Tuesday, May 30, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் - நேரடி ரிப்போர்ட்

திருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் – நேரடி ரிப்போர்ட்

-

திருச்சி பெல் தொழிற்சாலையின் தொழிற்சங்கத் தேர்தல் சூழல்

திருச்சி BHEL – பெல் தொழிற்சாலையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் திங்கட்கிழமை 27.06.2016 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலை பற்றிய செய்தி சேகரிப்பதற்காக வினவு செய்தியாளர்கள் பெல் தொழிற்சாலைக்கு சென்றிருந்தோம்.

வளாகம் முழுக்க தொழிற்சங்கங்களின் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டிகள், சங்கத்திற்கு வாக்களிப்பதற்கான எண் என முழுக்க முழுக்க அவ்வளாகம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போல நிறைந்துIMG_20160625_080233 காட்சியளித்தது. மற்ற தொழிற்சங்கங்களை விட ஐ.என்.டி.யூ.சி, தி.மு.க, அ.தி.மு.க-வினர் மிக அதிக பொருட் செலவில் போட்டி போட்டு பிளக்ஸ் வைத்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் ஆலைக்குள் உள்ளே நுழையும் போதும், உணவு இடைவேளையின் போதும், பணிமுடிந்து திரும்பும் போதும் என கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வாயில்களில் ஏதாவதொரு சங்கத்தின் கூட்டம் நடந்துகொண்டேயிருக்கிறது. இக்காட்சிகள் தேர்தல் கமிசன் கட்டுப்பாடுகளில்லாத அந்தக் கால பொது தேர்தல் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தன. “ஓ.டி, சம்பள உயர்வு, தொழிலாளர் குடியிருப்புக்களை முறைப்படுத்துவது, மேம்பட்ட மருத்துவ வசதி, தனியார்மய எதிர்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு” என்ற வார்த்தைகள்தான் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஐ.டி துறையிலோ மற்ற பெரும்பான்மையான தொழிற்துறை வளாகங்களிலோ நினைத்துபார்க்க முடியாத சூழல் இது.

நாம் செல்வதற்கு முந்தைய நாள் தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்து சென்றுள்ளனர். மதியம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவனும் தி.மு.க நேருவும் பிரச்சாரத்திற்கு வரவிருக்கிறார்கள் என்று சுவரொட்டிகள் அறிவித்தன. காலை உணவுக்காக தொழிலாளர் குடியிருப்பு வளாகத்திலிருக்கும் உணவு விடுதியில் நுழைந்தோம். விடுதி முழுக்க அ.தி.மு.க கரை வேட்டிகள் நிறைந்திருந்தனர். இது இத்தேர்தலை ஆளும் வர்க்கம் எவ்வளவு முக்கியமாக கருதுகிறது என்பதை அறியவைப்பதாக இருந்தது.

ஓட்டுக்கு பணம்!

பொதுத்தேர்தல்களின் சீரழிவு தொழிற்சங்க தேர்தலையும் விட்டுவைக்கவில்லை. பிரியாணி, சாராயம் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் சாதாரணமாக புழங்குகின்றன. அ.தி.மு.க-வினர் “கன்டெய்னர் பார்முலா”வை இங்கும் அமல்படுத்துகின்றனர். ஓட்டுக்கு 2000 ரூபாய் வீடு வீடாக விநியோகித்திருக்கின்றனர். இத்தேர்தலுக்கு அணுவளவும் சம்பந்தமில்லாத அ.தி.மு.க கரைவேட்டிகளை வளாகத்தில் பரவலாக பார்க்க முடிந்தது. அதிமுக கொடிகளுடன் பார்ச்சூனர், இன்னோவா வண்டிகள் நிறைந்திருந்தன. தொழிலாளிகள் பற்றி எதுவும் தெரியாத இவர்களிடம் முக்கிய பிரச்சனையான நிலையானை 63 பற்றி கேள்வி கேட்டால் ஒரு காமெடி பேட்டி நிச்சயம் என்றாலும் வேலை பாதிக்கபடகூடும் என்பதால் தவிர்த்துவிட்டோம்.

