ஒரு புரட்சியின் கொண்டாட்டம்

களிர் தினம் அல்லது உழைக்கும் மகளிர் தினம் என்பது சர்வதேச ஆதரவுக்கான நாள் மற்றும் உழைக்கும் பெண்களின் பலம் மற்றும் அமைப்பை மறுபரிசீலனை செய்யும் நாளாகும்.

ஆனால் இது பெண்களுக்கு மட்டும் உரிய சிறப்பு தினம் அல்ல. மார்ச் 8-ஆனது உலகின் அனைத்து தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், ரசிய தொழிலாளர்களுக்கும், உலக தொழிலாளர்களுக்கும் நினைவுகூரத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 1917-ம் ஆண்டு இந்த நாளில் மாபெரும் பிப்ரவரி புரட்சி வெடித்தது. பீட்டர்ஸ்பெர்கின் உழைக்கும் பெண்கள்தான் அப்புரட்சியைத் துவங்கினார்கள். அவர்கள்தான் ஜார் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக பதாகைகளை உயர்த்த முடிவு செயதனர். எனவே பெண்கள் தினம் நமக்கு இரட்டை கொண்டாட்டமாகும்.

ஆனால் இது அனைத்து தொழிலாளர்களுக்கான பொது தினம் எனும்பட்சத்தில் ஏன் மகளிர் தினம் என்று அழைக்கிறோம்? பிறகு ஏன் உழைக்கும் பெண்களையும், விவசாயப் பெண்களையும் மையப்படுத்தி சிறப்பு கொண்டாட்டங்களும், கூட்டங்களும் நடத்துகிறோம்? இது உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமையையும் ஆதரவையும் மறுதலிக்காதா? இதற்கெல்லாம் விடைகிடைக்க வேண்டுமென்றால் பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதையும், அது எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பின்நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

ஏன், எப்படி பெண்கள் தினம் உருவாக்கப்பட்டது?

மிகப்பல வருடங்கள் அல்ல, ஒரு பத்து வருடத்திற்கு (1909-10) முன்பாகதான் பெண்களுக்கான சம உரிமை என்ற கேள்வியும் மற்றும் ஆண்களோடு பெண்களும் அரசு நிர்வாகத்தில் சரிசமமாக பங்கெடுக்க முடியுமா? என்பது குறித்தும் காராசாரமான விவாதங்கள் நடத்தப்பட்டன. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம், உழைக்கும் மகளிரின் உரிமைகளுக்காக போராடியது. ஆனால் முதலாளிகள் இவ்வுரிமைகளை ஏற்கத் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் உழைக்கும் மக்களின் வாக்கினை பலப்படுத்துவதென்பது முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால் அனைத்து நாடுகளிலும் அவர்கள் உழைக்கும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் சட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடையாக இருந்தனர்.

வட அமெரிக்க சோசலிஸ்டுக்கள் விடாமுயற்சியுடன் தங்களுடைய ஓட்டுரிமை கோரிக்கையினை வலியுறுத்தினர். 28.02.1909 அன்று அமெரிக்க பெண் சோசலிஸ்ட்டுக்கள், உழைக்கும் பெண்களுக்கான அரசியல் உரிமை கோரி நாடு முழுவதும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர். இதுதான் முதல் மகளிர் தினம். எனவே மகளிர் தினத்தினை துவங்கிய பெருமை அமெரிக்க உழைக்கும் மகளிரையே சாரும்.

1910-ம் ஆண்டு நடைபெற்ற உழைக்கும் மகளிரின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், கிளாரா ஜெட்கின் அவர்கள், உலகளவிலான மகளிர் தின ஒருங்கிணைப்பு குறித்த கேள்வியை முன்வைத்தார். அம்மாநாட்டில், ஒவ்வொரு வருடமும், அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்றும், அது ”பெண்களின் ஓட்டுரிமை, சோசலிசத்திற்கான போராட்டத்தில் நமது வலிமையை ஒருங்கிணைக்கும்” என்ற முழக்கத்தின் கீழ் இருக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.

