தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பல தேசிய இனங்களின் குடியரசுகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் சோவியத் சோசலிச ஒன்றிய நாடு லெனின் தலைமையில் சென்ற நூற்றாண்டில் உருவானது. 120-க்கும் மேற்பட்ட மொழி, இன, தேசிய இனச் சிறுபான்மை மக்களனைவரையும் சரியான அரசியல், பொருளாதார, சமூக ஜனநாயகக் கொள்கைகளினால் அரவணைத்துக் காத்தது, ஸ்டாலின் தலைமையிலான அன்றைய சோவியத் சோசலிச ஒன்றியம். இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலிய பாசிச மற்றும் ஜெர்மனியின் நாஜிச ஆக்கிரமிப்பின் கீழ் ஒடுக்கப்பட்ட பல்வேறு கிழக்கு ஐரோப்பிய தேசிய இனத்தவர்கள் செஞ்சேனையில் இணைந்து, பாசிச எதிர்ப்புப் போரில் வென்று விடுதலையடைந்த பிறகு, சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல தேசிய இனங்களைக் கொண்ட மக்கள் ஜனநாயக அரசுகள் இந்நாடுகளில் உருவாகின. தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய குடியரசுகளை அமைத்துக் கொண்டு, அவை சோசலிசப் பாதையில் முன்னேறின.
ஸ்டாலினது சர்வாதிகார அரசினால் பல சிறிய தேசிய இனங்கள் வலுக்கட்டாயமாக சோவியத் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டதாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பித்தலாட்டப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன. சோவியத் ஒன்றியத்தையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பலவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாகவே, இந்நாடுகளின் கம்யூனிச அரசுகளை ஒழித்து ஜனநாயக அரசுகளை நிறுவினால்தான் இத்தேசிய இனங்கள் விடுதலையையும் சமத்துவத்தையும் அடைய முடியுமென்று புளுகி, இனவெறிக்குத் தூபம் போட்டு பல சதிகளை அரங்கேற்றின.
சோசலிசக் கட்டுமானத்தின் கீழ் கணிசமான அளவுக்கு முன்னேறி, தேசிய இனங்களிடையே சமத்துவமும் ஒன்றுகலத்தல்களும் ஏற்பட்டிருந்த நிலையில், ஒரே அரசின் கீழிருந்த சோவியத் ஒன்றியம் 15 தனித்தனிக் குடியரசுகளாகப் பிளவுபட்டுப் போயின. தேசிய இனங்களிடையே நிலவிய நல்லிணக்கம் சிதைக்கப்பட்டு, மக்களின் சமூகப் பாதுகாப்பு நொறுக்கப்பட்டு, இனவெறியும் மதவெறியும் கட்டவிழ்த்து விடப்பட்டன. சில அதிரடி ஆட்சிக் கவிழ்ப்புகளும் தேசிய இனங்களிடையே போர்களும் வெடித்து, இனவெறிப் படுகொலைகளும் கிரிமினல் போர்க்குற்றங்களும் நடந்தன. முன்னாள் யுகோஸ்லாவியாவில் தேசிய இனப்போர்கள் நடந்து, அந்நாடு ஆறு குடியரசுகளாகவும் இரண்டு சுயாட்சிப் பகுதிகளாகவும் துண்டாடப்பட்டதை நாம் பார்த்தோம்.
அவற்றில் சில நாடுகளை, தனது மறைமுகக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இயக்கி வருகிறது, அமெரிக்கா. மத்திய ஆசியாவில் எரிவாயு வளம் கண்டறியப்பட்ட பிறகு, உஸ்பெகிஸ்தானிலும் தாஜிகிஸ்தானிலும் இராணுவத் தளங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் மத்திய ஆசியாவின் எரிவாயு வளத்தைச் சுற்றி வளைத்துச் சூறையாடவும் மேற்கு ஆசியாவில் அதற்காக நடத்திவரும் ஆதிக்கப் போருக்கு அவற்றை ஏவுதளமாகக் கொள்ளவும் அமெரிக்கா முயலுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளோடு உக்ரைனையும் நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் இணைத்து, அவற்றை ஐரோப்பாவின் புறக்காவல் அரணாக மாற்றித் தனது ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாக வைப்பதுதான் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் நோக்கமாக உள்ளது. இதன்படியே, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நோட்டோவிலும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து வருகின்றன. இதன் மூலம் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்துள்ள குடியரசுகளும் கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகளும் தமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து, விரைவான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற மாயை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களால் ஊட்டப்படுகின்றது. இது, அந்நாடுகளில் தோன்றியுள்ள கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த, ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகளாலும், அவர்களின் மதவெறி, இனவெறிக் கட்சிகளாலும் நடுத்தர, மேட்டுக்குடிவர்க்க புதிய தாராளவாதக் கொள்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரப்பப்படுகிறது.
