“ஊழல் நாயகன்” மோடி!

பாசிஸ்டுகள் என்றைக்கும் ஊழல்வாதிகளே. அவர்களது ஊழல் ஒழிப்பு நாடகமெல்லாம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கே அன்றி, ஊழலை ஒழிப்பதற்கானதல்ல. இது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிஸ்டுகளுக்கும் பொருந்தும்.

டந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது ‘வளர்ச்சி’ நாயகன் என்று ஊதிப் பெருக்கப்பட்ட பாசிச மோடியின் பிம்பம், இந்த ஒன்பது ஆண்டுகளில் சுக்குநூறாக உடைந்துவிட்டது. மோடி பேசிய “அச்சா தின்”, அதாவது “நல்ல நாள்” என்பதெல்லாம் அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான், ‘வளர்ச்சி’ என்பதும் அவர்களுக்குத்தான் என்று அம்பலமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயுதமாக இந்துமதவெறி மற்றும் ஊழல் ஒழிப்பை முன்னெடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல். கடந்த ஆகஸ்டு 15 அன்று, 77-வது போலி சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் மோடி பேசிய உரை என்பத வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார உரை எனலாம். அந்த உரையில் தனது ஆட்சியின் பத்தாண்டுகால ‘சாதனை’களைப் பட்டியலிட்ட மோடி, “ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சமரச அரசியல்” ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டுமென்று பேசினார்.

சுதந்திர தின உரைக்கு முன்பே, கடந்த ஆகஸ்ட் 12 அன்று ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் இணைய வழியில் உரையாற்றிய மோடி, “ ஊழலால் தீவிரமாக பாதிக்கப்படுவது நாட்டின் ஏழைகளும், விளிம்புநிலை மக்களும்தான். நாட்டின் வளத்தை ஊழல் பாதிக்கிறது; சந்தையை சிதைக்கிறது; அரசின் சேவைகளை பாதிக்கிறது; அனைத்துக்கும் மேலாக ஊழலால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறது. நாட்டின் வளத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதே ஒரு அரசின் கடமை என்கிறது அர்த்த சாஸ்திரம். அந்த இலக்கை அடைய ஊழலை ஒழிப்பது அவசியம். அது மக்களுக்கான அரசின் புனித கடமை” என்று வீரவசனம் பேசினார்.

உண்மையில், அச்சமயத்தில் மோடியின் ஊழல் ஒழிப்பு ரீல் அறுந்து போய் சில நாட்கள் ஆகியிருந்தது. அதனை மறைக்கும் விதமாகத்தான், ஜி 20 மாநாட்டிலும், சுதந்திர தின விழா உரையிலும் ஊழல் ஒழிப்பு குறித்து மோடி வாய்கிழிய கத்திவந்தார்.

அதாவது, கடந்த ஆகஸ்டு 8 அன்று, மோடி கொண்டுவந்த ‘சாதனை’த் திட்டங்களில் நடைபெற்ற ஊழல்களை வெளியிட்டது, ஒன்றிய தலைமை கணக்குத் தணிக்கை அமைப்பு (Comptroller and Auditor General – CAG – வரவு-செலவுகளைத் தணிக்கை செய்து, பிரதமருக்கு அறிக்கை கொடுக்கிற ஒரு அமைப்புதான் இந்த சி.ஏ.ஜி.). இந்த ஊழலின் மொத்த மதிப்பு ரூ.7,50,000,00,00,000! (ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்)

இந்த சி.ஏ.ஜி. அமைப்பானது, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 12 அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறது. இந்த அறிக்கையில், ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் துறைகளான, 1. ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டம் 2. துவாரகா விரைவுப் பாதை, 3. ஒன்றிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி கட்டண வசூல் 4. ஆயுஷ்மான் பாரத் திட்டம், 5. அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் 6. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், 7 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) விமான எஞ்ஜின் வடிவைமைப்பு, 8. ஒன்றிய அரசின் ரயில்வே நிதி ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மோடி ஆட்சியில் பல்வேறு துறை மற்றும் பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தி, மோடியின் ஊழல் ஒழிப்பு அரிதாரத்தைக் கலைத்திருக்கிறது இந்த சி.ஏ.ஜி. அறிக்கை. அரிதாரம் கலைந்த பிறகும், ஊழல் ஒழிப்பு ரீல் அறுந்த பிறகும், “ஊழலை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது” என்று ஜி 20 மாநாட்டில் வீரவசனம் பேசுவதற்கு எத்துணை நெஞ்சுரம் வேண்டும்? மோடி – ஒரு இனப்படுகொலையாளன் என்பதை அம்பலப்படுத்திய பிபிசி ஆவணப்படம் உலகம் முழுக்க திரையிடப்பட்ட போதும் கவலைப்படாதவரல்லவா பிரதமர் மோடி. இதுதான் பாசிஸ்ட்டுகளுக்குரிய பண்பு. அதனால்தான் மோடி இந்தியாவின் ஹிட்லர்.

