privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்ஊடக சுதந்திரம் என்பது இங்கே கிடையாது !

ஊடக சுதந்திரம் என்பது இங்கே கிடையாது !

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளையின்
– 14 வது ஆண்டுவிழா  கருத்தரங்கம் !

க்கள்  உரிமைப் பாதுகாப்பு  மையம், மதுரை மாவட்டக் கிளையின் 14 வது ஆண்டு விழா கருத்தரங்கம், 2017  டிசம்பர் 9 அன்று மாலை 5.00 மணியளவில்  மதுரை கோ.புதூர் டி.நொபிலி அரங்கத்தில் நடந்தது.

கருத்தரங்கத்திற்குத் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் பேரா அ.சீனிவாசன் தலைமையேற்று உரையாற்றினார். “ இந்திய அரசியல் சட்டம் நமக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை  எனப் பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருந்தாலும் ஒரு பேனர்  வைக்க அனுமதி கிடைப்பதில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள  எந்த அடிப்படைச் சட்டத்தையும் இந்திய அரசு குறிப்பாக மோடி அரசு மதிப்பதே இல்லை.

இது மக்களுக்கான அரசு இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கின்ற அரசாகவே இருக்கிறது. பல்வேறு மொழிகள் , பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்ற இந்தியாவில் ஒற்றைக் கலாச்சாரமும், ஒற்றை மொழியும், ஒற்றை மதமும் எப்படி சாத்தியமாகும்? இதனால் முஸ்லிம்கள், கிருத்தவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. தமிழ் நீதிமன்ற மொழியாக இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜஸ்தானி மொழியும், பீகார், உ.பி.யில் இந்தி நீதிமன்ற மொழியாக இருக்கும்போது செம்மொழியாகியத் தமிழுக்கு நீதிமன்றத்தில் இடமில்லை. பல போராட்டங்கள் நடத்தியும் விடிவு பிறக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளுக்காக லட்சக்கணக்கான மக்களைத் திரட்டிப் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை”, என்று முடித்தார் பேரா. அ. சீனிவாசன்.

கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய மக்கள் உரிமைப்  பாதுகாப்பு மையத்தின் மாநில  ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே .வாஞ்சிநாதன் பேசிய போது, “ஒக்கி புயலால் தமிழகத்து மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 10 நாட்கள் ஆகியும் காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை தெரியவில்லை. உலகின் பலம் பொருந்திய கடற்படை விமானப்படை நம்மிடம் இருக்கிறது. உயர் தொழில் நுட்பம் இருக்கிறது. ஆனாலும் மீனவர்களை காப்பாற்ற இந்த அரசுக்கு வக்கில்லை. நம் கண்ணெதிரே அவர்கள் துடிதுடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இ .பி.எஸ்-ஸும்  போகவில்லை. பிரதமர்  மோடியும் போகவில்லை. எதுவும் பேசவும் இல்லை.

எத்தனையோ வழக்குகளைத் தாமாகவே முன்வந்து எடுக்கின்ற நீதிமன்றங்கள் இந்த அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. கடமை தவறிய எந்த அதிகாரியையும் தட்டிக் கேட்க முடியவில்லை. இந்தக் கட்டமைப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது. இந்தியாவில் சாதி  அமைப்பு இருக்கிறது. இதைத் தீர்க்க அரசியல் அமைப்புச்சட்டமும் இருக்கிறது. அதைப் புனிதம் போல் பேசுகின்றனர். ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் சாதியத்தை அது தீர்த்து விட்டதா? தீர்க்கமுடியுமா?

சாதிய ஏற்றத்தாழ்வுகளும் மத ஒடுக்குமுறைகளும் தொடரத்தானே செய்கிறது. இந்திய அரசியல் சட்டம் என்பது சாதியத்தை, பார்ப்பனியத்தை, மதத்தைப் பாதுகாக்கவே செய்கிறது. அதனால்தான் டாக்டர்.அம்பேத்கர் “நான் ஒரு குதிரையைப் போல் பயன்படுத்தப்பட்டேன். அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்”என்று கூறினார்.