அலெக்சாந்த்ரா கொலந்தாய்

இவ்வருடங்களில், ஓட்டுரிமையை விரிவுபடுத்துவது, குறிப்பாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுடையதாக ஆக்குவதென்பது மிக முக்கிய நோக்கமாக இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பே ரஷ்யா தவிர அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளிகள் ஓட்டுரிமை பெற்றிருந்தனர். இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தில் மகளிரின் பங்களிப்பு அவசியமாயிருந்தது என்பதுதான் முதலாளித்துவத்தின் மறுக்கமுடியாத நிதர்சனமாக இருந்ததது. ஒவ்வொரு வருடமும் ஆலைகளில், தொழிற்கூடங்களில் வேலையாட்கள், பணிப்பெண்கள் என வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெண்கள் ஆண்களுக்கு இணையாக உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை தமது கைகளால் உருவாக்கினர் என்றாலும் அவர்கள் ஓட்டுரிமையின்றி இருந்தனர்.

போருக்கு முந்தைய வருடங்களில் காணப்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் அமைதியான குடும்பப் பெண்களைக்கூட அரசியலில் ஆர்வம் காட்டவும், முதலாளித்துவ பொருளாதார கொள்ளைக்கெதிராக உரத்த குரலெழுப்பவும் முந்தித்தள்ளியது. ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ”குடும்பப் பெண்களின் எழுச்சி” அடிக்கடி வெடித்துக் கிளம்பும் நிகழ்வாக அதிகரித்துக்கொண்டே சென்றது.

கடைத்தெருக்களில் கடைகளை உடைப்பதும், முறையற்ற வணிகர்களை மிரட்டுவதும் விலைவாசியை கட்டுப்படுத்த உதவாது என்பதனை உழைக்கும் மகளிர் புரிந்துகொண்டனர். அரசாங்கத்தின் அரசியலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும் அதனை சாதிப்பதற்கு உழைக்கும் வர்க்கம் ஓட்டுரிமையை விரிவுபடுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டுமென்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.

உழைக்கும் மகளிருக்கான ஓட்டுரிமையை பெறும் நோக்கத்தில் அனைத்து நாடுகளிலும் மகளிர் தினத்தினை ஒரு போராட்ட வடிவமாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது. பொது நோக்கத்திற்கான போராட்டத்திற்கும், சோசலீச பாதாகையின் கீழ் உழைக்கும் மகளிரின் ஒருகிணைப்பினை மறுஆய்வு செய்வதற்கும் உலகளவிலான ஆதரவினை நல்கும் ஒரு நாளாக மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.

முதல் உலக மகளிர் தினம்

சோசலிச பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு வெறும் காகிதத்தோடு நிற்காமல், 1911 வருடத்தின் மார்ச் 19 தேதியன்று முதல் உலக மகளிர் தினத்தினை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நாள் பொத்தாம் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. 1848-ம் ஆண்டு மார்ச் 19 அன்று ப்ரஷ்ய மன்னன் ஆயுதமேந்திய மக்களின் போராட்ட வலிமையைக் கண்டு, பாட்டாளி வர்க்க எழுச்சிக்கு அஞ்சி பல வாக்குறுதிகளை அளித்தான். பெண்களுக்கான ஓட்டுரிமை போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென்றாலும், இந்த மார்ச் 19 நாளானது ஜெர்மன் பாட்டாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகவேதான் இந்த நாளை உகல மகளிர் தின நாளாக தேர்ந்தெடுத்தனர்.

படிக்க :
♦ இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !
♦ “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

ஜனவரி 11-ம் தேதிக்குப் பிறகு ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் பெண்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நாளில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை வாய்வழிப் பிரச்சாரங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் தெரியப்படுத்தினர். பெண்கள் தினத்திற்கு முந்தைய வாரத்தில் “ஜெர்மனியில் பெண்களுக்கான ஓட்டுரிமை” மற்றும் “ஆஸ்திரியாவில் பெண்கள் தினம்” என்ற இரு பத்திரிகைகள் கொண்டுவரப்பட்டன. மேலும் “பெண்களும் பாராளுமன்றமும்”, “உழைக்கும் பெண்களும் நகராட்சி நிர்வாகமும்”, “குடும்பப்பெண்களுக்கு அரசியலில் என்ன வேண்டியிருக்கிறது?” மற்றும் பல கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அவைகள் அரசாங்கத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கான சம உரிமை குறித்து துல்லியமாக ஆய்வு செய்திருந்தன. மேலும் அனைத்து கட்டுரைகளும் பெண்களுக்கு வாக்குரிமையளிப்பதன் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுள்ளதாக ஆக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்தின.

