கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள உக்ரைனின் எல்லையில் ஒரு இலட்சம் ராணுவ வீரர்களுடன் அதிநவீன போர் ஆயுதங்களை ரஷ்யா குவித்து போர் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் பங்கிற்கு போட்டியாக படைகளைக் குவித்து வருகின்றன. இதனால் போர் மூளும் அபாயத்தை தொடர்ந்து இந்நாடுகள் உக்ரைனிலுள்ள  தங்களது தூதரக அதிகாரிகளையும், ஊழியர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வெளியேற்றி வருகின்றன.
தற்போதைய உக்ரைன் அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கியை அகற்றிவிட்டு ரஷ்யா தனது ஆதரவு கட்சியைக் கொண்டு வர முயல்வதாக பிரிட்டீஷ் குற்றம்சாட்டி வருகிறது. பதிலுக்கு ரஷ்யாவும் நேட்டோவில் உக்ரைனைச் சேர்க்கக் கூடாது, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவை விரிவுப்படுத்தக் கூடாது. அங்கிருக்கும் நேட்டோ படைகளை திரும்பப்பெற்றுக் கொள்ள வேண்டுமென நிபந்தனையும் விதித்துள்ளது.
நேட்டோவில் சேர்க்கப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், தமது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே தமது இந்த நிபந்தனைகளை தவிர வேறு எந்த தீர்வையும் ஏற்கப் போவதில்லை என்பதை ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
படிக்க :
பாலஸ்தீனம் – உக்ரைன் : ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !
உக்ரைன்: அமெரிக்க பேராசையில் விழுந்த மண் !
தற்போதைய இச்சூழலை பனிப்போர் காலத்தை விட மிக மோசமானதாக மாறி வருவதாக ஐ.நா பொதுச் செயலர் ஆண்டனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். கவலையைத் தெரிவிக்கும் இவர், ஏனோ இந்தப் போர்ச்சூழலுக்குப் பின்னணியில் இருக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டி குறித்து வாய் திறக்கவில்லை.
அதாவது 2-ம் உலகப் போருக்கு பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சோவியத் யூனியனின் கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டன. மீதமுள்ள ஐரோப்பிய நாடுகளும் சோவியுத் யூனியனுடன் இணைந்துவிடாமல் (சோவியத் யூனியனை ஆக்கிரமிப்பாளனாக சித்தரித்து அதிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ல் உருவாக்கப்பட்டதே நேட்டோ – வட அட்லாண்டுக் நாடுகளின் கூட்டு அமைப்பு) இது அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது.
இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் உலகில் உள்ள அனைத்து பகுதிகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதே நேட்டோ அமைப்பின் நோக்கமாக இருந்தது. இதன் விளைவே போலந்து, லாட்வியா, எஸ்டோனியா, லாதுவேனியா போன்ற கிழக்கு ஐரோப்பா நாடுகளை நேட்டோ தன்னுடைய கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டது. மேலும், தனது போர் படையையும் அந்நாடுகளில் குவித்துள்ளது. இந்த அடிப்படையில்தான் உக்ரைனையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர ரஷ்யாவுடன் ஆக்கிரமிப்புப் போரில் இறங்கத் தயாராகி வருகிறது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பு.
இது இன்று நேற்றல்ல, கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நேட்டோ விரிவடையாது என 1990-ல் அளித்த வாக்குறுதியை அமெரிக்கா மீறியதிலிருந்தே தொடங்கிவிட்டது. ஏற்கெனவே போலந்து, லாட்வியா, எஸ்டோனியா, லாதுவேனியா போன்ற கிழக்கு ஐரோப்பா நாடுகளை நேட்டோவில் இணைத்துக் கொண்டதுபோல உக்ரைனையும் இழுத்துப் போட முனைகிறது.
1990 முதல் ரஷ்யாவின் உறுப்பு நாடாக இருந்து வந்த உக்ரைன் 1991-க்குப் பிறகு ரஷ்யாவிடம் இருந்து விலகி தன்னை சுதந்திரம் பெற்ற தனிநாடாக அறிவித்துக் கொண்டது. தனக்கென ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உருவாக்கிக் கொண்டது. அத்துமீறல், ஆக்கிரமிப்பு, போர் மூலம் பின்தங்கிய நாடுகளை (வளரும் நாடுகளை) காலனியப்படுத்தும் ஏகாதிபத்திய தன்மைக்கு தன்னை மாற்றிக் கொண்ட ரஷ்யாவானது, உக்ரைனின் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் உக்ரைன் ஏகாதிபத்திய ரஷ்யாவின் ஒரு பகுதி என்ற வாதத்தை வைத்து தனது அத்துமீறலை நியாயப்படுத்தி வருகிறது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததைத் தவிர்த்து, ஐரோப்பாவுடன் வர்த்தக பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென அதன் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தை நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததன் விளைவு 2014 பிப்ரவரியில் ரஷ்ய ஆதரவாளரான விக்டர் யானு கோவிச் தனது அதிபர் பதவியை இழக்க நேரிட்டது.
இந்நிலையில் ரஷ்ய ஏகாதிபத்தியம் 2014-ல் உக்ரைனின் கிரிமியா தீபகற்ப பகுதியில் கடற்படைத் தளத்தை அமைத்து, கிரிமியாவையும் ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது. இவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பொருளாதார தடையும் விதித்தன. அன்றைய தினம் நிலவிய போர் பதற்றத்தை தவிர்க்க ஜெர்மனும், பிரான்சும் தலையிட்டு சமரசம் செய்ய வந்தன.