கருத்துரிமைகள் இங்கே நசுக்கப்படுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. மணிப்பூரில் இந்திய சிறப்புக்காவல் படை 1500 -க்கும் அதிகமான மக்களை சுட்டுக் கொன்றுள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்வதில்லை. 90 சதம் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான பேராசிரியர் சாயிபாபாவை எந்தவிதமான உறுதியான சாட்சியும் இல்லாமலேயே மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி  சிறையில் அடைத்தனர். பிணை மறுக்கப்படுகிறது. ஒருமிருகத்தைப் போல கேவலமாக நடத்தப்படுகிறார்.

அதே வேளையில் பல குண்டு வெடிப்புகளில் பலரையும் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கில் மனுதர்மத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. பல தீர்ப்புகள் மதக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே  சொல்லப்படுகிறது. எனவே மாற்று ஓன்று தேவைப்படுகிறது”, என்றார்.

“நொறுக்கப்படும் மனித உரிமைகள்  பறிக்கப்படும் ஊடக சுதந்திரம்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் திரு.இரகுமான் ஆற்றிய உரை ; 

“ஊடகங்களுக்கு 24 மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்ப செய்திகள் தேவைப்படுகிறது. ஆனால் செய்தி பற்றாக்குறையாகவே இருக்கிறது. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு, தமிழக மீனவர்கள் இலங்கை படைகளால் கைது என்று ஒருநாள் தொடங்கும்போதே மனித உரிமை மீறலோடே தொடங்குகிறது.

யாரையாவது சுட்டு கொன்றுவிட்டு அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறது அரசு. ஆனால் ராணுவத்தில் ஆண்டுதோறும் 1500 பேருக்கும் அதிகமானோர் மாண்டு போகின்றனர். அதில் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. மன அழுத்தத்தால் மரணம் அடைந்தவர்களும் உண்டு. எல்லாவற்றிக்கும் மேலாக சுட்டு கொல்லப்பட்டவர்களும் உண்டு. மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் அங்கேயும் நடக்கிறது. கன்னியாகுமரியில் காணாமல் போன 1000 மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், நடுக்கடலில் சிக்கியவர்களை மீட்கவும் அரசோடு போராடவேண்டியுள்ளது.

காஷ்மீரில் ஒருவரை ஜீப்பில் கட்டி ராணுவமே  அவரை மனிதக்கேடயமாக்கியது, டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அடித்த போலீஸ் அதிகாரிக்கு  பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.  இந்திய சிறைகளில் 50 சதவீதத்துக்கும் மேலான கைதிகள் விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகள் வாடுகின்றனர். ஆண்டுக்கணக்கில் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. ஆனால் பாலியல் கொலை செய்தவன் 90 நாட்களில் வெளியே வந்து விடுகிறான். எல்லாத் துறைகளிலும் மனித உரிமைமீறல் நடக்கிறது. காவல்துறையில்  மிக  அதிகமாக நடக்கிறது. காவல்துறையை சீர்திருத்துவது, நவீனமயப்படுத்துவது என்று அரசு பேசினாலும் நவீனமயப்படுத்தும் வேலையை மட்டுமே செய்கிறார்கள். சீர்திருத்துவது இல்லை.

காவல் துறை மனித உரிமைகளை மீறவேண்டும் என்றே விரும்புகிறது. மாட்டுக்கறி வைத்திருந்தால் 10 ஆண்டு சிறை என்று சட்டம் இயற்றும் அரசு, கஞ்சா பயிரிடவும், சாராயம் விற்கவும் அனுமதிக்கிறது. இந்த நிலையில் மக்கள் உரிமை என்று பேசுவதில் என்ன பொருள் இருக்கமுடியும். அரசியல் சட்டம் மனித உரிமைகளை வழங்குவதாகக் கூறினாலும் உண்மை அப்படி இல்லை. அது  ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். முதலாளி தொழிலாளி சமூக உறவுகளின் துணை விளைவு தான் மனித உரிமை. எனவே உண்மையான தீர்வு என்பது சமுதாய மாற்றத்தில் தான் இருக்கிறது.

