திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!

பெல் மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகச் சம்பளம் வரவில்லை என்று கடந்த வாரம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர்.

திருச்சி பெல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெல் மருத்துவமனையின் செவிலியர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பெல் மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகச் சம்பளம் வரவில்லை என்று கடந்த வாரம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர்.

தனியார் மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப் பட்ட பிறகு கார்ப்பரேட்டுகள் கொடூர சுரண்டலுக்கு உள்ளாகுபவர்களாக ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

ஒப்பந்த முறையில் உழைப்பாளி மக்கள் மீதான கொடூர சுரண்டல் அரசுத்துறைகளிலும் பொதுத்துறைகளிலும் சமீப காலமாகவே தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிகராக அதிகரித்து வந்துள்ளது.


படிக்க: திருச்சி பெல் ஊரகப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள்


காண்ட்ராக்ட் ஒப்பந்த முறையால் கடுமையாக சுரண்டப்பட்டு எத்தனை ஆண்டுகாலமானாலும் பணி நிரந்தரம் செய்யப்படாமல், அத்து கூலிக்கு மாரடிக்கும் நிலையில் ஊதியமும் சரியாக கிடைக்காது போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தனியார் நிறுவனங்களைப் போல அரசுத் துறைகளிலும் அதிகரித்து வருகிறது.

மகாரத்ன  நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்திலும்  ஒப்பந்த முறை ஊழியர்கள் பல்வேறு பணிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே எல்சிஎஸ் எனும் பெல் நேரடியான ஒப்பந்த ஊழியர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் நிரந்தரப் படுத்தப்படாமல் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் மூலமாக பெல் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கு தான் மாதாமாதம் சரியாகச் சம்பளம் வழங்கப்படுவதில்லை; அவர்களது வருங்கால வைப்பு நிதியும் பிஎஃப் கணக்கில் கட்டப் படுவதில்லை; கருணைத்தொகையும் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை; ஒப்பந்ததாரர்களை இதற்கு  எதிராகக் கேள்வி கேட்டால் கேள்வி கேட்கும் ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்ற தொழிலாளர்களை மட்டுமே பணி நீட்டிப்பு செய்கின்றனர்.

இவையனைத்தும் பெல் நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். முதன்மை வேலை அளிப்பவர் என்ற முறையில் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பெல் நிர்வாகம், தனது பொறுப்பைக் கை கழுவி விட்டிருக்கிறது. ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் அவலநிலையை எத்தனை முறை முறையிட்டாலும் கண்டுகொள்ளாமல் இந்ந காண்ட்ராக்ட் சுரண்டலை ஒப்பந்ததாரர்களோடு சேர்ந்து நடத்தி வருகிறது திருச்சி பெல் நிர்வாகம்.


படிக்க: திருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் – நேரடி ரிப்போர்ட்


திருச்சி பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் சார்பாக இப்பிரச்சினைகளை பெல் நிர்வாகத்திடமும், திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியோரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

நான்கு மாதங்களாகச் சம்பளம் வராததால் வீட்டு வாடகை கட்டவும், உணவுக்கும், குழந்தைகளின் கல்வச் செலவுக்கும் பணம் இல்லாத அவல நிலைக்கு அவ்வூழியர்கள் தள்ளப்பட்டனர்.

தொழிற்சங்க உரிமைகள் செல்லாக்காசாக்க பட்டுள்ள இன்றைய சூழலில் ஒப்பந்ததாரர்களோடு கூட்டு வைத்துக்கொண்டு சுரண்டலில் ஈடுபடும் பெல் நிர்வாகத்தை எதிர்த்து மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தனித்துப் போராடி வருகின்றனர்.

தங்களது சுகாதாரக் கட்டமைப்போடு தொடர்புடைய இந்த தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து கொள்ளாத நிலைமையிலும் அறிந்துகொள்ளவும் விரும்பாத நிலையிலும் பெல் நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர்.

பெல் ஆலையில் இயங்கும் பல்வேறு தொழிற்சங்கங்களும் இதுபற்றி எந்த குற்ற உணர்வும் இன்றி வர்க்க உணர்வற்றுப் போய் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாகும் ஒப்பந்த தொழிலாளர்களின் அவல நிலைக்குத் திருச்சி பெல் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களின் நிலைமை ஒரு சோற்றுப் பதம்.


வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க