும் அவர்களை ஆள்தூக்கி ஊபா சட்டங்களின் கீழ் கைது செய்வது என அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது மோடி அரசு. சனாதன் சன்தன் போன்ற இந்துத்வா பயங்கரவாத மதவெறி அமைப்புகளின் நடவடிக்கைகள் துப்பாக்கி வெடிகுண்டுகளுடன், அம்பலபட்டுவரும் நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பீமாகோரேகான் கலவரம், மோடியைக் கொல்ல சதி, நகர்ப்புற நக்சல் என ஒரு அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறது பா.ஜ.க. மோடி அரசு.

இந்தியாவின் புகழ்பெற்ற சமூக செயல்பாட்டாளர்களான ஆந்திராவின் புரட்சிகர எழுத்தாளர், கவிஞர், வரவர ராவ், தொழிலாளர்களுக்காக பல ஆண்டுகளாக போராடிவரும் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் , பேராசிரியர் வெர்ணன் கன்சால்வேஸ் வழக்கறிஞர் அருண் ஃபெரிரா பத்திரிக்கையாளர் கௌதம் நவ்லகா ஆகியோரை மகாராஷ்டிரா போலீசார் ஊபா சட்டத்தில் கைது செய்தது. புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர் மூத்த வழக்கறிஞர்கள் அவசரமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாலும், நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்ததாலும் தற்போது அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மகாராஷ்டிரா போலீசார் அவர்களை மீண்டும் கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் அடைக்க தொடர்ந்து முயன்று வருகிறது.

இதே காரணத்திற்காக பேராசிரியர்கள் சத்யநாராயணா , ஆனந்த் தெல்தும்டே பாதிரியார் ஸ்டாண்சாமி பத்திரிக்கையாளர் குர்மலாக் (வரவரராவ் மருமகன்) கிரந்தி தெகுலா ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். ரெய்டு நடத்தப்பட்ட வீட்டில் “ஏன் இவ்வளவு மார்க்ஸ், மாவோ புத்தகங்கள்? நீங்கள் பிராமணப்பெண் ஏன் பொட்டு வைக்கவில்லை?” என கவிஞர் வரவரராவ் மகளிடம் கேட்பது, போலீசார் அதிகார எல்லையைத் தாண்டி காவிப் பாசிசப் படையாக மாறி செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

பீமாகோரேகான் கலவரத்திற்கு காரணமான முக்கியக் குற்றவாளிகளான இந்துத்வா பயங்கரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. நாடு முழுவதும் வலைபின்னலை வைத்து கொண்டு கவுரி லங்கேஷ், தபோல்கர் போன்ற அறிவுஜீவிகளை சுட்டுக் கொலை செய்யும் சனாதன் சன்தன் அமைப்பினர் சமீபத்தில் வெடிகுண்டு ஆயுதங்களுடன் மகாராஷ்டிராவில் அகப்பட்டு கொண்டனர். இத்தகைய அமைப்புகளை தடை செய்யவோ, அவர்களை தீவிரவாதிகளாக கருதி ஊபா சட்டத்தில் கைது செய்யவோ பா.ஜ.க. மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, அவற்றிலிருந்து திசை திருப்பவும், எதிர்ப்புக் குரலை நசுக்கவும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் செயல்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் பேராசிரியர், வழக்கறிஞர், ஆராய்ச்சி மாணவர் என 5 பிரபல மனித உரிமைப் போராளிகளை கொடிய ஊபா சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. அதை நியாயப்படுத்த பிரதமர் மோடியைக் கொல்ல கம்ப்யூட்டரில் கடிதம் எழுதி வைத்திருந்தார் என்பதை யாரும் நம்பமுடியாத செய்தியை ஊடகங்கள் வாயிலாக ஊதிப்பெருக்கியது. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய கைது அச்சுறுத்தல்.