ஊடக சுதந்திரம்  என்பது இங்கே கிடையாது. அது வர்த்தக உறவுக்கு உட்பட்டதாகவும், வணிகநோக்கம் உடையதாகவும இருக்கிறது. அது சொல்லும் ஒவ்வொரு செய்தியிலும் வர்த்தகம் தான் இருக்கிறது. வர்க்கநலன்களை மீறியதாக அது இருக்க முடியாது. சமுதாய உறவுகளின் விளைவுகளில் ஊடகமும் ஓன்று தான். எனவே ஊடக சுதந்திரம் என்ற ஒன்று இல்லாத போது இதில் பறிப்பதற்கு என்ன இருக்கிறது. உண்மையில் ஊடகங்கள் பேசமுடியாததை வினவு போன்ற இணைய தளங்களும், சமூக வலைத்தளங்கள் தான் பேசுகின்றன. சமூகத்தை தோலுரித்து அவைகளே காட்டுகின்றன. எனவேதான் அதைக் கட்டுப்படுத்தவும் அதன் சுதந்திரத்தைப் பறிக்கவும்  புதிய சட்டங்களை அரசு கொண்டுவர முனைப்போடு செயல்படுகிறது. அதை முறியடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.” எனப் பேசினார்.

நசுக்கப்படும் கருத்துரிமை நிலைகுலையும் நீதித் துறை – நமது கடமை என்ன ? என்ற தலைப்பில் திரு.அரிபரந்தாமன்,நீதிபதி [ஓய்வு ] சென்னை உயர்நீதி மன்றம் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.

இந்திய  அரசியல்  சட்ட வரைவுக் குழுவில் இருந்தவர்கள் எவரும் அனைத்து மக்களும்  வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இல்லை. படித்தவர்கள், சொத்துடைய வர்க்கங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். அம்பேத்கர் எல்லோராலும் அறியப்பட்டவராக இருந்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சமூகம், பொருளாதாரத் துறைகளில் சமத்துவத்தைப் பேசியது. ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது.

40 சதம் இடங்கள் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ளது. உச்ச நீதிமன்றம் நீதிபதிகளைப் பரிந்துரை செய்து பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு நியமனம் செய்யவில்லை.  உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தாக்குர் இத்தகைய நிலை தொடர்வதைக் குறிப்பிட்டுப் பிரதமர் மோடி முன்னிலையில் பொது மேடையிலேயே அழுதார். ஆனால் அதற்குப் பின்பும் கூட  அதை ஆதரித்து மிகப்பெரிய எழுச்சியை வழக்கறிஞர்களோ, மக்களோ நடத்தவில்லை என்பது தான் வருத்தம். நீதித் துறையில் மிகப்பெரிய தாக்குதல் என்பதே நியமன மறுப்பு தான் .

மற்ற துறைகளை விட  நீதித் துறையில் தான் ஊழல் குறைவு என்று நம்புகிறேன். 40 வருடங்களுக்கு முன்னால் மாவட்ட நீதிபதிகள் மத்தியில் கூட  ஊழல் இல்லை. ஆனால் இன்று தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல்வாதிகள் என்று சாந்திபூஷண் புகார் கொடுத்து 7 வருடங்கள் ஆகியும் வழக்கு இல்லை. ஊழலே இல்லாத நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று சொல்லமாட்டேன்  என்று தலைமை நீதிபதி வர்மா கூறும் நிலையில் தான் இன்று நீதித்துறை இருக்கிறது. நீதித்துறையில் 20 சதம்  பேர் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்.

நாம் பலவற்றுக்கும்  சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம். ஆனால் சி.பி.ஐ.மதிப்பு குறைந்து பல காலமாகிவிட்டது. ஜெ., லல்லு மீது வழக்குப் போடும் சி.பி.ஐ. மத்திய அமைச்சர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுத்தது உண்டா? சுதந்திரமான அமைப்பு என்று சொல்லப்பட்ட சி.பி.ஐ , வருமானவரி துறை, தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமானதாக இல்லை. இரட்டை இலை தீர்ப்பு வந்த மறு நாளே, ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்படுவதும் குஜராத், இமாச்சலப்பிரதேஷ் தேர்தல் தேதியை மத்திய அரசின் விருப்பம் அறிந்து அறிவிப்பதும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இல்லை என்பதையே புலப்படுத்துகிறது.

