மிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் வீதிக்கு வீதி ஜனநாயகம் பற்றியும் ஓட்டுப்போடுவது பற்றியும் வகுப்புகள் எடுக்கப்படும். அதாவது, ஓட்டுப்போடுவது மட்டும்தான் நமது ஒரே ஜனநாயக உரிமை என்பதாக ‘நடுநிலை’பத்திரிகையாளர்கள் துவங்கி முன்னாள், இன்னாள் நடிகர் நடிகைகள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நமக்கு வகுப்பெடுப்பார்கள்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசாங்கம், இந்திய அரசியல் அமைப்பை தனது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு மாற்றுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக, மொத்த அதிகாரங்களையும் ஒற்றை அலுவலகத்தில் குவித்து வருகிறது.

படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !

மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதே சமயத்தில், மாநில அரசுகளின் நிதியாதாரமும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி என்பது ஒப்புக்குக்கூட இல்லாத இன்றைய சூழலில், இந்த சட்டமன்ற தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் வெற்றிபெற்றாலும், அவர்களின் அதிகாரம் என்பது மிகவும் குறுகிய வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. மாநில சுயாட்சியை மீட்க வேண்டும் என வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன.

அவ்வளவு ஏன், பாஜக எஜமானர்களுக்கு அடிமையாகச் சேவை செய்யும் எடப்பாடி, ஓ.பி.எஸ். கும்பல் கூட மாநில அரசுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி வரிப் பங்குத் தொகை தராமல் இழுத்தடிக்கப்படுவதைப் பற்றி புலம்பியிருக்கின்றனர்.

“பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம், மாநில அரசின் வரி விதிப்பு அல்ல. அவற்றின் மீதான வரியை மாநில அரசு மக்களுக்கு சாதகமாக இருக்கக் கூடிய அளவுக்கு மாற்றியது. அதன் பிறகு, அவற்றின் மீதான மத்திய அரசின் வரியை அவர்கள் கணிசமாக உயர்த்தினர். கலால் வரி என்பதை “செஸ் வரி”என்று மாற்றினர்.

கலால் வரி என்றால் மாநிலங்களுக்கு அதை பகிர்ந்தளிக்க வேண்டும். செஸ் என்று மாற்றினால் அதை மாநிலங்களுக்கு தர வேண்டியதில்லை. எனவே, இதில் மாநிலங்களுக்கு வரக்கூடிய வருவாய் கிடைக்காமல்போனது. அவர்களுக்கு 48 சதவீதம் வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாயில் 39 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய அரசு விதித்த வரியால், தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மத்திய வரி வருவாயில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கின் அளவு குறைகிறது. வரியில் 41 சதவீதம் அதாவது ரூபாய் 32,849 கோடியை தமிழகத்திற்கு தரவேண்டும். அதை ரூபாய் 23,039 கோடியாக மத்திய அரசு குறைத்துவிட்டது. கூடுதலாக கடன் பெற்று அனைத்து நலத் திட்டங்களையும் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது”என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசும் போது தமிழக நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷ்ணன் கூறுகிறார்.

மாநில அரசுகளின் வருவாயில் கை வைப்பதன் மூலம் மாநில அரசுகளை மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.

GST வரியின் பங்கைத்தராமல், மாநிலங்களைக் கூடுதலாக கடன் பெற்றுக்கொள்ளச் சொல்கிறது மத்திய அரசு. திட்டக்கமிசன் கடன் பெறுவதற்குமான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் மீது விதித்துள்ளது. அதாவது, மாநில அரசுகளுக்கு கடன் அதிகமாக வேண்டுமெனில் மத்திய அரசின் கார்ப்பரேட்மய நிகழ்ச்சி நிரலை மாநிலங்களில் அமல்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என நிர்பந்தம் கொடுக்கிறது.

நிதி விவகாரத்தில் மட்டுமல்ல, மற்றெல்லாவற்றிலும் எதேச்சதிகாரத்துடன்தான் நடந்து கொள்கிறது மத்திய பாஜக அரசாங்கம். வேளாண்மை என்பது மாநிலப் பட்டியிலின் கீழ் வருவது. ஆனால், இதை மதிக்காமல் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது பாஜக கும்பல்.

கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியில், பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத வழிமுறைகளில் ஆட்சிக் கவிழ்ப்பை நடைமுறைப்படுத்தி ஆட்சியதிகாரத்தை கொல்லைப் புறமாக கைப்பற்றியிருக்கிறது பாஜக. இன்னும் வேறு சில மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற முயன்று தோற்றுப் போயிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எனில் அதனைக் கவிழ்ப்பதற்கும், எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதற்கும் ஏதுவான வகையில் உள்ள இந்த அமைப்பு முறைக்குள் ஜனநாயகம் என்பதும், வாக்களிப்பதன் மூலம் அந்த ஜனநாயகத்தையும் இழந்த உரிமைகளையும் காப்பாற்றிவிட முடியும் என்பதும் அப்பட்டமானக் கட்டுக்கதைகளே.

மாநிலங்களின் நிதி வருவாயை முடக்குவது, அதிகாரங்களை மத்திய அரசுக்கு கொண்டு செல்வது, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவது போன்ற நடைமுறைகள் ஒருபுறமிருக்க, மற்றொருபுறத்தில், ஜனநாயகத்தின் பிற தூண்களாக சொல்லப்படும் அத்தனைத் துறைகளுக்குள்ளும் தமது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற நபர்களின் கைகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் மொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிசமயமாக்கி வருகிறது.

இந்த அதிகாரங்களின் ஒன்றுகுவிப்பு, மையப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தும் இந்துத்துவ அரசியலை அமலுக்கு கொண்டுவருவதற்காக மட்டுமல்லாமல், இந்தியா முழுவதையும் கார்ப்பரேட் கொள்ளைக்கான ஒரு ஒருங்கிணைந்த சந்தையாக மாற்றுவதற்குத்தான்.

படிக்க :
♦ பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

♦ ஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அத்தனை உரிமைகளையும் பறித்துவிட்டு, மாநிலங்களின் நிதி ஆதாரங்களையும் பறித்துவிட்டு நடத்தப்படும் இந்த மாநில சட்டமன்றத் தேர்தல் என்பது, மத்தியில் ஆளும் பாசிச கும்பலின் ஒடுக்குமுறையை மாநில கட்சிகளின் மூலமாக மக்களின் மீது ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் நடைமுறைப்படுத்தவே நடத்தப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாசிச பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்றாலும் கூட தமிழக மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளும், தமிழக அரசின் நிதியாதாரமும், சுயாட்சியும் வீதியில் இறங்கி நடத்தப்படும் ஜனநாயகத்திற்கானப் போராட்டங்களின் மூலமாகவே சாத்தியப்படுமே ஒழிய, ஓட்டுப் பெட்டியை மட்டும் நம்பி இருந்தோம் எனில், குடிக்க கஞ்சிக்கூட மிஞ்சாது என்பதுதான் எதார்த்தம் !


ராஜேஷ்
செய்தி ஆதாரம் : தினகரன் (24/2/21), The Print

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க