மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ்தாஸ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் மீது நடத்திய பாலியல் வன்முறை குறித்து தலைமைச் செயலரிடம் அளிக்கப்பட்ட புகாரை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நாம் அறிந்ததே.

கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ராஜேஷ்தாஸ். பாதுகாப்புக்குப் போன இடத்தில் அங்கிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை சட்டம் ஒழுங்கு குறித்து ’விவாதிக்க’ காரில் ஏறச் சொல்லி ஓடும் காரிலேயே பாலியல்ரீதியில் அத்துமீறியிருக்கிறார் ராஜேஷ்தாஸ்.

இது தொடர்பாக புகாரளிக்கப் போவதாக ஐ.ஜி ஜெயராமனிடம் கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து சக எஸ்.பி.களான ஜியாஉல்ஹக், திஷா மிட்டல் மற்றும் அபினவ் ஆகியோர் ராஜேஷ்தாஸ் மீது புகாரளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மறுத்த அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு புகாரளிக்க வருவதை நடுவழியில் தடுத்து நிறுத்தி காரின் சாவியைப் பறித்துள்ளார் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன். இதையெல்லாம் மீறிப் போய் தலைமைச் செயலரிடம் புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண் உயரதிகாரி.

படிக்க:
♦ சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?
♦ பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை பட்டப்பகலில் காரில் வைத்து பாலியல்ரீதியில் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் புகாரளிகக் கூடாது என அவரை மிரட்டவும் செய்வதெனில் எவ்வளவு அதிகாரத் திமிர் இருந்திருக்க வேண்டும்?

ஒரு பெண் உயரதிகாரிக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரண பெண் போலீசாரின் நிலைமை என்ன ?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

ஒருவேளை அந்தப் பெண் போலீசு அதிகாரியின் இடத்தில் சாதாரணப் பெண் இருந்திருந்தால் என்னவாகியிருந்திருக்கும்? ராஜேஷ்தாஸின் உத்தரவை சிரமேற்று இடைநிறுத்திய அதே போலீசு, அந்தப் பெண்ணை என்னவேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்!

ராஜேஷ் தாஸ்

ஒருவேளை ராஜேஷ்தாஸ் இடத்தில் ஒரு சாதாரண நபர் அந்த இழிவான செயலைச் செய்திருந்தால், கைது செய்கையில் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று செய்தி வந்திருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் ”பாசி படிந்த” போலீசு நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகால் எலும்பு முறிந்ததாகவாவது செய்தி வந்திருக்கும்.

ஆனால் பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு மட்டுமல்லாமல், அதிகாரவர்க்கத்தில் தமக்கு நெருக்கமாக இருப்பவர்களை வைத்து மிரட்டவும் செய்த ராஜேஷ் தாஸை இன்னும் கைது கூட செய்யாமல் பாதுகாத்து வைத்திருக்கிறது தமிழக அரசு.

பாதிக்கப்பட்ட பெண் போலீசு அதிகாரி தலைமைச் செயலரிடம் புகார் கொடுத்ததை ஒட்டி, ‘அதிகபட்ச’ தண்டனையாக ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இதில் வெட்கமே இல்லாமல், பெண்கள் எந்நேரத்திலும் தனியாக பயணம் செய்யும் அளவிற்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று விளம்பரம் வேறு.

பொள்ளாச்சி பாலியல் குற்றம் ஊர் முழுவதும் அம்பலமாகி நாடே காறி உமிழ்ந்த பின்னரும் குற்றவாளிகளைப் பாதுகாத்த தமிழக அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?

பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலின் தலைவனான அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் இதில் சம்பந்தப்பட்டிருந்ததுதான் எடப்பாடி அரசு அந்தக் குற்றக் கும்பலைப் பாதுகாத்ததன் பின்னணியாகும்.

துணை சபாநாயகரின் மகனுக்கும் அவனது கும்பலுக்குமே இவ்வளவு கரிசனம் காட்டப்படும்போது இத்தகைய கிரிமினல் கும்பல்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பச் செய்து பாதுகாத்து வரும் அதிகாரவர்க்கத்தினருக்கு மட்டும் குறைவாகவா கரிசனம் காட்டப்படும் ?