முதல் உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு நடைபெற்றது. அது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றியது. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மகளிர் தினத்தன்று கனல் தெறிக்கும் அலைகடலென பெண்கள் திரண்டனர். கிராமங்கள், நகரங்கள் என எங்கெங்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து அரங்கங்களும் நிரம்பிவழிந்தன. வேறுவழியின்றி ஆண் தொழிலாளர்களின் இருக்கைகளை விட்டுக்கொடுக்கச் சொல்லி கேட்க வேண்டிய நிலையை அது ஏற்படுத்தியது.

உழைக்கும் மகளிர் தங்களுடைய போர்குணத்தை காட்டிய முதல் காட்சியாக இவ்வுலக மகளிர்தினம் நிச்சயமாக அமைந்திருந்தது. மாற்றத்திற்காக ஆண்கள் வீட்டில் குழந்தைகளோடு இருந்தனர் மேலும் அவர்களுடைய மனைவிகள், குறிப்பாக குடும்பப் பெண்களாயிருந்த அவர்கள் கூட்டங்களுக்குச் சென்றனர். 30,000 பெண்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய தெருமுனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பதாகைகளை அகற்ற முடிவு செய்தனர். பெண்கள் அதை எதிர்கொள்வதென முடிவு செய்தனர். இச்சம்பவத்தில் காவல்துறைக்கும் பெண்களுக்கும் ஏற்பட்ட மோதல் பாராளுமன்றத்தின் சோசலிஸ்ட் பிரதிநிதிகளின் உதவியோடு மட்டுமே இரத்தக் களறியாகாமல் முடிவுக்கு கொண்டுவரமுடிந்தது.

1917-ல் ரசியாவில் ஜார் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச பெண்கள் தினப் பேரணி – பிப்ரவரி புரட்சியை பற்ற வைத்த நெருப்புப் பொறி

1913-ம் ஆண்டு உலக மகளிர்தினம் மார்ச் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இத்தினம் உழைக்கும் மகளிரின் போராட்ட தினமாக நிலைபெற்றது.

அக்காலகட்டத்தில் சோசலிச புரட்சி குறித்த மிரட்சி முதலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆகையால் எந்த முதலாளித்துவ பாராளுமன்றமும் தொழிலாளிகளுக்கு கருணை காட்டவோ, பெண்களின் கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது பரிசீலிக்கவோ முன்வரவில்லை. ஆனால் மகளிர்தினம் இதனை ஓரளவுக்கு சாதித்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மகளிர் தினம் வியக்கத்தக்க பலன்களை அளித்தது. இது அரசியல் அறிமுகம் குறைவாகயிருந்த நமது சகோதரிகள் மத்தியில் போராட்ட வழிமுறையை உருவாக்கியது. அவர்களுடைய கவனம் பெண்கள் தின கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுவரொட்டிகள், கைப்பிரதிகள் மற்றும் செய்தித்தாள்களை நோக்கி குவிந்தது.

அரசியல் பின்புலமற்ற பெண்கள்கூட “இது நம்முடைய தினம், உழைக்கும் பெண்களின் திருவிழா“ என்று நினைத்தனர். மேலும் கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் விரைந்து சென்றனர். ஒவ்வொரு பெண்கள் தினத்திற்குப் பிறகும் ஏராளமான பெண்கள் சோசலீச கட்சியில் இணைந்தனர். மற்றும் தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்தன. அரசியல் உணர்வு மேம்பட்டது மேலும் அமைப்புக்கள் முன்னேற்றமடைந்தன.