IMG_20160625_172227இவர்களிடம் போட்டியிட முடியாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி சார்ந்த ஐ.என்.டி.யூ.சி சங்கத்தினர் தங்கள் உறுப்பினர்களுக்கு ஹெல்மெட்டையும், திமுக-வினர் அயர்ன் பாக்ஸ்-ம் வழங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் ஓட்டை தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.

பொதுத்தேர்தலை போல ஓட்டுக்குக்கு பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்படுவது மறைமுகமாக, தெருவிளக்கை அணைத்துவிட்டு நடப்பதில்லை. பச்சையாக பகிரங்கமாக கொடுப்படுகின்றது.அதோடு அதை நியாயப்படுத்துவவும் செய்கிறார்கள்.

“எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஆண்டாண்டு இது போன்று பரிசுப்பொருட்களை அளிப்பது வழக்கம். இதே போலத்தான் இவ்வாண்டும் அளிக்கிறோம்.” என்று இதை நியாயப்படுத்துகிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏ மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த வாயிற்கூட்டத்தில் அதிமுக பணம் கொடுப்பதை வறுத்தெடுத்துவிட்டு “உறுப்பினர்கள் நமது தொழிற்சங்க அலுவலகத்தில் அயன் பாக்ஸ் பெற்றுக்கொள்ளலாம்” என அறிவித்தார்கள். அங்கேயே தொ.மு.ச ஊழியர்கள் தங்கள் கையிலிருந்த பட்டியல்படி ஊழியர்களுக்கு சீட்டில் உறுப்பினர் எண்ணை எழுதி கொடுக்க அவர்கள் அலுவலகத்தில் அதை காட்டி அயன்பாக்ஸ் பெற்று சென்றார்கள்.

தொழிலாளிகளை பொருத்தவரை எவ்வித குற்றவுணர்வுமில்லாமல் பரிசுப்பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள். “பரிசுப் பொருட்களுக்காக ஓட்டு போட்டால் தப்பு. ஆனால் அதை வாங்குவதை எப்படி தவறு சொல்ல முடியும்” என வாதாடுகிறார்கள். “ நாங்க சந்தா கொடுக்கிறோம். அவங்க இத தர்றாங்க” என்று திறமையாக சமாளிக்கிறார்கள்.

இதை பார்த்து விட்டு அங்கிருந்த தொழிலாளி ஒருவரிடம் இத்தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் என்ன வேறூபாடு என்று கேட்டோம். அதற்கு அத்தேர்தல்களில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ-க்களை மீண்டும் பார்க்க முடியாது.இங்கு பார்க்கலாம் வாக்குறுதி பற்றி கேட்கலாம். ஆனால் எதை கேட்டாலும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது பார்க்கலாம் என்ற ஒரே பதிலைத்தான் எப்போதும் சொல்வார்கள் என்றார்.

பரிசுப்பொருட்கள் வாங்காதவர்களை பொருத்தவரை பெரும்பாலும் கவுரவ குறைச்சல் என்ற வகையில் வாங்காமல் இருக்கிறார்கள். வாங்கும் தமது நண்பர்கள் தவறு செய்வதாக கருதவில்லை. “நாம எப்படி சரி தவறுனு சொல்ல முடியும். அது அவங்க விருப்பம். “ என்கிறார்கள்.

“சரி இவ்வளவு பணம் செலவு செய்கிறார்களே இதை திரும்ப எடுக்க என்ன செய்வார்கள்”

“குடியிருப்பு ஒதுக்கீடு செய்வது போன்றவற்றில் ஊழியர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கொடுப்பாங்க. உள்ள நிறைய கமிட்டி இருக்கு அதுல ஏதாவது சம்பாதிப்பாங்க” என்று தாங்கள் புரிந்து வைத்திருக்கிற அளவில் கூறுகிறார்கள். உண்மையில் இதன் வீச்சு பெரியது. நிர்வாகத்தோடு கைகோர்த்துகொண்டு காண்டிராக்டுகளை தங்கள் விரும்பியவர்களுக்கு பெறுவது இவர்களின் முதன்மை முறைகேடாக இருக்கிறது. பல நிர்வாக கமிட்டிகள், பணியிடங்கள் நிரப்பபடும் போது நிர்வாகத்துடனான தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவது என பல வகைகளில் சம்பாதிக்கிறார்கள்.

