த்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 42 நாட்களுக்கும் மேலாக பல லட்சம் விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்டாகக் கொள்ளாமல் தலைநகரை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். டெல்லியின் கடுங்குளிருக்கு பல விவசாயிகள் இறந்துள்ளனர். ஏழு சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ள நிலையில் விவசாயச் சட்டத்தினை திரும்பப்பெற முடியாது திருத்தங்கள் செய்கிறோம் என்கிறது மோடி அரசு.

ஆனால் விவசாயிகளோ சட்டத்தினை திரும்பப் பெறுகின்றவரை போராட்டம் தொடரும் என்று உறுதியாகப் போராடிவருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறுவணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

இச்சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும், விவசாயிகள் தனியாருடன் ஒப்பந்தம் செய்து லாபமடையலாம், விவசாயத்துறையில் போட்டி ஏற்படும், விவசாயிகள் சுதந்திரமாக தங்களது விலை பொருட்களை சந்தையில் விற்க முடியும், இடைத்தரகர்களை ஒழிக்கும், விவசாயத்தில் அந்நிய முதலீடுகள் குவியும் என்கிறது மோடி அரசு.

படிக்க :
♦ பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அன்றே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பஞ்சாபின் சிரோன்மணி அகாலிதள கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். BJP உடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அக்கட்சி அறிவித்து விட்டது. BJP கூட்டணியில் உள்ள அரியானா மாநில துணை முதல்வரோ விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பதவி விலகப் போவதாகக் கூறியுள்ளார். BJP கூட்டணிக் கட்சிகளே இச்சட்டத்தினை எதிர்த்து வரும் நிலையில் எடப்பாடியோ BJP காரனைவிட ஒருபடி மேலே சென்று இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசிவருகிறார்.

விவசாயிகளின் போராட்டத்தினால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள மோடிஅமித்ஷா கூட்டணி இச்சட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக மொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கி விட்டுள்ளது. உதாரணமாக இந்திய ரயில்வே IRCTC-ல் பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண்களுக்கு விவசாயச் சட்டங்கள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 74 விவசாயப் பல்கலைக் கழகத்தை சார்ந்த 15000 மாணவர்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயச் சட்டத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தது என பட்டியல் நீள்கிறது. கூடவே, இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்புகளின் (FICCI) தலைவர் உதய் ஷங்கர் “வேளாண் சட்டங்கள் புதிய சீர்திருத்தங்களையும், தேசிய நலனையும் உள்ளடக்கியதாக இருப்பதால் பங்குதாரர்கள் அனைவரும் சட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்

விவசாயிகளோ இது எங்களை பலியிட்டு கார்பரேட்டுகளை கொழுக்க வைப்பதற்கானச் சட்டம் என்கிறார்கள். விலை உத்திரவாதம் மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) 2020 சட்டத்.தின்படி தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளும் விவசாயியின் நிலத்தில் எந்த விதை விதைக்க வேண்டும், எந்த உரம், எந்த பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும், எந்த இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், என்பவை அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை ஒப்பந்த நிறுவனத்திற்கு மட்டுமே உண்டு. மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளே பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

punjab farmers protest for kashmirகுறிப்பாக ஒப்பந்தச் சட்டம் அத்தியாயம் 4 பிரிவு 19 ன் படி ஒரு விவசாயியுடன் கார்ப்பரேட் நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தை மீறி நடக்கும்போது அதை எதிர்த்து அப்பெருநிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க விவசாயிக்கு இருக்கக்கூடிய சட்டரீதியிலான உரிமையையும் வேளாண் சட்டங்கள் பறிக்கிறது. பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர் அளவிலான மட்டத்திலேயே பேசி பஞ்சாயத்து செய்துகொள்ளச் சொல்கிறது.