சி.ஏ.ஜி. அறிக்கையின் சாரம்

  1. பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்குத் திட்டமிட்ட தொகையான கிலோமீட்டருக்கு 15.37 கோடி ரூபாய்க்குப் பதிலாக அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. மேலும், திட்டமிட்ட தொலைவான 34,000 கிலோமீட்டருக்குப் பதிலாக 13,499 கிலோமீட்டர் மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.5,35,000 கோடி ஒதுக்கப்பட்டதில் பெரும்பகுதி தொகை முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது அறிக்கை.
  2. டெல்லியின் துவாரகாவையும், ஹரியானாவின் குர்கானையும் இணைக்கக்கூடிய வகையில் 29.6 கி.மீ நீளத்திற்கு 16 வழிச்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. குறைவான மக்கள் பயணிக்கும் இந்த சாலையை எட்டுவழிச் சாலையாக அமைப்பதே வீண் செலவு என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, திட்டத் தொகையைவிட 14 மடங்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
  3. தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் உள்ள 41 சுங்கச் சாவடிகளை வகை மாதிரியாக எடுத்து ஆய்வு செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கை விளக்குகிறது.
  4. ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சி.ஏ.ஜி. அம்பலப்படுத்துகிறது. 2.25 லட்சம் பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி சென்ற தேதிக்குப் பிறகு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் பெரும்பகுதி பா.ஜ.க.வின் ’இரட்டை எஞ்ஜின் அரசு’ ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில்தான் நடந்தேறியுள்ளது.
  5. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படுகிற தேசிய சமூக உதவித் திட்டத்தில் முறைகேடு நடந்திருக்கிறது என்பது அம்பலமாகியிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வயதானவர்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இது ஐந்து வகையான திட்டங்களின் மூலம் வழங்கப்படுகிறது. பொதுவாக ஓ.ஏ.பி என்ற பெயரில் வழங்கப்படும் முதியோர்களுக்கான நிதி உதவித் தொகை, ஓ.ஏ.பி. பயனாளர்களுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டமான (தமிழகத்தில் அரிசி வழங்குவது) அன்னபூர்ணா திட்டம், கைம்பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை மற்றும் ஒருமுறை மட்டும் வழங்கப்படுகிற வீட்டில் முதன்மை வருமானம் ஈட்டுபவரை இழந்த குடும்பத்திற்கான உதவித் தொகை என செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டங்களின் விளம்பரங்களுக்கு செலவு செய்ததன் மூலம், இத்திட்டம் குறித்த தகவல் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படவில்லை. இதனால், தகுதி வாய்ந்த பயனாளர்கள் இத்திட்டத்தில் சேர முடியவில்லை. சாரம்சத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை மேலும் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளியிருக்கிறது பாசிச மோடி அரசு.
  1. ஒன்றிய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அயோத்தி திட்டமானது இராமாயண கதை நிகழ்வு இடங்களை ஒருங்கிணைக்கின்ற சுற்றுலா திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஆறு மாநிலங்களில் ஆறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு அங்கங்களிலும் ஒப்பந்ததாரர்களுக்கு ஏலம் விடுவது, நிதி ஒதுக்கீடு ஆகிய அனைத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் உத்திரப் பிரதேசம் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
  2. அரசு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்)-இல், கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.441.41 கோடி செலவில் எரிவாயு எஞ்ஜின் (Gas turbine engine) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் பெரும் பகுதியை உரிய காலத்தில் முடிக்காமல் இழுத்தடித்த வகையில் 153 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது.
  3. மோடி அரசால் கடந்த 2016-ஆம் ஆண்டு உள்நாட்டு விமானச் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் உதான் (UDAN) திட்டம். இத்திட்டத்தின் அடிப்படையில், மார்ச் 2021-க்குள் 774 வழித்தடங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. திட்டமிட்ட மூன்று ஆண்டுகளில் வெறும் 112 வழித்தடங்கள் மட்டுமே நிறைவு பெற்றிருக்கின்றன. இந்த 112 வழித்தடங்களில் வெறும் 54 வழித்தடங்கள் மட்டுமே 17 வட்டார விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 116 விமான நிலையங்கள், வானூர்தி தளம் (Heliports), நீர் வானூர்தி தளம் (Water aerodromes) உருவாக்க செலவு செய்ததில் வெறும் 71 நிலையங்களில் மட்டுமே செயல்பாடுகள் தொடங்கப்பட்டன என்கிறது அறிக்கை. இவற்றில் எல்லாம் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை விரிவாகப் பட்டியலிட்டிருக்கிறது.
  4. சி.ஏ.ஜி., இந்த அறிக்கையை மட்டுமின்றி, ஒன்றிய அரசின் மறைமுக வரிகள்-சுங்க வரிகள் குறித்து தணிக்கை அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. இதில், இந்திய சுங்க மின்னணு தரவு மாற்று அமைப்பின் (ICES) தகவல் தொழில்நுட்பம் குறித்து தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. டிசம்பர் 2020 முதல் மே 2022 வரையிலான தணிக்கை அறிக்கை என்றாலும், 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியே தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இதில் சுங்க வரி வசூலிப்பதில் தவறுகள் நடைபெற்றிருப்பதை இவ்வறிக்கை விளக்குகிறது.
  5. 2017-18 முதல் 2020-21 வரையிலான காலத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்திருக்கிறது, சி.ஏ.ஜி. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி மற்றும் கிராமப்புற தொழில் ஆணையத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 92 துறைசார் வர்த்தக அலகுகளில் மார்ச் 3, 2021 நிலவரப்படி வெறும் 18 அலகுகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த பல அலகுகள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டு மூடப்பட்டுள்ளன.மொத்தமாகவே வெறும் 20 சதவிகிதத்திற்கும் குறைவான அலகுகள்தான் தொடர்ந்து செயல்படும் நிலையில் உள்ளன.
  6. தேயிலை வாரியத்தின் ஊழல் குறித்தும் அம்பலப்படுத்தியிருக்கிறது சி.ஏ.ஜி. அறிக்கை. தேயிலை வாரியத்தின் கீழ் பழங்குடிகள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பட்டியலித்தனவருக்கான நிதி ஒதுக்கீட்டை தேயிலை வாரியம் தொடர்ந்து குறைத்து வருவது அம்பலமாகியுள்ளது. பயனாளிகளின் விவரங்களை சோதிக்காததால் தவறான நபர்களுக்கு திட்டங்கள் சென்றடைந்திருக்கிறது. டார்ஜிலிங் தேயிலையுடன் நேபாளத் தேயிலைக் கலப்படம் செய்கிற சட்டவிரோத நடைமுறை இன்னும் தொடர்வதாக அம்பலப்படுத்தியுள்ளது.

