ஏகாதிபத்திய போர்களினால் அகதிகளாக இடம்பெயரும் மக்கள்!

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் - உள்நாட்டுப் போர் - காலநிலை மாற்றங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களாகிய நாம்தான்.

ஷ்ய – உக்ரைன் போர் மற்றும் சூடானில் நடந்த உள்நாட்டுப் போர் ஆகியவற்றால், 11 கோடி மக்கள் (110 மில்லியன்) அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 1.9 கோடி மக்கள் (19 மில்லியன்) தங்களது வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் எனவும், இது அந்த ஆண்டு இறுதியில் 10.84 கோடியாக (108.4 மில்லியன்) உயர்ந்தது எனவும் ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஆணையம் 14.06.2023 அன்று தெரிவித்தது.

பாதுகாப்பைத் தேடி தங்களது சொந்த நாட்டிற்குள்ளே அலைந்தவர்களும், நாட்டு எல்லையைவிட்டு வெளியேறியவர்களும் இந்த அதிகரித்த எண்ணிக்கையில் அடங்குவர். இதில் அகதிகளானவர்கள் மற்றும் புகலிடம் தேடியவர்கள் கிட்டத்தட்ட 37.5 சதவிகிதம் பேர் என்று அறிக்கைக் கூறுகிறது.

படிக்க : டெல்லியை ‘அழகுபடுத்த’ அப்புறப்படுத்தப்படும் உழைக்கும் மக்கள்! | படக்கட்டுரை

இரண்டு மாதங்களுக்கும் மேலாக சூடானில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால்தான், அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 11 கோடியாக அதிகரித்தது என்கிறார் ஐ.நா. அகதிகள் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி.

“இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானதாக உள்ளது. சர்வதேச பதட்டங்கள் மனிதாபிமான பிரச்சினைகளில் விளையாடும், மிகவும் துருவப்படுத்தப்பட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்” என்கிறார் ஃபிலிப்போ கிராண்டி.

2011 ஆம் ஆண்டு நடந்த சிரியா பிரச்சினைக்கு முன்பு, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக 4 கோடி (40 மில்லியன்) என மாறாமல் இருந்தது. ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போர், வர்க்க – இன பாகுபாடு, வன்முறை மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவை மக்கள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் அகதிகளை அந்நாட்டிற்குள் நுழைவதற்கு பல கட்டுப்பாடுகளும் கடுமையான விதிகளும் விதிக்கப்படுகிறது என்கிறார் கிராண்டி.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப் பகுதிகளுக்கு வரும் அகதிகளை போலந்தும், ஹங்கேரியும் தங்கள் நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்கின்றன. அதேபோல, அகதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அந்நாட்டில் இருக்கும் வலதுசாரி கட்சிகள் செய்து வருகின்றன என்கிறார் கிராண்டி.

பெரும்பான்மையான மக்கள் அகதிகளாக வெளியேறுவது உக்ரைன், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்துதான் என்கிறது புள்ளிவிவரம். ரஷ்ய – உக்ரைன் போர் கடுமையாக நடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில், 1.1 கோடி (11.6 மில்லியன்) உக்ரைன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதில், 59 லட்சம் (5.9 மில்லியன்) மக்கள் உள்நாட்டிலும், 57 லட்சம் (5.7 மில்லியன்) மக்கள் வெளிநாட்டிற்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

படிக்க : திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!

கிரீஸ் அருகே கவிழ்ந்த அகதிகள் படகு

வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாகக் கடந்த ஜூன் 14 ஆம் தேதி லிபியாவில் இருந்து இத்தாலிக்குக் கடல்வழியாக பயணித்துள்ளார்கள். 750 பேரை ஏற்றிவந்த சிறிய படகு கிரீஸ் அருகே கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. படகில் பெண்களும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கினர். பலரது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் – உள்நாட்டுப் போர் – காலநிலை மாற்றங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களாகிய நாம்தான். சொந்த நாட்டிற்குள்ளும், உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். உணவு – தங்குமிடம் ஏதும் இல்லாமல் செத்து மடிகின்றோம்.

தங்களது இலாபவெறிக்காக உழைக்கும் மக்களைப் பலிகொடுக்கும் இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தாமல், நம்மால் வர்க்க-இன பாகுபாடற்ற – வறுமையற்ற – பாதுகாப்பான வாழ்க்கையை  உருவாக்க முடியாது. உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்!

ஆதிலா

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க