பெல் வளாகத்தில் பாய்லர் பிளாண்ட் வோர்க்கர்ஸ் யூனியன் (BPWU) என்ற பெயரில் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் செயல்படுகிறது. 1992-லேயே BPWU /பு.ஜ.தொ.மு தோழர்கள் வெளிக்கொணர்ந்த கேண்டீன் ஊழல் ஒன்றின் அளவு சில கோடிகளை தாண்டும் என்று கூறுகிறார் BPWU தலைவர் தோழர் சுந்தரராசு. இதிலிருந்து ஓட்டுகட்சி தொழிற்சங்க தலைமைகள் இவ்வளவு செலவழிப்பதன் அடிப்படையை புரிந்துகொள்ள முடியும். ஆனால் தொழிலாளிகளை பொறுத்தவரை இது தவறு என்றோ அதை தடுக்கவேண்டும் என்றோ முனைப்பு காட்டவில்லை. இது குறித்து ஆவேசமான கருத்துக்களை அவர்களிடம் காண முடியவில்லை. தவறுதானே என்று கேட்டால் ஆமாம் என்றே கூறுகிறார்கள்.

ஆளும் கட்சியின் ‘கவுரவப்’ பிரச்சினை!

தற்கு முந்தைய தேர்தலில் தி.மு.க-வின் தொ.மு.ச முதன்மை சங்கமாகவும், அதை தொடர்ந்து முறையே ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, அம்பேத்கர் எஸ்.சி/எஸ்.டி யூனியன், அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்க பேரவையும் அங்கீகரிப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு பெற்றிருந்தன. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் அ.தி.மு.க இதை ஒரு கவுரவப் பிரச்சனையாக பார்க்கிறது. அதாவது அம்மா ஆட்சியின் கீழ் பெல் தொழிற்சாலையும் வந்தே தீர வேண்டும். தோற்றுப் போன மந்திரிகள் தங்கள் பரிவாரங்களோடு இங்கே முகாம் அடித்திருப்பதைப் பார்த்தால் அவர்களின் ‘கவுரவப்’ பிரச்சினையின் அளவை புரிந்து கொள்ள முடியும்.

பெல் அண்ணா தொழிற்சங்க பேரவையின் கலைச்செல்வன் தான் இத்தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு IMG_20160625_124302
தோல்வியடைந்தவர். இத்தேர்தலில் தோல்வியடைவது என்பது கட்சியில் அவரது இடத்தை காலிசெய்வதற்கு சமம். மேலும் அ.தி.மு.க தொழிற்சங்க பிரிவு தலைவராக இருக்கும் சின்னையா, வளர்மதி போன்றவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்றிருக்கும் நிலையில் இங்கு அவர்கள் வெற்றி பெறுவது கட்சியில் அவர்களது எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. தொழிலாளர் பிரச்சனைக்கு அவர்கள் போராடவில்லை தங்கள் எதிர்காலத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இதில் வெற்றிபெறுவது தேவையாக இருக்கிறது.

தேர்தலில் பேசப்படும் பிரச்சினைகள் எவை?

மோடி அரசு தனியார்மயமாக்கத்தை மிகத்தீவிரமாக செயல்படுத்திவருகிறது. பாதுகாப்பு உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதோடல்லாமல் பொதுத்துறையின் பங்குகள் விற்கப்டுவதையும் தீவிரப்படுத்துகிறது. வரும் காலங்களில் அது இன்னும் தீவிரமாகும். பெல் நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தையும் கையில் வைத்திருக்கிறது. ஆழம் பார்க்கும் வகையில் அதை அவ்வப்போது அறிவித்தும் வருகிறது. அப்படி ஒரு நிலை வந்து தொழிலாளிகள் போராடினால் அவர்களை ஒடுக்கவும், தனியார்மய கொள்கைகளை பிரச்சனையில்லாமல் அமல்படுத்தவும் நிலையானை எண் 63 என்ற அடக்குமுறை ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறது நிர்வாகம். இந்த நிலையாணைப்படி கேள்வியில்லாம்ல் விசாரணையில்லாமல் நிர்வாகம் நினைத்தால் யாரையும் வேலைநீக்கம் செய்ய முடியும்.

