தாராவி மறுசீரமைப்பு திட்டம் என்ற பெயரில் துரத்தப்படவிருக்கும் தாராவி உழைக்கும் மக்கள்!
5,069 கோடிக்கு அதானி நிறுவனத்திற்கு டெண்டர் விட்டுள்ளது சிவசேனா-பாஜக அரசு!
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் சுமார் 6.5 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இப்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ஜவுளி பொருட்கள் உற்பத்தி மற்றும் வீட்டு வேலைகள் செய்து தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய மாநில அரசு தாராவியை மறு சீரமைப்பதற்க்கான திட்டம் ஒன்றை கடந்த 1999 ஆம் ஆண்டிலேயே முன்வைத்தது. ஆனால், பலமுறை முடிவு செய்தும் டெண்டர் விடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசு இத்திட்டத்தை அமல்படுத்த முன்முனைந்து பணியை தொடங்கியுள்ளது.
இந்த டெண்டரில் தென்கொரிய ஐக்கிய அமீரக நாட்டு நிறுவனங்கள் உட்பட 8 கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் இறுதி ஏலத்திற்கு அதானி குழுமத்தை சார்ந்ந அதானி பிராப்பர்ட்டீஸ், டி.எல்.எப் மற்றும் ஸ்ரிநமான் டெவலப்பர்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. 259 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆரம்பக்கட்ட முதலீடாக அதானி நிறுவனம் ரூ.5,069 கோடி முதலீடு செய்வதாகத் தெரிவித்திருந்தது. இதையடுத்து இத்திட்டம் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
படிக்க : நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 58 ஆயிரம் குடும்பங்கள், 12 ஆயிரம் கடைகள் – வணிக நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக 405 சதுர அடியில் வீடு கட்டிக்கொடுக்கப்படும். அதானி நிறுவனம் இலவச வீடுகள் பெறத் தகுதியானவர்கள் தொடர்பாகப் புதிய கணக்கெடுப்பு நடத்தும். இலவச வீடு பெறத் தகுதியில்லாதவர்கள் நிலம், கட்டுமான செலவைக் கொடுத்து வீடு பெற்றுக்கொள்ள வேண்டும். குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தது போக எஞ்சி இருக்கும் நிலத்தில் அதானி நிறுவனம் வீடுகள் மற்றும் கடைகளைக் கட்டி விற்பனை செய்துகொள்ளும்.
அதானி நிறுவனம் இந்தத் திட்டத்திற்காக மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கும். அதில் மாநில அரசுக்கு 20 சதவிகிதப் பங்கும், அதானி நிறுவனத்துக்கு 80 சதவிகிதப் பங்கும் இருக்கும்.
மொத்தம் 58,000 குடும்பங்கள் என்பது அரசு கூறும் கணக்கு. ஆனால் அரசின் கணக்கில் அடங்காமல் அதற்கு சரி நிகரான அளவில் பல்லாயிரம் குடும்பங்கள் அங்கு வசிக்கின்றனர். அம்மக்களுக்கு அங்கு வீடுகள் ஒதுக்கப்பட மாட்டாது; தாராவிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் அல்லது மும்பை பெருநகருக்கு உட்பட்ட வேறு ஏதாவது ஒரு பகுதியில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இத்திட்டத்திற்காக ஏலம் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. ஏலம் நடைபெறுவதும் திட்டம் கைவிடப்படுவதும் வாடிக்கையான விசயமாக உள்ளது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் துபாய் நிறுவனம் ஒன்று ரூ.7500 கோடிக்கு ஏலத்தில் வெற்றி பெற்றது; அந்த ஏலம் அதானிக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசிடமிருந்து ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஒப்புதல் பெற தாமதமாகிறது என்பதைக் காரணம்காட்டி அத்திட்டம் கைவிடப்பட்டது.
படிக்க : மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை
தற்போது நடைபெற்ற ஏலத்தில் அதானி வென்றிருப்பதும் 47.3 ஹெக்டேர் ரயில்வே நிலத்தை கொடுக்கப்பதற்கான பணிகள் உடனே தொடங்கப்பட்டிருப்பதும் தற்செயலான நிகழ்வு அல்ல.
மும்பை நகரத்தை உருவாக்கிய தாராவி உழைக்கும் மக்களை அந்த நகரத்தின் அழுக்காக நவீன தீண்டப்படாதவர்களாக பார்க்கும் மகாராஷ்டிர அரசு அவர்களை துரத்தியடிப்பதற்கான வேலைகளை செய்து வருகிறது. குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அரசே செய்து நிறைவேற்றாமல் அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான திட்டமாக இதை மாற்றி உள்ளது.
ஆஷிக்