இதன்படி ஒரு விவசாயியிடம் கார்ப்பரேட்டு நிறுவனம் ஒரு குறிப்பட்ட பயிரை உற்பத்தி செய்ய கூறி ஒப்பந்தம் போடுகிறது எனில், அறுவடை சமயத்தில் அப்பயிர் சந்தையில் விலை மலிவாகிறது எனும்போது அல்லது உற்பத்தி செய்த பொருளின் தரத்தில், அளவில் மாறுபட்டிருந்தால் ஒப்பந்தத்தில் போட்டபடி இல்லையெனக் கூறி ஒப்பந்த நிறுவனம் கொள்முதல் செய்யவில்லை என்றால் அல்லது ஒப்பந்த விலையைவிட குறைவாகத்தான் தர முடியுமென்றால் அந்த விவசாயியின் நிலையை சற்றே யோசித்துப்பாருங்கள்

அரசிடம் இழப்பீடு கேட்கும் உரிமையைகூட இழந்து நிற்கும் அவனுக்கு கந்துவட்டிக் கொடுமையையும், வங்கிகடன் தொல்லையையும் எதிர்கொள்வதைவிடபூச்சிக்கொல்லி மருந்தை குடும்பத்தோடு தின்றுவிட்டு சாவதுதான் எளிய தீர்வாக இருக்க முடியும். ஒரு சிறு விவசாயியால் பலமிக்க கார்ப்பரேட்டை எதிர்த்து நீதிமன்றத்தின் படியேற முடியாதென்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால், முதலாளித்துவ சமூகம் கொடுத்த குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை கூட இந்தச் சட்டம் மறுக்கிறது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பற்றி வேளாண் சட்டத்தின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடவில்லை. 23 விவசாய விளைப் பொருட்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதாரவிலை மத்திய அரசு கொடுத்துவருகிறது. சந்தை விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை காப்பதே இந்த MSP தான். குறைந்தபட்சம் விளைபொருட்களுக்கான உள்ளீட்டு செலவையாவது விவசாயிகள் திரும்ப பெறமுடியும்.

அதிகப்படியான விவசாயப்பொருள்களை MSP-க்குள் கொண்டுவருவதும் அதனை அரசே கொள்முதல் செய்வதும்தான் (APMC மூலமாக) விவசாயிகளை காப்பாற்ற இருக்கக்கூடிய குறைந்தபட்சத் தீர்வு. ஆனால் வேளாண் சட்டமோ MSP யும் APMC யும் இனி இல்லை என்கிறது. விவசாயப் பொருட்களை கார்பரேட்டிடம் விற்கச் சொல்கிறது. எனவே தான் விவசாய விலைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உத்தரவாதப்படுத்த அதனை சட்டமாக்க வேண்டும் என்பதை விவசாயிகள் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளார்கள். அரசோ சட்ட அங்கீகாரம் தர மறுக்கிறது.

MSP குறித்து விவசாயத்துறை அமைச்சர் தோமரும் பிரதமர் மோடியும் கூறும் வாய்மொழி உத்திரவாதத்தை விவசாயிகள் நம்பத்தயாராக இல்லை. 04-01-2021 அன்று இந்தியன் எஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ‘‘பிரச்சனையின் மூலக் காரணமே மிதமிஞ்சிய தானிய உற்பத்தியும் சந்தை விலையை விட விவசாயப் பொருட்களுக்கான MSP அதிகமாக இருப்பது தான்‘’ என்கிறார். MSP ஐ நீக்க வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் இந்திய அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது. இதைத் தான் கட்காரியும் மோடியும் தோமரும் வேறு வேறு விதமாக கூறுகின்றனர்.

BJP ஆதரவு பத்திரிக்கையான ஸ்வராஜ்ய (Swarajya) பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த தி ரோட் டு ஆத்மா நிர்பார் பாரத் என்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் “இந்தியாவில் அதிகப்படியான ஜனநாயகம் இருப்பதால் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது.” என்று விவசாயிகள் போராட்டத்தை ஒட்டிப் பேசியுள்ளார்.

படிக்க :
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !
♦ அடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் !

இச்சட்டங்கள் குறித்து நாடாளுமன்றங்களிலும் போதிய விவாதங்களை மோடி அரசு நடத்தவில்லை. மக்களவையில் தனது பெரும்பான்மை பலத்தைக்கொண்டு விவசாயச் சட்டத்தை நிறைவேற்றிய பாஜக மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத போதும் கடும் அமலிக்கு இடையே வாய்வழி ஓட்டெடுப்பின் மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அறிவித்துவிட்டார். மேலும், தேர்வுக் குழுவிற்கு விவசாயச் சட்டத்தினை அனுப்ப வேண்டும் என்ற எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை மறுத்த விவசாயத்துறை அமைச்சர் இச்சட்டத்தினை உடனே நிறைவேற்ற வேண்டும்.. இது மேலிட உத்தரவு என்று கூறியதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகிறார்.