இவ்விரண்டும் தான் தொழிலாளிகளின் கவலைக்குரிய விசயமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தொழிலாளிகளிடம் பேசியதிலிருந்து அவர்கள் முந்தைய ஆண்டுகளைப் போல அல்லாமல் ஓவர் டைம் ஊதியம் குறைந்து வருவதைதான் கவலைக்குரிய விசயமாக பார்க்கிறார்கள். பெல் நிறுவனத்தை பொருத்தவரை கடந்த கால போராட்டங்களின் பலனாக ஊழியர்களின் சம்பளம் ஓப்பீட்டளவில் அதிகமாயிருக்கிறது. ஐந்து ஆண்டு அனுபவமுள்ள ஐ.டி.ஐ படித்த தொழிலாளி ஒருவர் 45,000சம்பளம் பெறுவதாக தெரிவித்தார். பணிப் பாதுகாப்பு, நல்ல சம்பளம், மலிவு விலை உணவு, இலவச மருத்துவம், தங்குமிட வசதி உள்ளிட்ட உரிமைகளை பெற்றிருக்கிறார்கள். தனியார்மய ஆபத்து வருவதை உணர்ந்திருந்தாலும் உடனடியாக வராது என்று கருதுகிறார்கள். அதனால் இப்போது அக்கறைப்பட தேவையில்லை என்பதே பெரும்பான்மையான தொழிலாளிகளின் கருத்தாக இருக்கிறது.

பெல் அதிகாரிகள் தங்கள் போட்டியாளர்களான தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதால் தங்களுக்குIMG_20160625_080239கிடைக்கக்கூடிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை என்றும் இதனால் தான் தங்கள் ஓ.டி குறைவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள் தொழிலாளிகள். இது முற்றிலும் உண்மையே. பல முன்னால் பெல் அதிகாரிகள் தாங்கள் ஓய்வு பெற்றதும் எல்.அண்ட்.டி போன்ற தனியார் நிறுவனங்களில் சேர்ந்துகொள்கிறார்கள். கனரக எந்திரங்களை தயாரிக்கும் வரைபடங்கள் உள்ளிட்ட அறிவாயுதங்களுடன் வெளியேறி சொந்த நிறுவனங்களை ஆரம்பித்துகொள்கிறார்கள். இதற்கு அதிகாரிகளின் சுயநலம் மட்டும்தான் காரணம் என நினைக்கிறார்கள் தொழிலாளிகள். ஆனால் இது பாதியளவு தான் உண்மை. தனியார்மயம் என்ற கொள்கை அமலில் இருப்பதால் தான் அதிகாரிகள் இம்முறைகேடுகளில் ஈடுபடமுடிகிறது. இந்த ஓவர் டைம் ஊதியத்தைக்கூட தனியார்மயத்தை வீழ்த்தாமல் பெற முடியாது என்பது தான் உண்மை. தொழிலாளிகள் புரிந்துகொண்டபடி அதிகாரிகளின் ஊழல் தான் ஓவர் டைம் ஊதியம் பறிபோவதற்கு காரணமென்று வைத்துகொண்டாலும் அதற்கு எதிராக நீங்கள் ஏன் போராடவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களாக இருக்கும் ஓட்டுகட்சி சங்கங்களின் துரோகங்களை தொழிலாளிகள் நினைவுகூர்கிறார்கள். குறிப்பாக ஆரோக்கியசாமி என்ற தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவத்தில் சங்கங்கள் தங்களுக்கு உறுதுணையாக இல்லை என குற்றம் சாட்டினார்கள். இச்சம்பவத்தில் பாதுகாப்பில்லாத பணிச்சூழலில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்த அதிகாரி ஒரு தலித் என்பதால் சாதி அடிப்படையில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது அம்பேத்கர் எஸ்.சி/ எஸ்.டி தொழிற்சங்கம். சம்பந்தப்பட்ட அதிகாரியை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற தொழிலாளிகளின் கோரிக்கையை இச்சங்கம் எதிர்த்தது. பிற ஓட்டுகட்சி சங்கங்கள் நிர்வாகத்துடன் இணைந்து துரோகமிழைத்துள்ளார்கள். இப்போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க தொழிற்சங்க ஊழியர்கள் அ.தி.மு.க தம்பிதுரையின் சிபாரிசில் வேலை பெற்றிருந்தாலும் ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் துரோகத்தை மறக்கவில்லை என்கிறார்கள். அதே சமயத்தில் அச்சங்கங்களிடமிருந்து பணம்/பரிசுப்பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள்.