இவை மட்டுமின்றி, இந்திய தபால் துறைக்கு போதிய நிதி ஒதுக்காமல் இருப்பது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சொத்து விவரங்கள் முழுமையில்லாமல் இருப்பது, ரயில்வே நிதி, ஜி.எஸ்.டி மற்றும் மறைமுக வரி ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அறிக்கை கொடுத்திருக்கிறது, சி.ஏ.ஜி.

1.76 லட்சம் கோடி Vs 7.5 லட்சம் கோடி

கடந்த 2008 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கடந்த 2010 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது, சி.ஏ.ஜி. இந்த அறிக்கை வெளிவந்த பிறகு, “இந்தியாவில் நடந்த இமாலய ஊழல்”, “காத்துல நடந்த ஊழல்’ என்று ஊடகங்கள் ஊதிப் பெருக்கின. அதிலும், தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பத்திற்குதான் இந்த 1.76 லட்சம் கோடி ரூபாயும் சென்றது என்ற வகையிலெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டன. கொலை, கொள்ளை பற்றி திடுக்கிடும் தகவல்களாக பேசும் கிரைம் டைம் நிகழ்ச்சியில் கூட 2 ஜி ஊழல் பேசப்பட்டது. 2ஜி ஊழலில் ஆதாயமடைந்த டாட்டா, ஏர்டெல் நிறுவனங்களையெல்லாம் விட்டுவிட்டு ஒதுக்கீடு செய்ததற்காக தி.மு.க –வை சேர்ந்த முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க கனிமொழி ஆகியோர் பலிகடாவாக்கப்பட்டனர்.


படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!


ஆனால், 2017-ல் 2ஜி வழக்கு குறித்து தீர்ப்பு வெளியிட்ட சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஜ. முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று ஆ. ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்தது. மேலும், அரசுக்கு இழப்பு என்ற 1.76 லட்சம் கோடி ரூபாயும் ஊதிப் பெருக்கப்பட்டதுதான் என்று பின்னாளில் அம்பலமானது. 2001-ஆம் ஆண்டு நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் 2008-ஆம் ஆண்டிலும் ஒதுக்கீடு செய்ததால் ஏற்பட்ட இழப்பே அது. சி.பி.ஐ. தனது அறிக்கையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.30,984 கோடி என்றுதான் குறிப்பிட்டுள்ளது. சி.ஏ.ஜி அறிக்கையிலும், 57,000 கோடி முதல் 1.76 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றுதான் குறிப்பிடப்பட்டது. அதுவும் உத்தேச மதிப்புதான்.

இந்த உத்தேச மதிப்பையே, அதில் எது பெரியதோ அதை எடுத்துக் கொண்டு இமாலய ஊழல் என்று ஊதிப்பெருக்கின, பார்ப்பன ஊடகங்கள். “ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம்” என்ற பெயரில் அன்னாஹசாரேவை பின்னால் இருந்து இயக்கிய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பல், 2ஜி ஊழலை மையப்படுத்தி 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. பார்ப்பன ஊடகங்களில் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தாலும், காங்கிரசின் அடுத்தடுத்த ஊழல்கள் மற்றும் மக்கள் விரோதத் திட்டங்களால் காங்கிரஸ் மீது வெறுப்படைந்திருந்த மக்களிடம், “ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்” என பிரச்சாரம் செய்தும் 2014 -இல் ஆட்சிக்கு வந்தது மோடி கும்பல். தமிழ்நாட்டில் 2011 சட்டமன்றத் தேர்தலில், 2ஜி ஊழலைப் பயன்படுத்திதான், சொத்துக்குவிப்பு வழக்கில் ஏ1 குற்றவாளியான பார்ப்பன ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றங்கள் வருவதற்கு முதன்மை காரணமாக இருந்தது 2ஜி ஊழலும், சி.ஏ.ஜி.யின் அறிக்கையும்தான்.

ஆனால், இன்று நிலைமை என்ன? 2010-இல் ஒரு சி.ஏ.ஜி அறிக்கைதான் வெளிவந்தது. இன்று 12 அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. அன்று நடந்த 2ஜி முறைகேட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.30,984 கோடி. தற்போதைய மோடி ஆட்சியில், அதனைவிட சுமார் 240 மடங்கு அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது. இந்த ஊழல்கள் எதுவும் 2ஜி போல் அனுமானத்தின் அடிப்படையிலானவை அல்ல. மேலும், மோடி ஆட்சியில் நடந்த இந்த ஊழல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை என்பதே முக்கியமானது.

ரயில்வே நிதி விவகாரம், துவாரகா விரைவுப் பாதை, உதான் திட்டம், பாரத் மாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத், அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் என அனைத்திலும் திட்டமிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தாண்டி அதிகமாக செலவு செய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக பொய் கணக்குகாட்டி மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. சாலை அமைக்க, திட்டமிட்ட தொகையைவிட 14 மடங்கு அதிகமாக செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமா? வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு சென்று சேர வேண்டிய நலத்திட்டங்களுக்கான நிதி வேறு திட்டங்களின் விளம்பரத்திற்கு செலவிடப்பட்டிருக்கிறது. இதனால் எத்தனை ஆயிரம் மக்களின் அன்றாட உணவு உரிமை பறிக்கப்பட்டிருக்கும்?

