மார்க்சியமோ கம்யூனிசமோ புரட்சியோ பேசாமல் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தின விழாக்களே தமிழ்ச்சூழலில் அதிகம்.
இந்தியச் சூழலில் நிலவும் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ இணக்கத்தை அடையாளம் கண்டு வினையாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான். இந்தியப் பெண்ணியத்துக்குள்ளும் இத்தகைய இணக்கம் நிலவுவதை அடையாளம் கண்டுதான் பாலின சமத்துவம் அல்லது பெண் விடுதலைக்கான இடத்தை நாம் பேச முடியும்.
இந்தியச் சூழலில் மூலதனத்தை இயக்குவது பார்ப்பன – பனியாக் கூட்டணியே. சக தோழர்கள் பலருக்கு இந்தப் பார்வையில் முரண் இருந்தாலும், யதார்த்தம் இதுவே. பண்பாட்டு ரீதியாக தாம் பெற வேண்டிய ஆதிக்கத்தின் பொருட்டு பார்ப்பனர்களும் வணிக ரீதியிலான பெருக்கத்தின் பொருட்டு பனியாக்களும் இணைந்தும் இயங்கும் புரிதலுக்குள்தான் நாம் பேசுகிற சமூக விடுதலை, சமத்துவம், சோசலிசம், பெண்ணியம், சாதி ஒழிப்பு ஆகிய அனைத்துமே புதைக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக பார்ப்பன பெண்களும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிப் பெண்களும் ஒன்றிணைந்து இயங்கும் போக்கை தனித்தனியே நாம் பார்க்க முடியும். இதன் அர்த்தம் என்னவெனில் பார்ப்பனப் பெண் இச்சமூகத்தில் வகிக்கும் உயர்ச்சியும் கொண்டிருக்கும் மூலதனப் பரிச்சயமும் மேற்குறிப்பிட்ட ஒத்திசைவின் மூலம் தானும் பெற்றுவிடலாம் எனப் பட்டியல் சாதிப் பெண்ணும் பிற்படுத்தப்பட்டப் பெண்ணும் நம்புவதால்தான். அந்த சமரசம் ஒருவேளை நேர்ந்தாலும் அது அந்த இரண்டு பெண்களுக்கு இடையிலான ஆதாயமாக மட்டுமே மாறும் என்பதும் மொத்த சமூகத்தின் ஆதாயமாகவோ விடுதலையாகவோ அது மாற முடியாது என்பதுமே நிலப்புரபுத்துவ-முதலாளித்துவக் கூட்டு கொண்டிருக்கும் சூட்சுமங்கள்.
படிக்க :
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை
மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !
எனக்குத் தெரிந்த ஒரு உயர்சாதிப் பெண் இருக்கிறார். அவர் ஒரு பட்டியல் சாதி இளைஞரின் வளர்ச்சிக்கு உதவுகிறார். அல்லது அப்படி காண்பித்துக் கொள்கிறார். ஆனால் அவரின் நட்புவட்டத்தில் இருக்கும் அனைவரும் வலதுசாரி ஆளுமைகள்தான். அப்பெண்ணுக்கு ஒரு பெரும் (யாருக்குமில்லா) வாய்ப்பு வாய்க்கிறது. அவரை சாதி ஒழிப்பு சமூகமும் கொண்டாடும். இடதுசாரி வட்டமும் கொண்டாடும். வலதுசாரிகளும் கொண்டாடுவார்கள். இவை எல்லாமும் தன்னுடைய தனிச்சலுகை அல்லது பார்ப்பன வாழ்க்கைமுறை எதையும் இழக்காமலே அவர் அடைந்து விடுகிறார்.
எனவேதான் சாதியம் என்கிற வார்த்தைப் பிரயோகத்தில் பெரிய உடன்பாடு இருப்பதில்லை. இந்தியாவில் சாதியம் என்பது பார்ப்பனீயம் மட்டும்தான்.
