இந்தியா முழுவதும் அரசு நிர்வாகத்தில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகளை ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் தன்வயப்படுத்தி கொண்டு தங்களுடைய இந்துராஷ்டிர நோக்கங்களுக்குப் பயன்படுத்தி வருகிறது. அதைபோல் பல அரசு உயர் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனிய சித்தாந்தங்களை உள்வாங்கியவர்களாகவும், அதை சுயமான முறையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்பவர்களாகவும் உள்ளனர்.
அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகிய இரு அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய நடவடிக்கையானது எதிர்க்கட்சி தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்செயலைப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் ஜூன் 11 அன்று சாட்னாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரான அனுராக் வர்மா மற்றும் நகராட்சி ஆணையரான ராஜேஷ் ஷாஹி ஆகியோர் அரசு அதிகாரிகளுக்குப் போடப்பட்டிருக்கும் உத்தரவுகளை மதிக்காமல் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்-சின் பகவத்துவஜம் எனப்படும் காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்தும் முறையைப் பின்பற்றியதோடு அதன் மேல் உறுதிமொழியும் ஏற்றுள்ளனர் அரசு அதிகாரிகள்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் பலரும், அரசு உயர் அதிகாரிகளின் செயல்களுக்குக் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு மதவெறி அமைப்பின் நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரியான மாவட்ட ஆட்சியரும், நகராட்சி ஆணையரும் எப்படிக் கலந்து கொள்ள முடியும் அதற்கான அதிகாரம் யார் வழங்கியது என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.
படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கே.கே.மிஸ்ரா “இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நடத்தை அரசு ஊழியர்களிடம் இருந்தால் எந்த வகையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். இதுபோன்ற அதிகாரிகள் எவ்வாறு பாரபட்சமின்றி ஜனநாயக ரீதியாக பணியாற்றுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதைபோன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தன்கா, “இதுபோன்ற அதிகாரிகளைத் தேர்தல் பணிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், ஒருபோதும் அவர்களைத் தேர்தல் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது” எனத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், இந்த இருவர் மீதும் மாநிலத் தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெயின்ஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு பல அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார் மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா. மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பிரசாந்த் சிங்குடன்தான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஒரு பொதுநிகழ்ச்சி என்பதால் நான் அதில் பங்கேற்றேன் என்றும் கூறியுள்ளார்.
பின் நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில் “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் கையை மடக்கி ‘துவஜ்’ செய்தோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் உணரவில்லை” என்றார். இவர்கள் இருவரின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில அரசு முன்வரவில்லை.
ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அரசு அதிகாரிகள் பங்கேற்பதற்கு 1981-ஆம் ஆண்டே அன்றைய காங்கிரஸ் அரசு தடை விதித்தது. “மத்தியப்பிரதேச மாநில சிவில் சர்வீஸ் சட்டம் 1965-இன் படி “ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் உட்பட எந்த மதம் சார்ந்த அமைப்புகளின் நிகழ்விலும் அரசு ஊழியர்கள் பங்கேற்பது பிரிவு 5(1) இன் கீழ் நடத்தை விதிகளை மீறுவதாகக் கருதப்படும்” எனச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
படிக்க: தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!
மேலும் “ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவுடன், பணியிலிருந்து நீக்கலாம்” என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடைகளை 2006-ஆம் ஆண்டு பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றதும் நீக்கிவிட்டார். “ஆர்எஸ்எஸ் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது” என்று கூறிவிட்டார். இதனால் இந்த இரு அதிகாரிகள் மீதும் நிர்வாக ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையே இருக்கிறது.
இதுபோன்று மாநில அரசாங்கங்கள் சட்டங்களைத் திருத்தி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இவர்களைப் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அரசு அதிகாரிகளை பணியில் நீட்டித்திருக்க வைப்பது ஏன் என எண்ணிப்பார்க்க வேண்டும். பாசிஸ்ட்டு-களுக்கு பார்ப்பனிய இந்துமதவெறி கருத்துக்களைக் கொண்டவர்கள் வெறும் அரசியல்வாதிகளாக இருந்தால் மட்டும் போதாது, மக்களை நேரடியாகக் கட்டுப்படுத்தக்கூடிய சித்தாந்த ரீதியான பயம் கொள்ளாத இதேபோல் ‘துணிச்சலாக’ செயல்படும் அரசு அதிகாரிகளும் தேவை. பா.ஜ.க கட்சியானது ஒருவேளை ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டால் இதுபோன்ற சித்தாந்த ரீதியான அரசு அதிகாரிகளின் உதவியோடே மீண்டும் தங்களுடைய ஆட்சியை நிறுவுவார்கள்.
அரசு அதிகாரிகள் எந்த ஒரு அரசியலும் சாராத நபர்கள் எனக் கூறிய நாட்கள் முடிந்து இன்று வெளிப்படையாக தங்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களாகக் காட்டிக் கொள்வதோடு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதென்பது மிக ஆபத்தானது. எனவே தேர்தலில் மட்டும் பாசிசத்தை வீழ்த்தினால் போதாது. அரசு கட்டமைப்பில் இருக்கும் இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட நபர்களைத் துடைத்தெறிய இக்கட்டமைப்புக்கு மாற்றானதை நோக்கி நாம் நகர வேண்டும்.
நன்றி: தீக்கதிர்
சித்திக்