இன்றுவரை 2ஜி ஊழலில் ஆ.ராசா மற்றும் கனிமொழியை குற்றவாளிகளாக முன்னிறுத்தும் பார்ப்பன ஊடகங்கள், மோடி அரசின் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்து கள்ள மௌனம் சாதிக்கின்றன. “ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்” என்று பேசிய மோடியோ அல்லது காவி பாசிஸ்ட்டுகளோ மன்மோகன் சிங்கைவிட கடைந்தெடுத்த கல்லுளிமங்கன்களாக இருக்கின்றனர்.

நீளும் ஊழல் பட்டியல்…

பாசிஸ்டுகள் என்றைக்கும் ஊழல்வாதிகளே. அவர்களது ஊழல் ஒழிப்பு நாடகமெல்லாம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கே அன்றி, ஊழலை ஒழிப்பதற்கானதல்ல. இது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிஸ்டுகளுக்கும் பொருந்தும். கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று சொன்ன மோடி கும்பல்தான், மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற கருப்புப் பணக் கொள்ளையர்களைக் காப்பாற்றி வருகிறது.

மோடி-அமித்ஷா கும்பல் மட்டுமல்ல, ‘உத்தமர்’ வாஜ்பாய் காலத்தில் நடந்த சுரங்க ஒதுக்கீடு ஊழல், மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் என அனைத்திலும் புறங்கையை நக்கிய ஊழல் பெருச்சாளிகள்தான் காவி பாசிஸ்ட்டுகள். அதிலும், மோடியின் பிரதமர் அவதாரமே ஒரு ஊழல்தான். ‘வளர்ச்சி’ நாயகனாக, கருப்புப்பண ‘மீட்பராக’ மோடியை விளம்பரப்படுத்தியதற்கு 3,000 கோடி ரூபாய் செலவு செய்தது அதானி குழுமம். அதற்கு கைமாறாகதான் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அதானியை உலகின் இரண்டாவது பணக்காரராக மாற்றினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், அம்பானி-அதானிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களும், துறைசார்ந்த டெண்டர்களும் இக்கும்பலுக்கே தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், இலங்கையில் காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் மோடியின் அழுத்தத்தால்தான் அதானிக்கு கிடைத்தது என்ற உண்மை அம்பலமாகி சந்தி சிரித்தது.

இவைமட்டுமின்றி, 526 கோடி ரூபாய்க்கு போடப்பட்டிருந்த ரபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை 1,670 கோடி ரூபாயாக அதிகரித்து, பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் -ஐ சேர்க்காமல், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் பிரான்சு நாட்டின் ரபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடனும் கூட்டு சேர்ந்து நடத்தியதுதான் ரபேல் ஊழல்.


படிக்க: சந்திரயான் விண்ணை நோக்கி, நிலம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மண்ணை நோக்கி!


ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ஒதுக்காமல், அம்பானியின் ஜியோ, அதானி, வோடாபோன், ஜடியா, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அலைக்கற்றையின் மொத்த மதிப்பு 4.3 லட்சம் கோடி என்று ஒன்றிய அரசு மதிப்பிட்டிருந்தது. ஆனால், வெறும் 1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை விற்பனை செய்ததன் மூலம், 2.80 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதுதான் 5ஜி ஊழல். 2ஜி அலைக்கற்றையோடு ஒப்பிடும் போது (சி.பி.ஜ. கணக்குப்படி 30,894 கோடி), 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு பல மடங்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இத்தனைக்கும் மேலாக, தேசிய பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்குப் பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் திட்டமே மாபெரும் ஊழல்தான்.

குஜராத்தில் மோர்பி பாலப் பாராமரிப்புப் பணியை கடிகார நிறுவனமான ஒரோவாவிற்கு ஒப்படைத்ததில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. இதனால் 140-க்கும் அதிகமான மக்கள் இந்த பாலம் திறக்கப்பட்ட போது உயிரிழந்திருக்கின்றனர்.

