கேரளாவின் கடற்கரையில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மீனவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறினாலும், இந்த அதானியின் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என போராடும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போராடும் மகக்ளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில், துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்கள் மேலும் தொடர்ந்தால், துறைமுக கட்டுமான பணிகளை முடிக்கும் காலக்கெடுவான டிசம்பர் 2023-ஐ தாண்டி நடக்கக்கூடும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு போராட்டும் மக்களிடம் மாநில அரசு போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக அரசாங்கம் கூறினாலும், தங்களின் கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் எதனையும் வழங்கவில்லை என போராடும் மக்கள் கூறுகின்றனர்.
விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகமானது ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 5, 2015 அன்று அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. தற்போது 70% பணிகள் முடிவடைந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர், ஆனால் கடந்த சில மாதங்களாக மீனவர்களின் போராட்டங்களால் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை 2,960 மீட்டர் நீளமுள்ள பிரேக்வாட்டரில், சுமார் 1,400 மீட்டர்கள் நீளத்திற்கு 30 லட்சம் டன் கிரானைட் பாறைகளைப் பயன்படுத்தி கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. “பிரேக் வாட்டர் கட்டுமானத்தை முடிக்க மொத்தம் 70 லட்சம் டன் கிரானைட் பாறைகள் தேவை. முன்பு ஒரு நாளைக்கு சுமார் 15,000 டன் கற்பாறைகளை கொட்டினோம், ஆனால் இப்போது அதை ஒரு நாளைக்கு 30,000 டன்கள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று துறைமுகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கட்டுமானப் பணிகள் காரணமாக, கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. எனவே துறைமுகம் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என போராடும் மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கடல் அரிப்பால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு, கடலோர அரிப்பைத் தணிக்க நடவடிக்கை, வானிலை எச்சரிக்கை விடுக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையான ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், மீன்பிடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும், திருவனந்தபுரம் மாவட்டம் அஞ்சுதெங்கு முதலைப்பொழி மீன்பிடி துறைமுகத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடும் மக்கள் வலியுறுத்தினர்.
படிக்க : விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!
2015 டிசம்பரில் இருந்து துறைமுகக்கட்டுமான பணிகள் நடைபெறுவதன் காரணமாக கடற்கரையில் குறிப்பிடத்தக்க மண்அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் 56,000 மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலைமை ஏற்படவுள்ளதாகவும் துறைமுக எதிர்ப்பு போராட்டத்தின் தலைவர்கள் கூறுகின்றனர்.
“எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். செய் அல்லது செத்து மடிவதுதான் பிரச்சினை” என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர் ஜோசப் ஜான்சன்.
வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் நாசம் செய்யவிற்கும் தனியார் நிறுவனமான அதானி குழுமத்தின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான மீனவ மக்களின் போராட்டத்திற்கு ஜனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள் ஆதரவு கரம்நீட்டவேண்டியது மிகவும் அவசியம்.
புகழ்