உலக மகளிர் தினத்தையொட்டி ஜெர்மன் தோழர்கள் இங்கிலாந்து செல்வதும், இங்கிலாந்து தோழர்கள் ஹாலந்து செல்வதும் என பல்வேறு நாடுகளின் கட்சிகள், பேச்சாளர்களைப் பரிமாறிக்கொண்டனர். இவ்வொத்திசைவு, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும், உழைக்கும் வர்க்கம் வலுப்பெறுவதற்கும் மற்றும் பாட்டாளிகளின் போராட்ட வலிமையை கூட்டுவதற்கும் வினையாற்றியது.

தீரம் மிக்க மகளிர்தினம், உணர்வு மேம்பாட்டையும், மகளிரை அமைப்பாக்குவதற்கும் உதவியாக இருந்தது. மேலும் உழைக்கும் வர்க்கத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக போராடுபவர்களின் வெற்றிக்கும் அது பங்காற்றியது என்பது தீரம் மிக்க ‘உலக மகளிர் தினத்தின்’ பலன்களாகும்.

ரஷ்யாவில் உழைக்கும் மகளிர் தினம்

ரஷ்ய பெண் தொழிலாளர்கள் முதன்முதலில் 1913-ம் ஆண்டு நடைபெற்ற “உழைக்கும் மகளிர் தினத்தில்“ பங்கெடுத்தனர். இது ஜார் மன்னனின் ஆட்சி உழைப்பாளிகளையும், விவசாயிகளையும் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த கால கட்டமாகும். திறந்தவெளி ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடியாத சூழல் இருந்தபோதும், மகளிர் தினத்தை உலக தினமாக அவர்கள் சிறப்பித்துக்காட்டினர். போல்ஷ்விக் ‘பிராவ்தா’ – மென்ஷ்விக் ‘லூச்’ ஆகிய சட்டபூர்வ உழைக்கும் வர்க்க பத்திரிக்கைகள் ‘உலக மகளிர் தினம்’ குறித்த சிறப்புக் கட்டுரைகள், உழைக்கும் மகளிருக்கான இயக்கங்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள், பெபல் மற்றும் ஸெட்கின் போன்ற தோழர்களின் வாழ்த்துக்களை பிரசுரித்தன.

கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்த இருண்ட காலத்திலும், கட்சியின் உழைக்கும் மகளிர் பெட்டோகிராட்டின் கலாஷ்கோவஸ்கி முனையத்தில் “மகளிர் கேள்விகள்“ என்ற ரகசிய பொது மன்றத்தை ஏற்பாடு செய்தனர். ஐந்து கோபெக்குகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டபோதும் அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் கட்சியின் உறுப்பினர்கள் உரையாற்றினர். ஆனால் இந்த உயிர்ப்பான ரகசியக் கூட்டத்தின் ஒரு கட்டத்தில் காவல்துறை தலையிட்டு, பல பேச்சாளர்களைக் கைது செய்ததால் முடிக்கப்பட்டது.

ஜார் மன்னரின் கடுமையான ஒடுக்குமுறையின் கீழிருந்த ரஷ்யாவில் “உலக மகளிர் தின“த்தில் திரளாக பெண்கள் கலந்துகொண்டதும், அந்த நாளை அங்கீகரித்த்தும் உலகத் தொழிலாளர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது ரஷ்ய எழுச்சியின் விடிவெள்ளியாகவும், ஜார் மன்னனின் சிறைகளும், தூக்குமேடைகளும், தொழிலாளர்களின் போராட்டங்களையும், போராட்ட உணர்வையும் அழிக்கவியலாமல் வலுவிழந்ததையே எடுத்துக்காட்டியது.

படிக்க :
♦ டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !

1914-ம் ஆண்டு ரஷ்யாவின் ‘உழைக்கும் மகளிர் தினம்’ மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரண்டு பத்திரிக்கைளும்கூட கொண்டாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன. நமது தோழர்கள் ஏற்பாடுகளில் கடும் உழைப்பைச் செலுத்தியபோதும் காவல்துறையின் குறுக்கீட்டால் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது. ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் ஜார் மன்னனின் சிறைகளுக்கும், பிறகு பலர் கடுங்குளிர் வடக்குபகுதிக்கும் அனுப்பப்பட்டனர். இது ‘உழைக்கும் மகளிருக்கு ஓட்டுரிமை’ என்ற முழக்கத்தை ‘ஜார் மன்னனின் எதேச்சதிகாரத்தை தூக்கியெறிவோம்’ என்ற அறைகூவலாக மாற்றியது.

