த்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பண்டேடரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. காய்கறி விற்பனை செய்து வந்த இவர், தனது 17 வயது மகள், தனக்கு பிடிக்காத ஒருவரை காதலித்தார் என்பதற்காக, அவருடைய தலையை துண்டித்தார். மட்டுமல்லாமல், துண்டித்த தலையோடு வீதிகளை, சாலைகளைக் கடந்து தனது ஆணாதிக்க சீழ்பிடித்த மனதின் வக்கிரத்தை ‘வீரமாக’ பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, போலீசில் சரணடைந்தார்.

மனிதத்தன்மையற்ற இந்த கொலைவெறி செயலுக்கு பார்ப்பனியத்தில் ஊறிப் போன இந்திய ஆணாதிக்கச் சமூகம் சர்வேஸ் குமாரை கொண்டாடக்கூடும். ஏனெனில் மாண்புமிக்கதாகக் கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே இந்திய ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாக திகழும்போது, கடைநிலையில் இருக்கும் சர்வேசின் செயல்கள் அப்படித்தானே பார்க்கப்படும்.

சர்வேஸ் தன்னை மீறி காதலித்த தனது மகளின் தலையை வெட்டினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தாம் விசாரித்துவரும் ஒரு வழக்கில் ஒரு சிறிமியை வல்லுறவுக்குள்ளாக்கிய கயவனையே அச்சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்து அச்சிறுமியின் மாண்பை படுகொலை செய்துள்ளார்.

படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?

மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தில் மோகித் சுபாஷ் சவான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 2014-ம் ஆண்டு 9- ம் வகுப்பு படித்து வந்த 16 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாயார் இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் சொல்கிறார். இதனையடுத்து மோகித் சுபாஷின் தாய் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து சமாதானம் பேசுகிறார். சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் சிறுமியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி அளிக்கிறார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருமணம் செய்துக்கொள்ள சிறுமி மறுப்பு தெரிவிக்கிறார். அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தை என்கிற பெயரில் நிகழ்த்தப்பட்ட பஞ்சாயத்தில் சிறுமிக்கு 18 வயது ஆனதும் திருமணம் செய்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போடப்படுகிறது. இதனையடுத்து அந்த நபர் மீது கொடுத்த புகாரை சிறுமியின் தரப்பு வாபஸ் பெற்றுக்கொள்கிறது. இதற்காகத்தானே இத்தனை நாடகமும் என்பதுபோல, அவன் சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள தற்போது மறுப்பு தெரிவிக்கிறான். அவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி உச்சநீதிமன்றம்வரை செல்கிறான் அவன். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போதுதான், நீதிபதி எஸ்..போப்டே, வரலாற்று சிறப்பு மிக்க அந்தக் கேள்வியைக் கேட்டார்,நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தயாரா?”.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு

நாங்கள் உங்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப் படுத்தவில்லை. உங்களின் விருப்பத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்” என நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அமர்வு அவனிடம் மன்றாடுகிறது. நாகரிகமான உலக சமூகம் இந்திய சமூகத்தின் இழிநிலையைப் பார்த்து உச்சுக்கொட்டுகிறது.

பாலியல் வன்கொடுமையாளனுக்கு உச்சநீதிமன்றம் எவ்வளவு பரிவு காட்டுகிறது? இந்தப் பரிவு ஆண் என்பதால் மட்டுமே காட்டப்படும் பரிவு. அல்லது மனுநீதியை தின்று செரித்த மூளையால் காட்டப்படும் பரிவு.

அனைவரும் சமமானவர்களே என்கிற அரசியலமைப்பால் இந்திய நீதித்துறை இயங்கவில்லை; மாறாக பெண்ணின் உடல் மீது ஆண்கள் நிகழ்த்தும் குற்றங்கள் குற்றங்களே அல்ல, அவை ஆண்களின் உரிமை என்கிற மனுநீதியால் இந்திய நீதித்துறை இயங்குகிறது என்பதற்கு இந்த வழக்கு மீண்டுமொரு உதாரணம்.

நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde)

சமீபகாலமாக தனது அப்பட்டமான ஆணாதிக்க நீதிமன்ற நடவடிக்கைகளால், தன்னை இந்திய ஆணாதிக்க சமூகத்தின் ஏக பிரதிநிதியாய் தலைமை நீதிபதி போப்டே மீண்டும் மீண்டும் பறைச்சாற்றிக் கொள்கிறார். இந்த வழக்கின் சூடு தணிவதற்குள்ளாகவே மற்றுமொரு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடம் வன்முறையாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார் என சொன்னபோது, மாண்பற்ற தலைமை நீதிபதி இப்படி கேட்டார் : “இரண்டு பேர் கணவன்மனைவியாக வாழும்போது, கணவர் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும், அவர்களுக்கிடையில் உடலுறவை ‘பாலியல் வல்லுறவு’ என அழைக்க முடியுமா?”

