சிரிசேன, ஓடியாடித் திரியும் ஐந்து வயது சுட்டிப்பையன். நல்ல புத்திசாலி, அது போலவே மிகவும் குறும்புக்காரன். வழமையாக போய் வருகின்ற அவனது மொன்ரிஸரியிலே (மழலையர் பள்ளி) ஒருநாள் திடீரென மயங்கி விழுகிறான். அதனால் அவனை உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கின்றார்கள்.
அனுமதிக்கப்பட்ட நேரம் முதல் அவனுக்கு வலிப்பு (seizures) வரத் தொடங்குகிறது. அந்த வலிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டும் அதனை நிறுத்த முடியவில்லை. பல மணிநேர அயராத போராட்டத்திற்குப் பின் நான்கு வகை வலிப்பு நிவாரணிகளை இரத்தம் வழியாக செலுத்தி அந்த வலிப்பு நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
இப்படி எல்லா முயற்சிகள் செய்தும், இரண்டு நாட்கள் கடந்தும் அந்த துடிதுடிப்பான பையன் எழுந்திருக்கவேயில்லை, பேசவுமில்லை, கதைக்கவுமில்லை. ஒரு ஜடமாக கட்டிலோடு ஆகிவிட்டான். இது என்னவாயிருக்கும் எதனால் வந்தது என்று வைத்தியர்கள் எல்லாம் மூளையை பிழிந்து விவாதித்து கொண்டிருக்கும் பொழுது அவனது MRI, EEG போன்ற பரிசோதனை முடிவுகளும் வந்து கொண்டிருந்தன. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். ஏனெனில் இவைகள் எல்லாமே எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட ஒரு நோயின் அறிகுறிகளை சுட்டி நின்றன.
அது தான் Subacute Sclerosing Panencephalitis (SSPE) எனப்படும் ஒரு வகை மூளை அழற்சி நோய். இதனால் மூளை வெகுவாக பாதிக்கப்பட்டு மெதுவாக அழிந்தும் வருகிறது. இனி இவன் எழுந்து நடப்பான், பேசுவான் என்பதெல்லாம் சந்தேகமே.
இது என்ன நோய்? எதனால் ஏற்பட்டது? என்ற காரணங்களை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கும், உங்களுக்கு. இந்த நோய் அச்சிறுவனுக்கு ஏற்படக் காரணம் ஒன்பது மாதத்தில் போட வேண்டிய ஒரு தடுப்பூசி (வக்சீன்) போடாததுதான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.? சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படுகின்ற மீசல்ஸ் Measles எனப்படும் தட்டம்மை நோயின் தாக்குதலிற்கு பின்னால் மிக நீண்ட காலத்திற்குப் பின் சுமார் நான்கு, ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெகு அரிதாக வருகிற பாரிய தீர்க்க முடியாத சிக்கலான விளைவுதான் (complication) இந்த SSPE. இது ஒரு கொடிய நோய் நிலை, அதி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
இதன் மூலம் முற்றாக மூளை அழற்சி ஏற்பட்டு அந்த குழந்தை நடக்க முடியாமல், எழும்ப முடியாமல் அப்படியே ஒரு ஜடமாக மாறிவிடுவதும் அதன்பின் தீர்க்க இயலாத நிலையில் உயிரிழந்து விடுவதும்தான், இதில் உள்ள ஆகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது. இன்றைய தேதி வரை இந்த நோய்க்கு எந்த விதமான குணப்படுத்தும் மருந்துகளும் கிடையாது என்பதுதான் மற்றுமொரு கவலையான விஷயம். ஆனால் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு ஒரே ஒரு உபாயம் உண்டு. அதுதான் மீசல்ஸ் வராமல் தடுப்பது என்ற நம்பிக்கை ஊட்டும் செய்தி. இந்த மீசல்ஸ் வராமல் தடுப்பதற்கான மிகச்சிறந்த ஒரே வழி மீசல்ஸ் அல்லது MMR எனும் தடுப்பூசியை உரியகாலத்தில் போட்டுக்கொள்வது மாத்திரமே.