ஏகாதிபத்திய போரின் தருணத்தில் உழைக்கும் மகளிர் தினம்

முதல் உலகப்போர் மூண்டது. அனைத்து நாடுகளின் உழைக்கும் வர்க்கமும் போரின் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. 1915 மற்றும் 1916-ம் ஆண்டுகளில் பிற நாடுகளில் “உழைக்கும் மகளிர்தினம்“ சாத்தியமற்றதாக இருந்தபோதும், போல்ஸ்விக் கட்சியின் கொள்கைகளையுடைய இடதுசாரி பெண் சோசலிஸ்டுகள், மார்ச் 8-ஐ போருக்கு எதிரான உழைக்கும் மகளிரின் ஆர்ப்பாட்டமாக மாற்ற முயற்சித்தனர். ஆனால் ஜெர்மனி சோசலிச கட்சியிலிருந்த துரோகிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர். நடுத்தர கொள்கையுடைய நாடுகளில், முதலாளிகளின் எண்ணங்களுக்கெதிராக உலக தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மகளிர்தின கூட்டங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில், அத்தருணத்தில் பெண் சோசலிஸ்டுகளுக்கு கடவுச்சீட்டு மறுக்கப்பட்டது.

1915-ல் நார்வே நாட்டில் மட்டுமே ஓரளவு சமாளித்து மகளிர் தினத்தில் உலகளவிளான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அதில் இரஷ்யா மற்றும் நடுநிலை நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அக்காலகட்டத்தில் ஜார் மன்னராட்சியின் ராணுவ ஒடுக்குமுறைக் கருவிக்கெதிராக, பெண்கள் தின ஒருங்கிணைப்பை இரஷ்யாவில் யோசிக்கக்கூட முடியாக நிலை இருந்தது.

அதன்பிறகு மிகச் சிறப்பான 1917-ம் ஆண்டு பிறந்தது. பசியும், பிணியும், போர் பயிற்சிகளும் பெண் தொழிலாளிகள் மற்றும் விவசாயப் பெண்களின் பொறுமையை உடைத்தெறிந்தன. 1917, மார்ச் 8-ம் நாள் (அன்றைய பிப்ரவரி 23) பெண்கள் தினத்தன்று பெண்கள் மிக தைரியமாக பெட்ரோகிராட் தெருக்களில் கூடினர். அப்பெண்களில் சிலர் தொழிலாளர்கள், சிலர் வீரர்களின் மனைவிகள். அவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு ரொட்டி கோரியும் இரானுவத்திலிருந்து தங்களுடைய கணவர்களை திருப்பியனுப்பும்படி முழக்கமிட்டனர். இந்த உச்சகட்ட சூழலில் உழைக்கும் மகளிரின் போராட்டத்தில், ஜார் மன்னரின் பாதுகாப்பு படைகள் வழக்கமான ஒடுக்குமுறையை கையாளமுடியாமல், அலைகடலென திரண்டிருந்த மக்களின் கோபக் கனலை மிரட்சியுடனும் குழப்பத்துடனும் நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

1917-ம் ஆண்டின் உழைக்கும் மகளிர் தினம் வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாக மாறியது. அத்தினத்தில்தான் இரஷ்ய பெண்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தீப்பொறியை உயர்த்தினர். அது உலகம் முழுக்க பற்றியது. பிப்ரவரி புரட்சியின் துவக்க நாளாக அது அமைந்தது.