மேற்கண்ட இரண்டு வழக்குகளுமே கிரிமினல் (திருத்த) சட்டம் 2013-ன் படி கடும் தண்டனைக்குரிய சட்டங்கள். ஆனால், தலைமை நீதிபதி மனு ஸ்மிருதியின் குரலாக ஒலிக்கிறார். கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் குடிகாரனாக, கொடூரனாக இருந்தாலும் அவனுக்கு பணிவிடை செய்து வாழ் என்கிறது மனு நீதியின் அத்தியாயம் 9-ல் உள்ள 78-வது ஸ்லோகம். அந்த மனுவின் குரலைத்தான் நீதிபதி ஒலிக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் மத்தியில் ஆளும் மனுநீதி அரசின் கொடூர வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் பெண்கள் குறித்தும் இப்படித்தான் ஓர் உயரிய முத்தை நீதிபதி பாப்டே உதிர்த்திருந்தார். “பெண்கள் ஏன் போராட்ட களத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் வீடு திரும்புவதை உறுதிபடுத்துங்கள்!” என்றார் போப்டே.

ஆக்ஸ்போம் 2018 ஆய்வின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் 85 விழுக்காடு பெண்கள் வேளாண்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் உரிமையை பறிக்கும், நேரிடையாக பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடக்கூடாது என்கிறார் நீதிபதி பாப்டே.

வீதிக்கு வந்து போராடும் உரிமையும்கூட ஆண்களுக்கானது என்கிறார். உலகின் எந்தவொரு போராட்டமும் பெண்களின் பங்களிப்பின்றி நடைபெற்றதில்லை. பெண்களின்றி எந்தப் போராட்டமும் நடைபெறவும் முடியாது. இதை மாண்புமிகுந்த பதவியில் அமர்ந்திருக்கும் நீதிபதி போப்டே அறியாமல் இருக்க முடியாது.

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மகனாலும் காக்கப்பட வேண்டியவர் பெண்கள். ஆதலால் பெண்கள் எப்போதும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்” என்கிறது மனுதரும சாத்திரத்தின், அத்தியாயம் 9 செய்யுள் 3.

ஆக, போப்டே இயங்குவது இந்திய அரசியலமைப்பு நீதியாலா, மனு நீதியாலா? அவரை ஆட்கொண்டிருப்பது மனு நீதியே என தெள்ளத்தெளிவாக புரிகிறது.

தொடர்ச்சியாக தன்னை ஆணாதிக்க மனுநீதியின் பிரதிநிதியாக நிரூபித்துக்கொண்டே வரும் நீதிபதி போப்டேவை பதவி விலகக்கோரி, ஜனநாயக ரீதியாக உரிமை கோரும் பெண்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.

படிக்க :
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!
♦ அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அமர்ந்துகொண்டு இப்படிப்பட்ட தீர்ப்புகளை, கருத்துகளை பாப்டே கூறுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. இது, “பெண்களுக்கான நீதி இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமையல்ல” என்கிற செய்தியை பிற கீழமை நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவலர்கள் மற்றுமல்லாமல் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அறிவிக்கிறது. பாலியல் வன்கொடுமையாளர்களுக்கே பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து வைப்பது என்பது பாலியல் வன்கொடுமைகளுக்கான லைசன்ஸ் வழங்குவதைப் போன்றது. மேலும் இத்தகைய உரிமத்தை வழங்குவதன் மூலம், பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தவோ, சட்டப்பூர்வமாக்கவோ முடியும்” என பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் ஆனி ராஜா, கவிதா கிருஷ்ணன், கமலா பாசின், மீரா சங்கமித்ரா உள்ளிட்டோர் கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.

பெண்கள் குடும்ப வன்முறைகளை சகித்துக்கொண்டு வீட்டுக்குள்ளே இருங்கள், பாலியல் வன்கொடுமை செய்தவனையே திருமணம் செய்துகொள்ளுங்கள். இந்தக் கொடுமைகளை சகித்துக்கொண்டால், அனைத்துக்கும் மேலாக இருக்கும் அரசு செலுத்தும் வன்முறைகளை உங்களால் சகிக்க முடியும்” இதுதான் தலைமை நீதிபதி உணர்த்தும் செய்தி. பெண்கள் உடைத்து தூக்கியெறிய வேண்டிய செய்தியும் இதுவே.

அனிதா
செய்தி ஆதாரம் : த கார்டியன், த வயர்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க