படிக்க:
♦ தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
♦ நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்
இன்றைக்கு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் இலங்கை முழுவதும் இந்த நோய் பரவியது. அதற்கு காரணம் இலங்கையில் அந்த மீசல்ஸ் வக்சீன் ஏற்றுவதில் ஏற்பட்ட ஒரு சிறு தாமதமும் குளறுபடியும் அதனால் ஏற்பட்ட வக்சீன் தட்டுப்பாடுமாக அறியப்படுகிறது. மீசல்ஸ் எனப்படும் இந்த நோய் இலங்கையிலே மிகவும் அரிதாகவே காணப்பட்ட ஒரு நோய்.
நான் மருத்துவ பீடத்தில் இருந்த காலத்திலோ அல்லது பயிற்சி வைத்தியராக ஆரம்பத்தில் இருந்த காலத்திலோ இந்த நோயை இலங்கையிலே கண்டது கிடையாது. அப்பொழுது மீசல்ஸ் என்ற இந்த நோயின் இலட்சணங்களை நாங்கள் புத்தகங்களில் படங்களாக போட்டோக்களாகத்தான் பார்த்திருக்கிறோம். எங்களது மருத்துவ ஆசிரியர்கள், விஷேட நிபணர்கள் தாங்கள் வைத்தியர்களாக இருந்த ஆரம்ப காலங்களில் இந்த நோய்களை கண்டதாகவும், அதன்பின்னர் 1984-ம் ஆண்டில் இந்த நோய்க்கான வக்சின் அறிமுகப்படுத்திய பின்னர் இது முற்றாக மறைந்து விட்டதாகவும் படிப்பித்தது இன்றும் ஞாபகம் இருக்கின்றது.
ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன், 2011-ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கையின் தடுப்பூசித் திட்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தின் காரணமாக இந்த measles வக்சீனுக்கு நாட்டிலே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பிறந்த ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த மீசல்ஸ் நோய் பரவத் தொடங்கியது. அதுதான் எனது வயதையொத்த வைத்தியர்கள் எல்லாம் முதன்முதலில் மீசல்ஸ் நோயை கண்களால் கண்ட காலப் பகுதியாகவும் இருக்கிறது. அப்பொழுது வைத்தியசாலையின் சிறுவர் வார்டுகள் எல்லாம் மீசல்ஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளால் நிரம்பியிருந்தது.
பிள்ளைகளில் மீசல்ஸ் தாக்கம் என்றால் என்ன ? அது எப்படி ஏற்படுகிறது ? அந்த நோய் தாக்கத்தினால் ஏற்படும் நோய் இலட்சணங்கள் எப்படிப்பட்டது என்று மருத்துவ புத்தகங்களில் படித்தவைகளையும், கண்டவைகளையும் கண்கூடாகக் கண்டு இது உண்மை, நிதர்சனம் என்பதை ஆகர்ஷிக்க கூடியதாக இருந்ததும் அந்த காலப்பகுதியில்தான். அந்தக் நேரத்தில் எங்களது மூத்த வைத்திய நிபணர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லி வைத்தார்கள்.
அதுதான், இன்னும் நான்கைந்து வருடங்களில் இந்த நோயின் அடுத்த நிலையான இந்த SSPE-ஐ நாம் இலங்கையில் சில வேளைகளில் காணக்கூடியதாக இருக்கும் என்று. அந்த ஆருடம் இப்போது உண்மையாகி இருக்கிறது. இந்த வருடத்தில் மாத்திரம் நாங்கள் இதுவரை மூன்று SSPE நோயாளிகளைக் கண்டிருக்கிறோம். அதில் இருவர் உயிரிழந்து விட்டனர், மற்றய மூன்றாவது பிள்ளை இன்றோ நாளையோ என உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் கட்டிலோடு முடங்கிக் கிடக்கிறது .(முழு நாட்டிலும் இதன் தொகை இதை விட பலமடங்காக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்க)
தடுப்பூசிகள் எனப்படும் வக்சீன்கள் உண்மையிலயே இவ்வாறான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் என்பதை நான் முதன்முதலில் கண்கூடாக கண்டது இந்த மீசல்ஸ் வக்சீனூடாகத்தான். 2012, 2013-ல் இலங்கை அரசு உடனடியாக வெளிநாடுகளில் இருந்து இந்த தடுப்பூசியை வரவழைத்து குழந்தைகளுக்கு கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மீஸல்ஸ் முற்றாகவே இல்லாமல் போனது. வக்சீன்கள் நோய்களைக் கட்டுப்படுத்தும், அதன் நன்மைகள் பற்பல என நிறையவே படித்திருந்தாலும், நிறைய விஞ்ஞான ரீதியான கட்டுரைகளை, புள்ளி விவரங்களை வாசித்திருந்தாலும் இவைகள் எல்லாம் எவ்வளவு உண்மை என்பதை விளங்கி கொள்ள இந்த அனுபவம் ஒரு மிகச்சிறந்ததொரு முத்தாய்ப்பாக இருந்தது.
