மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!

அமெரிக்காவில் மோடியிடம் கேள்வியெழுப்பிய தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையாளரும் காவி-காப்பரேட் பாசிஸ்டுகளால் ட்விட்டரில் தாக்குதலுக்குள்ளாகிறார்.

0

ஜூன் 22 அன்று, அமெரிக்காவில் ஓர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற பத்திரிகையின் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சப்ரினா சித்திக், இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறை, வெறுப்பு பிரச்சாரங்கள் குறித்து கேள்வி கேட்டதன் காரணமாக, அவர் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க சங்கி கும்பலால் சமூக ஊடகங்களில் தாக்குதல்குக்குள்ளகியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நரேந்திர மோடியிடம் சப்ரினா சித்திக், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியா நீண்ட காலமாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் உங்கள் அரசாங்கம் மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், உங்களை விமர்சிப்பவர்களை மௌனமாக்க முயல்வதாகவும் கூறும் பல மனித உரிமைகள் குழுக்கள் உள்ளன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், நிலைநிறுத்தவும் என்ன நடவடிக்கைகளை எடுக்க நீங்களும் உங்கள் அரசாங்கமும் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

படிக்க : அமெரிக்காவில் பாசிச மோடியை விமர்சிக்கும் பதாகைகள்!

இந்தியாவில் சிறுபான்மையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒருபுறமிருக்க, ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேள்வி எழுப்புவது மோடியின் பிரதமராக இருந்த காலத்தில் ஒரு அரிய தருணம்.

இந்தியாவில் சிறுபான்மையினரின் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் ஒன்பது ஆண்டுகால மோடி ஆட்சியில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்வது என்பதே ஒரு அரிய வகை தருணம் என்கிறது ஊடகங்கள். அதில் வந்து தனது அரசின் காவி பயங்கரவாத செயல்பாடுகளை விமர்சித்து கேள்வியெழுப்பினால் என்ன செய்வார் மோடி. ஆகாயம் இடியும் அளவிற்கு ஓர் பொய் மூட்டையை வீசியெறிந்துள்ளார் பாசிஸ்டு நரேந்திர மோடி.

இதற்கு பதிலளித்த மோடி, தனது ஆட்சியின்போது, “சிறுபான்மையினர் பாகுபாடு காட்டப்படுவதாக மக்கள் நினைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஜனநாயகம் நமது ஆவி. ஜனநாயகம் நம் நரம்புகளில் ஓடுகிறது. நாங்கள் ஜனநாயகத்தை வளர்க்கிறோம். நமது அரசாங்கம் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை எடுத்துக் கொண்டுள்ளது. ஜனநாயகத்தை வழங்க முடியும் என்பதை நாங்கள் எப்போதும் நிரூபித்துள்ளோம். சாதி, மதம், பாலினம் ஆகியவற்றால் பாகுபாடு காட்டுவதற்கு எங்கள் நாட்டில் முற்றிலும் இடமில்லை” என்று மிகப்பெரும் ஓர் புலுகு மூட்டையை கட்டவிழ்த்துவிட்டார்.

அதை தொடர்ந்து வெளிப்படையாக பிஜேபி மற்றும் சங் பரிவார ஆதவரவு ட்விட்டர் கணக்குகள் சித்திக்கைப் பின்தொடர்ந்து, “வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு பாகிஸ்தானிய இஸ்லாமியர் இன்று செய்தியாளர் சந்திப்பில் மோடியை கேள்வி கேட்டிருந்தார். இந்த பொய்யை கூறும் சப்ரினா சித்திக் தனது வாழ்நாளில் பெண்கள், சிறுபான்மையினர் மீதான பாகிஸ்தானின் கொடூர அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவள் இந்தியாவை மட்டுமே தாக்குகிறாள். பாகிஸ்தானியர்களின் டி.என்.ஏ.வில் வெறுப்பு இருக்கிறது.” என்று இஸ்சுலாமிய வெறுப்பை ஒரு ட்விட் கக்கியது.

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் துறைத் தலைவர் அமித் மாளவியா, சித்திக்கின் கேள்வி “உள்நோக்கம் கொண்டது” என்று விவரித்தார். மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பிடனின் பதில்கள் “டூல்கிட் கும்பலுக்கு” (toolkit gang) ஒரு “எதிர்ப்பு” என்று அவர் கூறினார். பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான ட்விட்டர் கணக்குகள் மற்றும் இந்துமதவெறி கும்பலின் ட்விட்டர் கணக்குகள் சப்ரினாவை “இஸ்லாமியர்” என்று முத்திரை குத்தி தாக்குதல் தொடுத்து வருகிறது.

இந்திய முஸ்லீம்களை பற்றிய கேள்வியை சப்ரினா கேட்டதில் இருந்து, அவர் பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் அவ்வாறு செய்கிறார் என்று வெறுப்பை பிரச்சாரத்தை செய்துவருகிறது சங்கி கூட்டம். மிகப்பெரிய ஆர்.எஸ்.எஸ் – பாஜக சார்பு இணையதளங்களில் ஒன்றான OpIndia, சப்ரினா சித்திக் “பாகிஸ்தான் பெற்றோரின் மகள்” மற்றும் “இஸ்லாமியர்களின் கருத்துக்களை எதிரொலிப்பதாக” ஒரு இஸ்லாமிய வெறுப்பு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

படிக்க : மோடியின் உரையை புறக்கணித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தன்னை ‘இந்தியாவுக்கு எதிரானவர்’ என்று அழைக்கும் ஆன்லைன் தாக்குதல்களைத் தடுக்க, சித்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் பிறந்த தனது தந்தையுடன் இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்டார்.

நரேந்திர மோடி விமர்சனத்திற்கு அப்பார்பட்ட நபர் அல்ல… அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊழியர். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தின் முகம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவிக்கும்பலை இந்தியாவில் அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவின் இடத்தையும் அனைவரும் அறிவர். அதேபோல் தற்போது அமெரிக்காவில் மோடியிடம் கேள்வியெழுப்பிய தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகையாளரும் காவி-காப்பரேட் பாசிஸ்டுகளால் ட்விட்டரில் தாக்குதலுக்குள்ளாகி வருகிறார். இதில் இருந்தே, மோடியும் மோடியின் ஆதரவாளர்களும் ஜனநாயகம் அற்ற பாசிசக் கூட்டம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க