போருக்கான நமது அழைப்பு

பத்து வருடத்திற்கு முன்பு “உழைக்கும் மகளிர் தினம்” முதன் முதலாக பெண்களுக்கு அரசியல் சமத்துவம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற பிரச்சாரங்களை முன்வைத்து நடத்தப்பட்டது. இரஷ்ய மகளிர் இவ்வுரிமைகளைப் பெற்றனர். சோவியத் குடியரசில் உழைக்கும் பெண்களும், விவசாயிகளும் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமைகளை ஏற்கெனவே வென்றெடுத்துவிட்டதால் அவ்வுரிமைகளுக்காக போராடவேண்டிய தேவை எழவில்லை. இரஷ்ய தொழிலாளர்களும் விவசாய பெண்களும் சம உரிமையுள்ள குடிகளாகிவிட்டனர். அவர்களிடம் ஓட்டுரிமையும், சோவியத் மற்றும் பிற கூட்டுறவு அமைப்புக்களிலும் பங்கெடுக்கும் அதிகாரங்கள் உள்ளன. மேம்பட்ட வாழ்க்கையை எளிமையாக அடைவதற்கு உதவும் ஆயுதங்களாகிய இவைகளை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.

ஆனால் உரிமைகள் மட்டும் போதாது. அவைகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நம்முடைய பலனுக்கானதாக எப்படி ஆக்குவது என்பதை கற்கவேண்டும். இந்த இரண்டு வருட சோவியத் அதிகாரத்தில், நமது வாழ்க்கை முற்றிலும் மாறிவிடவில்லை. நாம் கம்யூனிசத்தை அடைவதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். அதே சமயத்தில் பழைய இருண்ட மற்றும் அடக்குமுறைகளைக் கொண்ட பழைமையான உலகாலும் சூழப்பட்டுள்ளோம். குடும்பச் சங்கிலி, வீட்டு வேலைகள், விபச்சாரம் போன்றவைகள் இன்னமும் உழைக்கும் பெண்கள் மீது கனத்துக்கொண்டுதான் இருக்கின்றன. உழைக்கும் பெண்களும் விவசாயப் பெண்களும் இவைகளிலிருந்து விடுபட்டு சமத்துவத்தை அடைய வேண்டுமென்றால் அது இரஷ்யாவை உண்மையான கம்யூனிச சமூதாயத்தை நோக்கி கொண்டுசெல்வதில் நம்முடைய உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே சாதிக்க முடியுமே தவிர வெறும் சட்டத்தால் இயலாது.

இதனை விரைந்து சாத்தியமாக்க நாம் முதலில் இரஷ்ய பொருளாதாரத்தை நேர்நிலைப்படுத்த வேண்டும். இதனைச் சாதிக்க அடிப்படையாக நம்முன் இரண்டு முதன்மைக் கடமைகள் உள்ளன. ஒன்று எஃகுறுதிகொண்ட அரசியல்படுத்தப்பட்ட தொழிலாளர் கட்டமைவை ஏற்படுத்துவது மற்றொன்று போக்குவரத்தை மறுசீரமைப்பு செய்வது. நம்முடைய தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டால் மிகவிரைவில் நீராவி எந்திரங்களைப் பெற்று மீண்டும் இரயில்களை இயக்கலாம். இதன்மூலம் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் அவசியத் தேவையான ரொட்டியையும் விறகினையும் பெறலாம்.

போக்குவரத்தை மீட்பது கம்யூனிச வெற்றியை விரைவுபடுத்துவதாகும். கம்யூனிச வெற்றியுடன் பெண்களின் சமத்துவதும் வென்றெடுக்கப்படுகிறது. எனவே உழைக்கும் பெண்கள், விவசாயப் பெண்கள், தாய்மார்கள், மனைவிகள் மற்றும் சசோதரிகள் அனைவரும் இரயில்வே மற்றும் போக்குவரத்தை மறுசீரமைப்புச் செய்வதில் மற்றும் உணவு, விறகு மற்றும் மூலப்பொருட்களை கொணர்வதில் பாடுபடும் நமது தொழிலாளர்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பதை இந்த உழைக்கும் மகளிர்தினத்தின் செய்தியாக முன்வைக்கிறோம்.

