நீதிபதியை தண்டிக்க போராடுவோம் !

லக அளவில் கண்டனத்திற்கு உள்ளான சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலையில் இது நாள்வரை கொலைகார போலீசு மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு SI கைது.

இந்த சாத்தான்குளம் இரட்டை படுகொலையில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் பொறுப்பற்ற, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையும் பொது மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

பொதுவாக குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்ற காவலில் அடைக்க போலீசார் தாக்கல் செய்யும் விண்ணப்பத்தை, மாஜிஸ்டிரேட்கள், நீதிபதிக்கான பொறுப்பை உணர்ந்து தகுந்த விசாரணை செய்யாமல் இயந்திரத்தனமாகவும்,
தொடை நடுங்கித்தனமாகவும் சிறையில் அடைக்க உத்தரவிடுகின்றனர்.

அநீதிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், அநீதிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து முன் நிறுத்தும்போது கூட மாஜிஸ்திரேட்டுகள் போலீசிடம் ஏன், எதற்கு என்று கூட கேட்பதில்லை.
(டாஸ்மாக் கடைக்கு எதிரான, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான, கல்வி கட்டண உயர்வுக்கு எதிரான, …….போராட்டங்கள்)

மேலும் ஒரு பொய் வழக்கு அல்லது சட்ட விரோத கைது நடக்கும்போது போலீசு, அரசு மருத்துவர், மாஜிஸ்டிரேட், சிறை அதிகாரிகள் ஆகியோர் போலீசுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர், இதை ஒரு அயோக்கியதனமான கூட்டணி என்றே கூற வேண்டும்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் இந்த அயோக்கியத்தனமான கூட்டணி எத்தகைய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அம்பலமாக்கியிருக்கிறது.

மக்களுக்காக பணியாற்ற வேண்டிய அரசு துறை, நீதித்திறை மக்கள் விரோத இயந்திரமாக மாறிப்போயிருக்கின்றது. குற்றவியல் நீதிமன்றத்தை பொறுத்தவரை
போலீசு – குற்றம் சாட்டப்பட்டவர்(accused), இருவருமே நீதிமன்றத்திற்கு இரு தரப்பினர். போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கினை முழுமையாக விசாரணை செய்து நீதி வழங்கும் பொறுப்பு நீதிபதியுடையது.

படிக்க:
சாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
♦ சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நீதிபதி இரு தரப்பினர்களிடமும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நீதிபதிகள் போலீசை நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக நினைத்து கொள்கின்றனர், தங்கள் சொந்த தேவைக்கு போலீசை பயன்படுத்தி கொள்கின்றனர், இது முறை கேடு இல்லையா?

நீதிபதிகள் தங்கள் சொந்த (personal) வேலையாக செல்லும் இடங்களுக்கு, செல்லும் முன்பே போலீசு மூலம் தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்வது, தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தங்கள் உறவினர்களுக்கு தேவையானவற்றை போலீசு மூலம் செய்து கொடுப்பது, தங்களுக்கான சின்ன சின்ன தேவைகளுக்கு கூட (சினிமா தியேட்டர் டிக்கெட், கடைகளில் விலை குறைத்து பொருள் வாங்குவதற்கு…), எந்தெந்த ஊரில் எந்தெந்த பொருள் special என்பதை போலீஸ் மூலம் விசாரித்து தெரிந்து கொண்டு அதை அவர்கள் மூலம் வாங்கி வர செய்வது, ( பணம் கொடுத்தே வாங்கினாலும்)

பண்டிகை நாட்களில் போலீசார் கொடுக்கும் பரிசுப்பொருட்களை கூச்சமின்றி பெற்றுக்கொள்வது, இவை அனைத்துமே போலீசு நீதிபதிக்கு கொடுக்கும் இலஞ்சம் இல்லையா, இவற்றை நீதிபதி பெற்றுக்கொள்வது இலஞ்சம், முறைகேடு இல்லையா? நேரடியாக வழக்கிற்காக பணம் பெற்றுக்கொள்வது மட்டும் தான் இலஞ்சமா?
போலீசு, நீதிபதிகளுக்கு ஏன் இவற்றை எல்லாம் செய்து கொடுக்க வேண்டும்? தங்களுடைய முறைகேடுகளையும், அராஜகங்களையும் நீதிபதி கண்டு கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்காத்தானே! ( குறிப்பாக காவல் நிலையத்திற்கு திடீரென்று சென்று ஆய்வு செய்யும் அதிகாரம் உள்பட மாஜிஸ்திரேட்டிக்கு உண்டு)

இதன் விளைவுதான் சட்ட விரோத சாத்தான்குளம் ரிமாண்ட், ஜெயராஜ், பென்னிக்ஸ் ரிமாண்ட் முறையாக விசாரிக்கப்பட்டு செய்யப்பட்டிருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிர்கள் பிழைத்திருப்பார்கள்.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி ரிமாண்ட் செய்ய வேண்டிய நிலை மாஜிஸ்ட்திரேட்டுக்கு ஏற்பட காரணம், இப்படி இவர்கள் போலீசிடம் பெற்றுக்கொள்ளும் இலஞ்சத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்? இப்படி தங்களிடம் இலஞ்சம் வாங்கும் நீதிபதிகளை பார்த்து பழகிய போலீசு, தனது பணியை முறையாக செய்யும் ஒரு நீதிபதியை பார்த்து “உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா…” என்று கூறியதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

தன்னுடைய செயலுக்கு எதிராக இருக்கும் எவர் ஒருவரையும் சமயம் பார்த்து பழி தீர்ப்பது போலீசின் இயல்பு, இந்த விதிக்கு நீதிபதிகள் விதிவிலக்கா என்ன? போலீசை தன் சொந்த நலனுக்கு பயன்படுத்தாத, நேர்மையான நீதிபதிகள் எதிர்கொள்வார்கள்! நேர்மையற்ற நீதிபதிகள் போலீசின் கூட்டாளியாவார்கள்!

மேலும் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதிகள் திரு. ஹரிபரந்தாமன் மற்றும் திரு. சந்துரு ஆகியோர் கூறியுள்ள நிலையில் இந்த இரட்டை படுகொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர் நீதிமன்றம் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டை பற்றி வாய் திறக்கவில்லை. (மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலஞ்சம் வாங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க போராடிய மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழக வக்கீல்கள் மீது சிஸ்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு தொழில் தடை விதிக்கப்பட்டது)

  • இருவரின் கொலைக்கும் துணை போன சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் அதற்கான தண்டனையை பெற வேண்டாமா? அதை பொதுமக்கள் அறிய வேண்டாமா?
  • சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் மீது வெளிப்படையாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
  • நீதிபதிகளின் நடவடிக்கைகள் பொதுமக்களால் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டும்! விமர்சிப்பதை தடுக்க நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டகூடாது!
  • நீதிபதிகள் பொது மக்களுக்கு பொறுப்புள்ளவர்களாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்!
  • போலீசு மூலம் தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நீதிபதிகள் தண்டிக்கப்பட வேண்டும்!
  • சட்ட விரோதமாக நடந்துகொள்ளும் நீதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்கப்பட சட்டமியற்ற வேண்டும்!

இதற்காக வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து குரலெழுப்புவோம்! போராடுவோம்.

இவண்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க