தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!

தாம்பரம் ரயில் நிலையம் அருகில், மதுரையில் நடக்கவிருக்கும் மே 1 மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார தோழர்களை மிரட்டி பிரசுரங்களைப் பிடிங்கி தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு போலீசு.

சுற்றி வளைக்குது பாசிச படை:  வீழாது தமிழ்நாடு துவளாது போராடு” மே 1 மதுரை மாநாட்டுக்கான பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று (02.04.2023) காலை 9 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவில் மரத்தடியில் அமர்ந்து மாநாட்டு பிரச்சாரத்திற்கான பிரசுரங்களை மக்கள் அதிகாரம் தோழர்கள் மடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போலீசு உடையில் இல்லாத ஒருவர் (போலீசு ஆய்வாளர்) ”இங்கு என்ன நடக்கிறது; யார் நீங்கள்” என்று கேட்டார். தோழர்களிடம் பிரசுரத்தை வாங்கிப்படித்துவிட்டு “இதுபோன்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது. மக்கள் அதிகாரம் தடைசெய்யப்பட்ட அமைப்பு. நீங்கள் எப்படி பிரச்சாரத்தில் ஈடுபடலாம்; நீங்கள் மக்களுக்கு விரோதமாக பிரச்சாரம் செய்பவர்கள்” என்று கூச்சலிட்டார்.  “இங்கெல்லாம் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது” என மிரட்டும் தொனியில் பிரசுரங்களை பிடிங்கி தள்ளுமுள்ளில் ஈடுபட்டார். ”இது உழைக்கும் மக்கள் பணத்தில் தயார் செய்த பிரசுரம்; இதிலிருந்து கையை எடுங்கள்” என்று தோழர்கள் போலீசுக்கு பதில் கூறினர்.

“இங்கு பிரச்சாரம் செய்யவரவில்லை; நாங்கள் வெளியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காகவே பிரச்சுரங்களை மடித்து கொண்டிருந்தோம்” என கூறிய பிறகும் தோழர்களை உரத்த குரலில் “வெளியே போங்கடா” என ஒருமையில் ஏசி அதிகார திமிருடன் நடந்துகொண்டார். “உங்களை கைது செய்து போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்து செல்ல வேண்டும்” என கூறிய அவர் போலீசு உடையில் இல்லாத  மற்றொரு நபரையும் சேர்த்துக்கொண்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டார். மிரட்டிய போலீசிடம் “நாங்கள் பிரச்சினையை சந்திக்க தயார்” என தோழர்கள் பதிலளித்தனர்.


படிக்க: மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! | ம.க.இ.க மனு


அங்கு கூடியிருந்த வியாபாரிகள் மக்களிடம் சத்தமாக “நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள். மக்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசும் எங்களை பேசவிடமால் தடுத்து இப்படி அராஜகம் செய்கிறார்கள்; இங்கெல்லாம் பேச கூடாது வெளியே போங்கள் என  மிரட்டுகிறார்கள்”  என்று முறையிட்டனர்.

தலைநகர் சென்னையிலே இப்படி நடக்கும் அதேவேளையில், முன்னதாக மதுரையில் மாநாட்டுக்காக 40-க்கும் மேற்பட்ட சுவர் எழுத்துகளுக்கு வெள்ளை அடித்துள்ளது மதுரை காவித்துறை. இப்படி மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யும் தோழர்களை குறிவைத்து மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகிறது போலீசு.

இதுபோன்ற சுவரெழுத்து விளம்பரங்களும், பிரச்சாரங்களும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. பாசிச எதிர்ப்பு குரல்களை ஒடுக்குவதற்கு நாடு முழுவதும் அதிகார வர்க்கத்தை ஆக்கிரமித்துள்ள பாசிசகும்பல், தமிழ்நாட்டிலும் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி வருகிறது. தனது அடிவருடிகளை உருவாக்கி பாசிச எதிர்ப்பு குரல்களை முடக்க முற்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிராகப் போராடும் முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் மீதான போலீசுத்துறையின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரணியில் திரளுவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க