இந்தியாவின் உயர் அதிகாரம் படைத்தது மத்திய அமைச்சரவை. இந்திய ஜனநாயகத்தின் மையம் நாடாளுமன்றம் என்கிறார்கள். இவர்களுக்கே உத்தரவிட அதிகாரம் கொண்ட அந்த மேலிடம் யார்? நிதிமூலதன கும்பல்கள் தான். கடந்த ஒன்பது மாதங்களாக (கொரோனா காலகட்டத்தில்) பல மக்கள் விரோத சட்டங்களை மோடி அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது, கார்பரேட்டுகள் வங்கிகள் தொடங்க அனுமதி, தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல், தொழிளாலர் சட்ட திருத்தங்கள் அதன் தொடர்ச்சியிலே தற்போது விவசாயச் சட்டமும் உள்ளது.

இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாமல் போவதற்கு விவசாய சங்கத் தலைவர்கள் தான் காரணம் என்றும் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக உள்ளதாகவும் தோமர் கூப்பாடு போடுகிறார். விவசாயிகளின் கோரிக்கையான MSP-க்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பு மற்றும் விவசாயச் சட்டத்தினை திரும்பப் பெறுவது என்ற இரு கோரிக்கைகளையும் மோடி அரசு ஏற்காததே இழுபறிக்கு காரணம்.

அதே சமயம் விவசாயிகளை படியவைக்கவும் விவசாயப் போராட்டத்தினை மக்கள் மத்தியில் கொச்சைப்படுத்தவும் பல கீழ்தரமான வேலைகளை மோடி அரசு செய்துவருகிறது. பாஜக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தோ லட்சக்கணக்கில் திரண்டிருந்த விவசாயிகளை பார்த்து ஒரு சிறு கும்பல்(thukde thukde gang) என்றார். உத்திர பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் மிகவும் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டவிருப்பதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள்என்கிறார். பியூஸ் கோயலோ மாவோய்ஸ்ட் பின்னிருந்து போராட்டத்தை வழிநடத்துகிறார்கள் என்கிறார்.

BJP-RSS வானரக் கூட்டங்களோ போராடும் விவசாயிகளை தேச விரோதிகள், தீவிரவாதிகள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், மாவோயிஸ்டுகள், சீனாவிற்கு ஆதரவானவர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். சமூக வலைதளங்களில் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்யும் வகையில் தவறான தகவல்களை பாஜக சங்கப்பரிவாரங்கள் பரப்பிவரும் வேலையில், அதற்கு ஆதரவாக BJP-RSS உடன் கள்ளக்கூட்டும், அம்பானியோடு நேரடி வர்த்தக உடன்படிக்கையும் வைத்திருக்கும் பேஸ்புக் நிறுவனம், விவசாயிகள் போராட்டக்குழுவால் உருவாக்கப்பட்ட கிசான் ஏக்தா மோர்ச்சா எனும் முகநூல் பக்கத்தை முடக்கியது. பிறகு எதிர்ப்புகள் எழவே வேறு வழியின்றி முகநூல் பக்கத்தை மீண்டும் விடுவித்தது.

ஒருபக்கம் கூலி விவசாயிகள், சிறுவணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள் அதற்கு நேர் எதிராக அரசும் ஆளும் வர்க்கங்களும் இந்த சட்டத்தை எப்படியும் நடைமுறைப்படுத்திவிட வேண்டுமென்று துடித்துக்கொண்டிருகிறது. கடந்த முப்பது வருடகால மறுகாலனியாக்க கொள்கைகளால் சிறிது சிறிதாக நஞ்சூட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும் இந்திய விவசாயத்தின் கடைசி மூச்சையும் நிறுத்தவே இச்சட்டங்கள் வழிசெய்யும். இச்சட்டங்களுக்கு எதிரான வாழ்வா..? சாவா..? போராட்டத்தில் விவசாயிகளுடன் கைகோர்த்து எதிர்த்து நிற்பதென்பது நமது கடமையாகும்.


பாலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க