“இவர்களை விட்டால் வேறு யாருக்கு ஆதரவளிப்பீர்கள்?” என்று கேட்டால்,

இந்தியக் கம்யூனிசக் கட்சி சார்ந்த ஏ.ஐ.டி.யூ.சி யின் DTS, மற்றும் புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு-வின் BPWU சங்கங்களை தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான ஊழியர்களை பொருத்தவரை இவ்விரு சங்கங்களும் “ஃபிரெஷ்”ஷாக இருக்கிறார்கள்; கட்சி சார்பற்றவர்கள்; புதிதாக தேர்ந்தெடுப்போம் என்ற அரசியலற்ற கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஆயினும் சிலர் பு.ஜ.தொ.மு தனியாமயம், தொழிலாளர் நல சட்ட திருத்தம், டாஸ்மாக் மூடல் உள்ளிட்ட விசயங்களுக்கு போராடுகிறார்கள், அதனால் அவர்களை ஆதரிப்போம் என்றார்கள்.

ஒரு சரியான சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்ற கேள்விக்கு பெரும்பான்மையானவர்களின் கருத்தை பின்வரும் கருத்துக்களை கொண்டு விளக்கலாம்.

“ சார் சங்கம் தீவிரமா இருக்க கூடாது சார். சூழ்நிலையை பாத்து அதுக்கு ஏத்தாப்ல மூவ் பண்ணனும். சண்டைபோட்டு டிஸ்மிஸ் ஆக்கிறாம பெனிஃபிட் கிடைக்கிற மாதிரி இருக்கனும்”

“சார் ஓவரா தொழிலாளிகள்னு சொல்லாம மேனேஜ்மன்ட் ஒர்க்கஸ் ரெண்டு பேரையும் பேலன்ஸ் பண்ணி போகனும். கம்பெனி நல்ல இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். ரெண்டுமே முக்கியம்.”

சிலர் மட்டுமே உறுதியாக நின்று போராடுவது தான் ஒரு சிறந்த சங்கத்திற்கான இலக்கணமாக கூறினார்கள்.

டாஸ்மாக் உள்ளிட்ட ஜெயா அரசு மீது ஆயிரம் அதிருப்தி இருந்தாலும் சட்டமன்ற தேர்தலில் அவரது வெற்றிக்கு சீரழிந்த, ஊழல் படிந்த சமூக அடிப்படையும் ஒரு காரணமாக இருந்ததை அறிவோம். இங்கு நிலவும் தொழிலாளிகளின் சமூக அடிப்படையும் கிட்டதட்ட அதை ஒத்ததே. பெல் தொழிலாளிகளும் ஐ.டி ஊழியர்களைப் போல முதலாளித்துவ உலக கண்ணோட்டம், அதாவது கம்பெனியின் தலைமை நிர்வாகத்தை நம்பிக் கொண்டிருப்பதற்கு அவர்கள் சலுகை பெற்ற ஊழியர்களாக இருக்கும் சமூக நிலைமையும் ஒரு காரணம்.இந்த கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் பணியும் தனியார்மத்தை எதிர்க்கும் பணியும் வேறு வேறு அல்ல. அங்கீகரிக்கப்பட தொழிற்சங்கங்கள் தொழிலாளிகளை அரசியல்படுத்தாதன் விளைவே இது.

தொழிலாளிகள் பரிசீலிக்க வேண்டியது பரிசையா, அரசியலையா?

