28.08.2024
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு”
சென்னை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
“பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் சென்னை தாம்பரத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக அரங்கக்கூட்டம் ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது.
அரங்கக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் தலைமை தாங்கினார்.
தமது தலைமை உரையில், “முஸ்லீம் மக்கள் வீடுகள் இடிக்கப்படுகிறது. வெள்ளம் வந்தால், வெள்ளம் ஜிகாத் என்கிறார்கள் காவி பயங்கரவாதிகள். எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பழங்குடியின மக்கள், தலித் மக்கள், கம்யூனிஸ்ட்டுகள் என அனைவரும் வாழமுடியாது என்ற நிலைமையை உருவாக்க எத்தனிக்கிறார்கள். இவை சட்டத்தின் பெயரால் நடத்தப்படுகிறது என்று பலர் சொல்கிறார்கள்.. ஆனால், நாங்கள் சொல்கிறோம், சட்டத்தின் பெயரால் அல்ல. சட்டத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதுவரை இருந்த அரசியல் சாசன சட்டத்தின் படியே போலீசு பொய் வழக்குகளைப் பதிந்து, பலரைச் சிறையில் தள்ளி வைத்துள்ளது. ஆனால், இந்த புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் வந்தால், இனி போலீசே தீர்ப்பு எழுதும்” போன்ற பல்வேறு கருத்துக்களைப் பேசி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அடுத்து, புதிய ஜனநாகயத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ம.சரவணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில், “இரசாயனம் நிறுவனத்தில் பாயிலர் வெடித்து 17 பேர் பலி. ஆவின் நிறுவனத்தில் எந்திரத்தில் மாட்டி தலைத்துண்டிக்கப்பட்டு ஒரு பெண் தொழிலாளி பலி. பாயிலர் வெடித்து மகாராஷ்டிராவில் 22 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த விபத்துக்களைத் தடுப்பதற்கான சட்டத்திருத்தங்கள் இருக்கிறதா என்றால் இல்லை… தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு இருக்கும் அபாயகரமான சூழலைத் தடுக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தங்கள் இருக்கிறதா என்றால் இல்லை….
தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என பல்வேறு பிரிவினரின் சட்டங்கள் மாற்றப்பட்டு அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அனைவரையும் ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படுகிறது.” போன்ற பல்வேறு கருத்துக்களைப் பேசி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
அடுத்து, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
தனது உரையில், “ஒன்றிய பாஜக அரசு இந்த சட்டத்தைத் திருத்துவதாகவும் மாற்றம் செய்வதாகவும் சொல்லிக்கொண்டுவந்தார்கள். ஆனால், அந்த அடக்குமுறை சட்டங்களில் எவ்வித மாற்றவும் இல்லை… அதே அடக்குமுறை சட்டங்கள் தான் வேறு பெயர்களில் வந்திருக்கிறது. இவை சமஸ்கிருத பெயரில் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த பெயரில் ஒரு அரசியல் இருக்கிறது. வழக்கில் இல்லாத ஒரு மொழியை இதில் திணித்துள்ளார்கள். இந்த சட்டப்பிரிவுகளை ஒன்றிய பாஜக அரசு திரும்பிப் பெறும் வரை நம் போராட்டங்கள் தீவிரமாக நடத்தப்பட வேண்டும்.
மக்கள் உரிமைக்காகவும், மக்கள் பிரச்சினைகளுக்காகவும் போராடுபவர்கள் முன்பு நகர்ப்புற நக்சல் என்றார்கள். UAPA சட்டம் ஓர் மிகவும் மோசமான சட்டம் – இது புதிய சட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. ஜீரோ எஃப்.ஐ.ஆர் வந்திருக்கிறது இதன் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் எஃப்.ஐ.ஆர் போடலாம். சாதாரண வழக்குகளுக்கு 15 நீதிமன்ற காவலில் இருக்கும்.. ஆனால் புதிய சட்டத்தின் படி 40 முதல் 50 நாட்கள் பிணை வாங்கமுடியாது. ” போன்ற பல்வேறு கருத்துக்களைப் பேசி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பவானி.பா.மோகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
தனது உரையில், “மோடி ஆட்சிக்கு வந்ததும் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டன. அடுத்து விவசாயி சட்டங்கள் மாற்றப்பட்டன. இறுதியாக எங்கு வருகிறான், உழைக்கும் மக்கள் போராடினால், அறிவுத்துறையினர் போராடினால், மோடி ஆட்சிக்கு எதிராகப் போராடினால் அவர்களை ஒடுக்குவதற்காக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.
