Tuesday, July 14, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் கல் குவாரிக்காக விவசாயிகளை விரட்டும் அரசு ! - PRPC ஆய்வறிக்கை !

கல் குவாரிக்காக விவசாயிகளை விரட்டும் அரசு ! – PRPC ஆய்வறிக்கை !

-

கல் குவாரிக்காக விவசாயத்தை விரட்டும் மாவட்ட கலெக்டர் !

துரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் , ஜல்லிக்கட்டுப் புகழ் அலங்காநல்லூர் ஒன்றியம் வைகைப் பாசன வசதி பெற்ற வளமான பூமி. சமவெளிப் பகுதியைக் கடந்து வடக்கே சென்றால் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீட்சியாகச் சிறு சிறு மண் மலைகள். அதன் மேடான அடிவாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. அடர் சிவப்பு மண்ணால் போர்த்தப்பட்டுள்ள இந்த மண் மலைகளுக்கு உள்ளே புதைந்திருப்பது விளைந்த கரும் பாறைகள்.

விலை மதிப்புள்ள கனிம வளம் (புளு மெட்டல்).  அந்த மண் மலைகளில் ஒன்று பெருமாள் மலை. 66 மேட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு கிராமங்கள் பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ளன. நெடுங்காலமாக உழைத்து அந்த மண்ணைச் செழிப்பாக்கி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர் அந்த மக்கள். 66 மேட்டுப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 4 கிராமங்களில் ஒன்று 66 M உசிலம்பட்டி .

எம்.உசிலம்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் உள்ளன. எல்லோரும் சிறு விவசாயிகளாகவும், கூலி வேலைக்குச் செல்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது விவசாய நிலங்களில் கொய்யா, மாமரத் தோட்டங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்தச் செவலை மண்ணில் விளையும் கொய்யாவுக்கு ஒரு தனிச் சுவையும் சந்தையில் அதற்கென தனி மவுசும் விலையும் இருக்கிறது. கொய்யாத் தோட்டங்களோடு சிறு தானியங்களையும் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி தண்ணீரை உறிஞ்சி தொட்டிகளில் தேக்கி சொட்டு நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்து எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

சேந்தமங்கலம், மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி ,எம்.உசிலம்பட்டி மக்களின் வாழ்க்கையைப் பறிப்பதற்காக, பசுமையான பெருமாள் மலையையும் அதன் அடிவாரத்தையும் குடைந்து கல்குவாரி அமைக்க ஆதி முத்தன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி வருகிறார். பக்கத்து கிராமமான பாலமேட்டில் அவர் ஏற்கனவே நடத்தி வந்த கல் குவாரியில் விபத்துக்கள், உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டதனால் அங்கிருந்து மக்களால் விரட்டப்பட்டார்.

இருந்தாலும் ருசிகண்ட பூனையாக பெருமாள் மலையைக் குறிவைத்து மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து வந்தவர்களில் சிலரை ஆசைகாட்டி வளைத்து, 4 கிராமத்தினரின் எதிர்ப்பையும் மீறி 30 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார் ஆதி முத்தன். இப்போது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு 50 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வளைத்து வேலி போட்டுள்ளார். குவாரி டெண்டர் அறிவிக்கப்பட்டபோதே எம்.உசிலம்பட்டி மக்கள் பல முறை போராடித் தடுத்துள்ளனர். மக்களின் கடும் எதிர்ப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு மாவட்ட நிர்வாகம் ஆதி முத்தனுக்கு உரிமம் வழங்கி விட்டது.

ஏற்கனவே பாலமேடு பகுதியில் சில குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சுற்றுச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மரம், செடி, கொடிகள், வீடு வாசல் அனைத்தும் குவாரி தூசியினால் போர்த்தப்பட்டுள்ளன. பலர் நுரைஈரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாகப் பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்துக்குத் தோண்டியதால் அதில் நீர் ஊற்று ஏற்பட்டு நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குப் போயுள்ளது.

கிரசர் இயந்திரங்களின் ஓயாத இரைச்சல், பாறையை உடைக்க வெடி வைப்பது ஒலி, காற்று மாசு ஏற்படுத்துகின்றது. டிப்பர் லாரிப் போக்குவரத்தினால் சாலைகள் பழுதுபட்டுள்ளன. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கிரமங்களுக்கு அரசு பேருந்துகள் வர மறுக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டாண்டு காலமாய் நடைபெற்று வரும் விவசாயம் அழிக்கப்படுகிறது.

