privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்ஊபா - ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

-

தாமிரபரணியில் நீரை உறிஞ்சும் கோக் ஆலையை மூடு என நீங்கள் போராடினால்  உங்களை கைது செய்து 6 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையே (Charge Sheet)  சமர்ப்பிக்காமல் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சரி ஓய்வு நேரத்தில் பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றியோ, ரசியப் புரட்சியைப் பற்றியோ படிக்கிறீர்களா? கடுமையான கால் வலி காரணமாக திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கவில்லையா? இதில் எதைச் செய்தாலும் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் உரிமை அரசிடம் சட்டப்படியே இருக்கிறது. “புறாவைக் கொன்றதற்கெல்லாம் போரா…? பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது” என்கிறீர்களா?

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட பேராசிரியர் சாய்பாபா

இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி? விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை உங்களுக்கு பிணை மறுத்துச் சட்டப்படியே உங்களைச் சிறையிலேயே வைத்திருக்க முடியும். அப்படி என்ன சட்டம் அது? அது தான் ’ஊபா’ (UAPA) என அழைக்கப்படும் ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’  (Unlawful Activities Prevention Act).  இந்த ‘ஆள்தூக்கி’ கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.

கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஊபா’ சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தங்கள், அரசியல் சாசன சட்டத்தின் 19-வது பிரிவு குடிமக்களுக்கு அளித்திருக்கும் பேச்சுரிமை, சுதந்திரத்தை அனுபவிப்பதற்கானஉரிமை மற்றும் வாழ்வுரிமை, சங்கமாக சேர்வதற்கான உரிமை ஆகிய அனைத்தையும், படிப்படியாக வெட்டிச் சுருக்கியுள்ளது.

இந்திய அரசு, இந்தக் கருப்புச் சட்டத்தை உருவாக்கியதன் பின்னணியில் இரு பெரும் சம்பவங்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் பற்றியெழுந்த நக்சல்பாரி எழுச்சியும், தமிழகத்தில் மாணவர் போராட்டமாகப் பற்றியெரிந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் ஆளும் வர்க்கங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. இந்த இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எரியவே, கொடூரமான இந்த ஊபா சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

இந்த ஆள்தூக்கிச் சட்டத்தின் சாரமே, தெளிவில்லாத பொதுவான விளக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட விதம் தான். இந்தியாவின் இறையாண்மைக்கு ‘எதிரான நடவடிக்கைகளில்’ ஈடுபடும் அமைப்புகளை உடன் தடை செய்வதும், அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதும் இச்சட்டத்தின் நோக்கங்கள். எவையெல்லாம் இறையாண்மையை பாதிக்கின்ற விசயங்கள் என்பதைத் தெளிவாக விளக்காமல், அதனைக் காக்கிகளின் கையிலும் ‘குடுமி மன்றத்’ தின் கையிலும் ஒப்படைத்திருக்கிறது இச்சட்டம்.

அதன் பின்னர், சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கையை ஒடுக்க, 1985-ம் ஆண்டு, மத்திய அரசு ஊபாவைக் காட்டிலும் கடுமையான தடா (TADA – Terrorist and Disruptive Activities (prevention) Act) சட்டத்தை  இயற்றியது. இச்சட்டத்தின் படி, சிறப்பு நீதிமன்றம், இரகசிய நீதிமன்ற விசாரணை, இரகசிய சாட்சிகள் போன்ற ஜனநாயக விரோத புறவழிப் பாதைகள் அதிகார வர்க்கத்தினருக்கு திறந்து விடப்பட்டன.  1995-ம் ஆண்டு வரை தொடர்ந்த ‘தடா’ வின் கீழ் வெறும் பத்தே ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 75,000 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் வெறும் 750 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றனர். அதாவது 99% நிரபராதிகள் சிறை தண்டனை அனுபவித்திருக்கின்றனர்.

‘தடா’வின் கொடுமையையும், அது அதிகாரவர்க்கத்தால் பழி வாங்கும் நோக்கோடு பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டியும், பல்வேறு ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அதன் விளைவாக தடா சட்டம் 1995-இல் கைவிடப்பட்டது. அதன் பின்னர் , 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, அனைத்து உலக நாடுகளையும் தீவிரவாதத்திற்கு எதிரான  உள்நாட்டு சட்டங்களைக் கடுமையாக்குமாறு அமெரிக்கா மிரட்டியது.

அமெரிக்க ஆண்டையின் உத்தரவுப்படி 2002-ம் ஆண்டில் ‘பொடா’ (POTA – Prevention of Terrorism Act) சட்டத்தைக் கொண்டு வந்தது வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு.