இந்த புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் ஐந்து விழுக்காடுதால் மாற்றம், இந்த ஐந்து விழுக்காட்டை வர்ணம் பூசப்பட்ட மாயாஜால திருத்தம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் மாயாஜால திருத்தம் மட்டுமல்ல. பிரிவுகளை மாற்றிப்போடுவது, எண்களை மாற்றிப்போடுவது என்பது மட்டுமல்ல, இந்த ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்திருக்கிற மாற்றம் என்பதை நாம் உணரவேண்டும்.
பிரிவு 103-ல் சாதி, இனம், மொழி அனைத்து இருக்கும் ஆனால் மதம் என்கிற வார்த்தை மட்டும் இருக்காது. இதில் தான் பாஜக-வின் மறைமுகத்திட்டம் இருக்கிறது. இந்த ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு, உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கானது. இதனை யார் எதிர்த்திருக்க வேண்டும், உச்சநீதிமன்றம் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த சட்டங்கள் எல்லாம் நல்ல சட்டங்கள் தான் என்கிறார். இதை எப்படி ஜனநாயகம் என்று வாய்கிழியப் பேசக்கூடிய உச்சநீதிமன்ற நீதிபதி சொல்லமுடியும். எனவே ஆளும் வர்க்கத்திற்காகத்தான் அதிகார வர்க்கம் செயல்படுமே தவிர, உழைக்கும் மக்களுக்காக நீதிமன்றமும் போலீசும் இருக்க முடியாது.” போன்ற பல்வேறு கருத்துக்களைப் பேசி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
அடுத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
தனது உரையில், “போலிசு ராஜ்ஜியம் தான் இந்து ராஜ்ஜியம். இந்துராஜ்ஜியம் தான் போலிசு ராஜ்ஜியம். ஒரு இட்லி விற்கும் அம்மா, அடுப்பு பற்றவைக்கும் போது படுபாவி பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டான். படுபாவி சிலிண்டர் விலையை ஏற்றிவிட்டான் என்று சொன்னால் போதும் அந்த இட்லி விற்கும் அம்மாவை பயங்கரவாதியாக மாற்றமுடியும்.
ஏனென்றால் அந்த அம்மாவிற்கு என்ன உள்நோக்கம், படுபாவி நாசமாகப் போகவேண்டும் என்ற உள்நோக்கம். அவரை சந்தேகத்தின் பெயரில் போலிசு கைது செய்ய முடியும். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக நீங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டால், நீங்கள் அத்தனை பேரும் பயங்கரவாதிகள்.
உங்களுக்குத் தண்டனை வழங்கப்படும். எந்த கட்சியில் யார் இருந்தாலும் சரி அவன் மோடிக்கு எதிராகச் சிந்தித்தால், ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிராகச் சிந்தித்தால் போதும் அவனையும் பயங்கரவாதி ஆக்கமுடியும். இனிமேல் லாக்கப் படுகொலை நடந்தால் அந்த சம்மந்தப்பட்ட போலீசே தீர்ப்பு சொல்பவராக அமர்ந்திருப்பார், அவரிடம் எந்த வக்கில் சென்று என்ன வாதாட முடியும்.
ஆம் தோழர்களே இதற்கு முன்பு குஜராத் மட்டுமே அவர்களுக்குச் சோதனை சாலை. தற்போது இந்த நாடே அவர்களுக்குச் சோதனை சாலையாக மாற்றிவிட்டார்கள். இதற்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியைத்தான் முன்வைக்கிறோம்.” போன்ற பல்வேறு கருத்துக்களைப் பேசி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் பகுதி தோழர் சங்கர் அவர்கள் நன்றியுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார். கூட்டத்திற்கு இடையே மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழுவின் பாடல்கள் பாடப்பட்டன.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு :- 7397404242, 9176801656