இந்த ஆபத்துக்கு எதிராகத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்த மக்கள் போராடி வருகின்றனர். சாலை மறியல், முற்றுகைப் போராட்டம், செல்-கோபுரத்தில் ஏறிப் போராட்டம் என பல வகையிலும் போராடியதோடு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டத்தையும் எந்த அரசியல் கட்சியின் துணையும் இன்றித் தாமாகவே நடத்தியுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 60-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு இவர்களின் குரலைச் செவி கொடுத்துக் கேட்கவில்லை. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் எடுத்துச் சொன்னபோது, சட்ட விதிகளின்படி இரண்டு குவாரிகளுக்கு இடையே 300 மீட்டர் இடைவெளி இருந்தால் அனுமதி வழங்கலாம். அரசுக்கு வருவாய் வருவதைத் தடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். என்னே,தேசப் பற்று! இவரது (மக்கள் விரோத) சேவையைப் பாராட்டி அண்மையில் இவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 23.07.2017 அன்று இந்தப் பகுதியைப் பார்வையிட்ட வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், பெருமாள் மலையில் கல் குவாரி வராது. மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளார். மலைப் பகுதிக்குப் போவதற்கு பாதை கிடையாது. அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் ரோடு போட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மரம் வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், சமூகக் காடு வளர்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலமும், இயற்கையாகவும் லட்சக் கணக்கான மரங்கள் பெருமாள் மலையில் உள்ளன. ஆனால் மரங்களே இல்லாத பொட்டல் காடு, அருகில் விளை நிலங்களே இல்லை என்று வருவாய்த் துறை நீதிமன்றத்தில் எழுத்துமூலம் பொய்யான தகவல் தெரிவித்துள்ளது. லட்சக் கணக்கான மரங்கள் இருப்பதற்கான ஆதாரம் இவர்களிடம் உள்ளது.

கிராம மக்கள் பலரையும் சந்தித்துக் கருத்துக்களைக் கேட்டோம். அவர்களின் குரலில் ஏமாற்றமும் வலியும் வெளிப்படுகிறது. அதே வேளையில் எது வந்தாலும் சந்திப்போம். குவாரியைத் தடுத்து நிறுத்துவோம் என்கிற உறுதியையும் காண முடிந்தது.

பலர் தங்கள் குடும்ப வாழ்வின் ஆதாரமாக இருந்து வரும் விவசாய நிலத்தை விட்டுத்தர முடியாது என்று போராடி வருகிறார்கள். அவர்களில் பலர் இளைஞர்கள். விவசாயத்தைத் தொடர்கின்றனர். பொறியாளர் முத்துராஜா, சொந்தமாகத் தொழில் செய்வதோடு விவசாயமும் செய்துவருகிறார் போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் அவர் கூறியது:

“ 10 வருசத்துக்கு முன்னால் பக்கத்துக் கிராமமான மாணிக்கம்பட்டிக்கு கல்குவாரி வந்தபோது அதன் பாதிப்பை நாங்கள் உணரவில்லை. இன்று தான் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. நிலத்தடி நீர்நிலைகள் வற்றிப் போகிறது, மலை மொட்டையாகிறது, விளைநிலங்கள் மலடாகிறது, கிராமம் காலியாகிறது.

பெருமாள் மலையில் கல் குவாரி போட (ஆதி முத்தன்) ஆதிஷ் நிறுவனம் 2 ஆண்டுகளாக முயற்சிக்கிறது. நாங்களும் விடாமல் போராடி ஒவ்வொரு கட்டத்திலும் தடுத்து வருகிறோம். பக்கத்து கிராமத்தினரும் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். ஆனாலும் மதுரை கலெக்டரால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகிறோம். இந்த முறையும் டெண்டர் விடப்பட்டபோது மிகப் பெரிய போராட்டம் நடத்தினோம். ஒவ்வொருமுறையும் கல்குவாரிக்கு அனுமதி தரமாட்டோம் என்று மாவட்ட கலெக்டரால் உறுதி அளிக்கப்படுகிறது. ஆனால் டெண்டர் விடப்பட்டு கல்குவாரி அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆதிஷ் அரசு நிலத்தைக் கைப்பற்றி குவாரிக்காக சாலை போட முயன்ற போது 8 நாட்கள் விடாமல் போராடினோம். தாசில்தார் அந்த சாலை வராது என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டோம். ஆனால் டிசம்பர் 2-ம் தேதி காலை 11 மணி அளவில் ஆதி முத்தன், டிராக்டர்களில் அடியாட்களையும் கற்களையும் கொண்டு வந்து சாலை போடத் தொடங்கினார். நாங்கள் தடுக்க முயற்சி செய்த போது சரமாரியாகக் கற்களை வீசி எங்களைத் தாக்கினார். 7 பேர் காயம் அடைந்தனர். ஒருவருக்குக் கால் முறிந்தது. ஒருவருக்குக் கை முறிந்தது. பொக்லைன் எந்திரத்தின் பக்கெட்டை வைத்து அடித்ததில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. வீட்டின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டால் வீடு எரிந்தது. டிராக்டரையும், இரு சக்கர வாகனத்தையும் அவர்களே எரித்து விட்டு எங்கள் மீது பழிசுமத்தினார்கள். சம்பவம் நடந்து கொண்டிருந்த போது பாலமேடு போலீசுக்கு போன் போட்டேன். போலீசு வரவே இல்லை. புகார் கொடுக்கப் போன எங்களை அடித்து மிதித்து உட்கார வைத்தனர். எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரிடம் எங்கள் தரப்பை எடுத்துக் கூறியபோது அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