நீதித் துறையின் மீது அரசு பல வழிகளில் தாக்குதல் தொடுக்கிறது. “பொது நல வழக்கு என்ற பெயரில் நீதித் துறை ஆட்சி செய்ய முயற்சிக்கிறது” என்று தலைமை நீதிபதிக்கு முன்பே சட்ட அமைச்சரும் பொது நல வழக்குப் போடுவதில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று  பிரதம மந்திரி மோடி பேசுவதும் நீதித்துறையின் மீது அரசு தொடுக்கும்  மற்றொரு தாக்குதலே ஆகும். நீதித் துறையில் தலையிடாதே என்று தலைமை நீதிபதி கூறமுடியாமல் மக்கள் உரிமைகளுக்காக நிற்கிறோம் என்றே அவரால் கூறமுடிகிறது. வேண்டாத நீதிபதிகள் தூக்கி எறியப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கோபால் சுப்பிரமணியம், லோயா, திப்சே என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

கருத்துரிமையின் ஒரு பகுதி தான் ஊடக  உரிமை, பேசும் உரிமை. ஆனால் இங்கே லஞ்சம் பற்றி பேசுவதற்கு, கூட்டம் போடுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், துண்டறிக்கை கொடுத்தால், மீத்தேனை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாய்கிறது. தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அவசர காலகட்டத்தில் பாதிக்கப்பட்டதைப் போலவே இப்பொழுதும் பாதிக்கப்படுகிறது. கவுரி லங்கேஷ் கருத்து சுதந்திரத்துக்காகப் போராடியதனால் கொல்லப்பட்ட போதும் மோடி கருத்துக் கூறவில்லை.

லவ் ஜிகாத் என்ற பெயரில்  முஸ்லீம் ஒருவரை உயிரோடு எரித்து அதை வீடியோ எடுத்து பரப்பினர். எல்லோருக்கும் இது தான் கதி என்று இதன் மூலம் அறிவித்தனர். அக்லக் மாட்டுக் கறிக்காகக் கொலை செய்யப்பட்டபோது மோடி கண்டிக்கவில்லை, வருந்துகிறேன் என்றார்.  ஊனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து எனக்கு வலிக்கிறது என்றார். இன்றைய சூழலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகள் எல்லாம் பறிபோய்க்கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என்று யார் போராடினாலும் அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே நாம் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றிணைந்து அடக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டும். வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை

கிளைச் செயலாளர் திரு.லயனல் அந்தோணிராஜ் நன்றி உரையுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன்னதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நெல் ஜெயராமன் தயாரித்த “மீத்தேன் அகதிகள்” என்ற 30 நிமிடக் குறும்படம் திரையிடப்பட்டது. மீத்தேன் திட்டத்தின் நாசகர விளைவுகளைப் பற்றி குறும்படம் சிறப்பாக விளக்கியது. கருத்தரங்கின் இறுதியில் கானல் நீர் குறும்படம் திரையிடப்பட்டது. கேரள மாநிலம் பிளாச்சிமடா கிராமத்திலிருந்து கோகோ-கோலா ஆலையை விரட்டியடித்த போராட்டங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. ஆலையை மூடவில்லை என்றால் அதை அடித்து நொறுக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஓர் இளம் பெண் கூறுவது உழைக்கும் மக்களின் உறுதியை எடுத்துக்காட்டியது.

கருத்தரங்கில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், தோழமை அமைப்பினர், பெண்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், இசுலாமியர்கள், ம.உ.பா மையத்தின் திருச்சி, கடலூர், தூத்துக்குடி கிளையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் புதிய இளைஞர்கள் பலர் என 350 பேர் கலந்து கொண்டனர்.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை, தொடர்புக்கு:94434 71003


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க