சென்ற வருட மகளிர் தினத்தின் முழக்கம் “அனைத்தும் செம்படையின் வெற்றிக்கு!“ என்பதாகும். தற்போது நமது உழைக்கும் மகளிரை நம்முடைய உழைப்பாளிகளின் ரத்தம் சிந்தா அணிவகுப்பின் பின்னால் அனிவகுக்க அழைப்பு விடுக்கிறோம். செம்படை ஒருங்கமைக்கப்பட்டதாக, ஒழுங்கமைக்கப்படதாக மற்றும் சுயதியாகம் செய்ய தயாராக இருந்ததால்தான் புற எதிரியை தோற்கடித்தது. தற்போது நமது ‘தொழிலாளர் குடியரசு’ உள்நாட்டு எதிரிகளான போக்குவரத்து இடப்பெயர்வு, பொருளாதார சூழல், பசி, குளிர் மற்றும் நோய்கள் ஆகியவற்றை வெல்லும். “நாம் அனைவரும் தொழிலாளர்களின் இரத்தம் சிந்தா முன்னனியின் வெற்றிக்கே! அனைவரும் அதன் வெற்றிக்கே!“

உழைக்கும் மகளிர் தினத்தின் புதிய இலக்கு

அக்டோபர் புரட்சி நமது பெண்களுக்கு சமத்துவத்தையும், ஆண்களோடு சமமான குடியுரிமைகளையும் வழங்கியது. சில காலத்திற்கு முன்புவரையில் மிகுந்த துரதிஷ்டவசத்திலும், ஒடுக்குமுறையிலும் இருந்த இரஷ்ய பெண் பாட்டாளிகள் தற்போது சோவியத் குடியரசில், பிற நாட்டு தோழர்களுக்கு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மற்றும் சோவியத் அதிகாரத்தை அமைப்பதன் மூலம் அரசியல் சமத்துவத்தை அடையமுடியும் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாளித்துவ நாடுகளில் இன்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டப்படுபவர்களாகவும், வாய்பற்றவர்களாகவும் இருப்பதால் அங்கு நிலைமை வேறாக உள்ளது. நார்வே, ஆஸ்திரேலியா, பின்லாந்து மற்றும் வட அமெரிக்கா போன்ற சில நாடுகளில் போருக்கு முன்பே பெண்கள் குடிமை உரிமை பெற்றனர் என்றாலும் அந்நாடுகளில் உழைக்கும் பெண்களின் குரல் பலவீனமாகவும், உயிர்ப்பின்றியும்தான் இருக்கின்றது.

ஜெர்மனியில், கெய்சர் தூக்கியெறியப்பட்ட பின்பு, சமரசவாதிகள் தலைமையில் முதலாளித்துவ குடியரசு அமைக்கப்பட்டது. அதில் 36 பெண்கள் பாராளுமன்றத்திற்குள் பங்கெடுத்தனர். ஆனால் அதில் ஒரு கம்யூனிஸ்ட் கூட இல்லை.

1919-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு பெண் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக முதன்முறையாக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் அவர் யார்? ஒரு நிலச்சுவாந்தாரரும், மேல்தட்டு வர்க்கத்தைச் சோ்ந்த சீமாட்டியும் ஆவார் அவர்.

பிரான்சில் கூட பெண்களுக்கு ஓட்டுரிமையளிப்பது தொடர்பான கேள்வி எழுந்தது.

ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பில் உழைக்கும் பெண்களுக்கான இவ்வுரிமைகள் என்ன பலனைத் தரும்? அதிகாரம் முதலாளிகள் கையிலும், சொத்துடைமையாளர்கள் கையிலும் இருக்கும்போது எந்த அரசியல் உரிமையும், உழைக்கும் பெண்களை பழைமையான குடும்ப மற்றும் சமூக அடிமைத்தனத்திலிருந்து மீட்காது. இந்நிலையில் பிரான்சில் உழைக்கும் வர்க்கங்கள் மத்தியில் போல்ஸ்விக் கருத்துக்கள் மேலோங்கி வருவதால், பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் பெயரில் உழைக்கும் வர்க்கத்திற்கு மேலுமொரு பருக்கை தர முடிவு செய்தது.

படிக்க :
♦ வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !
♦ வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்

திரு.முதலாளி அவர்களே – இது மிகவும் தாமதம் !

