தாஜ்மகாலுக்குள் நுழைந்து காவிக்கொடியை அசைத்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 4 இந்துத்துவா அமைப்பினரைக் கைது செய்துள்ளது போலீசு. கைது செய்யப்பட்ட நால்வரும் ஹிந்து ஜக்ரண் மஞ்ச் (Hindu Jagran Manch) எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அறியப்பட்டுள்ளது.

தாஜ்மகாலுக்குள் நுழையும்போது இருக்கும் பாதுகாப்பு சோதனைகளையும் மீறி அவர்கள் காவித் துணியை உள்ளே கொண்டு சென்றிருக்கின்றனர். தாஜ்மகாலில் செல்பி ஸ்டிக் அனுமதிக்கப்படுத்தால் அதை பயன்படுத்தி இந்துத்துவா அமைப்பினர் காவி கொடியை அசைத்து காணொளி எடுத்துள்ளனர்.

தாஜ்மகாலுக்குள் நுழைந்து காவி கொடியை காட்டிய வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து இந்து ஜக்ரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த கவ்ரவ் தல்வார், ரிஷி லாவனியா, சோனு பகெல் மற்றும் விஷேஷ் குமார் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க:
♦ ஆன்லைன் கல்வி : 71% சாலையோரம் வசிக்கும் மாணவர்கள் பாதிப்பு
♦ புனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு !

நான்கு பேரும் பிரிவு 153A-ன் ( இரு தரப்பினருக்கு இடையே மதரீதியான மோதலை தூண்டுவது ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதே இந்து ஜக்ரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் இதற்கு முன்னர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதியன்று தாஜ்மகாலுக்குள் நுழைந்து கங்கை நீரை தெளித்து தாஜ்மஹாலை இந்து முறைப்படி “தூய்மைப்”படுத்தினர். மேலும் தாஜ்மஹால் முஸ்லிம்கள் உடையது அல்ல என்றும் அது சிவனுடைய கோயில் என்றும் கூறினார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ராஷ்டிரிய பஜ்ரங்தள் எனும் சங்க பரிவார அமைப்பைச் சேர்ந்த பெண்கள், தாஜ்மகாலில் நடத்தப்படும் முசுலீம்களின் தொழுகையை எதிர்த்து ஆரத்தி எடுத்து கங்கை நீரைத் தெளித்தனர்.

கடந்த 2008-ம் ஆண்டில், சிவசேனாவை சேர்ந்த கும்பல் கூப்பிய கைகளுடன் தாஜ்மகாலுக்குள் பூஜைகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உத்தரப் பிரதேச போலீசால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பதினேழாம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜகான் ஒரு இந்துக் கோயிலை இடித்துவிட்டு தாஜ்மஹாலை கட்டினார் என்று ஒரு வதந்தியை 2017-ம் ஆண்டில் பாஜக தலைவரான வினய் கட்டியார் பரப்பினார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை அடிக்கடி கிளப்புவது பாஜக உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பலுக்கு வழக்கம்.

இதனையொட்டி தாஜ்மஹால் ஒருபோதும் இந்து கோயிலாக இருந்ததில்லை என்றும் அது எப்போதுமே ஒரு முஸ்லிம் கல்லறையாகவே இருந்தது என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆக்ரா நீதிமன்றத்தில் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் கூறியது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மதுரா, காசியில் கரசேவை நடத்தப்போவதாகக் கொக்கரித்தன சங்க பரிவாரக் கும்பல். மதுரா, காசிக்கு அடுத்து தாஜ்மகால்தான் இந்துத்துவக் கும்பலின் இலக்கு.

எப்போதெல்லாம் அரசாங்கம் சந்திக்க இயலாத அளவிற்கு மக்கள் பிரச்சினைகள் தலை தூக்கிக்றதோ அப்போதெல்லாம் மத ரீதியான சாதிய ரீதியான பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். ஒன்று மக்களை திசை திருப்புவது, இரண்டாவது மக்களை மதரீதியாக முனைவாக்கம் செய்வது.

மோடி ஆட்சியை அதிகாரத்திலுருந்து அகற்றுவது மட்டுமல்லாமல், சங்க பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்புகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்து அவர்களை தனிமைப் படுத்துகையில்தான் பாசிசத்தை முறியடிக்க முடியும்.


சுரேஷ்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க