குட்கா ஊழல் குற்றவாளிகளை தொடர்ந்து பாதுகாக்கும் பா.ஜ.க. பினாமி அரசாக செயல்படும் எடப்பாடி அரசு தமிழகத்தில் மோடிக்கு எதிராக முழக்கமிட்டால், செய்தி வெளியிட்டால், பேசினால், போஸ்டர் ஒட்டினால், வழக்கு கைது நடவடிக்கை, வாழ்வுரிமைகளுக்காக போராடினால் துப்பாக்கிச் சூடு படுகொலை, தேசிய பாதுகாப்பு சட்டம், தேசத்துரோக வழக்கு, குண்டர்சட்ட வழக்கு என்பதை சகஜமாக சாதாரண மக்கள் மீதும் போடுகிறது. முற்றிலும் பேச்சுரிமை, கருத்துரிமை, மறுக்கப்படுகிறது. பா.ஜ.க.வின் பாசிச கொடுங்கோன்மை அபாயம் நாடு முழுவதும் பரவுகிறது.

மே17, திருமுருகன் காந்தி, தமிழகத்தில் பொதுக்கூட்டங்களில் பேசிய இடங்களில் எல்லாம் எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து கைது செய்து அலைக்கழிப்பது, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டத்தைவிட கொடுமையானது. பல மாதங்களாக சிறையிலிருக்கும் செயற்பாட்டாளர் முகிலன்; ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிணை கிடைக்காமல் சிறையிலிருக்கும் வழக்கறிஞர் முருகன்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுக்கு சட்ட உதவிகள் செய்ததற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் மீதான அடக்குமுறைகள்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசியப் பாதுகாப்புச்சட்டம் எண்ணற்ற வழக்குகளில் கைது அச்சுறுத்தல்; பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக என முழக்கமிட்ட சோபியா கைது; மாணவி வளர்மதி கைது; பத்திரிக்கை, செய்தியாளர்கள் மீதான அச்சுறுத்தல் என எதிர்ப்புக் குரலை நெறிக்கிறது பினாமி எடப்பாடி அரசு. ஆனால் எச்.ராஜா., எஸ்.வி.சேகர், எதுவேண்டுமானாலும் பேசலாம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க. அரசின் தோல்வி ஏற்படுத்திய விளைவுகள் மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இந்துத்வா அமைப்புகளின் இந்து ராஷ்டிரா கனவை செயல்படுத்த உருவாக்கப்பட்ட தீவிரவாத சங்பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அம்பலப்பட்டு மக்கள் எதிர்ப்புகளை அதிகரித்து வருகிறது. பா.ஜ.க. மோடி அரசுக்கு எதிராக தயங்காமல் எதிர்ப்புகளை காட்டி வரும் எழுத்தாளர்கள் மனித உரிமைப் போராளிகள் இடதுசாரி தலைவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கைது செய்து சிறையலடைத்து அச்சுறுத்துவதன் மூலம் மக்களின் எதிர்ப்புக் குரலை அடக்கிவிடலாம் என மோடி அரசு முயல்கிறது.

அடிப்படை உரிமைகளுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான தேசதுரோக குற்றச்சாட்டு பிரிவு 124 ஏ, ஊபா சட்டம், ஆயுதபடை சிறப்பு அதிகாரச்சட்டம், ஆகியவற்றை உடனே ரத்து செய்யப்பட வேண்டும். பீமாகோரேகான் நிகழ்வையொட்டியும் மோடியைக் கொல்ல சதி என்கிற பொய் குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கவுரி லங்கேஷ், தபோல்கர் ஆகியோர் படுகொலைக்கு காரணமான சனாதன் சான்ஸ்தா போன்ற இந்துத்வா பயங்கரவாத மதவெறி அமைப்புகளை உடனே தடை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திருமுருகன் காந்தி, முகிலன், வழக்கறிஞர் முருகன் ஆகியோரை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும். பா.ஜ.க. மோடி அரசின் இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. அச்சே தின் ஆத்தே ஹை…..அமெரிக்கா நம்ம தோஸ்த் ஹை….ரஷ்யாவும் தோஸ்த் ஹை.. சவுதியும் தோஸ்த் ஹை… இஸ்ரேலும் தோஸ்த ஹை… இந்தியா ஸ்ட்ராங் ஹை.. வெல்ல முடியாது ஹை… விலைவாசி ஓக்கே ஹை… நோட்பந்தி வெற்றி ஹை… கருப்பு பணம் வரலை ஹை… 15 லட்சம் வரும் ஹை… ஆனா வராது ஹை.. பி.ஜே.பி க்கு ஓட்டு போடுங்க ஹை… ஒண்ணுமே புரியல ஹை..

    நமக்கு ஆப்பு ரெடி ஹை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க