ஒரு காலத்தில் வருணாசிரமாக மலர்ந்து முதன்மையான இடத்தில் தங்களை நிறுத்திக் கொண்ட பார்ப்பனர்கள், காலப்போக்கில் எழும்பத் தொடங்கிய சூத்திர கலகத்தின்போது பிற்படுத்தப்பட்ட சாதிகளுடன் கைகளை குலுக்கிக் கொண்டனர். பனியாக்களின் அறிமுகத்தை சூத்திரச் சாதிகளுக்கு வழங்கி வளர்ச்சியை உருவாக்கிக் கொடுத்தனர். பட்டியல் சாதிகளை ஒடுக்கும் அதிகாரம் சூத்திரச் சாதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பிறகு பட்டியல் சாதி கலகம் நேரத் தொடங்க, பார்ப்பனீயம் அவர்களை நோக்கி நட்புக் கரம் நீட்டி, பிற்படுத்தப்பட்டோர் – பட்டியல் சாதியினர் ஆகியோருக்கு இடையிலான வேறுபாட்டை ஆழப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இரு சூழல்களிலும் ஒரு விஷயம் தெளிவு.
சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் பார்ப்பனர் தக்க வைத்துக் கொள்ளும் முதன்மை இடம்!
இந்தியச் சூழலில், பார்ப்பனீயத்துடன் சமரசம் செய்து கொள்வதில்தான் சமூக மாற்றமும் பொருளாதார உயர்ச்சியும் நேர்வதாக நம்பப் படுகிறது.
பார்ப்பனீயம் மற்றும் பார்ப்பனரின் அணுக்கத்துடன் மட்டுமே மூலதனம் அல்லது உற்பத்திக் கருவிகளை கையாளக் கூடிய இடம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இந்தியப் பெண்ணியக் கருத்தாடல்களும் இதே வழியைத்தான் பின்பற்றுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவற விடுகிறோம்.
பார்ப்பனீயம் மற்றும் தனிச்சலுகை ஆகியவற்றைப் புறக்கணிக்காத பார்ப்பனப் பெண்ணின் அணுக்கத்துடன் உயர்ச்சியும் வாய்ப்புகளும் கிட்டினாலும் அந்தப் பெண்ணுக்குக் கீழ்தான் நாம் இருப்போம். பார்ப்பன மற்றும் உயர்சாதி ஆணின் மூலதனத்தைக் கைப்பற்றுவதே பெண்ணியம் என நம்பி இயங்கும் அப்பெண்களின் செயல்திட்டத்தின்படி மட்டுமே நாம் இயங்குவோம். அதாவது ஓர் உயர்சாதி ஆணின் மூலதனத்தை ஓர் உயர்சாதி பெண்ணுக்கு மாற்றிக் கொடுக்கும் அரசியலாட்டத்தில் நாம் பகடைக் காய்களாக இருப்போம்.
படிக்க :
போரும் – உழைக்கும் பெண்களும் | க்ளாரா ஜெட்கின் | இக்பால் அகமது
காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !
பார்ப்பனீயத்தை உடைக்க வேண்டுமென்றாலும் வருணாசிரமத்தைத் தகர்க்க வேண்டுமென்றாலும் மெய்யான பெண் விடுதலை நோக்கியப் பாதையை அமைக்க விரும்பினாலும் சமத்துவத்துக்கான பார்வையை பெற வேண்டுமென்றாலும் செய்ய வேண்டியது ஒன்றுதான்.
பார்ப்பனீய மனநிலை அற்ற, தனிமனிதவாதம் பாராட்டாத, தன்னலம் பேணாத, தனிச்சலுகைகள் கொள்ளாத, உற்பத்திக் கருவிகள் மற்றும் மூலதனத்தை சமரசத்தின்வழி பகிர்ந்துக் கொள்ளச் சம்மதிக்காத, நிலப்பிரபுத்துவ – முதலாளியப் பெண்ணியவாதத்தை வேறு வார்த்தைகளில் போற்றாத, மூலதனம் மற்றும் உற்பத்திக் கருவிகளைப் பற்றி பேசாமல் ஆண் – பெண் கருத்தாடலாக மட்டும் பெண்ணியத்தைச் சுருக்காத, சமத்துவமான உழைக்கும் மகளிர் பெண்ணியம் மட்டுமே வழி.
ஏஞ்சலா டேவிஸ் சொன்ன ஒரு மேற்கோளுடன் முடிக்கிறேன் :
“பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தை தாண்டியப் பல விஷயங்களைக் கொண்டது. பாலினத்தைத் தாண்டியும் பல விஷயங்களைக் கொண்டது”
முகநூலில் : ராஜசங்கீதன்
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க