உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கவலை !
“இந்திய ஊடக வெளியில் புலனாய்வு என்ற கருத்தாக்கம் துரதிருஷ்டவசமாக இன்றைய நாள்களில் மறைந்துவருகிறது. நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில் பெரிய ஊழல்களை வெளிக் கொண்டுவரும் பத்திகைகளை ஆர்வத்துடன் பார்ப்போம்.” என்று பொன்முத்துக்களை உதிர்த்துள்ளார், தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா.
“நல்லது யுவர் ஆனர் .. நம்ம ரஃபேல் ஊழல் பற்றி இந்திய ஊடகங்களும் பிரெஞ்சு ஊடகங்களும் வெளிக்கொண்டு வந்த வழக்கை மீண்டும் தூசி தட்ட வேண்டியதுதானே ! யார் தடுத்தது ? அப்புறம் அப்படியே அந்த பண்டோரா பேப்பர்ஸ்ல சிக்குனவங்கள பத்தி ஒரு சுவோ மோட்டோ போடலாமே யுவர் ஆனர்?” என யாரேனும் பொளிச்சென்று முகத்துக்கு நேரே கேள்விகேட்டால் என்ன பதில் சொல்வாரோ பாவம் !
ஹத்ராசில் உண்மையில் என்ன நடந்தது என ஒரு ஊடகவியலாளராக பார்க்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பானை இன்று வரை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உ.பி. அரசு பிணை கூட வழங்காமல் சிறையில் அடைத்திருக்கிறது. அதற்கு ரமணா தலைமை நீதிபதியாக இருக்கும் இந்த உச்சநீதிமன்றமும் துணை போயிருக்கிறது.
புலனாய்வு இதழியல் குறித்துப் பேசுவதற்கு முன்னர், தாம் பத்திரிகைத் துறையின் உயிர்நாடியின் மேல் கால்வைத்து அழுத்திக் கொண்டுதான் பேசுகிறோம் என்பதை காண வசதியாக மறந்துவிடுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !
000
படிக்க :
♦ சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் !
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
மகாராஷ்டிராவை பின்பற்றுவாரா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ?
ல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான தேர்வுப் பட்டியலை ஆளுநருக்கு இனி மாநில அரசுதான் பரிந்துரைக்கும். மாநில அரசு கொடுக்கும் பட்டியலில் இருந்துதான் ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுக்க முடியும்.
இதன் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் ‘கடினமான’ வேலையையும் இனி ஆளுநர் செய்யத் தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்வதில் ஆளுநருடையை அதிகாரம் தான் கோலோச்சிவருகிறது. தமிழகத்தில் தற்போதுள்ள நடைமுறையின்படி, ஆளுநர் தான் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்வுக் குழுவின் தலைவரை நியமிப்பார். அது தவிர பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர், மாநில கல்வி அமைச்சகம் நியமிக்கும் ஒருவர் என மூவர் கொண்ட தேர்வுக் குழு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பார்.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அடிமை அதிமுக ஆட்சியில், முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் குழுவின் தலைவராக ஜே.என்.யூ-வின் துணைவேந்தராக இருக்கும் ஜெகதீஷ்குமார் எனும் சங்கியை நியமித்தார். தமிழகத்தில் துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வடமாநில சங்கி எதற்கு ?
தேர்வுக்குழுவில் மட்டுமல்ல, பல்கலைக்கழக துணைவேந்தராக சங்கிகளை நியமிப்பது அரங்கேறியது கடந்த அடிமை ஆட்சியில்.. உதாரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா எனும் ஊழல் சங்கியை நியமித்தார் அன்றைய ஆளுநர். ஒட்டு மொத்த உயர்கல்வித்துறையை காவிமயமாக்கும் நோக்கத்தை இதன் மூலம் நிறைவேற்றி வருகிறது.
மாநில சுயாட்சி, மாநில உரிமை பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், மகாராஷ்டிராவை பின்பற்றுவாரா ? ஆர்.என். இரவி துணைவேந்தர்களை தனியாக அழைத்துக் கூட்டம் நடத்தி, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவேண்டும் என மிரட்டுவதையும், அதைக் கண்டும் காணாமல் ஸ்டாலின் இருப்பதையும் பார்த்தால் அத்தகைய நடவடிக்கைகள் ஏதும் இங்கு நடைபெறாது என்பதாகவே தெரிகிறது.
000
படிக்க :
ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
உண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் ?
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற புதிய சட்ட மசோதா – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் !
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறிய அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து , தமிழக நீர்நிலைகளில் உள்ள 4,40,927 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் அவை  அனைத்தையும் அகற்றுவதற்கான சட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில் தமிழகத்தில், குறிப்பாக சென்னை, கடலூரில் ஏற்பட்ட பெருவெள்ளம் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்புத் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த அடிமை எடப்பாடி ஆட்சியில் இது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதாரண ஏழை மக்களின் குடிசைகள் அகற்றப்பட்டனவே அன்றி, ஏரிகளையும் நீர்நிலைகளையும், நீர்த்தடத்தையும் ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் எழுப்பியிருக்கும் மியாட் மருத்துவமனை, ஸ்கைவாக் மால், ராமச்சந்திரா மருத்துவமனை, எம்.ஜி.ஆர். பல்கலை, எஸ்.ஆர்.எம் கல்லூரி, உள்ளிட்ட பெரு முதலாளிகளின் ஆக்கிரமிப்புகளை தொடக்கூட செய்யவில்லை.
ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்து 200 நாட்களுக்குள் பெரு வெள்ளம் வந்தாலும், இன்று வரையில் இத்தகைய பெருமுதலாளிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் ஸ்டாலின் முன்னெடுக்கவில்லை. ஆனால் சாதாரண மக்களின் – சென்னையின் பூர்வகுடிகளின் – இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறி வளர்ச்சியைக் காரணம் காட்டி பறித்து வருகிறது ‘விடியல்’ அரசு.
இது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி என்பதை மணிக்கொருமுறை நிரூபித்து வருகிறார் ஸ்டாலின்.

தொகுப்பு : கர்ணன்
செய்தி ஆதாரம் : தினமணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க