ஆனால், இங்கு பாதிக்கப்பட்டவரும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்திய சமூகத்தில் அதிகார வர்க்கம் முதல் சாதாரண மக்கள் வரை சாதியைப் போலவே ஆணாதிக்கமும் ஊறிப் போயிருக்கிறது. அதிகார வர்க்கத்தினுள்ளும் சாதிய ஏற்றத்தாழ்வும், பாலியல் ஏற்றத் தாழ்வும் உண்டு என்பதை பல வழக்குகள் நமக்குக் காட்டியிருக்கின்றன.

டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா மற்றும் அவர் எழுதிய தற்கொலை குறிப்புக் கடிதம்

குறிப்பாக கோகுல்ராஜ் கொலைவழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய முயன்ற டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணித்தது தொடர்பான வழக்கு இதற்கு எடுப்பான உதாரணம். அப்போதைய நாமக்கல் எஸ்.பி செந்தில்குமார்தான் விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குக் காரணம் என்று அவரது தந்தை குற்றம்சாட்டியதோடு, விஷ்ணுபிரியாவின் தோழியும் அப்போதைய கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஷ்வரியும் வெளிப்படையாக பேட்டியளித்தார்.

மேலும் விஷ்ணுபிரியா மரணித்த பின்னர் அவர் இருந்த அறைக்குள் சென்று அனைத்து தடயங்களையும் செந்தில்குமார் அழித்துவிட்டார் என்பதும் அம்பலமானது. இவ்வளவு இருந்தும் இந்த வழக்கை விசாரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கைவிட்டது சி.பி..

சி.பி.யிடம் இந்த வழக்க்கை கொடுப்பதற்கு முன்னர், குற்றம்சாட்டப்பட்ட எஸ்.பி செந்தில்குமாரின் மீதான இந்த வழக்கை சிபி.சி.ஐடியில் பணியாற்றிய அவரது நண்பரிடம் ஒப்படைத்தது தமிழக அரசு. குற்றவாளி ஒருவனின் குற்றத்தை விசாரிக்க அவனது நண்பனையே விசாரணை அதிகாரியாகப் போடும் ‘துணிவு’ கொண்ட ஒரே அரசாங்கம் அடிமை எடப்பாடியின் அரசாங்கமாகத்தான் இருக்க முடியும். இதை எதிர்த்து விஸ்ணுபிரியாவின் தந்தை தொடுத்த வழக்கை முன்னிட்டுதான் இந்த வழக்கு சி.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை தற்கொலைக்குத் தள்ளிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.பி. செந்தில்குமாரையும், தற்போது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸையும் காப்பாற்றுவதற்கே அன்றும் இன்றும் இந்த அதிமுக அரசு முயற்சித்தது.

படிக்க :
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

முன்னதில் அதிகாரவர்க்கத்தில் கோலோச்சும் சாதியமும் ஆணாதிக்கமும் அம்பலப்பட்டது எனில் தற்போதைய சம்பவத்தில் அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் அம்பலப்பட்டு நிற்கிறது. அதோடு இந்த அடிமை அதிமுக அரசு எந்த அளவிற்கு அதிகாரத் திமிரெடுத்த கும்பலுக்கு ஆதரவாக நிற்கிறது என்பது இந்தச் சம்பவத்தில் அம்பலப்பட்டிருக்கிறது.

போலீசு, இராணுவம், நீதித்துறை என அதிகார வர்க்கத்தின் குற்றங்கள் குறித்து விசாரிக்க வழங்கப்படும் தனிச்சிறப்பு விதிவிலக்குகள் அதிகாரவர்க்கப் பிரிவை மக்களுக்கு மேலானதாகவும் அதிகாரத் திமிர் கொண்டதாக மாற்றிவிடுகின்றன.

அதிகார வர்க்கமானது, மக்களை ஒடுக்குவதில் ஆளும்வர்க்கத்திற்கு ஆற்றும் சேவைகளுக்கு பிரதிபலனாகவே இந்தச் சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இத் தனிச் சலுகைகள் ஒழிக்கப்படும்போதுதான் அதிகார வர்க்கத்தின் இத்தகைய பாலியல் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் முடிவுக்கு வரும். ஆனால் அது மக்களை சுரண்டுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த அரசுக் கட்டமைப்பில் சாத்தியமற்ற ஒன்று என்பதுதான் கசப்பான உண்மை!

கர்ணன்
நன்றி :
கலைஞர் செய்திகள்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க