அதேவேளையில் கிழக்கு உக்ரைனில் பிரிவினைக்கோரி போரை நடத்திவரும் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்தது. இதுதான் ரஷ்யா – உக்ரேனியப் போராக உருவெடுத்தது. அதாவது கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் இராணுவத்திற்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மின்ஸ்க் என்ற ஒப்பந்தம் அன்றைய (2015-ல்) உக்ரைன் அதிபர் பெட்ரோ பொசோஷென்சோவுக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட போர்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளவில்லை.
உக்ரைன் அரசு கிழக்கில் தேர்தல் நடத்தாமல் தன் நிலப்பரப்பை திரும்பப் பெறுவது என்றும் தன் நிலப்பரப்பு தனக்கு வராமல் தேர்தலை நடத்த முடியாது என்றும், தேர்தல் நடத்தாமல் சிறப்பு அந்தஸ்தை அல்லது சுயாட்சி உரிமையை தராமல் தன் நிலப்பரப்பை உக்ரைன் அரசு பெற நினைத்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டும் என்று மிரட்டுகிறது ரஷ்யா. மேலும், உக்ரைனை நேட்டோவில் இணைத்தால் நேட்டோ கிழக்கு நோக்கி நகர்ந்தால் உக்ரைன் இறையாண்மையை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்பதால் நேட்டோவில் சேர விடாமலும் கிழக்கை நோக்கி நகர விடாமலும் தடுக்க உக்கிரமான போரை நடத்தவும் தயாராக உள்ளது ஏகாதிபத்திய ரஷ்யா.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினை இன்று தீவிரமடைவதன் நோக்கம் என்ன?
தற்போதைய அதிபர் செலன்சுக்கி அமெரிக்க ஆதரவைப் பெற தீவிர முயற்சியை மேற்கொள்வதோடு நேட்டோவில் இணையும் வேலையைத் தீவிரப்படுத்துவது ஒருபுறம் இருக்க, மறுபுறம், ஏற்கெனவே தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்த உக்ரைனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கான வேலையை ரஷ்யாவும், உக்ரைனை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று அமெரிக்காவும் நடத்துகின்ற கழுத்தறுப்புக்கான போர் நடவடிக்கை தான் இது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
 இயற்கை எரிவாயு, எண்ணைய் திட்டங்களை ஐரோப்பா முழுவதும் ரசியா கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவே தற்போது உக்ரைன் பிரச்சினை தீவிரமடைந்திருக்கிறது.
படிக்க :
உக்ரைன்: அமெரிக்காவிற்கு சவால் விடும் ரசியா!
இந்திய சீன வர்த்தகம் : முதலாளிகளுக்கு மட்டும் ‘தேசபக்தி’ விலக்கு !
அமெரிக்காவில் சிறுபான்மை மக்களை காக்கத் தவறியது, கொரோனா பாதிப்பைத் தடுப்பதில் தோல்வி, பணவீக்கம், பில்ட் பேக் பெட்டர் திட்டம்1  ஆகியவற்றின் தோல்வியால் அதிபர் பைடன் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.இதிலிருந்து மீள அமெரிக்காவிற்கு இந்த போர் முனைப்பு அவசியமானதாக இருக்கிறது.
அதே போல ரஷ்யாவில் புதின் மீதான அலெக்ஸே நவால்னியின் ஊழல் புகார் அதையொட்டி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் போன்ற நெருக்கடியில் இருந்து மீளவும், மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெறவும் நோர்ட் ஸ்டீரீம்-2 இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கவும் ரசியாவிற்கும் இந்தப் போர் முனைப்பு அவசியமானதாக இருக்கிறது
இவற்றில் குறிப்பாக ரஷ்யா நோர்ட் ஸ்ட்ரீம்–2 இயற்கை பைப்லைன் திட்டம் ஐரோப்பா முழுவதும் எடுத்துச் செல்வது, இதுவரை எரிவாயுக்கான பைப்லைன் ஜெர்மன் வரை எடுத்து சென்றதை தடுக்க அமெரிக்கா முயல்வதோடு, கத்தார் போன்ற நாடுகளில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை ஐரோப்பா முழுவதும் விற்பதற்கு தடையாக இருக்கும் இத்திட்டத்தை முறியடிப்பது என அமெரிக்காவின் வர்த்தக நலன்கள் இந்த போருக்குப் பின்னால் நிற்கின்றன.
தனது இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டத்திற்கு தடையாக உள்ள அமெரிக்காவின் இயற்கை விற்பனையை முறியடிக்கவும் கிழக்கு ஐரோப்பா உக்ரைனில் ரசியா தன்னுடைய போர்ப் படைகளை நிறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருவதோடு, உலகப் போருக்கான அபாயம் இருப்பதாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி ஆக்கிரமிப்பிற்காக – தங்களது ஆதிக்கத்தை நிறுவ துடிக்கும் நோக்கத்திற்காக இவை உருவாக்கி வரும் போர் பதற்றத்தை, போர் திட்டத்தை அம்பலப்படுத்தி முறியடிப்பது இன்று உலக மக்களின் கடமையாக உள்ளது. ஏகாதிபத்தியம் இருக்கும் வரை போர் ஓயாது, இவற்றை முறியடிக்காமல் உலக மக்களுக்கு விடிவில்லை.
(குறிப்பு: 1. பில்ட் பேக் பெட்டர் திட்டம் என்பது பைடனின் பொருளாதாரத் திட்டம். இது கோவிட் – 19 நிவாரணம், சமூக சேவைகள், நலன்கள் மற்றும் உட்கட்டமைப்பை உள்ளடக்கியது.)

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க