250-க்கும் மேற்பட்டோர் இறந்த ஒரிசா ரயில் விபத்திற்குக் ஊழல்தான் காரணமென சி.ஏ.ஜி., அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ராயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, தட்டுகள், கிண்ணங்கள், இருக்கைகள் (Furniture), பாத தேய்ப்பான்கள் (Foot massagers ) மின்சாதனப் பொருட்கள், குளிர்கால உடைகள், கணினிகள், மின் நடைகள், பூங்காக்கள் உருவாக்கம், கழிவறை கட்டுதல், பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் போனஸ் ஆகியவற்றுக்காக செலவிட்டதால்தான் அந்த கோர விபத்து ஏற்பட்டது என்கிறது அறிக்கை.

மேலும், 2017 -இல் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 2018-2019 காலத்தில் 6,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்கப்பட்டன. இதில் 95 சதவிகித நிதிப் பத்திரங்கள் பா.ஜ.க-விற்குதான் சென்றிருக்கிறது என்பது 2019-ஆம் ஆண்டே அம்பலமானது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும், கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்தும் நிதி பெறுவதில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி கும்பல்தான் முன்னணியில் இருக்கிறது.

கொரோனா காலத்தில், “பி.எம். கேர்ஸ்” என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டது. இதுவரை 2,900 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கான முறையான வரவு செலவு கணக்கு இல்லை. மேலும், இது ஒரு அறக்கட்டளை என்பதால் தணிக்கைக்கு உட்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது மோடி அரசு. ஆக, ரூ.2,900 கோடி என்னவானது என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது. ரபேல் விமானங்களை வாங்கியதில் தொடங்கி பி.எம்.கேர்ஸ் வரை இந்த காவி வானரப்படைகளின் ஊழல் பட்டியல் அனுமான் வாலாக நீள்கிறது. இவை அனைத்தும் ஒன்றிய அரசின் கீழ் நடைபெற்றவைதான். காவி கும்பல்கள் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்களைப் பட்டியலிட்டால் அது இன்னும் நீண்டு கொண்டே செல்லும்.

இந்த லட்சணத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது மோடி அரசு. இதற்கான செலவுகள் என்ன? இதனால், மக்களின் வாழ்க்கைத்தரம்தான் உயர்ந்திருக்கிறதா? நமது நாட்டின் கடனைப் போல அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிதான் உயர்ந்திருக்கிறது. மோடி கும்பலால் உலகின் ஐந்தாவது பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக முன்னேறியிருப்பதாக பீற்றிக் கொள்ளப்படும் நமது நாடுதான் உலகப் பட்டினிக் குறியீட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் இந்திய உழைக்கும் மக்களுக்கு மோடி அரசு செய்த ‘புனித’க் கடமை இதுதான்.

சி.ஏ.ஜி. அறிக்கையின் மூலம் வெளியான பெரும்பாலான ஊழல்கள் நாட்டின் உள்கட்டமைப்புகளில் செய்யப்பட்டவை, பா.ஜ.க- கட்சியினுள்ளே மோடிக்கு போட்டியாக இருக்கும் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின்கட்கரிக்கு எதிராக மோடி கும்பலால் திட்டமிட்டு வெளியிடப்பட்டவை என பலரும் பேசுகின்றனர். நிதின்கட்கரி என்ற தனிநபரின் கீழ் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்றால் ஒட்டுமொத்த பாசிச கும்பலும் சேர்ந்து ஒன்பது ஆண்டுகளில் எவ்வளவு கோடிகளில் ஊழல்களை மேற்கொண்டு இருப்பார்கள் என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.

மேடைக்கு மேடை காங்கிரசின் ஆட்சியை ஊழல் சகாப்தம் என்று விமர்சிக்கிற மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியும் ஊழல் ராஜ்ஜியம்தான். ஊழலுக்கு அடிக்கொள்ளியான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையை ஒழிக்காமல், ஊழலை ஒழிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியைவிட, இந்தக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்துகிற பாசிச மோடி கும்பல் ஊழல் ஒழிப்பு பேசுவது என்பது மக்களிடம் ஓட்டு வாங்குவதற்கான தந்திரம்தான். இதற்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலும், அதன்பிறகான மோடியின் ஒன்பதாண்டு கால ஆட்சியுமே சான்று. காவிகள் கூப்பாடு போடுவது போல ஊழலை ஒழிக்க வந்த புனிதரல்ல மோடி, மாறாக மோடி என்றால் ஊழல், ஊழல் என்றால் மோடி” என்று வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது சி.ஏ.ஜி அறிக்கை.


அப்பு

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க