படிக்க:
♦ 50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
வக்சீன்களால் கட்டுப்படுத்தப்படக்கூடிய இதுபோன்ற பல்வேறு நோய்கள் காணப்படுகின்றன. இவைகள் இன்றைய மருத்துவப் புத்தகங்களில், பாடங்களில் மட்டுமே காணப்படுகின்ற நோய்களாக இருக்கின்றன. இந்நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட நான் எனது வாழ்நாளில் கண்டது கிடையாது.
கால்கள் இரண்டும் ஊனமாகிவிடுகின்ற, நடக்கமுடியாமல் போகின்ற போலியோ எனப்படுகின்ற நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைக் கூட கண்டது கிடையாது. போலியோ வக்சீன் கொடுப்பதன் காரணமாக அது இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. அது போல பிறந்த குழந்தைகளில் ஏற்படுகின்ற டெடனஸ் (Neonatal Tetanus) எனப்படும் வலிப்பு நோய். பால் குடிப்பதற்கு கூட வாயை திறக்க முடியாமல் இரும்புக் கட்டை போல் குழந்தைகளை ஆக்கி விடுகின்ற இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கூட இப்பொழுது இலங்கையில் கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் விசர்நாய்க் கடியினால் ஏற்படுகின்ற கொடிய நோயாகிய றேபிஸ் (Rabies ) எனப்படுகின்ற நாய் வெறி நோய். நாய் போலவே குரைத்து நாய்போலவே செத்து விடுகின்ற அந்த கொடிய பயங்கரமான நோய். அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரைக்கூட இது வரை நான் கண்டது கிடையாது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள மிகச்சிறந்த தடுப்பூசி திட்டம் (Extented Programme of Immunisation). இந்த திட்டத்தின் மூலமாக இவ்வாறான நோய்கள் நம்மை விட்டும் நமது சந்ததிகளை விட்டும் தூரமாகி இருக்கின்றன.
ஆனால் நாம் பல்லாண்டு முயற்சியில், பெரும் பொருட்செலவில், மனித உழைப்பில் கட்டிக்காத்துவந்த இந்த நோய் தடுப்பு முறைமைகள் பாரிசாலன், ஹீலர்பாஸ்கர், பின்னூரி போன்ற வக்சீன் போத்தல்கள் கருப்பா வெள்ளையா என்று கூட தெரியாத, அடிப்படை விஞ்ஞானம் தெரியாத இவர்களினால் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதுதான் விந்தையாக இருக்கிறது.
ஒரு ஆறு மாத காலத்தில் நாட்டில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாட்டின் தாக்கம் எவ்வளவு பெரிய விலையை செலுத்தி இருக்கிறது என்பதற்கு மேலே கூறிய சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு. அதன் விளைவுகளை, அந்த சாதாரண நோயின் கொடிய விளைவுகளை இப்பொழுது நாங்கள் கண்டு கொண்டிருக்கிறோம்.
சில வேளைகளில் நீங்கள் சொல்லலாம் சில டொக்டர்மார் (Doctor), ஏன் விஞ்ஞானிகள் கூட வக்சீனுக்கு (Vaccine) எதிராக இருக்கிறார்கள் என்று. உண்மைதான் எந்த ஒரு கருத்திற்கும் இரண்டு கருத்துக்கள் இருப்பது என்பது இந்த உலக நியதி. மனிதன் நிலவில் கால் வைத்தது உண்மையா ? இல்லை ஏமாற்றும் பொய்யா ? பூமி உருண்டையா? இல்லை தட்டையா? இலுமினாட்டிகள் உண்டா? இல்லையா? செப்டம்பர் 11 திகதிய வர்த்தகக் கட்டிடத் தாக்குதலை செய்தது ஒசாமாவா? அமெரிக்காவா?