மேற்கத்திய பாணி முதலாளித்துவத்தை நிறுவுவதில் வெற்றி பெற்ற போதிலும், இந்நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகள் ஜனநாயகத்தையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ சாதிக்க முடியவில்லை. அந்நாடுகளின் உழைக்கும் மக்கள் விலையேற்றம், வேலையின்மை, வறுமையில் வதைபடுகின்றனர். இந்நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தீர்க்கப்படாத அதேசமயம், உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்கா, புதிய பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்து வருகிறது.
முதலாளித்துவம் மீட்கப்பட்ட ரஷ்யா, சீனா உட்பட முன்னாள் சோசசலிச நாடுகளின் சமூகத்தைப் பற்றிய, குறிப்பாக அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களைப் பற்றிய தெளிவான சித்திரத்தை இன்றைய உலகின் படிப்பாளி வர்க்கத்தினரேகூட பெற்றிருக்கவில்லை என்றுதான் கருதவேண்டும். கிரமமான முதலாளித்துவ வளர்ச்சியினூடாகவோ, மேலைக்காலனிய, ஏகாதிபத்தியங்களால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியினூடாகவோ அல்லது அதற்கு முந்தைய சமூகத்தைச் சேர்ந்ததாகவோ தோன்றிய ஆளும் வர்க்கங்களை முதலாளித்துவம் மீட்கப்பட்ட முன்னாள் சோசாசலிச நாடுகள் பெற்றிருக்கவில்லை. அந்நாடுகளில் தற்போது நடக்கும் கொந்தளிப்புகளுக்கு இது முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
அந்நாடுகளின் கம்யூனிசக் கட்சிகளிலும் அரசிலும், குறிப்பாக – இராணுவம், போலீசு, உளவுத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் உயர்பதவிகளில் ஒளிந்து கொண்டிருந்தனர், முதலாளித்துவப் பாதையாளர்களான அதிகார வர்க்க பாசிசக் குற்றக் கும்பல் (fascist oligarchies) தலைவர்கள். இவர்கள் முன்னாள் சோசலிச நாடுகளில் ஆட்சியிலிருந்த கம்யூனிசக் கட்சியில் திரிபுவாதத் தலைமையைக் கைப்பற்றிய பிறகு, அதற்கும் முதலாளித்துவம் முழுமையாக மீட்கப்படுவதற்கும் இடையிலான காலத்தில் அரசு ஆலைகளிலேயே இரகசிய உற்பத்தி, சந்தைப்படுத்துதல்கள் மூலமும், முதலாளிய, ஏகாதிபத்திய நாடுகளுடன் துரோகத்தனமான கள்ளப் பொருளாதார உறவுகள், இலஞ்சம், அதிகாரமுறைகேடுகள் மூலமாகவும் அந்நிய வங்கிகளில் கள்ளப் பணத்தையும் சொத்துகளையும் குவித்து வைத்திருந்தார்கள். (சோசலிச நாடுகளில் இம்மாதிரியான சக்திகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டங்களை – மாபெரும் கலாச்சாரப் புரட்சிகளை – நடத்தி வீழ்த்துவதன் மூலம்தான் முதலாளியப் பாதையாளர்களை முறியடிக்க முடியும்.)