சுற்றுப்பட்டு கிராமங்களில் இருந்து சம்பவத்தைக் கேள்விப்பட்டு மக்கள் பாலமேடு காவல் நிலையத்திற்கு வரத்தொடங்கினர். இதனால் உஷாரான, சமய நல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் குமார், பாலமேடு கடைவீதியில் நிற்கிற மக்கள் அனைவரையும் அடித்து விரட்ட உத்தரவிட்டார். அத்துடன் கைது செய்யப்பட்ட எங்களை வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டுபோய் விட்டனர். இப்படி மக்களின் போராட்டத்தைக் காயடித்தது போலீசு.

அங்கேதான் தவமணி தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். கொலை முயற்சி, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து மாஜிஸ்டிரேட் முன்பு நாங்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது எப்.ஐ.ஆர்.ஐப் படித்துப் பார்த்த நீதிபதி எஸ்.ஐ. வீரசோழியைப் பார்த்து, “தவமணி என்பவர் உங்களை அரிவாளால் வெட்ட வந்ததாகவும் அது தொப்பியில் பட்டதனால் தப்பித்ததாகவும் கொலை முயற்சி வழக்குப்போட்டுள்ளீர்களே. அப்படியானால் அவர் வெட்ட வந்தபோது நீங்கள் கையால் தடுத்து கையில் வெட்டுக்காயம் இருக்க வேண்டுமே. இருக்கா ? ஏனய்யா இப்படி பொய் வழக்குப் போட்டு ஏழை மக்களைக் கொடுமைப்படுத்துகின்றீர்கள்? இந்த வழக்கு நிலைக்காது, தோற்றுப் போகும்” என்று சொன்னார். ஆனால் அவர் எங்களை விடுவிக்கவில்லை. திண்டுக்கல் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்துப் போடவேண்டும் என்ற நிபந்தனையுடன் பதிமூன்று நாட்கள் கழித்து ஜாமீன் கொடுத்தார். 36 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டோம்.

தவமணியைப் பணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரச்சினையில் தொடர்பு இல்லாத, திருமணமாகி கோவையில் வசிக்கும் அவரது மகனும் திண்டுக்கல்லில் கல்லூரியில் படிக்கும் மகனும் வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஆதி முத்தன் அடிஆட்கள் மீது கொடுத்த புகாரை காவல் ஆய்வாளர் கிழித்துப் போட்டுவிட்டு அவர்களாக ஒரு புகாரை எழுதி எங்கள் கிராமத்து இளைஞர்கள் இரண்டு பேரை நள்ளிரவில் தூக்கிப் போய் அடித்து உதைத்து கையெழுத்து வாங்கி அதை வைத்து அவர்கள் 10 பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர். 7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூல காரணமாகிய ஆதி முத்தன் கைது செய்யப்படவில்லை.

பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்ல நீரோடை ஒன்றுதான் பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆடுமடுகள் மேய்சலுக்காகப் போகும் 3 அடி பாதையை வருவாய் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அடாவடியாக விரிவுபடுத்த ஆதிமுத்தன் முயற்சி செய்ததை தடுத்த வட்டாட்சியர் ஒரே வாரத்தில் இடம் மாறுதல் செய்யப்பட்டார்.இது மாவட்ட ஆட்சியருக்குத் தெரியாமல் நடந்திருக்குமா? இப்போது புதிதாக வந்திருக்கும் வட்டாட்சியர் நிலம் எனக்குச் (அரசுக்கு) சொந்தமானது. நீங்கள் யார் கேள்வி கேட்க என்று மக்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்.ஆனால் ஆதி முத்தனைப் பாதை போட அனுமதிக்கிறார். இது யாருக்கான நியாயம்? என்று கேட்கிறார் பொறியாளர் முத்து ராஜா.

”இந்தப் போராட்டத்துக்கு நான்தான் காரணம் என்று கூறி என்னைத் தனிமைப்படுத்திப் பாலமேடு காவல் நிலையத்திலும் ,பின்னர் வாடிப்பட்டி காவல் நிலையத்திலும் வைத்து கொடூரமாகத் தாக்கினர். கைவிரல்களை ஒடித்தனர். காவல் உதவி ஆய்வாளர்கள் வீரசோழி ,மருதமுத்து ஆகியோர் மிகக் கடுமையாகத் தாக்கினர். ’அந்த நிலத்தை நீ வைத்து மயிரா புடுங்கப் போற? அதான் கேட்கிற பணத்த தருறேன்னு சொல்லுறார்ல குடுக்க வேண்டியது தானே? உன்னாலதான மத்தவனுங்களும் நிலத்த குடுக்க மாட்டேன்கிறான்’ என்று சொல்லி அடித்தார்கள்.என்னுடைய மகன்களுடைய எதிர்காலத்தையும் பாழாக்கிவிடுவோம் என்று மிரட்டினார்கள்.என்னை அடித்து சித்திரவதை செய்ததை நீதிபதியிடம் சொல்வேன் என்று சொன்னதற்கு ,சொன்னால் கூடுதல் தண்டனை கிடைக்கும் என்று மிரட்டினார்கள்” என்றார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திவரும் விவசாயி தவமணி.

இவருடைய நிலத்துக்கு ரூ.ஒரு கோடி வரை பேரம் பேசியுள்ளார் ஆதி முத்தன். நிலத்தை விற்றுவிட்டு தரிசாகிப் போனவர்களை நினைத்துப் பார்த்த தவமணியும் அவரது மனைவியும் உயிரே போனாலும் நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

மனைவி மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இவர்களுடைய மூத்த மகன் இந்திய ராணுவத்தில் பணி புரிகிறார்.இப்போது ஆதிமுத்தன் அந்தப் பாதையைப் பயன்படுத்துகிறார். யாரிடமும் புகார் தர முடியாது. வழக்கும் போட முடியாது. ஒரே தீர்வு நிலத்தை விட வேண்டும் அல்லது ஆதிமுத்தனை மக்கள் ஒன்று திரண்டு விரட்டவேண்டும்” என்கிறார் தவமணி மக்களின் பிரதிநிதியாக.

இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் மாபியாக்கள் கிரானைட் பி.ஆர்.பி.ஆகட்டும், ஆற்றுமணல் ஆறுமுகசாமி ஆகட்டும்,தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் ஆகட்டும் அவர்கள் தனியாக இல்லை.அரசு கட்டமைப்பு முழுவதுமே அவர்கள் பக்கம் தான் இருக்கிறது. அவர்கள் எந்த சட்ட திட்டங்களையும் கடைபிடிப்பதில்லை.அவர்களது ஒரே நோக்கம் கொள்ளை லாபம்.அதற்காக லஞ்சம்,ஊழல், முறைகேடு,கொலை கலவரங்களில் ஈடுபடுவது.சுற்றுச் சூழல் பாதிப்பு,லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையவே கிடையாது.விவசாயத்தை அழிக்கும் உலகமயமாக்கத் திட்டத்தில் இவர்கள் கருவியாக செயல்படுகின்றனர்.இன்னும் காவேரி டெல்டா,கதிராமங்கலம், நெடுவாசல்,காடு மலைகள்,ஆறுகள்,கனிம வளங்கள் அனைத்தும் அரசினால் சூறையாடப்படுகிறது. சமூகத்தின் கடைமடைப் பகுதியில் நிற்கும் விவசாயிகள் கேட்பாரின்றி பலியாக்கப்படுகின்றனர்.இதன் காரணமாக இந்த அரசு கட்டமைப்பை நம்பாமல் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அதுதான் எம்.உசிலம்பட்டி கிராமத்திலும் உண்மையாகி இருக்கிறது.

தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.செல்:9443471003

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்