த்தியத்தரைக் கடலில் அகதிகளுடன் ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற ஒரு படகு மூழ்கி அதில் பயணித்த 74 அகதிகள் மடிந்திருக்கின்றனர். கடைசி மூன்று விபத்துகளில் மட்டும் 110 அகதிகள் மாண்டிருப்பதாக புலம்பெயர்வுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிறுவனம் (International Organization for Migration) கூறியிருக்கிறது. அக்டோபர் முதல் இது போன்ற 8 விபத்துக்கள் நடந்திருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

விபத்துக்குள்ளான படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டு 120 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் காப்பாற்றப்பட்ட 47 பேர்களில் 6 மாத குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்டு சில மணி நேரத்திற்கு பின்னர் இறந்துவிட்டது. இது வரைக்கும் 31 உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக சர்வதேச அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

மத்தியத்தரைக்கடலில் தொடர்ந்து நடக்கும் இந்த அவலத்தினால், கடலில் புதைந்தவர்கள் போக எஞ்சியவர்களின் உயிருள்ள மற்றும் உயிரற்ற உடல்களை மீட்பதற்கு “ஓப்பன் ஆர்ம்ஸ்” (Open Arms) என்ற தொண்டு நிறுவன கப்பல் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது.

படிக்க :
♦ விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !
♦ தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?

”எங்களது மருத்துவக் குழுவின் கடுமையான முயற்சிக்குப் பின்னரும் 6 மாத பச்சிளங்குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவனையும், ஆபத்திலிருக்கும் ஏனையோரையும் சீக்கீரமாக கொண்டு வருமாரு நாங்கள் வேண்டினோம். ஆனால் அவனால் முடியவில்லை. பெரும் வேதனையும் துக்கமும் !” என்று “ஓப்பன் ஆர்ம்ஸ்” தொண்டு நிறுவனம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

மத்தியத்தரைக் கடல் பகுதியில் நடக்கும் உலகிலேயே மிக ஆபத்தான இந்த கடல்வழி புலம்பெயர்  முயற்சிகளால் பெருகிவரும் அகதிகளின் உயிரிழப்புகளை தடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய தீர்க்கமான, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை எடுப்பதற்கான ஆற்றல் உலக நாடுகளுக்கு இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது என்று லிபியாவிற்கான சர்வதேச அகதிகள் முகமை தலைவர் ஃபெடரிகோ சோடா (Federico Soda) கூறினார்.

நடப்பு ஆண்டில் மட்டும் 900 அகதிகள் மத்தியத்தரைக் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. மேலும் 11 ஆயிரம் அகதிகள் மீண்டும் லிபியா திரும்பியுள்ளதாக அது கூறியிருக்கிறது. லிபியாவின் அகதிகள் தடுப்பு முகாமில் நடக்கும் பாலியல் வன்முறைகள், ஆள்கடத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணங்களால் லிபியாவிற்கு திரும்புவது என்பது பேராபத்து என்று சர்வதேச அகதிகள் முகமை எச்சரித்து வருகிறது.

மீட்டெடுக்கும் மீட்புப் படையினர்

லிபியாவிற்கும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் ஏற்கெனவே உள்ள நடைமுறைகள் செயலிழந்து விட்டதால் அவற்றில் மாற்றம் தேவை என்று நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வருகிறோம். அகதிகள் மீண்டும் லிபியாவிற்கு வருவதை தடுக்க வேண்டும் என்றும், அகதிகளை ஏற்றுக்கொள்வதில் பிற நாடுகள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று ஃபெடரிகோ சோடா கூறினார். சர்வதேச நாடுகளின் இந்த பாராமுகத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து கடலிலும் நிலத்திலும் பாதிக்கப்படுகிறார்கள் என்று மேலும் அவர் கூறினார்.

இத்தாலியின் உள்த்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி, 2020-ம் ஆண்டில் இது வரைக்கும் 31 ஆயிரம் அகதிகள் இத்தாலியில் தஞ்சமைடைய முயற்சித்துள்ளனர். 2019-ம் ஆண்டில் 10 ஆயிரம் பேர் முயற்சித்துள்ளனர்.

சிரியா, ஈராக் உள்ளிட்ட மத்தியக்கிழக்கு நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள் இலட்சக்கணக்கான மக்களை கொன்று புதைத்ததுடன், பல கோடி மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கியுள்ளன.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப் பேரவலமாக விளங்கும் அகதிகள் பிரச்சினைக்கான வேர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கப் போர் வெறியில் இருக்கின்றன. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு தன்னுடைய வல்லாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் நடத்திய போர்களுக்காகவே 4.8 டிரில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டிருக்கிறது.

2003-ல் ஈராக்கில் அமெரிக்கா காலடி எடுத்து வைத்ததிலிருந்து அந்நாடு சுடுகாடாகிப் போனது. ஈராக், சிரியா, ஆஃப்கானிஸ்தான், லிபியா, ஏமன், சோமாலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் 2016-ம் ஆண்டில் மட்டும் 26,172 குண்டுகளை அமெரிக்கா வீசியுள்ளது என்று வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் ( Council on Foreign Relations) கூறியுள்ளது.

முடிவில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையினால் மூன்று விசயங்கள்தான் நடக்கின்றன. 1: அமெரிக்காவின் நேரடி போர் தலையீடு அந்நாடுகளில் கடுமையான சேதாரங்களை ஏற்படுத்துகிறது. 2: அந்நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ஆதரவு இராணுவம் (தீவிரவாதப் படையினர்/அரசு எதிர்ப்புப் படையினர்) இழைக்கும் மனித உரிமை மீறல்களால் அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். 3: கடைசியாக, சர்வதேச சட்டங்கள் எல்லாம் மலம் துடைக்கும் வெற்றுதாள்களாகி விடுகின்றன. அகதிகளுக்கு மத்தியத்தரைக் கடல் இடுகாடாகிறது.


ஆறுமுகம்
செய்தி ஆதாரம் : Aljazeera

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க