அடுத்தடுத்த ஆட்சிக் குடைக்கவிழ்ப்புகள் மூலம் முதலாளித்துவத்தை மீட்ட பிறகு அரசுச் சொத்துகளைக் கைப்பற்றிக்கொண்டனர், இந்த அதிகார வர்க்க பாசிசக் குற்றக் கும்பல் (fascist oligarchies) தலைவர்கள். இந்த ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு புதிய ஆளும் வர்க்கமாகினர். அதேசமயம், இவர்கள் ஒற்றைக் குழுவாக ஒரே தலைமையின் கீழ் உருத்திரண்டு விடவில்லை. இவர்கள் வெவ்வேறு கும்பல்களாக அமைந்து அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்றிக் கொள்வதற்கான, வேட்டையில் கிடைத்த இரையைப் பங்குபோட்டுக்கொள்வதற்கான தீராத நாய்ச் சண்டைகளில் ஈடுபடுகின்றனர்.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து தனியே பிரிந்து போன, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான உக்ரைன் வரலாற்றில் ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் மற்றும் பாசிசக் குற்றக்கும்பல்கள் (fascist oligarchies) அடங்கிய ஆளும் வர்க்கத்தினரிடையே சட்டபூர்வமாகவும் நாடாளுமன்ற முறைகளிலும் சட்டவிரோத முறைகளிலும் மோதல்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்தன. அந்தவாறான போக்கில் ஆட்சிக்கு வந்த உக்ரைனின் ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யானுகோவிச் தன் நாடு ஐரோப்பிய யூனியனோடு நடத்தி வந்த பேச்சு வார்த்தையை கடந்த நவம்பரில் முறித்துக் கொண்டு, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். ஏனெனில், அது ஏகாதிபத்திய எடுபிடியான ஐ.எம்.எஃப்.-பின் சிக்கன சீரமைப்பு, கட்டண உயர்வு முதலிய நிபந்தனைகளை உள்ளடக்கியிருந்தது; இவற்றின் விளைவாக உள்நாட்டில் சமூகக்கொந்தளிப்பு ஏற்படும் என்று அரசு அஞ்சியது.
ஆனால், ரஷ்ய ஆதரவு உக்ரைன் அதிபரான விக்டர் யானுகோவிச் கும்பலே உக்ரைன் மக்கள் வெறுக்கும் இலஞ்சம்-ஊழல் அதிகாரமுறைகேடுகளில் மூழ்கித் திளைக்கும் ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் மற்றும் பாசிசக் குற்றக் கும்பல்கள் (fascist oligarches) அடங்கிய ஆளும் வர்க்கக் கும்பலில் ஒன்றுதான். இதனால், ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்த முறிவைக் காரணம் காட்டி விக்டர் யானுகோவிச் கும்பலின் அரசுக்கு எதிராக “யூரோ மைதானம்” என்ற இயக்கம் பெரிய அளவு வெடித்தது. வலதுசாரி பிற்போக்கு மற்றும் புதிய நாஜிகள் அதில் பெருமளவு பங்கேற்றறுத் தலைமை தாங்கின. அமெரிக்கா மற்றும் பிற மேலை நாடுகளின் எடுபிடிகளான “அரசுசாரா தொண்டு நிறுவனங்கள்” அதை வழிநடத்தின. ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகளுக்குச் சொந்தமான ஊடகங்கள் அவசியமான பிரச்சார பின்புலத்தைக் கொடுத்தன. இலஞ்சம்-ஊழல் அதிகாரமுறைகேடுகளால் சீரழிந்த ஆளும் கும்பலுக்கும் அரசுக்கும் எதிரான எழுச்சியாக அது சித்தரிக்கப்பட்டது.
2004-ம் ஆண்டு உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் முதலில் விக்டர் யானுகோவிச் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தேர்தல் மோசடி என்று எதிர்த்துப் போட்டியிட்ட யூஷெசன்கோ தலைமையிலான கும்பல் “ஆரஞ்ச் புரட்சி” என்ற “எழுச்சியை”க் கட்டவிழ்த்து விட்டது. “கலகங்களும், கொந்தளிப்புகளும்” வெடித்தன. உக்ரைன் உச்சநீதிமன்றம் தலையிட்டு, யூஷெசன்கோவை அதிபராக்கியது. பின்னர் அந்நாட்டுத் தேர்தல் கமிசன் நடத்திய விசாரணையில் தேர்தல் மோசடி எதுவும் நடக்கவில்லையெனக் கூறி விக்டர் யானுகோவிச் அதிபரானார். அந்த ஆரஞ்சு புரட்சியை நடத்திய “ஆரஞ்ச் குடும்பம்”தான் இந்த “யூரோ மைதானம்” இயக்கத்தின் முதுகெலும்பாக உள்ளது. வலது தீவிரவதிகளும் புதிய நாஜிகளும் தலைமையேற்கும் “யூரோ மைதானம்” இயக்கத்தினர் ஜனநாயம் மற்றும் தேசியத் தீவிரவாத வெறியைக் கிளப்பி வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். இனவெறி பாசிச கும்பல் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத வெறியாட்டங்களில் லெனின் சிலையும் பாசிச எதிர்ப்புச் சின்னங்களும் பொதுச்சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வையில், யானுகோவிச் அரசுக்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளான போராட்டக்காரர்களுக்குமிடையே ஒரு சமரச ஒப்பந்தம் போடப்பட்ட போதிலும், பிப்ரவரி 22-ம் தேதியன்றே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, எதிர்த்தரப்பான பாசிசக் கும்பல்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தின. அதிபர் விக்டர் யானுகோவிச் நாட்டைவிட்டுத் தப்பியோடியதும், பெருமுதலாளிகள், ஊழல் பெருச்சாளிகள், நவீன நாஜிகள் உள்ளிட்ட பல்வேறு கும்பல்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ரஷ்ய வல்லரசின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயுவையே மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரிதும் சார்ந்துள்ளன. ரஷ்யாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் ஐந்து பெரும் எரிவாயுக் குழாய்கள் பெலாரஸ், உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் வழியாகவே செல்கின்றன. ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், உக்ரைன் மீண்டும் ரஷ்யச் செல்வாக்கின் கீழ் போய்விடாமல் தடுக்கவும் உக்ரைனில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் குவிக்கப்பட்டன. ரஷ்யாவோ உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பையும் அமெரிக்க ஆதரவு பிற்போக்கு அரசு அமைக்கப்பட்டுள்ளதையும் எதிர்த்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே கருங்கடல் பகுதியில் தனது படைகளைக் குவித்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து உக்ரைனின் தென்கிழக்கிலுள்ள சுயாட்சிப் பிரதேசமான கிரிமியாவில், ரஷ்யாவுடன் இணைவதற்கான தீர்மானத்தை கிரிமியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியும் இதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தலையும் நடத்தியும், கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
யூகோஸ்லாவியாவில் தேசிய உரிமையை ஆதரித்துப் போர் புரிந்த அமெரிக்கா, இப்போது கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததை எதிர்க்கின்றது. ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளனாகவும், போர்ப் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியையும் ஜனநாயகத்தையும் சீர்குலைப்பதாகவும் கூச்சலிடுகின்றது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவதோடு, தொழில் வளர்ச்சியடைந்த பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-8 லிருந்து தற்காலிகமாக ரஷ்யாவை நீக்கிவிட்டது.
ஆனால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்தால், அதற்குப் பதிலடியாக ரஷ்யா தனது எரிவாயுவை விலையேற்றம் செய்தாலோ அல்லது எரிவாயுவை விநியாகிக்க மறுத்தாலோ, அது ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய நெருக்கடியாக மாறிவிடும். மேலும் சீமென்ஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஜெர்மன் நிறுவனங்கள் ரஷ்யாவில் பல்லாயிரம் கோடி டாலரில் முதலீடு செய்துள்ள நிலையில், ஜெர்மனி பெரும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் திணறுகின்றன.
அன்று இந்த ஏகாதிபத்தியவாதிகள், கம்யூனிசத்தால்தான் பிரச்சினை, மேற்கத்திய பாணி ஜனநாயகம்தான் இதற்கு ஒரே தீர்வு என்றார்கள். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததும் கம்யூனிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் வெற்றியைச் சாதித்துவிட்டது என்றார்கள். இனி போர் அபாயமே இருக்காது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் வளர்ச்சியைச் சாதிப்பதிலும் உலகம் தனது கவனத்தைச் செலுத்தும் என்றார்கள். ஆனால் நடப்பதென்ன? மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவிய பின்னரும்கூட, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தொடர்கின்றன. வாய் கொள்ளாத அளவுக்கு, பெரிய துண்டைக் கவ்விக் கொண்டு மெல்லவும்முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழிக்கின்றன, ஏகாதிபத்தியங்கள்.
– மாணிக்கவாசகம்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________
அருமையான பதிவு.வித்தியாசமான,கேள்விப்படாத தகவல்கள்.நன்றி.
if you protest against elections in Russia (like what you are doing in india), the red army will come and pick up all the vinavu guys and you will be never ever again seen. Russian economy is faring very badly. Russia is the weak economy among BRIC nations now.
நல்ல கட்டுரை. அமெரிக்கா உலகச் சூழ்னிலை மாறிப்போயிருப்பது தெரியாமல், பழையநினைப்பில் இன்னும் இருந்து வருகிறது. அமெரிக்காவை தலையில் குட்ட புடின் மாதிரி ஆட்கள் தற்போது அவசியம் தேவைப் படுகிறார்கள்.