காங்கிரசு கிரிமினல்களின் ஆட்சியில் ‘தடா’ சட்டம் 8 அடி பாய்ந்தது என்றால், இந்துமத வெறி பாஜக பாசிஸ்டுகளின் ஆட்சியில் ‘பொடா’ 24 அடி பாய்ந்தது. மத்திய பாஜக ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகளில் இந்தியாவே ‘பொடா’வின் வேட்டைக்காடாகியது. கோத்ரா கலவரம் நடந்த குஜராத்தில் மட்டும் அந்த 2 ஆண்டுகளில் சுமார்  240 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 239 பேர் இசுலாமியர்கள், மீதமுள்ள ஒருவர் சீக்கியர். குஜராத் கலவரங்களின் போது மூன்றே நாட்களில்  2,000 பேரை எரித்துக் கொன்ற எந்த இந்து மதவெறியனும் ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட பத்திரிக்கையாளர் ஷாஹைனா

பொடா சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்புக் கிளம்பியதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக்  ’பொடா’-வைத் திரும்பப் பெறுவதாக காங்கிரசு பெருச்சாளிகள் அறிவித்ததோடு ஆட்சிக்கு வந்ததும் நீக்கவும் செய்தனர். ஆனால் ‘பொடா’வில் இருந்த அத்தனை ஒடுக்குமுறை சரத்துக்ளையும் புறவாசல் வழியாக ‘ஊபா’ சட்டத் திருத்தத்திற்குள் நுழைத்தது காங்கிரசு கும்பல். ‘ஊபா’ சட்டத்தின் அத்தியாயங்கள் 4,5,6 ஆகியவற்றுள் ‘பொடா’ சட்டத்தின் தண்டனைப் பிரிவுகளும், தீவிரவாதம் குறித்த குதர்க்கமான விளக்கங்களும் சொருகப்பட்டன.

அடுத்தபடியாக 2008-ம் ஆண்டு நவம்பரில் நடந்த மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து, ‘ஊபா’ சட்டத்தின் விதிமுறைகளை இன்னமும் தீவிரப்படுத்தியது காங்கிரசு அரசு. பிணை அளிப்பதற்கான நிபந்தனைகளைக் கடுமையாக்குவது முதல், பல்வேறு கெடுபிடிகளையும் உட்சேர்த்து, மிச்சசொச்ச ஜனநாயக உரிமைகளையும் பறித்தது.

பிறகு 2012-ம் ஆண்டில், இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தீவிரவாத நடவடிக்கைகளின் பட்டியலில் “நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு எதிரான செயல்களையும்” சேர்த்தது. அதாவது இங்கு தொழில் செய்யும் கார்ப்பரேட்களுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களும், சட்டவிரோத செயல்களே என்று மாற்றினார்கள். இதன் மூலம் தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் அனைத்தையும் மறுத்தது மத்திய அரசு. இது தான் ஐம்பதாண்டு கால ‘ஊபா’ சட்டம் வளர்ந்து வந்த விதம்.

ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ’ஊபா’ சட்டத்தின் விஷ நாவுகள் இதோ:

  • விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒருவரை 180 நாட்கள் வரை எவ்விதக் காரணமும் இன்றி சிறையில் அடைத்து வைக்க முடியும்
  • போலீசு கொட்டடியில் வைத்து விசாரிக்க 30 நாட்கள் வரை அனுமதிக்கப்படும்
  • இச்சட்ட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டால், பிணை என்பது உங்களது உரிமையிலிருந்தும், அகராதியில் இருந்து அகற்றப்பட்டு விடும். நீதிபதியாகப் பார்த்து இரக்கப்பட்டால் ஒரு வேளை பிணை கிடைக்கலாம்.
  • அரசு முடிவு செய்து விட்டால், ஒருவர் மீதான விசாரணை ‘பாதுகாப்பு’ கருதி நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெறும்.
  • இரகசிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
  • தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நோட்டீசைக் கையில் வைத்திருந்தாலும், ஒருவரைக் கைது செய்ய முடியும்.
  • தீவிரவாதம் என்ற சொல்லுக்கு தெளிவற்ற விளக்கங்களின் மூலமும், இச்சட்டத்திற்குள் அனைத்து வகை அரசியல், பொருளாதார, தொழிற்சங்க வகைப்பட்ட அமைதி வழிப் போராட்டங்களையும் கூட கொண்டு வர வழிவகை செய்கிறது
  • போலீஸால் வாரண்டு இல்லாமல் ஒருவரின் வீட்டைச் சோதனையிட, பொருட்களைக் கைப்பற்ற / பறிமுதல் செய்ய மற்றும் கைது செய்யவும் முடியும்.

இவற்றை எல்லாம் விட முக்கியமானது, கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாக ஒருவர் வழக்காடினால் கூட அவரையும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகனை, அவர் மாவோயிஸ்ட்டுகள் மீது போலீசு போட்ட பொய் வழக்கிற்கு எதிராக ஆஜரானார் என்ற காரணத்திற்காக இந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 8ம் தேதி அன்று ’ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீசு. இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் சாசனம் தரும் வாதாடும் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

தடா, பொடாவைப் போலவே இச்சட்டமும் முழுக்க முழுக்க ஆளும் வர்க்கத்தின்  பழி வாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கிறது உதாரணத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர்  குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவர். அதில் ஒரு சிறுவனுக்கு வயது 12-க்கும் குறைவு. இதுவே இச்சட்டத்தின் கொடூர முகத்தைக் காட்டுகிறது.

தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நமது பேச்சுரிமை, கருத்துரிமை, உயிர்வாழும் உரிமை, தொழிற்சங்க உரிமை என அனைத்து உரிமைகளின் குரல்வளையையும் இறுக்கிப் பிடிக்கும் ஊபா என்னும் கொடிய சட்டத்தை இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறிவது தான் இழந்த நம் உரிமைகளை மீட்டெடுக்க நம் முன் இருக்கும் ஒரே தீர்வு. இல்லையேல் பாஜக பாசிஸ்டுகளின் ஆட்சியில் மோடிக்கு எதிராக பெருமூச்சு விடுபவர்களைக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.

– நந்தன்

தொடர்புடைய செய்திகள் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க