ழல் செய்த காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டே துரத்த ‘அவதாரம்’ எடுத்திருப்பதாக பாஜக-வினர் வாய்கிழிய பேசுவதுண்டு.  உண்மையில் ஊழல், முறைகேடுகள் செய்வதில் காங்கிரசுக்கே பாடம் எடுக்கக்கூடியவர்கள் பாஜக-வினர்.  தங்களுடைய முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் நேர்மையான அதிகாரிகளை பந்தாடுவதில் பாஜக – காவிகள் சளைத்தவர்கள் அல்ல.

அரியானா மாநிலத்தில் பாஜக அரசின் முறைகேடுகளுக்கு துணை போகாத அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி 2014-ஆம் ஆண்டு அந்த அரசு அமைந்ததிலிருந்து ஆறு முறை துக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.

1991-ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் அசோக் கெம்கா, கடந்த 27 ஆண்டுகளில் 52 முறை பணிமாற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார். அரியானாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் முதன்மை செயலராக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் முதன்மை செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அசோக் கெம்கா

ஆரவல்லி மலைத் தொடர்களில் உள்ள நிலங்களை ஒருங்கிணைத்து ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கு பயன்படுத்த, அரியானாவை ஆளும் அரசுகள் முயற்சித்து வருகின்றன. 2012-ஆம் ஆண்டு நில ஒருங்கிணைப்பு துறை (Consolidation of Holdings) இயக்குனராக இருந்தபோது, ஆரவல்லி மலைத்தொடர்களில் நிலங்களை கையகப்படுத்த தடைவிதித்து ஆணை வெளியிட்டிருந்தார். ஆரவல்லி மலைத்தொடர்களில் ஒட்டியுள்ள 2500 ஏக்கர் நிலம் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளவை என ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, 3000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியை கையகப்படுத்த அந்த ஆணை தடை விதித்தது.

இந்த நிலையில், அரியானாவை ஆளும் பாஜக அரசு கடந்த வாரம், அந்த ஆணையை நீக்கி ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கு நிலங்களை பயன்படுத்தலாம் என சட்டப் பேரவையில் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது.  ரியல் எஸ்டேட் முதலாளிகளின் அழுத்தத்தின் பேரில் இந்த சட்ட திருத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மற்றொரு புறம், இந்த சட்ட திருத்தத்தால் சுற்றுச்சூழல் சீரழிவும் வேகமாக நடக்கும் என சூழலியலாளர்கள் எச்சரித்தனர்.

அதிகாரியாக இருந்து இயற்றப்பட்ட ஆணையை நீக்கியிருப்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் அசோக் கெம்காவிடம் நேர்காணல் செய்து வெளியிட்டிருந்தது.  அதில், ரியல் எஸ்டேட் முதலைகளின் பசிக்கு அரியானா அரசு சட்டதிருத்தம் இயற்றியிருப்பதாக கூறியிருந்தார் கெம்கா.

“நில தரகர்களுக்கு உள்ளூர் மக்களின் சூழலை காக்க வேண்டும் என்பதில் எந்த அக்கறையும் இருக்காது. கட்டுப்படுத்த முடியாத நகரமயமாக்கல் தண்ணீர் பிரச்சினை, காற்று மாசுபாட்டை, வறட்சியை ஏற்படுத்தும். இந்தப் பேராசை எதிர்கால சந்ததியை பாதிக்கும்” என அரியானா அரசின் ‘வளர்ச்சி’ திட்டத்தின் பின்னால் இருக்கும் அரசியலை விளக்கியிருந்தார்.

ஆரவல்லித் மலைத்தொடரை விழுங்கி கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்.

இத்தகைய விமர்சினங்களுக்குப் பின், பாஜக அரசு அசோக் கெம்காவை ஆறாவது முறையாக விளையாட்டு துறைக்கு தூக்கியடித்திருக்கிறது. ஆளும் அரசுகளால் தொடர்ச்சியாக பணிமாற்றம் செய்யப்படுவது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கெம்கா,

“நான் யாருடைய விருப்பத்தை பாதுகாப்பது? உங்களுடைய விருப்பத்தையா அல்லது மக்களுக்கானதையா?  உங்களுடைய அகந்தை, என்னை காலில் போட்டு மிதிக்கிறீர்கள். மகிழ்ச்சியுடன், மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறேன். மீண்டும் ஒரு முறை ஏற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டும் குர்கானில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்த ஒப்பந்ததை ரத்து செய்து ஆணையிட்டவர் கெம்கா. அதற்காக, அப்போதைய காங்கிரஸ் அரசு தவறான முறையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகக் கூறி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2014-ம் ஆண்டு பாஜக மாநிலத்தில் ஆட்சியமைத்த போது, அந்தக் குற்றப்பத்திரிகை திரும்பப் பெறப்பட்டது.

ஆனால், அரசுகள் மாறினாலும்  அரசுகளை இயக்கும் முதலாளித்துவம் எப்போதும் மாற்ற முடியாததாகவே இருக்கிறது. முதலாளித்துவத்தை வளர்த்துவிடுவதில், அரசின் சொத்துக்களை தாரை வார்ப்பதில் புதிய உச்சங்களை எட்டும் பாஜக, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை ஆணையை நீக்கியிருக்கிறது. அதுகுறித்து கருத்து சொன்ன அதிகாரியை பந்தாடியிருக்கிறது.


நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்க்ரால்
அனிதா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க