IMG_20160625_080221து குறித்து பு.ஜ.தொ.மு-வின் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் தோழர் சுந்தரராசுவிடம் பேசிய போது, “ நாங்கள் 90-களிலிருந்து செயல்பட்டு வருகிறோம். நிர்வாகம் மற்றும் ஓட்டு கட்சி தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாதத்தையும் ஊழல்களையும் அம்பலப்படுத்துவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கேண்டீன் கமிட்டியில் தேர்வாகி அங்கு நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தினோம். இதனால் எப்படியாவது எங்களை வீழ்த்திவிட துடித்தார்கள். இப்பின்னணியில் போனஸ் பிரச்சனையில் முன்னணியில் நின்று போராடியபோது 5 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார்கள். இதை பிற தொழிற்சங்கங்கள் ஆதரித்தன. தொழிலாளிகளை பீதியூட்டி எங்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சித்தனர். போராடி மீண்டும் வேலை பெற்றோம். இப்போதும் கூட தொழிலாளிகளை பீதியூட்டும் வேலையை செய்துவருகிறார்கள்.

ஓட்டுகட்சி தொழிற்சங்கங்கள் பொருளாதாரவாதத்தை அதாவது ஒரு தொழிலாளியின் ஊதியம், போனஸ் போன்றவற்றை மட்டும் சுயநலத்தோடு ஊட்டி வளர்க்கிறார்கள். ஆனால் நாம் பெல் தொழிற்சாலையை மட்மல்ல, நாட்டின் பொதுத்துறைகளை காப்பாற்றவும், தனியார் மயத்தை ஒழிக்கவும் அரசியல் பேசும் போது தொழிலாளிகள் கவனிக்கிறார்கள். ஆதரிக்கிறார்கள். அதனால் முன்னர் இருந்த நிலைமை மாறியிருக்கிறது. பி.எஃப்/கேண்டீன் கமிட்டி தேர்தல்களில் 1000 மேற்பட்ட ஓட்டுகளை பெற்றிருக்கிறோம். இத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” உறுதியுடன் கூறினார்.

ஒரு நாட்டின் தொழிலாளி வர்க்கம் எந்த அளவு அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கிறதோ அந்த அளவு சமூகத்தின் முன்னேற்றம் இருக்கும். அதே போன்று ஒரு நாட்டின் தொழிலாளி வர்க்கம் எந்த அளவு பின்தங்கி இருக்கிறதோ அந்த அளவு சமூகமும் சீரழிந்து போய் இருக்கும். பெல் தொழிற்சாலை வளாகத்தை சுற்றி வந்த போது நமது தொழிலாளி வர்க்கம் புடம் போடப்படவேண்டிய அவசியத்தை உணர முடிகிறது.

எட்டப்பன், தொண்டைமான், ஆற்காடு நவாப், சரபோஜி, திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களையெல்லாம் துரோகிகள் என்று வரலாறு குறித்திருக்கிறது. ஆனால் அந்த துரோகிகள் அனைவரும் அவர்களது காலத்தில் சகல வசதிகளோடு வெள்ளையர்களது காலை நக்கி அடிமை ராஜாக்களாக வாழ்ந்து மடிந்தார்கள். ஆனால் கட்ட பொம்மனோ, மருது சகோதரர்களோ, திப்பு சுல்தானோ, பகத்சிங்கோ தம்முடைய இன்னுயிரை ஈந்து அடிமைத்தனத்தை எதிர்த்தார்கள்.

ஆகவே பெல் தொழிற்சாலைகளின் தொழிலாளிகள் பரிசுப் பொருட்கள், மந்திரி சிபாரிசு, ஆளும் கட்சி செல்வாக்கு, குடியிருப்பு வசதிகள், மற்றும் ஓட்டுக்கு பணம் போன்றவற்றுக்கு பலியாகப் போகிறார்களா இல்லை பெல்லை மட்டுமல்ல நாட்டையே காப்பாற்றப் போகும் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அரசியலை ஆதரிக்கப் போகிறார்களா என்பதை அவர்களையே பரிசீலிக்குமாறு கோருகிறோம்.

– வினவு செய்தியாளர்கள்.

  1. வரும் திங்கட்கிழமை 25.06.2016 அன்று நடைபெறுகிறது என்று உள்ளது ,தேதி தவறு என்று கருதுகிறேன் திருத்தவும்.

  2. தொமுச 891 , அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் 814 வாக்ககளும், அண்ணா தொழிற் சங்கம் 730 வாக்குகளும் பெற்றன. சிஅய்டியு 655 வாக்குகளும், பிஎம்எஸ் 634 வாக்கு களும், ஏஅய்டியுசி 559 வாக்குகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க