இப்படி இரண்டு பக்கத்திற்கும் நியாயமான கருத்துக்கள், இரண்டு பக்கதிற்கும் ஆதாரமான தரவுகள் என்பன இன்டர்நெட் முழுக்க பரவிக்கிடக்கின்றன. அதுதான் மனித இயல்பு. இது பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள உண்மை (truth) , உண்மைக்குப் பின்னாலுள்ள உண்மை (post truth) என்பவை பற்றிய புரிதல் அவசியமாக இருக்கிறது. அது போலத்தான் இந்த வக்சீன் பற்றிய எதிர்ப்பு வாதங்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆக அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள், அதில் இது இருக்கிறது, அது இருக்கிறது… என்ற கதைகளை எல்லாம் விட்டுவிட்டு இது பற்றி நடுநிலையாக சிந்திப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் முன் வரவேண்டும். தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. அதுபோல் மிகவும் வினைத்திறனானவை, நோய்களைக் கட்டுப்படுத்த வல்லவை என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். தடுப்பூசிகள், அதன் உருவாக்கம், வரலாறு, அது தொழிற்படும்முறை பற்றி தேவைப்படுவோர் நிறையவே வாசித்து விளங்கிக் கொள்ளலாம். (வேண்டுமானால் இது பற்றி தெளிவாக இன்னுமொரு பதிவில் கலந்துரையாடலாம்.)
உண்மையில் நீங்கள் வக்சீன் எதிர்ப்புக் (Anti Vaccine ) கொள்கை உள்ளவராக இருந்தால் பின்வரும் வினாக்களுக்கு உங்களிடம் விடை இருக்கிறதா என்பதை உள்ளத்தை தொட்டு கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் தடுப்பூசி கொடுக்காமல் விடுவதால் உங்கள் குழந்தையின் வாழ்க்கையை, எதிர்காலத்தை நீங்கள்தானே கேள்விக்கு உட்படுத்துகிறீர்கள்.
ஒரு நாள் உங்கள் ஆண்மகன் குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கின்ற போது அவனுக்கு சிறு பிராயத்தில் ஏற்பட்ட மம்ஸ் (mumps) எனப்படுகின்ற கூகைக்கட்டு நோய்தான் தனது விந்தணு உற்பத்தியை தடை செய்திருக்கிறது என்று தெரியவந்து, ஏன் எனக்கு MMR வக்சீன் போடவில்லை என அவன் கேட்டால் அவனிடம் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ?
அதுபோல் ஒரு பெண் குழந்தை பெரியவளாகி திருமணம் செய்து வாழுகிறபோது தன் வயிற்றில் உருவாகும் குழந்தை ரூபல்லா நோய்தாக்கத்தினால் உடல் அவயங்களை இழந்து, இதயத்தில் துளை ஏற்பட்டு, பார்வைகள் குருடாகிப் பிறக்கப் போவதை அறிந்து ஏன் எனக்கு ருபெல்லா வக்சீன் போடவில்லை என்று கேட்டால் அந்த மகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
விசர் நாய்க்கடி பட்டு உங்கள் உறவினர்களில் ஒருவர் நாய் போல் குரைத்து கொண்டிருப்பதை பார்த்து ஏன் அவருக்கு ரேபிஸ் வக்சீன் (ARV) கொடுக்கவில்லையா என்று யாரும் கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?
இப்படி பதில் சொல்ல வேண்டிய நிறைய கேள்விகள் இருக்கின்றன.
இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருந்தால், நீங்கள் உறுதியான பதில்களை வைத்திருந்தால் நீங்கள் தாராளமாக தடுப்பூசிகளை கொடுக்காது விடலாம். அல்லது வக்சீன் எதிர்ப்பாளராக இருக்கலாம். இதற்கெல்லாம் பதில் இல்லை என்றால் பேசாமல் வக்சீனை போட்டு விட்டு நடையை கட்டுவதுதான் மிகச் சிறப்பானதாக இருக்கும்.
வக்சீன் கொடுக்கமறுத்த அமெரிக்க, தாய்லாந்து பெற்றோரரினால் இப்பொழுது அந்த பிரதேசத்தில் பரவிவரும் நோய் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் இதை வாசிக்க முடியும்.
- Anti-vaccination stronghold in N.C. hit with state’s worst chickenpox outbreak in 2 decades
- Fears grow as measles running rampant in southern Thailand
-மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics,
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka
A much needed, rational article. Thanks to the Doctor and Vinavu team.