அக்டோபர் புரட்சியின் அனுபவம் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் உழைக்கும் பெண்களுக்கு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மட்டுமே, சோவியத் அதிகாரம் மட்டுமே, முழுமையான நிரந்தரமான சமத்துவத்தை உத்திரவாதப்படுத்த முடியும் என்பதையும், கம்யூனிசத்தின் வெற்றி பல நூற்றாண்டுகால ஒடுக்குமுறைச் சங்கிலியை அறுத்தெறியும் என்பதையும் தெளிவுபடுத்தியது. இதற்கு முன்பு உழைக்கும் மகளிர் தினத்தின் இலக்கு முதலாளிகளின் பாராளுமன்றத்திற்கு முன்பு ஓட்டுரிமைக்கான போராட்டமாக இருந்தது. தற்பொழுது உழைக்கும் பெண்களை “மூன்றாம் அகிலத்தின்“ போராட்ட முழக்கங்களை நோக்கி அணி திரட்ட வேண்டிய புதிய இலக்கு பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. முதலாளிகளின் பாராளுமன்றத்தில் உழைப்பைச் செலுத்துவதற்குப் பதிலாக, இரஷ்யாவின் அழைப்பிற்கு செவிசாயுங்கள்“.

“அனைத்து நாடுகளின் உழைக்கும் பெண்களே!
உலகைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த பாட்டாளிவர்க்க முன்னனியை கட்டுவோம்!
முதலாளித்துவ பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்!
சோவியத் அதிகாரத்தை வரவேற்போம்!
உழைக்கும் ஆண்களையும் பெண்களையும் பிடித்திருந்த வேற்றுமைகளையும் – ஏற்றத்தாழ்வுகளையும் களைந்தெறிவோம்!
உலக கம்யூனிச வெற்றிக்காக தொழிலாளிகளுடன் இணைந்து போராடுவோம்!“

இந்த அழைப்பு முதலில் புதிய முறையின் முன்னோட்டத்திற்கு மத்தியில் ஒலித்தது. பனிப்போரில் இது கேட்கும் மற்றும் இது பிறநாடுகளின் உழைக்கும் பெண்களின் இதயத்தில் சுருதிமீட்டும். உழைக்கும் பெண்கள் இந்த அழைப்பைக் கேட்டு சரியானதென நம்புவார்கள். சிறிது காலத்திற்கு முன்புவரையில் எப்படியாவது தங்கள் தரப்பிலிருந்து சிலரை பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளாக அனுப்பிவிட்டால் அவர்களுடைய வாழ்க்கை எளிமையானதாகவும், மூலதன ஒடுக்குமுறை கடக்கக்கூடிய ஒன்றாகவும் ஆகிவிடும் என்று எண்ணியிருந்தனர். தற்பொழுது உண்மை அவர்களுக்குப் புரியும்.

மூலதன ஆட்சியை தூக்கியெறிவதும், சோவித் அதிகாரத்தை நிறுவுவதுமே உலகைத் துயரிலிருந்தும், உழைக்கும் பெண்களை அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கும் தாழ்மை மற்றும் சமத்துவமின்மையிலிருந்தும் மீட்கும். ஓட்டுரிமைக்காக நடத்தப்பட்ட “உழைக்கும் மகளிர் தினம்“ இன்று பெண்களுக்கான முழுமையான விடுதலைக்கானதாக, அதாவது சோவியத் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றிக்கான போராட்டமாக மாறுகிறது.

உடைமை மற்றும் மூலதன அதிகாரம் ஒழிக !
முதலாளித்துவ உலக மரபுகளான – ஏற்றத்தாழ்வு, உரிமையின்மை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவைகளை விட்டொழிப்போம்!
ஆண் பெண் உழைப்பாளர்களின் உலக ஒற்றுமையை முன்னெடுப்போம்!
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள்!
பாட்டாளிவர்க்கத்தின் இருபாலினரும்!

000

கட்டுரை தலைப்பு : உலக மகளிர் தினம்
எழுதியவர் : தோழர் அலெக்சாந்த்ரா கொலந்தாய்
முதல் பதிப்பு : மெழ்துனரோதின்யி தென், 1920
ஆங்கில மொழி பெயர்ப்பு : அலிக்ஸ் ஹோல்ட் 1972
தமிழாக்கம் : ச. மீனாட்சி (சமூக ஆர்வலர்)

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க